Tuesday 30 October 2018

திரைப்படம் கடந்துவந்த பாதை



  தொடக்கப் படங்களில் ஒலி சேர்க்கப்படவில்லை; அதற்கான தொழில்நுட்பம் அறியாக் காலம். அவை ஊமைப்படம் எனப்பட்டன. கதை எளிதில் புரிவதற்காக நிகழ்ச்சிகளை அதிகமாய்ச் சேர்த்திருந்தார்கள்.

  நான் சிறு வயதில் “பம்பாய் மெயில்” என்ற ஊமைப்படம் பார்த்தேன். கிணற்றிலிருந்து ஓராளைத் தோளில் தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறிவந்த காட்சியும் இரண்டு பேர் எதிரெதிரே ரிவால்வரை நீட்டியபடி நின்ற காட்சியும் நினைவில் நிற்கின்றன.

  பின்பு ஒலியுடன் வந்த படங்களின் விளம்பரத்தில், “தமிழ் பேசும் பாடும் படம்” என்ற விளக்கம் இடம்பெற்றது. அவற்றில் உரையாடல் கொஞ்சம்; பாட்டுகள் எக்கச் சக்கம்! “கர்ணாமிர்தமான 50 பாடல்” என்று விளம்பரஞ் செய்தனர்.

  “வள்ளி திருமணம்” படத்தில் முருகனிடம் நாரதர், தாம் வழியில் நூதனமான ஒரு கனியைக் கண்டதாகவும் அது அவன் உண்பதற்குப் பொருத்தமானது என்றும் கூறினார்.

  உடனே ஒரு வினா-விடைப் பாட்டு:

-    மார்க்கத்தில் கண்ட கனிதனக்குள்ள
  சிலாக்கிய மென்ன முனியே?

-    பார்க்கும் பொழுதே ஐம்புலனுக்கும்
  சுவைதருந் தீங்கனியே!

-    பட்சிகள் கண்டா லிந்நேரம் அதைப்பற்றிப்
  பட்சித்திடாதோ சொல்வீர்.

-    பட்சிகள் கண்டால் பறந்தோடு மாகையால்
  பட்சமுடன் செல்வீர்.

-    எட்டாத கொம்பில் இருந்திடில் அக்கனி
  எப்படிக் கொய்திடலாம்?

-    எட்டும்படிக் கிரு கொம்புண் டதைப்பற்றி
-                ஏறிப்பறித் திடலாம்.




பவளக்கொடியில் அல்லியரசியின் மகன் பவளத்தேர் கேட்டான். அவ்வளவுதான்! பாட்டு!

-    மாணிக்கத்தால் தேரியற்றி
நானுனக்குத் தாரேண்டா.

-    மாணிக்கத்தேர் தந்தை தந்தார்
ஆதலாலது வேண்டாம்.

-    நீலக்கல்லால் தேரியற்றி
நானுனக்குத் தரேண்டா.

-    நீலத்தேரோ கிருஷ்ணன் தந்தார்
ஆதலாலது வேண்டாம்.


அல்லிக்கு வேறு வழியில்லாமற் போகவே பணிப் பெண்களை நோக்கிப் பாடுகிறாள்:

பவளமெங்கே விளைகிறது பாவையரே
பவளமெங்கே?
பாலகன்தேர் வேண்டுமென்ற தாலதனைக்
கொண்டுவரப் பவளமெங்கே?
எத்தனை தூரம் இருக்குதக்காடு?
யாவர்க்குரிய இடம்? ஏது ஏற்பாடு?

(மீதி மறந்து போயிற்று.)

இவ்வாறு எதற்கெடுத்தாலும் பாட்டு.

  ஒவ்வொரு படத்துக்கும் உரிய எல்லாப் பாட்டுகளும் அடங்கிய புத்தகம் கொட்டகையில் விற்பனை செய்யப்பட்டது. விலை ஓர் அணா (1/16 ரூபாய்).

  சொந்தக் குரலில் இனிமையாய்ப் பாட வல்லவர்களே நடிக்க வாய்ப்புப் பெற்றனர். S.D. சுப்புலெட்சுமி, T.P. ராஜலெட்சுமி, V.A. செல்லப்பா, M.K. தியாகராஜ பாகவதர், P.U. சின்னப்பா, T.R. ராஜகுமாரி, T.R. மகாலிங்கம் (குழந்தை நட்சத்திரம்) முதலியோர் ஒளிவீசினர்.



  ஆரம்பத்தில் ஒரு படத்துக்கு இரு தலைப்பிட்டனர்:

-    சந்திரசேனா அல்லது மயில்ராவணன்
-    சிந்தாமணி அல்லது பில்வமங்கள்
-    மோகினி ருக்மாங்கதா அல்லது ஏகாதசி விரத மகிமை
-    சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
-    வசந்த சேனா அல்லது மிருத் சகடிகா
-    சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு
-    பாலாமணி அல்லது பக்காத் திருடன்

  இரு வேறு படங்களுள் ஏதாவதொன்றைக் காட்டுவார்கள் போலும் என்று தவறாய் நினைத்தவர்கள் உண்டு.

