Tuesday, 25 September 2018

நூல் விமர்சனம் (புதிய வேர்கள்)
  திருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது.

  இப்போதெல்லாம் நிறையப் பெண்கள் தம் அனுபவங்களை, சிந்தனைகளைக் கதை, கவிதைகளில் வெளியிடுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதெற்கு?” என்று எதுகை மோனையோடு ஆண் வர்க்கம் வினவி மகளிர்க்குக் கல்விக் கண் திறக்காமல் காலங்காலமாய்ப் பார்த்துக் கொண்டது. கீழ் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுவின் கட்டளை; பெண் தாழ்ந்தவள், ஆதலால் கல்வி மறுக்கப்பட்டது. எத்தனையோ முற்போக்காளரின் முயற்சியால் பெண் கல்வி பரவிற்று; அதன் நல்ல விளைவுகளைப் பற்பல துறைகளிற் காணமுடிகிறது.

  அம்மாவின் ஆசை, அன்னையர் தினம் ஆகிய இரு கதைகளும் தாய்மார்களின் பாசம் நிறை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தன் வைராக்கியத்தை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அதற்காக மகனுக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தக்கூடாது என அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறாள் முதல் தாய்; வைராக்கியம் நிறைவேறாமலே போய்விட்டால் கூட வருந்தமாட்டாள். மகனின் நல்வாழ்வு தானே முக்கியம்? பிள்ளைகளுக்காக எத்தியாகமுஞ் செய்யத் தயங்காத பெரும்பாலான நற்றாய்களின் பிரதிநிதி அவள். அவளது குண சித்திரம் நன்கு தீட்டப்பட்டுள்ளது. இரண்டாந்தாய் உணவைக் கூடப் புறக்கணித்துவிட்டு மகனது அழைப்புக்காக ஏங்கித் தவியாய்த் தவிக்கிற நிலை நமக்குப் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது. “பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்”. புதல்வனைக் காட்டிலும் மகள் பாசமுடையவள் என்ற மறுக்கவியலா உண்மை போகிற போக்கில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளமை நயம்.

  இவற்றோடு தொடர்புடையது “தண்டனை”. இதிலும் அன்னை மனங்களின் விழுமிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. குற்றவாளியின் தாயினது நெஞ்சம் துருவி ஆராயப்பட்டுள்ளது. இக்கதை சிறந்த படைப்பு.

  “ஒரு சொட்டுக் கண்ணீர்” தமிழ் மனைவியர் பற்பலரின் இரங்கற்குரிய நிலைமை பற்றியது. வாழ்க்கைத் துணையைக் கொடுமைப்படுத்துவதற்குப் படித்தவர்கள்கூடத் தயங்குவது இல்லை. இக்கதையின் கருவுடன் தொடர்பு கொண்டது இறுதிப் படைப்பு. கூட்டு வாழ்க்கை சிதைந்துபோய்த் தனிக்குடும்பம் அவசியமாகிவிட்ட இன்று, இருவருஞ் சம்பாதித்தால்தான் சுக வாழ்க்கை சாத்தியம். மனைவி மட்டும் அக வேலை, புற வேலை என இரண்டு சுமையைத் தாங்குகிறாள். எவ்வளவு துன்பம் என்பதை ஆண் எண்ணிப் பார்ப்பதில்லை. யாவற்றிலும் வெள்ளையரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுகிற நம் ஆடவர், அவர்கள் குடும்பப் பணிகளில் பங்கேற்பது போல, தாமும் செயல்பட்டுத் துணைவியின் பாரத்தை முடிந்த அளவு குறைக்கவேண்டும்.

  “புதைக்கப்படும் உண்மைகள்” கதையுஞ் சிறப்பானதே. திருப்பங்களுடன் கூடியதாயும் அதிகார வர்க்கத்தின் தகிடுதத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதாயும் அமைந்த இது, “பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் முக்கால மெய்யை நம் மனத்தைத் தொடுமாறு உணர்த்துகிறது.

  “பெண் பார்க்கும் படலம்” நகைச்சுவை ததும்பும் படைப்பு. கன்னத்தில் அறைவது போல் பளார் பளார் என வினாத் தொடுக்கும் முற்போக்குக் கன்னியரை இதிற் சந்திக்கிறோம். “நான் மாப்பிள்ளை, நாங்கள் பையன் வீட்டார், உயர்ந்தவர்கள்” என்னுஞ் செருக்குடன் பெண் பார்க்கச் செல்லும் சில ஜன்மங்களின் தலைக்கனத்தை அவர்கள் குறைக்கிறார்கள்.

  யாவற்றிலும் மேம்பட்டது “புதிய வேர்கள்”. இதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்தமை மிகப் பொருத்தம். அவலம், நகை, வாஞ்சை என பல ரசங்களை வாரி வழங்கும் இது ஒரு கை தேர்ந்த படைப்பாளியை அடையாளங் காட்டுகின்றது. பிறந்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் துயரும் வேதனையும் வாசகர் நெஞ்சத்தை உருக்குகிற விதமாய், யதார்த்தமாயும் துல்லியமாயும் புலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய எண்ணம் சாமர்த்தியமாய், பொருத்தமாய்ப் புகுத்தப்பட்டுள்ளது, நல்ல உத்தி. இதை வாசிக்கையில் சங்கப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

  சிறுமியொருத்தி புன்னை விதையூன்றி நீர் வார்த்து வளர்த்தாள். அவள் பருவமெய்தினாள், அது மரமாயிற்று. அதன் நிழலில் வந்து நின்றான் தலைவன், தலைவியை எதிர்பார்த்து.

