Showing posts with label தமிழ்ச் சிறுகதை. Show all posts
Showing posts with label தமிழ்ச் சிறுகதை. Show all posts

Sunday, 17 March 2013

என்ன உலகம்!


சக்கரைப் பொங்கல் சாப்பிட ஆசையாய் இருக்குது, ஆத்தா. 

எனக்கும் ஆசைதான், செஞ்சு தர, காசு இல்லியே! இந்த வயசுலே பாடுபடவும் என்னாலே முடியலே. ஏதோ நீ குடுக்கிறதை வச்சு வயிறு கழுவுறோம். 

சரி, சரி; மனக் கஷ்டப்படாதே. நம்ப நெலமை எனக்குத் தெரியாதா? என்னமோ வாய் தவறிக் கேட்டுட்டேன். 

தப்பே இல்லை; ஆசைப்படுறதை நல்லா தின்கிற வயசுதானே? ஒன்னோட கஷ்ட காலம் ஆய் செத்துட்டா, அப்பன் இருந்தும் புண்ணியம் இல்லை.  

அப்பாவைப் பாத்து ரொம்ப நாள் ஆவுது, ஆத்தா. 

ஏன் பாக்கணும் அந்தப் பாழாப் போனவனை? பாத்து என்னா ஆவப்போவுது? என்னோட உயிர் மாதிரி நெனச்சிருந்த பொண்ணைக் குடுத்தேன். என்னா பாடுபடுத்தினான், படுபாவி பயல்? கொஞ்ச அடியா கொறைஞ்ச அடியா? எல்லாத்தையும் தாங்கிக்கிட்டாள் புண்ணியவதி. நாலு வருஷம் நாலு யொகமாத்தான் இருந்திச்சு அவளுக்கு. 

பாட்டி புலம்பித் தீர்த்தாள் ஒருபாட்டம். 

போதும், போதும். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன கதை! 

என் மனம் ஆறலியே! கட்டை வேகிற வரைக்கும் ஆறாது. 

நேரமாச்சு; வேலைக்குப் போயிட்டு வரேன். 

கிளம்பினான் சின்னப்பன் தேநீர்க் கடைக்கு. 

தந்தை சிங்காரம் பக்கத்துச் சிற்றூரில்தான் வாழ்கிறான்; எலும்புருவ மனைவியையும் மூன்று வயது மகனையும் மாமியார் வீட்டுக்கு விரட்டியவன் அவள் இறந்தபோது வந்தவன்தான்; இந்த ஏழு ஆண்டுகளில் பிள்ளையைப் பார்க்கக்கூட அவனுக்கு ஆசை தோன்றவில்லை; பாசம் முளைக்காத பாலையே அவன் மனம். 

துன்பம் தொடர்கதையாவது அரிதல்ல: பாதை தவறிய அரசு வேன் அந்தக் கடையையா முட்டவேண்டும்? ஏதோ நல்ல காலம்! உயிர்ச் சேதம் ஏற்படவில்லை; காயங்களுடன் தப்பின நால்வருள் சின்னப்பன் ஒருவன். 

இழப்பீட்டுத்தொகை 2000 ரூ. பெற அவனையும் பாட்டியையும் நற்பணி மன்ற உறுப்பினர் நகரத்துக்கு அழைத்துச் சென்றார். தகப்பன் உயிருடன் இருப்பதால் அவனுக்குத்தான் கிடைக்கும் எனத் தெரிந்தது.

அவனது பொறுப்பற்ற போக்கையும் சிறுவனை வளர்க்கப் பாட்டி பட்ட அல்லல்களையும் அலுவரிடம் விவரித்தனர். பொறுமையாய்க் கேட்கும் பண்பு வாய்ந்த அந்த அபூர்வ மனிதர் இரங்கினார்தான்; ஆனால் பயன்? 

சட்டம் சட்டந்தான்; அது வளைந்து கொடுக்குமோ, ஏழைக்கு?

Wednesday, 4 July 2012

அவர் சொன்னபடியே...




