Monday 28 November 2011

ஆடல் காணீரோ!


நபுசான் மிக நல்ல மன்னர்களுள் ஒருவன். வரி வசூலிக்கும் அதிகாரி அவனை ஏமாற்றிக் கொண்டிருந்தான். அரசனுக்கு உண்மை தெரியவே, அவனை நீக்கி வேறு ஆளை நியமித்தான். இவ்வாறு பல முறை ஆட்கள் மாறினார்களே தவிர, வருமானத்தைச் சமமற்ற இரு பங்காக்கி, சிறிய பங்கை வேந்தனுக்குச் செலுத்தி விட்டுப் பெரிய பங்கைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் மாறவில்லை.

மன்னன் தன் கவலையை அறிஞர் சதீக் இடம் வெளியிட்டான்.

எவ்வளவோ அறிந்த உங்களுக்கு நேர்மையான அதிகாரியைக் கண்டுபிடித்துத் தர தெரியாதா?” என்று அவரிடம் கேட்டான்.

நிச்சயமாகத் தெரியும். யோக்கியனைக் கண்டுபிடிக்க மிக நம்பகமான ஒரு வழியை நான் அறிவேன்,” என்று அவர் விடையளித்தார்.

பொறுப்பு அவரிடம் விடப்பட்டது.

மன்னனின் பெயரால் ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்:

வரி வசூலிக்கும் அதிகாரி வேலையைப் பெற விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட நாளில் பேட்டிக்காக அரண்மனையில் கூடுமாறு கோரப்பட்டனர்.

64 பேர் குழுமினர். பேட்டி நடைபெறும் அறைக்கு ஒரு நீண்ட நடைப்பாதையின் வழியே வரவேண்டும்; போதிய வெளிச்சமற்ற அந்தப் பாதையில் அரசனது கருவூலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. பேட்டிக்கு வந்தோர் ஒவ்வொருவராய் அழைக்கப்பட்டனர். .

யாவரும் அறைக்குள் நுழைந்த பின்பு வாத்தியங்கள் முழங்கின; நடனம் ஆடும் படி எல்லாருக்கும் அரசன் ஆணையிட்டான்.

அடடா! அவ்வளவு மோசமான குழு நடனம் அதற்கு முன்பு எங்கும் நடைபெற்றதில்லை. எல்லாரும் குனிந்த தலையும், வளைந்த இடுப்புமாய்த் தொடைகளைக் கைகளால் அமுக்கியபடி அலங்கோலமாய்க் குதித்தனர்.

திருட்டுப் பயல்கள்!என்று முணுமுணுத்தார் சதீக்.

ஒருவன் மட்டும் நிமிர்ந்த தலையும் நேர் கொண்ட பார்வையுமாய்க் கைகளை உயர்த்திக் கொண்டு எளிதாய் ஆடினான்.

ஆகா! இவனே நேர்மையானவன்; இவனே நாணயமானவன்!என்று கூவினார் சதீக். அவனை மன்னன் கட்டித் தழுவினான்; அதிகாரியாய் நியமித்தான். மற்றவர் அனைவரும் கடுமையாய்த் தண்டிக்கப்பட்டனர்.

காரணம்? அவர்கள் அறையில் நுழைவதற்கு முன், நடைப் பாதையில் தனியாய் இருக்க நேர்ந்த அந்தச் சிறு பொழுதில், தம் கால்சட்டைப் பைகளைப் பணத்தால் நிரப்பிக் கொண்டு விட்டனர்!

((18 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர் வொல்த்தேர் (Voltaire) இயற்றிய சதீக் அல்லது விதி என்னும் நூலில், ஒரு சிறு பகுதியின் மொழி பெயர்ப்பு.
1986
ல் மஞ்சரியில் வந்தது)

Saturday 26 November 2011

கஜினி முகமது


ஆப்கானிஸ்தானத்தில் கஜினி என்னும் ஊரைத் தலைநகராய்க் கொண்டு அரசு புரிந்தவன் கஜினி. வரலாற்றில் கஜினி முகமது என்று அழைக்கப்படும் அவன் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தான் என்பது பரவலாய்த் தெரிந்த செய்தி.