  பின்னர் நீள நீளமான தலைப்புகள் தோன்றின;

- கணவனே கண்கண்ட தெய்வம்
- மணாளனே மங்கையின் பாக்கியம்
-    ஆயிரந் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
-    பானை பிடித்தவள் பாக்கியசாலி
-    பெற்ற மகனை விற்ற அன்னை
-    யானை வளர்த்த வானம்பாடி
-    தாய் மகளுக்குக் கட்டிய தாலி
-    ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது
-    பூ ஒன்று புயலானது
-    தை பிறந்தால் வழி பிறக்கும்
-    தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
-    ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

  பாட்டுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வந்தது; வசனம் அதிகமாய் இடம் பெற்றது. ஆனால் தரம் சுமாராய்த்தான் இருந்தது.

  ஆர்ய மாலா படத்தில் D.V. சாரி வசனம்:

பார்வதி – இளைய கன்னி எங்கே?

சிவன் -  இறந்தாள் இளைய கன்னி; கொன்றுவிட்டான் இந்தப் பாதகன். நீச்சா, பதிதா, என் முன்னே நில்லாதே, போ. நீ பூலோகத்தில் பல ஜன்மங்கள் எடுத்துக் கடைசி ஜன்மத்தில் நீச்சரால் வளர்க்கப்பட்டுக் காமாந்தகனாய்த் திரிந்து எந்த இளைய கன்னி உயிரிழக்கக் காரணமானாயோ, அவள் பொருட்டே கழுவிலேற்றப்படுவாய்.

பார்வதி – மைந்தனிடமா இந்தக் கோபமும் சாபமும்?

சிவன் – மைந்தன்! கொலைகாரனை மைந்தன் என்று கூற உன் நா கூசவில்லையா?

பார்வதி – போகட்டும், க்ஷமித்துவிடுங்கள்.

சிவன் – கொலைக் குற்றத்துக்கா க்ஷமை?”

உரையாடலை மேம்படுத்தினார் பாரதிதாசன். 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் அவரது உரையாடலுக்குக் காட்டு:

சாமியார் – அடக்குவார்கள், அடங்காதே.
சிந்தாமணி – கிடக்கிறார்கள், கோழையல்ல நான்.

இருந்தாலும் அம்பிகாபதி, சிவகவி, கண்ணகி ஆகிய படங்களின் வசனந்தான் மக்களைக் கவர்ந்தது. பிரமாதமாய் உரையாடல் இயற்றிப் புகழடைந்தார் இளங்கோவன். அவரைத் தொடர்ந்து அண்ணாதுரை, கருணாநிதி, கண்ணதாசன், பாலச்சந்தர் ஆகியோர் சுவை மிகுந்த, பொருள் பொதிந்த, இலக்கிய நயங்கமழ்ந்த வசனம் எழுதிப் படங்களின் வெற்றிக்கு உதவினர்.



  காலஞ்சென்ற எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் தம் “நினைவுகளின் சுவட்டில்” என்ற நூலில் எழுதியுள்ளதை (பக். 147) இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

  “அண்ணாதுரையின் ஓர் இரவு, நல்ல தம்பி போன்ற படங்கள் தமிழ் சினிமா உலகையே உலுக்கிவைத்தன. கதை வசனம் சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. என்ற எழுத்துகளைத் திரையில் பார்த்ததுமே தியேட்டர் கைதட்டலில் அதிரும். தமிழ் சினிமாவில் இது போன்று நிகழ்வது அதுதான் தொடக்கம்.

  பிடித்த பாட்டுகளை மக்கள் பாடிப் பாடிப் பரவசமடைந்தது போன்றே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்லிச் சொல்லி இன்புற்றார்கள்.

  பாடலாகட்டும் வசனமாகட்டும் எல்லாம் செவிக்கின்பம் நல்குவதுதானே? (audio). படத்தில் காட்சிக்கல்லவோ (video) முதன்மை தரவேண்டும்?  அதை நோக்கி இப்போது தமிழ் சினிமா முன்னேறுகிறது.  

(படங்கள் உதவி - இணையம்)


Wednesday 10 October 2018

குழந்தைகளும் தெய்வங்களும்


நூல்களிலிருந்து – 20


குழந்தைகளும் தெய்வங்களும்

(2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” என்னும் நூலில் அவர் தமது வாழ்க்கை வரலாறு பற்றி எழுதியிருக்கிறார். பக். 262 -267 –இல் மேற்படி தலைப்பில் கூறப்பட்டவற்றைத் தொகுத்துப் பதிகிறேன். நூல் பதிப்பித்த காலம் 2009.)