சூடாமணி 50 வயதுப் பெண்மணி. பருத்த உருவம் ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ஆன்மிகப் பழமாகிய அவர் பக்திப் பனுவல்களைப் பரவசத்துடன் பாராயணம் செய்வார். ஆசாரம், அனுஷ்டானம், நோன்பு, சம்பிரதாயம் எல்லாம் தீவிரமாய்க் கடைப்பிடிப்பார். நல்ல நாள் பார்த்துத்தான் முக்கிய செயல்களில் ஈடுபடுவார் .சோதிடத்தில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவர். 

ஒரே மகன், மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி, மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர்.  

துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று; வியர்த்துக் கொட்டியது. 

இதயத் தாக்கு! மூவரும் புரிந்துகொண்டனர். 

"கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன்"  

மகன் பரபரத்தான். அமைதிப் படுத்தினார் தாயார்: 

"தம்பி, நேற்று அஷ்டமி, இன்று நவமி. ரொம்பக் கெட்ட நாளுப்பா. இப்போது வேண்டாம்; விடிந்ததும் போவோம்". 

"ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க" 

கெஞ்சினான். எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும். 

அவர் மசியவில்லை: 

"பயப்படாதீங்க. ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன். பகவான் கைவிடமாட்டார். பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம்" என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர். எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள். 

முதல் தாக்குதல்தானே? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது. 

"ஐயோ!" அலறினார் அம்மா; அவ்வளவுதான், அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர்.

Wednesday, 27 June 2012

தலைவலியோடு திருகுவலியும் - சிறுகதை




மாறனுக்குப் புது இடத்தில் படுத்தால் தூக்கம் வரவே வராது. ஆதலால் உறவினர் வீடு, விடுதி முதலியவற்றில் இரவு தங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவான். என்றாலும் சிலசமயம் முடியாமற் போய்விடும். 

அப்படித்தான் ஒரு நாள் வெளியூர் நண்பனின் இல்லத்தில் இராத் தங்கும் கட்டாயம் ஏற்பட்டது. 

"தனியறை, வசதியான படுக்கை, குளிரூட்டி எல்லாம் உண்டு; தூக்கம் நிச்சயம் வரும்" என நண்பன் உறுதியளித்தான். 

அவன் தெரிவித்தது தன்னுடைய நம்பிக்கையை. அந்த நம்பிக்கையால் வழக்கமான துன்பம் நேர்வதைத் தடுக்க இயலவில்லை. "பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது" என்ற கதைதான். 

சொந்தக்காரர் வீடாய் இருந்தாலும் தெருவுக்குப் போய் இயற்கைக் காற்றாடச் சிறிது நேரம் கழிக்கலாம். இங்கே அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது; அவனது தங்கை வேறு இருக்கிறாள்; இந்தச் சூழ்நிலையில் அறையை விட்டு வெளியே போனால்? தவறான நோக்கம் கற்பித்துக் காலிப்பயல் பட்டம் சூட்டிவிடுவார்கள். 

நண்பனும் வசவுக்கு ஆளாவான். 

வேறென்ன செய்யலாம்? 

எதிலோ எப்போதோ படித்திருந்த யோசனைகளை அமல்படுத்த முடிவு செய்தான். 

"ஒரேயொரு பொருளை இடைவிடாமல் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தால் மனங்குவிந்து ஒருமுகப்பட்டுத் தூக்கம் வந்துவிடும்" 

ஒன்றின்மீது மட்டும் கவனஞ் செலுத்துவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது; சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று? 

"ஒன்றுமுதல் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தோன்றி உறங்கிவிடுவோம்" 

எண்ணினான்; 500 தாண்டிவிட்டது. தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை மனப்பான்மை ஏற்பட்டு விழிப்புணர்வை மிகுதிப்படுத்தியதுதான் கண்ட பலன்! 

தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் உண்டாகும் சலிப்பு உறக்கத்தைத் தரலாம். அறையில் பெட்டி இருந்தது. ஆனால் அகாலத்தில் தொடர் இல்லையே! 