16 முறை தோற்றும் விடாமல் முயன்று, அடுத்த தடவை வென்றான் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு திரைப்படப் பாடல்,

முகமது கஜினியை மறந்திடலாமோ?
முயன்றால் பதினேழு முறை முயன்றால்...
செயல் கை கூடும் என்று அறிவுரை கூறுகிறது.

தோற்றோரியல் பள்ளி (Tutorial schools) களில் கஜினி முகமதுவின் படத்தை மாட்டுவது பொருத்தம் என்று ஒரு பத்திரிக்கைத் துணுக்கு தெரிவித்தது.

விடாமுயற்சி பற்றிய கட்டுரையில் மாணவர்கள் கஜினி முகமதுவை எடுத்துக் காட்டாய் எழுதுவதுண்டு.

பலமுறை தேறாமல் போய் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவரைக் கஜினி முகமது போல் படையெடுக்கிறார் என்று சொல்லிக் கிண்டல் செய்வோர் உண்டு.

ஆனால் கஜினி முகமது பற்றிய இந்தக் கருத்து அடியோடு தவறு; அவன் மாவீரன்; போர்க்கலையில் வல்லவன்; அவனை எந்த இந்திய மன்னனும் வென்றதில்லை. அதாவது, தன் படையெடுப்புகளில் வெற்றி மீது வெற்றி பெற்றுத் தன் பெயரைக் கேட்ட அளவிலேயே மன்னர்க அஞ்சி நடுங்கி ஓடுகிற நிலைமையை உண்டாக்கிய தீரன்.

அவனது படையெடுப்புகள் கி.பி. 1000 முதல் 1025 வரை நிகழ்ந்தன. அவை பற்றிய சுருக்கமான தகவல்களைக் கீழே காணலாம்:-

1. ஆப்கானிஸ்தானிய இந்திய எல்லைப் பகுதிகளில் பலகோட்டைகளும், மாவட்டங்களும் கைப்பற்றப் பட்டன.

2. பெஷாவர் மன்னன் ஜெய்பால் கைது, அவனது 15000 வீரர்கள் சாவு.

3. பீராவின் மன்னன் தோற்றோடித் தற்கொலை செய்து கொண்டான்.

4. பஞ்சாப் மன்னன் அனந்துபால் காஷ்மீர் வரை துரத்தப்பட்டான்.
மூல்டான் மன்னன் அப்துல் பத்தா தவுதை வென்று கஜினி
மூல்டானைக் கைப்பற்றினான்.

5. மூல்டானின் அரசனாய்க் கஜினி முகமதுவால் நியமிக்கப்பட்டிருந்த
அக்பால் சுதந்திரப் பிரகடனம் செய்யவே, முகமது படையெடுத்து
வந்து அவனைக் கைது செய்து சிறையிலடைத்தான்.

6. பெஷாவர் மன்னன் ஜெய்பாலின் மகன் அனந்துபால்
தோற்றோடினான்.

7. கங்கரா மலையில் நாகர்கோட் கோட்டை கைப்பற்றப்பட்டது.

8. மீண்டும் மூல்டான் மீது படையெடுப்பு, அரசன் தவுது தோற்றான்.

9. அனந்துபாலின் மகன் திரிலோச்சனபால் தோற்றுக் காஷ்மீருக்கு
ஓடினான். முகமது அவனை விரட்டிச் சென்று அவனது
படைகளையும், உதவிக்கு வந்த காஷ்மீர் மன்னன் படைகளையும்
ஒரு சேர முறியடித்தான்.

10. தானேஸ்வரத்துக் கோட்டை கைப்பற்றப்பட்டது.

11. காஷ்மீர் படையெடுப்பு கைப்பற்ற இயலவில்லை.

12. கனோஜ் மீது தாக்குதல். கஜினியிலிருந்து புறப்பட்ட முகமது
வழியிற் கண்ட கோட்டைகளை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு
வந்து பரன் (Baran) என்னும் ஊரை அடைந்தான். மன்னன்
அரதத்தன் அடிபணிந்து இஸ்லாத்தைத் தழுவினான். மகாவான்
அரசன் குலாச்சந்தை முகமது தாக்கினான். குலாச்சந்து தோற்றுப்
போய் தன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து
கொண்டான்.

13. மதுரா படையெடுப்பு; நகரம் முழுதும் அடையாளம் காண
முடியாதவாறு அழிக்கப்பட்டது.

