Thursday 29 December 2011

மை படுத்திய பாடு



என் காலத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இறகு பேனாவைத்தான் எழுதுவதற்குப் பயன்படுத்தினோம். கையெழுத்தை, ஊற்று பேனா கெடுத்துவிடும் என்று ஆசிரியர்கள் தடை விதித்தமையால் உயர்நிலைப்பள்ளியில் கால்வைக்கும்வரை இறகு பேனாவே கதி.

இறகை (உலோகத்தால் ஆன நிப்பை)ச் செருகும் மரக்கட்டை ஒரு சாண் நீளமும் உருளை வடிவுங் கொண்டு ஒருபாதி தடிமனாயும் ஒருபாதி ஒல்லியாயும் இருந்தது. பருத்த முனையின் குடைவான உட்பகுதியில் சிறு உலோக ஸ்பிரிங் அமைப்பு உண்டு. அதில் இறகைச் செருகினால் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.

மை பாட்டிலின் மையைத் தொட்டுத் தொட்டு எழுதவேண்டும். ஒரு தடவைக்கு நாலைந்து எழுத்து மட்டுமே உருவாகும். மை விரைவில் உலராதாகையால் தவறுதலாய் விரல் பட்டால் எழுத்துகள் கலைந்துவிடும். தாளைப் புரட்டும்போது அடுத்தப் பக்கத்தில் எழுத்துகள் பட்டுச் சிதையும். இதைத்தடுக்க ஒற்று தாள் (blotting paper) தேவை. கடையில் வாங்கிக் கைவசம் வைத்துக்கொண்டு பக்கம் புரட்டுமுன்பு எழுத்துகளின் மீது மெதுவாகப் பக்குவமாக வைத்தால் மையை அது உறிஞ்சிவிடும். (படாரென்று வைத்து அழுத்தினால் மை பரவி எழுத்துகளை உருத்தெரியாமல் அழிக்கும்.)

மைப்புட்டியை மேசை (டெஸ்க்) மீது வைத்து இடக்கையால் பிடித்துக்கொள்ளாவிட்டால் மேசை அசையும்போது அது தரையில் விழுந்து உடையும். முன்பெஞ்சு மாணவனின் முதுகு பட்டாலும் விழுந்துநொறுங்கும். கீழே விழாமல் நம் பக்கம் சாயுமானால் மை முழுதும் நம்முடைய சுவடி மற்றும் புத்தகங்களின் மேல் பட்டையாய்க் கோடு போட்டுவிட்டு வழிந்து உடையிலும் முத்திரை பதிக்கும்.

(என் இரண்டாம் வகுப்பாசிரியர் மதிப்புமிகு சுப்பிரமணிய அய்யர் நினைவுக்கு வருகிறார். தேவைப்பட்டபோதெல்லாம் யாராவது ஒரு மாணவனை அழைத்து அருகில் நிற்கவைத்து, அவன் கையில் புட்டியைத் தந்து தொட்டெழுதிய முன் ஜாக்கிரதைக்காரர் அவர்.)

பள்ளி செல்லும்போதும் திரும்பிவரும்போதும் பாட்டிலைக் கையில் எடுத்துச் சென்றோம். மத்தியான வெயிலில் மை பொங்கிக் கசிந்து வழிந்து கையைக் கறைப்படுத்துவது பெருந்தொல்லை.

இதைத் தவிர்க்க ஒரு வழி இருந்தது. சாராயத்துக்குப் பெயர் போன எங்கள் ஊரின் கடைகளுக்கு பிரான்சிலிருந்து உயர்தர மது வரும். பாட்டிலின் பாதுகாப்புக்காக அதைச் சுற்றி அலுமினியக் கம்பிவலை போட்டிருக்கும். பாட்டிலைப் பயன்படுத்துமுன்பு அதை அகற்றிவிடுவார்கள். அது இனாமாகக் கிடைக்கும். (சில சமயம் தரமாட்டார்கள்) கால் பாட்டிலுக்கான சிறுவலையொன்றைப் பெற்று அதனுள் மைப்புட்டியை வைத்து வலையை இறுக்கி உச்சி வளையத்தினுள் விரல் நுழைத்துக் கிளிக்கூடு போல் தூக்கிப்போனோம்.

வகுப்பிலேயே வைத்துவிடலாமே என்ற எளிய யோசனை கூடத் தோன்றாத அளவுக்கு மக்குகளாகவா இருந்தோம்? அப்படிச் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பதைச் சிலரது அனுபவத்தால் அறிந்திருந்தோம். இடைவேளை நேரத்தில் பள்ளியில் தங்கியுள்ள வெளியூர் மாணவர்கள் மையைத் தம் புட்டியில் ஊற்றிக்கொண்டு நமது பாட்டிலைக் காலியாக்கிவிடுவார்கள். அல்லது முதலுக்கே மோசமாய் அது மாயமாய் மறைந்துவிடும். யாரைக் கேட்பது? அதனால்தான் சுமந்தலைந்தோம்.

சேவகரால் பட்டதுன்பம் மிகவுண்டு கண்டீர்,
சேவக ரில்லாவிடிலோ வேலைநடப் பதில்லை.

என்று பாரதியார் பாடியது போல

மையினால் பட்டதுன்பம் மிகவுண்டு கண்டீர்,
மையே இல்லாவிடிலோ எழுத முடிந்ததில்லை

எனப்பாடுதல் பொருந்தும்.

(படம் தந்துதவிய கூகுளுக்கு நன்றி)

4 comments:

  1. மைக்கூட்டை வைத்துக்கொண்டு படாதபாடுதான் பட்டிருக்கிறீர்கள். நல்லவேளையாக, பின்னாளில் ஊற்றுப்பேனா முதற்கொண்டு பலதரப்பட்ட பேனாக்கள் பள்ளிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிட்டன. இறகு பேனாவால் அந்நாளில் சந்தித்தப் பிரச்சனைகளை மிகவும் சுவைபடத் தொகுத்தளித்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. இறகு பேனாவை வைத்துக் கொண்டு பட்ட பாட்டைச் சுவைபட விவரித்துள்ளீர்கள்.
    இக்காலத்தில் பேனாவில் எத்தகைய முன்னேற்றம் என்பது இந்தப்பதிவைப் படித்த பிறகு தான் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அரிய தகவலுக்கு மிகுந்த நன்றி .

      Delete