எழுந்து விளக்கேற்றி அறையிலிருந்த நூல்களுள் ஒன்றை எடுத்தான். வாசிப்பு, "தூக்க மருந்து" என்பது மாணவப் பருவத்துப் பட்டறிவு. தொடக்கத்திலிருந்து வாசித்தால் சுவை ஏற்பட்டுத் தூக்கத்தை விரட்டக்கூடுமாதலால் பாதியைத் திறந்து படிக்கலானான்: 

"நள்ளிரவு. அவள் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தாள். எல்லாரும் தூங்குகிறார்கள் எள்ளளவும் கவலை இல்லாமல், நான் மட்டும் தனியாய், கண்விழித்துப் படிக்க வேண்டியிருக்கிறதே என்னும் எரிச்சலானது மனத்தின் ஒரு மூலையில் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க, அவள் படித்தாள். 

சன்னல் பக்கத்தில் கருப்பு உருவம் ஒன்று தோன்றியது. கம்பிகளை ஒலியின்றி எளிதாய் வளைத்து மெதுவாய் உள்ளே இறங்கிற்று. 

கயல்விழியின் முதுகுக்குப் பின்னாலிருந்து அடிமேல் அடி வைத்து முன்னேறிய அந்த நெடிய உருவம் பையிலிருந்து கத்தியொன்றை உருவியது;  பளபள என்று மின்னிய புதுக் கத்தியை ஓங்கியவாறே நெருங்கியது. 

அருகில் வந்தாயிற்று; அவளது பிடரியில் சதக் என்று..." 

ஐயோ என அலறியேவிட்டான் மாறன். புத்தகத்தை எறிந்தான்; உடல் நடுங்கியது, இதயத் துடிப்பு காதில் கேட்டது; விளக்கை அணைக்கவும் அச்சம். சன்னலருகில் போய்க் கதவுகளை அவசரமாய் மூடினான். அந்த உருவம் இந்த அறையிலேயே இருக்குமோ என்ற விசித்திர ஐயம் அவனைக் கிடுகிடுக்க வைத்தது. 

இனி வருமோ தூக்கம்? புத்தகம் வாசித்ததால் புதிய சங்கடமாய்த் திகில் நிலை ஏற்பட்டது. 

அமைதி இழந்து படுக்கவும் பயந்து இரவு முழுதும் உட்கார்ந்தபடியே விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 ************************************************************

Friday, 8 June 2012

ஏமாளி இருக்கும்வரை ....


  

முத்துசாமி பெருஞ் செல்வரல்ல என்றாலும் கணிசமானோர் வறுமைக் கோட்டிலும் அதை ஒட்டியும் வதைபடும் இந் நாட்டில் அவரது சொத்தும் வருமானமும் தேவைக்கு மிஞ்சியவையே. 

அவருக்கு ஒரே மகன் கண்ணுசாமி. பட்டதாரி. வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்நிலை எழுத்தர். தந்தையைப் போலவே உழைக்கும் மக்களின் நிறம். 

மகனுக்குப் பெண் பார்க்கத் திட்டமிட்டார் முத்துசாமி. மருமகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நிர்ணயித்துக் கொண்டார்: சிவப்பு நிறம், பத்தாவதற்குக் குறையாத படிப்பு, அழகு, நல்ல குணம், எல்லாவற்றுக்கும் மேலாகப் பெருஞ் செல்வக் குடும்பத்து ஒரே பெண். மற்றவை குறைந்தாலும் பாதகம் இல்லை. இத் தகுதிதான் மிக முக்கியம். அப்போதுதானே நிறைய வரதட்சிணை, சீர், சொத்து முதலியன கிடைக்கும்? 

சட்ட விரோதமாயிற்றே வரதட்சணை வாங்குவது? ஆமாம், சட்ட விரோதந்தான். அது மட்டுந்தான் சட்ட விரோதமா? கொடுப்பதுந்தான். வாங்குவதும் குற்றம், தருவதும் குற்றம் என்று சட்டம் கூறும்போது அளிப்பவனும் வெளியே சொல்லமாட்டான், பெறுபவனும் சொல்லமாட்டான். இரு சாராரும் சட்டத்தை மீறி நடக்கட்டும். வரதட்சணை நீடூழி வாழட்டும் என்னும் நோக்கத்தில் நிறைவேறியது தான் அந்த சட்டமே யொழிய அதை ஒழிப்பதற்காக அல்ல என்பது முத்துசாமிக்கு நன்றாகவே தெரியும். 