14. முகமதுவின் வருகையை அறிந்த பிருந்தாவன் மன்னன்
ஓடிப்போனான். எல்லாக் கோட்டைகளும் அழிக்கப்பட்டன.

15. சந்தேளா நாட்டு வேந்தன் கோண்டா புறமுதுகிட்டான்.

16. குவாலியர் அரசனை வென்ற பின்பு முகமது தொடர்ந்து சென்று
களிஞ்சர் கோட்டையைப் பிடித்தான்.

17. சோமநாதபுரப் படையெடுப்பு; வழியிலிருந்த அனில்வாராவை
முகமது அடைந்ததும், அதன் மன்னன் ராஜா பீமதேவ் ஊரை
விட்டோடினான். அவ்வூரை அழித்துவிட்டு முகமது,
சோமநாதபுரத்தை வசப்படுத்தினான். அதன் பின்பு அனில்வாரா
அரசன் ஒளிந்திருந்த கண்டா கோட்டை நோக்கி முன்னேறினான்.
அரசன் ஓடிவிடவே நாட்டை முகமது கைப்பற்றினான்.


ஒவ்வொரு படையெடுப்பின் இறுதியிலும், முகமது ஏராளமான பொன், வெள்ளி, வைரம் முதலிய விலை மதிப்புடைய பொருளை வாரிச் சென்றான். நாடு பிடிக்கும் நோக்கம் அவனுக்கில்லை. செல்வக் கொள்ளையே குறிக்கோள். அதில் அவனுக்கு முழு வெற்றி.

11 ஆம் படையெடுப்பில் மட்டுமே முகமதுக்கு வெற்றி கிட்டவில்லை. அதைத் தோல்வியெனல் பொருந்தாது. காஷ்மீர் மன்னன் படையெடுத்துச் சென்று வெல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவனது தற்காப்பு முயற்சி வென்றது. அவ்வளவே.

(’உண்மையில் எழுதி வெளிவந்தது. 16.06.1993.)

(ஆதாரம்: வி.டி.மகாஜன் எழுதிய Muslim Rule in India. ஆறாம் பதிப்பு.1975)

Wednesday 23 November 2011

குறையுடைய ஆசிரியர்



முற்காலத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் சிற்சில மாணவர்களை மட்டுஞ் சேர்த்துக்கொண்டு இலக்கியங்கற்பித்தார்கள். அவர்கள் பயிற்சி (டிரெயினிங்) பெற்றவர்கள் அல்லர். ஆதலால் கால அட்டவணையோ, பாடத் திட்டமோ இன்றித் தாம் கற்றிருந்தவற்றை மட்டும் தத்தமக்குத் தோன்றியபடி போதித்தார்கள் என நாம் ஊகிக்கலாம்.

நல்லாசிரியர்களை அடையாளங் காட்டிய நன்னூல் சில ஆசிரியர்களின் போதனைக் குறைகளையும் எடுத்துரைக்கிறது. அவற்றைக் கழல்குடம், மடல் பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு என்ற நான்கு உருவகங்களால் தெரிவித்து அந்த உருவகங்களையும் விளக்குகிறது.

1.கழல்குடம்

பெய்த முறையன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழல்பெய் குடத்தின் சீரே.

கழல் - கழற்சிக்காய். முற்கால விளையாட்டு ஒன்றில் தேவையாவை கழற்சிக்காய்கள். எண்கள் இடப்பட்டவை. எண் வரிசைப்படி அவற்றை ஒரு குடத்தினுள் ஒவ்வொன்றாய்ப் போட்டுவிட்டுப் பின்பு எடுத்தால் முறைப்படி வராது. முதலில் போட்டது பின்னால், பின்பு போட்டது முன்னால் என மாறி மாறி வரும். இதுபோல ஆசிரியர் சிலர் தாம் முறையாய்க் கற்றிருந்தாலும் தாறுமாறாய்க் கற்பிப்பர். முதலில் சொல்லித் தரவேண்டியதைப் பின்பும் இடையிலோ இறுதியிலோ இடம் பெறற்கு உரியதை முதலிலுமாய்ப் போதித்து மாணவரைக் குழப்புவர்.


2. மடல் பனை

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடல்பனை.