  அவனிடந் தோழி கூறினாள்;

  “ஐயா, இம்மரம் தலைவியின் வளர்ப்பு. அவளிடம் ஒரு நாள் தாயார் கூறினார், “நீ வளர்க்கிற புன்னை உனக்குத் தங்கை” என்று. அன்றிலிருந்து தலைவியும் உடன்பிறப்பாகவே கருதியுள்ளாள். தங்கையை அருகில் வைத்துக் கொண்டு உன்னோடு பேசி, சிரித்து, மகிழ அவளால் முடியுமா? வெட்கமாக இருக்காதா? ஆதலால் வேறு ஒரு மரத்தின் நிழலுக்குப் போ.”

  நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
  அம்ம நாணுதும் நும்மொடு நகையே.
  (நற்றிணை 172)

  நுவ்வை – தங்கை

  தாவரங்களுடனும் உறவு கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனிய தகவலை இப்பாட்டு தருகிறது; அதே மாதிரி உறவை இந்தக் கதைத் தலைவியும் வளர்த்திருக்கக் காண்கிறோம்.

  பெரும்பாலானவை குடும்பக் கதைகள். சிறு சிறு மர்மங்கள் வாசிப்புச் சுவையைக் கூட்டுகின்றன. தரமான நகைக்கும் பஞ்சமில்லை.

  ஒரு காட்டு:

  “பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே எமனின் எருமை வாகனம் நிற்பது போல் தோன்றவே, பயந்து கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டார்.

  “என்னமோ தெரியலடா. கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதற்கே உங்கப்பா நடுங்குறாரு.” என்று முதல் மனைவி தன் பையனிடம் சொன்னபோதுதான் நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.”

  சமுதாய மற்றும் பொருளியல் சிக்கல்கள் குறித்துச் சிந்திக்க வைக்குங் கருத்துகள் இல்லை; ஆனால் ஆற்றொழுக்கான நடையும் கருத்துத் தெளிவும் உயிரோட்டம் மிக்க உரையாடல்களும் போற்றற்குரியன. சந்திப் பிழை வாக்கியப் பிழை அறவே இல்லாமல் எழுதியிருப்பதற்கு ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர். பெரிய எழுத்தாளர்களே சறுக்குகிற இடம் இது. மனவுணர்வுகளை நன்கு வெளிக்கொணரும் ஆற்றல் மிக்க இவர் மேன்மேலும் முன்னேறித் தலைசிறந்த படைப்புகளை ஈன வாழ்த்துகிறேன்.  

13 comments:

 1. அருமையான விமர்சனம்... எடுத்துக்காட்டுகளே சிறந்த உதாரணம்...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. அருமையான தங்களின் விமர்சனம், நூலினைப் படிக்கத் தூண்டுகிறது ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மிகுந்த நன்றி .

   Delete
 3. என் நூலைப் பற்றிய விரிவான விமர்சனம் கண்டு அகம் மிக மகிழ்ந்தேன். மரத்தைத் தங்கையாகப் பாவிக்கும் நற்றிணைப் பாடல் பற்றியறிந்து வியப்பு. சமூக சிக்கல் குறித்த கதைகள் இல்லையென்பது உண்மை தான். இதில் வருபவை குடும்பக் கதைகளே. வருங்காலத்தில் எழுதும் போது இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வேன். எழுதும் ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைந்த விமர்சனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இள எழுத்தாளர்களுக்குப் பாராட்டு அளித்து மேன்மேலும் முன்னேற ஊக்குவிப்பது அவசியம் . மேம்பாடு அடைய வேண்டுமென்ற எண்ணம் அறிந்து மகிழ்கிறேன் .

   Delete
 4. பழுத்த அனுபவங்கள் உள்ள தாங்கள், இந்த நூல் விமர்சனத்தை தங்களின் தனிப்பாணியில் எழுதி அசத்தியுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள், ஐயா.

  இதே நூலினை நான் மின்னூல் வடிவில் படித்து எனக்குத் தோன்றியதை ஓர் நூல் மதிப்புரையாக எழுதியது நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.

  http://gopu1949.blogspot.com/2017/04/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு மிக்க நன்றி .நீங்கள் தந்த முகவரிக்குப் போய் உங்கள் விமர்சனத்தை வாசித்தேன் . அருமையாக எழுதியிருக்கிறீர்கள் . அல்வாவில் கொஞ்சம் சாம்ப்பிள் தந்து வாங்க வைக்கும் உத்தியைப் பயன்படுத்தி ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான தகவலளித்து நூலை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள் .

   Delete
 5. சங்கப்பாடல் (ஒப்பீடு) சிறப்பு. எமன் வாகனம் எடுத்துக்காட்டு (மர்மம்) புன்னகைக்க வைத்தது.

  நல்லதொரு விமர்சனம்.

  படைத்தவருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .

   Delete
 6. மிக அழகான, நேர்மையான விமர்சனம். தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள உணர்வுகளை நானும் வாசிப்பின்போது உணர்ந்தேன். வாழ்வின் நிதர்சனம் காட்டும் கதைகள் பலவும் மனம் தொட்டன. சங்கப்பாடலை மேற்கோள் காட்டி விளக்கி கதையோடு ஒப்பிட்டமை சிறப்பு. நூலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டு. விமர்சன உரை வழங்கிய தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் நன்றிக்கும் மிக்க நன்றி .

   Delete