சோதிடர் உறுதியாய் சொல்லியிருந்தார்: 

முத்துசாமி, நீங்கள் விரும்புகிறபடி மருமகள் கிடைப்பதற்கு ஆனி 18 கடைசி நாள். அதற்குள் மணவுறுதியாவது செய்துவிடவேண்டும்என்று. 

நாலரை மாத அவகாசமே இருந்தமையால் முத்துசாமி மிகத் தீவிரமாய் செயல்பட்டார். திருமண அமைப்பாளர்கள் மூலமும் தமிழ், ஆங்கில ஏடுகளில் விளம்பரம் வெளியிட்டும் பரபரப்பாய் முயன்றார். 

கெடு நெருங்கிக்கொண்டிருந்தது; ஆனால் பெண் அமைந்தபாடாய் இல்லை. ஓரம்சம் பிடித்திருந்தால் ஈரம்சம் சரியில்லை. எல்லாம் ஒத்திருந்தாலோ, பெண் வீட்டார்க்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை! 

விடாமல் பாடுபட்டும் தோற்றுப்போன முத்துசாமி ஒரு வழியாய்ப் பெண்ணொருத்தியை உறுதி செய்து திருமணத்தை நடத்த செய்தார். உறவினர், நண்பர்க் கெல்லாம் ஒரே வியப்பு! பெண் ஏழையாம்! முத்துசாமி ஏன் தம் குறிக்கோளைக் கைவிட்டார்? 

இதோ அவரே தம் நண்பரிடம் விளக்குகிறார்: 

"எத்தனையோ பெண் பார்த்தேன். அலைந்தலைந்து அலுத்துப் போனேன். சோதிடர் வைத்த கெடுவும் முடிந்துவிட்டது. அவரிடம் முறையிட்டேன். 

அவர், குரு பெயர்ந்துவிட்டதால் கண்ணையன் சாதகப்படி பணக்கார மனைவி கிடைக்க இனிமேல் வாய்ப்பு இல்லை. கூடுவாஞ்சேரியில் தான் உங்கள் மருமகள் இருக்கிறாள். செக்கடித் தெருவில் மேற்குப் பார்த்த ஓட்டு வீடு; பக்கத்தில் மின் கம்பம்; எதிரே இரட்டை வேப்பமரம். இந்த அடையாளங் கொண்ட வீட்டுப் பெண்தான் முடியும். நீங்கள் எதையும் யோசிக்காமல் ஏழை என்று தயங்காமல் அந்தப் பெண்ணை முடியுங்கள்என்று சொன்னார். அவர் வாக்கு அப்படியே பலித்துவிட்டது. சும்மா சொல்லக்கூடாது. அவர் மிகக் கெட்டிக்காரர் 

இதை சாடையாய்க் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தி உள்ளூரச் சிரித்துக்கொண்டார். தம் மகளுக்கு நல்ல வரன் கிட்டாமல் கவன்றுகொண்டிருந்த அவர் கண்ணயன்மீது குறி வைத்தார். முத்துசாமியின் நிபந்தனைகளை அறிந்தார். அவரது சோதிடருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து சரிக்கட்டித் தம் பெண்ணுக்கு மணம் முடித்தார்.  

முத்துசாமி சொன்னதைக் கேட்டபோது அவருக்கு சிரிப்பு வராதா?

Saturday, 4 February 2012

பாடம் - யாருக்கு?




வெண்மதியைப் பெண்பார்க்க அளகேசன், அவனது பெற்றோர். இரண்டு இளைஞர் ஆக ஐவர் மட்டுமே வந்தனர். 

அளகேசனைச் சுட்டிக்காட்டிய அவன் தந்தை , "இவன் என் மகன் அளகேசன்; அவர்கள் இணை பிரியா நண்பர்கள் " என்றார். 

சம்பிரதாயப் பேச்சுக்குப் பின்பு மங்கையர் இருவர் வந்தமர்ந்தனர். " இதுதான் வெண்மதி, அது நெருங்கிய தோழி தடங்கண்ணி " என அறிமுகப்படுத்தினார் அறிவரசன். 

அவர்களின்மீது பாய்ச்சிய முதல் பார்வையிலேயே அளகேசன் திடுக்கிட்டான், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அவனது நிலையே நண்பர்கள்து நிலையும். 

இவர்களை நோக்கிய வெண்மதிக்கும் தடங்கண்ணிக்கும் அதிர்ச்சிதான்! தங்கள் வெறுப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டனர்.