மடல்பனை என்பது ஒருவகைப் பனைமரம். அதில் ஏறமுடியாதபடி மடல்கள் தடுக்கும். மரத்திலிருந்து காய் விழுந்தால் நுங்கு பெறலாம். அப்படிப்பட்ட ஆசிரியர் தமக்குத் தோதான மனநிலை (மூடு) இருந்தால் போதிப்பார். மாணவர் விரும்புகிறபோது கற்க இயலாது.

3.பருத்திக் குண்டிகை

அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிதுஈவு இல்லது பருத்திக் குண்டிகை.

குண்டிகை என்பது குடுக்கை. வாய் குறுகியும் வயிறு அகன்றும் இருக்கும். பருத்திப் பஞ்சை ஒரு குடுக்கையில் அடைத்து வைப்பார்களாம். உள்ளே சிறிது சிறிதாகச் செலுத்தவேண்டும். வெளியில் எடுப்பதும் அப்படித்தான். இத்தகைய ஆசிரியர் தாமும் பெரும்பாடு பட்டுக் கற்றிருப்பார். மாணவர்க்கும் சிறிய அளவிலேயே பாடஞ்சொல்வார்.

4.முடத்தெங்கு

பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே.

முடத்தெங்கு - வளைந்த தென்னை. நம் வீட்டுத் தென்னைமரம் பாதிவரை நேராய் உயர்ந்து பின்பு அடுத்த இல்லத்தின் பக்கம் வளைந்து வளர்ந்தால் அது முடத்தெங்கு. நீரை நம்மிடம் பெற்றுக்கொண்டு காயைப் பக்கத்து வீட்டில் போடும். இந்தவகை ஆசிரியர் பொருள் வாங்குவது ஒரு மாணவனிடம், நன்றாகக் கற்பிப்பது வேறொருவனுக்கு.

இந்த மாதிரி ஆசிரியர்களிடஞ் சிக்காமல் நல்லாசிரியர்களை அடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

Monday 21 November 2011

கனியும் கடவுளும்


பிறமொழியினர் பழங்களுக்குக் கடவுள் பெயரை இட்டார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் வாழைக்குத் தமிழர் அவ்வாறு பெயர் சூட்டியிருக்கின்றனர்.

ஆண்டு முழுதும் பெரிய அளவில் கிடைப்பது, மக்கள் விரும்பி உண்பது பூவன் பழம். இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும், திருமணம் முதலிய மங்கல விழாக்களின் போதும், இன்றியமையாதது அது. பெட்டிக்கடைகளில் தாறாகத் தொங்குவதும் அதுவே. அதற்கு பிரம்மனின் பெயரை வைத்திருக்கிறார்கள்.

படுத்திருக்கின்ற திருமாலின் உந்தியிலுள்ள பூவில் பிரம்மன் அமர்ந்திருப்பதை சிலைகளிலும் ஓவியங்களிலும் காணலாம். பூவில் உள்ள பிரம்மனைப் பூவன் என்பது பொருத்தம்தானே?

ஆண்டின் சில பருவங்களில் மட்டும் கிடைக்கிற மொந்தனை பெரும்பாலும் காயாகச் சமைத்து உண்கிறோம். முகுந்தன் என்பதன் மரூஉ மொந்தன். "முகுந்தா முகுந்தா" என்ற தசாவதாரப் பாடல் நினைவுக்கு வருகிறதா? முகுந்தன் திருமாலைக் குறிக்கும்.

அரிதாகத் தின்னக்கிடைப்பது பேயன். இது சிவனின் ஒரு பெயர். சாம்பலைப் பூசிக்கொண்டு இடுகாட்டில் பேய்க்கணங்களுடன் நடனமாடுவதால் சிவனைப் பேயன் என்பர். பேயன்பழம் பூவன்பழத்தை விட சுவை மிக்கது.

மும்மூர்த்திகளையும் நினைவு படுத்துகிற வாழைக்கு பக்தர்கள் நன்றி செலுத்தவேண்டும்.

Sunday 20 November 2011

நல்லாசிரியர் யார்?



நவீன பள்ளிக்கூடங்கள் தோன்றுமுன்பு தமிழகத்தில் கல்வியைத் திண்ணைப்பள்ளிகள் வழங்கின. அங்கே தமிழ் எழுதப் படிக்கவும் அடிப்படைக் கணக்குப் போடவும் கற்றுக்கொண்டவுடன் பெரும்பாலான மாணவர்களுக்குக் கல்வி முற்றுப்பெற்றது. மேலும் படிக்க ஆர்வமும் வாய்ப்பும் வசதியுங் கொண்டோர் தனிப்பட்ட ஆசிரியரை நாடி இலக்கியங் கற்றனர்.