  கணினி வாங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதை வைத்துக்கொண்டு என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள்! எனக்கு இது ஒரு தட்டச்சு யந்திரமாகத்தான் இருக்கிறதே ஒழிய, இதற்கு மேல் அதன் எல்லையற்ற சாத்தியங்களை எனக்குச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஐந்து வயது சின்ன சின்ன வால்கள் கூட என்ன அனாயாசமாக இதன் எதிரில் உட்கார்ந்து என்னென்னமோ செய்கிறார்கள்! எப்படி இந்தக் குஞ்சு குளுவான்களுக்கு இவ்வளவு சீக்கிரம் புரிந்துவிடுகிறது? இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  புதிய தலைமுறைக் குழந்தைகள் தமக்கு முந்திய அத்தனை தலைமுறைகளும் சேர்த்து வைத்துள்ள அறிவார்ந்த அனுபவ சேகரிப்புக்கும் வாரிசுகள்; அவ்வளவும் அவர்களுக்குப் பிதிரார்ஜிதமாகக் கிடைத்துவிடுகின்றன. இரண்டாவது அவை வளரும் சூழல். இந்தக் குழந்தைகளுக்கு இப்போது கிடைப்பதை விட நமக்கு நம் சிறு பருவத்தில் கிடைத்தது மிக மிகக் குறைவு.

  இருப்பினும் நம் குழந்தைகளுக்கு நாம் மோழைகள்தான்.

  எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் பங்களாதேஷின் ஓர் ஒதுங்கிய கிராமத்துச் சிறுவர்களுக்குத் தன்னைத் தெரிந்திருக்கிறதே, தன்னை ஓர் ஹீரோவாகக் கொண்டாடுகிறார்களே என்று பிரஞ்சுக் கால்பந்தாட்ட வீர்ர் ஜினதீன் ஜிடானுக்கு ஒரே வியப்பு. அந்தக் குழந்தைகள் ஜிடானைச் சூழ்ந்துகொண்டு அட்டகாசமாக ஆர்ப்பரிப்பதைப் பார்த்து மனம் எவ்வளவு மகிழ்கிறது! எனக்கு வயது 74; ஆனால் நான் ஜிடானைப் பற்றி அறிந்ததே இந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போதுதான். இந்தக் குழந்தைகளுக்கு 9 – 10 வயதிலேயே ஜிடானைத் தெரிந்துவிட்டது. உலகம் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டது. இதெல்லாம் டி.வி. செய்த மாயம் என்று சொல்லலாம்.

  1957-ஆம் வருடம். நான் தில்லிக்குச் சென்ற புதிது. கரோல்பாகில் ஒரு சங்கீத விழா. ஒரு நாள் பந்தலில் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை, கச்சேரி நடுவில், “சங்கராபரணம் நன்னால்லே” என்று சொல்லிச் சிணுங்கியதைக் கேட்டு அந்தப் பக்கம் பார்த்தால் அது நான்கு வயதுப் பெண் குழந்தை. “அப்படியெல்லாம் சொல்லப்படாதுடி குழந்தே” என்று பெற்றோர் அடக்கினர். குழந்தைகளுக்கு இவ்வளவு நுண்ணிய உணர்வுகள் எப்படி சாத்தியமாகின்றன? இதில் தென்னிந்தியாவே ஒரு தனிக் கலாச்சாரம்தான். இங்கே தான் குழந்தைகளை மேதைகளாகக் கொண்டாடுகிறோம். ஒரு பாலமுரளி கிருஷ்ணா, மாலி, ரவி கிரண், மாண்டலின் சீனிவாஸ் போன்றோர் போற்றப்படுகிறார்கள். மேடைக் கச்சேரி வாழ்க்கை குழந்தையிலேயே தொடங்கிவிடுகிறது. வட இந்தியாவில் என்ன மேதைமை தெரிந்தாலும் குழந்தைகளுக்கு மேடை தரப்படுவதில்லை.

  நம் மரபில் நாம் குழந்தையைத் தெய்வம் என்போம். தெய்வங்களைக் குழந்தைகளாகப் பாவித்து அன்பையும் பாசத்தையும் பொழியும் ஒரு பார்வை பெரியாழ்வாரிடமிருந்து தொடங்குகிறது. வரலாற்றிலேயே முதன்முதல் அவர்தான் தெய்வத்தைக் குழந்தையாக்கி மகிழ்ந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய கற்பனை! ஆனந்தமான கற்பனை! கண்ணனது சிறு பருவத்து விளையாட்டையும் குறும்புகளையும் பாடி ஒரு புதிய உலகையே தந்து சென்றிருக்கிறார். அதைத்தான் பாகவதம் சொல்ல, வடநாடு முழுவதும் அது பக்தி இயக்கம் பரவச் செய்தது. பெரியாழ்வாருக்கு முன்பு கண்ணனைக் குழந்தையாக வட இந்தியா அறிந்ததில்லை; துவாரகை மன்னனாகத்தான் அதற்குத் தெரியும்.

  இது நமக்கே உரிய பாவம் என்று நினைத்திருந்தேன். டோரன்டோவில் உள்ள ஒண்டேரியோ கலைக்கூடத்தில் குழந்தைப் பருவ ஏசுவைப் பாதிரியார் ஒருவர் விரல் பிடித்து இட்டுச் செல்லும் ஓவியம் பார்த்தேன். “ஏசு குழந்தையாக இருந்தபோது பாதிரியார் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டேன். அது ஏசுவைக் குழந்தையாகப் பாவித்த கற்பனை என்று விளக்கம் சொன்னார்கள்.