" தனியே எதுவும் பேச விரும்பினால் பேசலாம் " என்றார் அளகேசனின் தந்தை. 

அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் வெண்மதி, "ஆமாம், பேசவேண்டும் " என உடனடியாகக் கூறினாள். 

இருவரும் பக்கத்து அறையில் அமர்ந்தனர். 

வெண்மதி தொடங்கினாள்:

" என்னை இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?" 

"ஊகூம், பார்தததில்லை." 

"பொய் சொல்லாதீர்கள்; போன மாதம் நான் உங்கள் ஊருக்கு வந்தபோது கண்டீர்களே!" 

"இருக்கலாம், நினைவில்லை" 

"பாட்டெல்லாம் பாடினீர்கள்!" 

"அதற்கென்ன? பாட்டுப் பாடுவது தவறா?" 

"தவறா அல்லவா என்பது எந்தப் பாட்டை, எப்போது, யாரிடம், எந்த நோக்கத்தோடு பாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

அவன் பதில் தர இயலாமையால் மௌனியானான். 

வெண்மதி," அன்று நீங்களும் நண்பர்களும் நடந்துகொண்ட விதம் உங்களுடைய அநாரிகக் குணத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்திவிட்டது; ஒழுக்கம் கெட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது" என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாள். 

விருந்தினர் விடை பெற்றுக்கொண்ட கையோடு அறிவரசனும் வெற்றிச்செல்வியும் மாப்பிள்ளை வீட்டார் பற்றி உயர்வான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். 

முட்டுக்கட்டை போட்டாள் வெண்மதி. 

"எனக்குப் பிடிக்கவில்லை, அப்பா!" 

" எது?"

 "இவனை நான் கட்டிக்கொள்ள மாட்டேன்" 

"ஏன்?" 

"இவன் ஒரு காலிப் பயல்."  

"என்னது? யார் சொன்னது?" 

"இவளைக் கேளுங்கள்." 

தடங்கண்ணி விளக்கினாள்: 

" நாங்கள் மாமல்லபுரம் சுற்றுலா போனபோது இவளையும் என்னையும் கேலி கிண்டல் செய்து, மட்ட ரக சினிமா பாட்டுப் பாடி இந்த மூன்று பேரும் தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள்; தலைவராய்ச் செயல்பட்டவர் மாப்பிள்ளை." 

வெற்றிச்செல்வி விசாரித்தார்: 

" நன்றாய்த் தெரியுமா, கண்ணி? இந்தப் பிள்ளைகள்தான் அவர்கள் என்று உறுதியாகத் தெரியுமா? அவசரப் புத்தியால் ஆள் மாறாட்டமாகி மங்கல காரியம் நின்றுவிடக் கூடாது" 

"அம்மா, இவர்கள்தான் அந்தப் பொறுக்கிகள் என்பதற்கு அய்யமே இல்லை" என ஆத்திரத்தோடு சொன்னாள் வெண்மதி. 

" ஏதோ, வயதுக் கோளாறு; அதிகமாய் சினிமா பார்க்கிறதாலே வருகிற சின்ன புத்தி. திருமணத்துக்குப் பின்னாலே எல்லாம் சரியாகிவிடும், வெண்மதி. இந்த மாதிரி நல்ல இடம் அமைவது கஷ்டம்."

"இடத்தைக் காட்டிலும் மனிதர் தானே முக்கியம், அம்மா? அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட அவமானமும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவனுடைய பேச்சும் நடத்தையும் அவ்வளவு கீழ்த்தரம். இவனாவது, திருந்துவதாவது? வேண்டாம் விஷப் பரீக்ஷை. இவனுடன் வாழ நான் ஒருகாலும் சம்மதிக்க மாடேன்."