இந்த ஆசிரியர்கள் பெற்றிருக்கவேண்டிய குணநலன்களை உவமை மூலம் நன்னூல் விளக்குகிறது. அந்த உவமைகள்: நிலம், மலை, தராசு, பூ.

இந்த உவமைகளின் தன்மையையும் அது விவரிக்கிறது.

பாக்கள் 27 முதல் 30

27. தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.

(உறுதியும் பொறுமையும் பாடுபடுவதற்கேற்ற பலன் நல்கலும் நிலத்தின் இயல்புகள்.)

28. அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே

(பெருந்தோற்றமும் வறட்சிக்காலத்திலும் கிழங்கு முதலிய உணவளிக்கும் ஈகைப் பண்புங் கொண்டது மலை.)

29. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே.

(நடுநிலையில் நின்று சரியான எடையைக் காட்டுதல் தராசின் குணம்.)

30. மங்கல மாகி இன்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.

(யாவர்க்கும் மகிழ்ச்சி தருவதும் மலர்ந்திருப்பதும் பூ.)

இந்த உவமைகளால் நல்லாசிரியர்களின் பண்புகள் பொறுமை, மாணவரின் உழைப்புக்குத் தக்கவாறு கற்பித்தல், நல்ல தோற்றம் (பெர்சனாலிடி), ஏழை மாணவர்க்கும் போதித்தல், எல்லா மாணவரையுஞ் சமமாகப் பாவித்து ஐயந்தீரும்படி பாடஞ்சொல்லல், முகமலர்வுடன் இனிமையாகக் காட்சியளித்தல் ஆகியவை என நன்னூலார் கருதினார் என்பது தெரிகிறது.

Saturday 19 November 2011

கூக்குரல்


குயில் கூ கூ எனக் கத்துவதால், “குயில் கூவுகிறதுஎன்கிறோம். சேவல் வேறு விதமாய்க் குரலெழுப்பினும் கூவுவதாய்த்தான் சொல்கிறோம்.


சேவல் 'குக்கூ' எனக் கூவியதாய்க் குறுந்தொகைத் தலைவி கூறுகிறாள். ["குக்கூ என்றது கோழி" - பா.157]

குயிலின் ஆங்கிலப் பெயர் குக்கூ. பிரெஞ்சிலும் குக்கூதான்.

புதுச்சேரி மக்கள், "ஏன் கத்துறே?" என்று கூறாமல் "ஏன் கூவுறே?" என்று கேட்பதுண்டு.

கூ கூ என்று எழுப்புகிற குரல்தான் கூக்குரல். கூ + குரல்= கூக்குரல்

பூ + குடலை = பூக்குடலை என்பது போல.கூச்சல் கூப்பாடு கூப்பிடுதல் ஆகிய சொற்களுக்கும் கூ தான் பகுதி..

விபத்து, ஆபத்து, துன்பம் நேர்கையில், 'ஐயோ! ஐயையோ!' என்று அலறுகிறோம். முன்காலத்தில் 'கூ! கூ!' எனவும் ஓலமிட்டுள்ளார்கள். [ஆதாரம்: வேதநாயகம் இயற்றியுள்ள 'பிரதாப முதலியார் சரித்திரம்' - அதிகாரம் 16, ஆண்டிச்சியம்மாள் சரித்திரம்]

"அவர்கள் தங்களுடைய நகங்களால் தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறிவிட்டுக் கொண்டு, கூ! கூ! எங்களை வந்து கொல்லுகிறாள் என்று கூவினார்கள்". 'கூவினார்கள்' என்ற சொற் பிரயோகம் கவனிக்கத்தக்கது.