அறிவரசன் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். சிந்தனையில் முற்போக்கும் செயலில் துணிச்சலும் பிறரின் நியாயமான கருத்தை ஏற்கும் மனப் பக்குவமும் உடைய அவருக்கு மகளின் கூற்று சரிதான் என்று பட்டதால், "வேறு வரன் பார்ப்போம்" எனச் சுருக்கமாய்ச் சொல்லி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

அடுத்த மூன்று நாளில் அளகேசன் சரியாய் உண்ணாமல் உறங்காமல் சங்கடப்பட்டான். வெளியே தலை காட்டத் துணிவில்லை. "அவமானப்படுத்திவிட்டாளே!" என எண்ணி எண்ணிக் குமைந்தான். திரௌபதி தன்னை எள்ளி நகையாடியதை நினைத்து நினைத்துத் துரியோதனன் இப்படித் தான் பொருமியிருப்பான் போலும். 

"பழி வாங்கியே தீரவேண்டும், அதுவே என் மனப் புண்ணுக்கு மருந்து" என்று முடிவு செய்தான். நண்பர் இருவரிடமும் தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்டான். அவனது நிலையை நன்கு புரிந்துகொண்ட அவர்கள் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கி வீடு திரும்புகையில் அடித்து உதைத்துத் தக்க பாடம் புகட்டுவதாய் உறுதி கூறி அவனுக்கு ஆறுதல் தந்தனர். 

அவன் எச்சரித்தான்: "அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; என்ன இருந்தாலும் பெண், வாழ வேண்டியவள்" 

நடமாட்டம் குறைவாய் உள்ள தெரு வொன்றில் தக்க இடம் தேர்ந்து காத்திருந்தனர். 

சற்று நேரத்தில், "அதோ வருகிறாள்" எனப் பரபரப்புடன் கூறினான் ஒருவன். 

ஆம், வெண்மதி வந்துகொண்டிருந்தாள், இரு வீலரில். 

மடக்கி அடிக்கத் தொடங்கியதும் வண்டியுடன் விழுந்தவள் சுதாரித்துக்கொண்டு அடுத்த நொடியில் எழுந்துவிட்டாள். அவளது கை கால்கள் இயந்திர கதியில் இயங்கி மிக வலுவான எதிர்த்தாக்குதலைத் தொடுத்தன. இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திடுக்கிட்டுத் தட்டுத் தடுமாறிச் சிறிது நேரம் சமாளித்துப் பார்த்துவிட்டுத் தலை தெறிக்க ஓட்டமெடுத்தனர். 

கற்பிக்க வந்தோர் கற்பிக்கப்பட்டனர்! 

செய்தி கேள்விப்பட்டுத் திரண்டு வந்த அக்கம்பக்கத்தாரிடம் வெற்றிச்செல்வி விளக்கினார்:

" கராத்தேயில் கறுப்பு வார் வாங்கியிருக்கிறாள். எட்டாம் வகுப்பு படித்தபோதே கற்க ஆசைப்பட்டாள். பெண்பிள்ளைக்கு இதெல்லாம் ஏன் என்று நாங்கள் கேட்டதற்கு, நாளைக்கு என்னை ஒருவனுக்குக் கட்டிக்கொடுப்பீர்களே. அவன் குடித்துவிட்டு அடிக்க வந்தால் தடுத்துக் கொள்ள வேண்டுமே! அதற்குத்தான் என்று அவள் சொன்னபோது எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் சின்ன வயதில் எவ்வளவு முன் யோசனை என்று வியந்து புகழ்ந்து விருப்பத்தை நிறைவு செய்தோம். 

அவள் எண்ணப்படியே கராத்தே கை கொடுத்தது!




Wednesday, 18 January 2012

அளந்த கோல் - நாடகம்




காட்சி 1
இடம் - வீட்டு வரவேற்பறை
காலம் - மாலை

நாளேட்டை வாசித்துக் கொண்டிருந்த எழிலன் திடீரென அலறுகிறார் ;

ஐயோ ! ஐயோ ! போயிற்று ! போயிற்று !

குழலி - ( உள்ளீருந்து ஓடி வந்து ) : என்னங்க ? என்ன போயிற்று ?

எழிலன் - எல்லாம் போய்விட்டது ! குழலி , நான் பெரிய தவறு செய்துவிட்டேன் .

குழலி - பதறாதீர்கள் , அமைதியாக இருங்கள் . என்ன ஆகிவிட்டது ? என்ன தவறு ?

எழிலன் - நன்னம்பிக்கை நல நிதியை மூடிவிட்டார்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள் ; எல்லாப் பணமும் அதில்தான் செலுத்தியிருந்தேன் ; போயிற்றே ! அடியோடு போய்விட்டதே !