இந்தப் பழைய வழக்கத்தைக் கவனத்தில் கொண்டு கல்கி தம் பொன்னியின் செல்வனில் (பாகம் 4, அதிகாரம் 5), "அவள் தன் செக்கச் சிவந்த இதழ்களைக் குவித்துக் கூ என்று சத்தமிட்டாள்" என எழுதியிருக்கிறார். சிறு விவரத்திலும் சிந்தை செலுத்திய அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கூ கூ என்ற விளையாட்டு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவர்கள் அதை ஆடினார்கள். அறுவர் பங்கேற்ற அந்த ஆட்டத்தின் விவரம்:

துணித் துண்டொன்றின் ஒரு முனையில் எலுமிச்சம்பழ அளவில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். வட்டமாக அமர்ந்து ஆறு சிறு சீட்டுக்களை ஒரே அளவாக நறுக்கி அவற்றில் கூகூ, திருடன், தலையாரி, போலீஸ், மந்திரி, ராஜா என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுதி, உருளையாக சுருட்டி, யாவற்றையும் குலுக்கி நடுவில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுத்துக் கமுக்கமாகப் படித்துப் பார்த்து வைத்துக் கொள்வார்கள். ஆட்டம் தொடங்கும்.

கூ கூ சீட்டுக்காரன் 'கூ,கூ' எனக் கத்துவான். அடியிற் காணும் உரையாடல் தொடரும்:

தலையாரி - இந்த நேரத்தில் என்ன சத்தம்?
கூ கூ - என் கோழியைக் காணோம்.
மந்திரி - போலீஸ்!
போலீஸ் - இதோ இருக்கிறேன்.
மந்திரி - திருடனைக் கண்டுபிடி.

எஞ்சியுள்ள இருவரின் முகங்களையும் காவலன் உற்று நோக்கி, ஒருவனைச் சுட்டிக் காட்டி, 'இவன்தான் திருடன்' என்பான். அநேகமாக அது சரியாக இருக்கும். உள்ளங்கையைத் திருடன் நீட்டுவான். அமைச்சன் சொல்கிற எண்ணிக்கைப் படி துணி முடிச்சால் காவலன் அடிப்பான் (மெதுவாகத்தான்!).

தண்டனை நிறைவேறியதும் ஆட்டம் முடியும். சீட்டுக்களை நன்றாகச் சுருட்டி மீண்டும் போட்டு அடுத்த ஆட்டத்தைத் தொடங்குவர். கோழிக்குப் பதில் வேறு பொருளைச் சொல்வார்கள்.

திருடன் என அரசனைக் காவலன் தவறாய்ச் சுட்டிக் காட்டிவிட்டால் அவன், "ஊரையாளுகிற ராஜாவையா திருடன் என்கிறாய்? மந்திரி, போலீசை அடி" எனக் கட்டளையிட்டு அடி எண்ணிக்கையைச் சொல்வான். காவலன் அடிபடுவான்.

பிறரது கவனத்தை ஈர்க்க 'கூ கூ' என்று கத்தும் வழக்கம் இருந்தமைக்கு இந்த விளையாட்டும் ஒரு சான்று.
( நிலாச்சாரலில் 6-7-09 இல் வெளிவந்த என் கட்டுரை)