குழலி - பணம் தானேங்க ? போனால் போகட்டும் ! மறுபடி சம்பாதித்துக் கொள்ளலாம் .

எழிலன் - எவ்வளவு எளிதாய்ச் சொல்லிவிட்டாய் ! ஐம்பதாயிரம் என்ன சிறு தொகையா ? உண்ணாமல் தின்னாமல் இப்படி அநியாயமாய்ப் பறிகொடுத்தேனே!

குழலி - எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தால் தான் என்ன ? இன்ப வாழ்வுக்கு அன்பும் ஒற்றுமையும் போதும் ; அவை நம்மிடம் நிறைய இருக்கின்றன ; ஆகையால் நீங்கள் மனந்தளர வேண்டியதில்லை.

எழிலன் - தங்கை திருமணத்துக்குப் பணமல்லவோ தேவை ? எப்படிச் சமாளிப்பது ?

குழலி - ஏங்க ? வங்கியில் தானே பணத்தைச் செலுத்தப்போவதாய்ச் சொன்னீர்கள் ; இப்போது நிதி என்கிறீர்கள் !

எழிலன் -- முதலில் அப்படித்தான் முடிவு செய்திருந்தேன் ; ஆனால் நிதியில் வட்டி அதிகம் என்பதை அறிந்து அதில் போட்டேன் .

குழலி - அப்படியா ? அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது ; மனத்தை விட்டுவிடாதீர்கள் .இடுக்கண் வருங்கால் நகுக . திருமணச் செலவுக்கு வேறு வழி தேடுவோம்.

( மூவர் நுழைகின்றனர் ; குழலி உள்ளே போகிறார் )

காட்சி 2

மாரன் - என்ன எழில் ? ஏன் வாட்டமாக இருக்கிறாய் ?

எழிலன் - மோசம் போய்விட்டேன் , நண்பர்களே ! நமக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிடைத்தது அல்லவா ? அவ்வளவையும் வைப்பு நிதியாய் ஒரு நல நிதியில் செலுத்தியிருந்தேன் ; அந்த நிறுவனத்தை மூடிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது . நான் என்ன செய்யப்போகிறேன் ?

மணிவேல் - அடாடா ! பேரிழப்புத் தான் ; நல நிதிகள் நம்புவதற்கு உரியவை அல்ல ; நாங்கள் அப்போதே உன்னை எச்சரித்தோமே ! நீ சட்டை செய்யவில்லை எனத் தெரிகிறது .

பொறையன் - நல நிதியில் போட்டுவிட்டு வங்கியில் செலுத்தியதாய்ப் பொய் வேறு சொல்லியிருக்கிறாய் ! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் ; பேராசை பெரு நஷ்டம் .

எழிலன் - ஆமாம் ; ஆசை அறிவை மழுக்கிவிட்டது . அடுத்த மாதம் தங்கை திருமணத்துக்காக அப்பாவுக்கு அந்தத் தொகை முழுதையும் அனுப்பத் தீர்மானித்திருந்தேன் ; அப்பா என்னை நம்பிக்கொண்டிருக்கிறார் ; அவருக்குக் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றுவேன் ?

மணிவேல் - கடினந்தான் ; அவ்வளவு பெருந்தொகையைப் புரட்டுவது எளிதா ?

எழிலன் - நீங்கள் மனம் வைத்தால் முடியும் . நீங்கள் மூன்று பேருந்தான் என் நெருங்கிய நண்பர்கள் ; உங்களை அல்லாமல் வேறு யார் எனக்கு உதவுவார் ? ஆளுக்குப் பதினைந்தாயிரம் கடனாகத் தாருங்கள் ; சமாளித்துக்கொள்வேன் ; தருவீர்களா ?

பொறையன் - உனக்கு இல்லாமலா ? ஆனால் பார் , என் சிறிய தந்தையின் மகன் கார் வாங்கப் போகிறான் ; பணம் போதவில்லையாம் ; அவனுக்கு முழுத் தொகையையும் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் .