Wednesday 16 November 2011

ழானின் கடிதம்


(போல் ஃபெவால் (1817-1887) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் இச் சிறு கதை மிகப் பழையதாயினும் நம் நாட்டு சூழலுக்கு இன்னமும் பொருந்துவதால் மொழிபெயர்த்தேன்.)
  ********************************
ழானுக்கு ஆறு வயது.முழங்கால் கிழிந்த கால்சட்டை போட்டிருந்த அவனது சுருள் சுருளான பொன்னிற முடி இரண்டு அழகிகளின் தலைகளுக்கு விக் ஆக மாறுவதற்குப் போதிய அளவு அடர்த்தியாயும் அபரிமிதமாயும் இருந்தது அவனது விசால நீல விழிகள் ஏற்கனவே எவ்வளவோ அழுதிருந்த போதிலும் முறுவலிப்பதற்கு இன்னமும் சில சமயம் முயன்றன.அவனது மற்ற உடைகள் கிழிந்து தொங்கிய சட்டை, வலக்காலில் சிறுமிக்கான செருப்பு, இடக்காலில் மாணவன் போடும் செருப்பு, இரண்டுமே அளவு மீறி நீளம், அளவு மீறி அகலம், அந்தோ, துளைகள் நிரம்பியனவாய், முன்பக்கந் தூக்கிக்கொண்டு, பின்புறம் குதி இல்லாமல்..
அதோடு குளிரும் பசியும். ஏனெனில் அது ஒரு குளிர்கால மாலை. மத்தியானத்திலிருந்து பட்டினி. இப்போதுதான் ஒரு கடிதம் எழுத அவனுக்குத் தோன்றிற்று.
அந்த சிறுவன் ழான் படிக்கவோ எழுதவோ அறியாமல் எப்படி எழுதினான் கடிதம் என்பது சொல்ல வேண்டிய பாக்கி.
அங்கே தெருக் கோடியில் எழுதுகிற கடை இருந்தது.எழுதுபவர் வயதான முன்னாள் போர்வீரர், நல்லவர், மத அனுஷ்டானம் அதிகம் இல்லாதவர்,வசதி குறைந்தவர், காப்பகத்தில் இடம் பெறுவதற்குப் போதுமான ஊனமடையாத துரதிர்ஷ்டசாலி.
புகைக் குழாய் பிடித்தவாறு வாடிக்கையாளரை எதிர்பார்த்து அவர் அமர்ந்திருந்ததைக் கடையின் தெளிவற்ற கண்ணாடி வழியாய் ழான் கண்டான்.
நுழைந்து, “வணக்கம்.ஒரு கடிதம் எழுத வந்திருக்கிறேன்என்றான்.
பத்து காசுஎனப் பதில் சொன்னார் புவேன்.
தொப்பி இல்லாமையால் அதை நீக்க இயலாவிடினும் ழான் மரியாதையுடன், “அப்படியானால், மன்னியுங்கள்என்று சொல்லிவிட்டு வெளியே போகக் கதவைத் திறந்தான். ஆனால் புவேனுக்கு அவனைப் பிடித்திருந்தமையால் கேட்டார்:
பட்டாளத்துக்காரர் மகனா நீ, சின்ன பையா?”
இல்லை. நான் அம்மா பிள்ளை. அவள் தனியாக இருக்கிறாள்
அப்படியா? புரிகிறது.அதோடு உன்னிடம் காசு இல்லை.
ஆமாம்.ஒரு காசுகூட இல்லை.
உன் அம்மாவிடமுந்தானே? அதுதான் தெரிகிறதே. சூப் வைக்கிறதற்குக் கடிதம். சரியா?”
ஆமாம்.அதற்காகவேதான்,”
சரி. பத்து வரியும் அரைத் தாளும். இதனாலே குறைந்து போய்விடமாட்டேன்.
புவேன் தாளை ஒழுங்கு பண்ணி மையில் இறகை நனைத்துத் தம் அழகிய கையெழுத்தில் பாரீஸ், 17 ஜனவரி 1857” என்று எழுதினார். அதனடியில் ,திரு என்று தொடங்கிவிட்டுக் கேட்டார்:
அவர் பெயர் என்ன, குட்டி பையா?”
எவர் பெயர்?”
அதுதான். அய்யா பெயர்.
எந்த அய்யா?”
சூப் தரக்கூடியவர்.
இப்போது ழானுக்குப் புரிந்தது.
அவர் அய்யா அல்ல.
அட, அப்படியானால் பெண்ணா?”
ஆமாம்...இல்லை... அதாவது...
என்ன இது? யாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்பது கூடத் தெரியாதா?”
, தெரியும்.
சொல்லேன் அதை. சீக்கிரம்.
சிறுவனின் முகம் சிவந்தது. பிரச்சினை என்னவென்றால் இந்த மாதிரி செய்தியை அன்னிய மனிதரிடம் சொல்வது சரியல்ல என்பதே. இருந்தாலும் முழுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “புனித கன்னிக்குத் தான் கடிதம் அனுப்ப விரும்புகிறேன்என்றான்.
புவேன் சிரிக்கவில்லை. இறகை வைத்துவிட்டு வாயிலிருந்து புகைக் குழாயை அகற்றினார்.
கடுங் குரலில், “பயலே, வயதான பட்டாளத்தானைக் கிண்டல் பண்ண உனக்கு எண்ணமில்லை என நினைக்கிறேன். நீ ரொம்பப் பொடியனாய் இருப்பதால் உன்னை அடிக்காமல் விடுகிறேன், ஓடிப் போய்விடுஎன்றார்.
ழான் போவதற்குத் திரும்பினான். ஆனால் மென்மையான அவனை இப்படி விரட்டுவதற்கு அவர் கழிவிரங்கினார்.
"இந்தப் பாரீசில் வறுமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. உன் பெயர் என்ன?” என்றார்.
ழான்
என்ன ழான்?”
ழான் மட்டும்.
கண்களில் நீர் முட்டப் பெரியவர் தோளைக் குலுக்கினார்.
உன் புனித கன்னிக்கு என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறாய்?”
அம்மா நான்கு மணி முதல் தூங்குகிறாள்.என்னால் எழுப்ப முடியவில்லை.புனித கன்னி தன் நல்ல மனத்தால் எழுப்பிவிட வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன்.
முதிய பட்டாளத்தாரின் இதயம் அழுத்திற்று. ஏனென்றால் நிலைமையைப் புரிந்துகொள்ளும் அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இருந்தாலும் மேலுங் கேட்டார்:
சூப்பைப் பற்றி எதுவோ சொன்னாயே?”
ஆம்.அது தேவைப்படுகிறது. தூங்குவதற்கு முன்னால் அம்மா கடைசி ரொட்டித் துண்டை எனக்குக் கொடுத்துவிட்டாள்.
அவள்? அவள் என்ன சாப்பிட்டாள்?”
பசி இல்லை என்று இரண்டு நாளாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.
நீ என்ன செய்தாய் அவளை எழுப்புவதற்கு?”
எப்போதும் போலத்தான். முத்தமிட்டேன்
மூச்சு விட்டாளா?”
ழான் புன்னகைத்தான். முறுவல் அவனுக்கு அழகு தந்தது.
தெரியாது. மூச்சு எப்போதும் விடுவோம் தானே?”
புவேன் தலையைத் திருப்பிக்கொண்டார்.கன்னங்களில் வழிந்த இரு பெருந் துளிகளை ழான் பார்த்துவிடக் கூடாதே என்று அச்சம். பையனின் கேள்விக்கு விடை கூறாமல் சிறிது நடுங்கிய குரலில், “முத்தமிட்ட போது நீ எதையும் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்.
கவனித்தேன்.உடம்பு சில்லென்றிருந்தது. எங்கள் வீட்டில் அவ்வளவு குளிர.
புவேன் சிந்தித்தார்: நன்றாக சாப்பிடுகிற, குடிக்கிற நான் பணக்காரர்கள்மீது பொறாமைப்பட்டேனே? இதோ ஒருத்தி இறந்திருக்கிறாள் பசியால்! பசியினால்!
சிறுவனைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு கனிவுடன் கூறினார்:
சின்ன பிள்ளே, கடிதம் எழுதியாயிற்று.போய் சேர்ந்தும்விட்டது. உன் தாயாரிடம் என்னை அழைத்துப் போ.
போகிறேன். ஆனால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டான் சிறுவன்.
நான் அழவில்லைஎன்று சொல்லிக்கொண்டெ அவனை முத்தமிட்டார் மூச்சு முட்டும்படியும் அவனைக் கண்ணீரால் குளிப்பாட்டியபடியும். உனக்குத் தெரியுமா நான் உன் அப்பாவாய் இருந்தால் உன்னை எப்படி நேசிப்பேனோ அப்படி நேசிக்கிறேன் என்று? எனக்கும் அம்மா இருந்தாள். ரொம்ப காலத்துக்கு முன்னெ. கட்டிலில் கிடந்தவள் கடைசியாகபுவேன், ”நேர்மையாயும் நல்ல கிறித்துவனாயும் இருஎன்று சொன்னாள். உன் மூலமாய் அவளை இப்போது நான் பார்க்கிறேன்
அவர் எழுந்தார்.சிறுவனை மார்புடன் அணைத்துக்கொண்டு கண்ணுக்குப் புலப்படாத யாருடனோ பேசுவது போலக் கூறினார்:
பாரம்மா, பார்.மகிழ்ச்சி அடை. நீ எங்கு இருக்கிறாயோ அங்கு வர விரும்புகிறேன். அதுவரை இவன் என்னுடன் இருப்பான். ஏனெனில் இவனது வினோதக் கடிதம் எழுதப்படாமல் போயினும் இரட்டைப் பலன் அளித்துவிட்டது: இவனுக்குத் தந்தை, எனக்கு இதயம்.