மணிவேல் -- என்னையும் மன்னித்துவிடு , எழில் . நான் ஊரப்பாக்கத்தில் ஒரு மனை வாங்கப் போகிறேன் ; நெடு நாள் ஆசை. எனக்கே மேற்கொண்டு பணம் தேவைப்படும் போல் இருக்கிறது ; இந்த நிலையில் நான் எப்படி உனக்கு உதவ முடியும் ?

எழிலன் -- இப்படிக் கை விரிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை . நீ என்ன சொல்லப்போகிறாய் , மாரா ?

மாரன் -- என் தந்தை தம் தொழிலை விரிவு படுத்துவதற்காகப் பணம் கேட்டிருக்கிறார் ; கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறேன் . ஆனால் நீ சோர்வு கொள்ளாதே ! உன் தங்கை மணத்துக்கே முதலிடம் ; அது நல்லபடி நடக்க வேண்டும் . என் ஐம்பதாயிரத்தையும் தருவேன் ; மகிழ்ச்சி தானே ?

எழிலன் - ஆனால் உன் தந்தையார் ..........

மாரன் - அதைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.

மணிவேல் - ஆமாம் , தொழிலைக் கொஞ்சங் கொஞ்சமாய் விரிவு படுத்தலாம்.

பொறையன் - இப்போது உன் கவலை தீர்ந்தது . நாம் இனி மகிழ்ச்சியாய்ச் சீட்டு ஆடலாம்.

எழிலன் - முடியாது ; இனிமேல் நான் சீட்டு ஆட மாட்டேன் . ஒவ்வொரு நொடியையும் நல்ல விதமாய்ப் பயன் படுத்திச் சிறிது சிறிதாய்ப் பணம் சேர்த்து மாரனின் கடனை அடைக்க வேண்டும் ; அதற்கு இப்போதே திட்டம் தீட்டப் போகிறேன் நீங்கள் இனி இங்கே வந்து என் நேரத்தை வீணாக்காதீர்கள் . நீங்கள் போகலாம் . மாரா , நீ மட்டும் இரு ; உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது.

( இருவரும் முக வாட்டத்துடன் வெளியேறுகிறார்கள் )

மாரன் - உனக்கு எப்போது பணம் தேவை ?

எழிலன் - சொல்கிறேன் . குழலீ ! நீயும் வா !

( குழலி வந்தமர்கிறார் )

காட்சி 3

எழிலன் - குழலி , இங்கே நடந்த உரையாடலை நீ கேட்டுக்கொண்டிருந்தாயா ?

குழலி - ஆமாம் , காதில் விழுந்தது .

எழிலன் - உதவி கேட்டவுடன் அவனவனும் கழன்று கொண்டான் ; எவ்வளவு நெருங்கிப் பழகிவந்தோம் ! ஆறுதலாய்க் கூடப் பேசவில்லை . மாரன் மட்டுமே உற்ற நண்பன் எனத் தெரிந்துகொண்டேன் .

மாரன் - அதிருக்கட்டும் . திட்டம் தீட்டப் போவதாய்ச் சொன்னாயே ! நான் ஒரு யோசனை சொல்கிறேன் : மாணவர்களுக்கு வீட்டில் தனிப் பாடங் கற்பி .

எழிலன் - தேவையில்லை .

மாரன் - பின்னே ?

எழிலன் - இருவரும் கேளுங்கள் : எந்த நல நிதி மூடப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை ; பணம் பத்திரமாய் வங்கியில் இருக்கிறது .

குழலி - அப்படியானால் , எதற்காக ................

எழிலன் - சொல்கிறேன் . " கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் " என்று குறள் கூறுகிறது அல்லவா? அது பற்றி நான் பல மூறை எண்ணிப் பார்த்திருக்கீறேன். கேடு வந்த பின்பு நண்பர்களின் போக்கை அறிந்து என்ன பயன் ? முன்னாலேயே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது என முடிவு செய்தேன ;. அப்போது தான், " கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு " என்ற திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றுவது எளிது என எனக்குத் தோன்றிற்று. அதற்கு வழி தேடிக்கொண்டிருந்தேன் . நல நிதிச் செய்தியைப் பயன்படுத்தி ஒரு நாடகம் ஆடினேன் . என் நோக்கம் நிறைவேறிற்று ; நண்பர்களை அளந்து விட்டேன் ; இனி மாரனுடன் மட்டுமே எனது நட்பு நீடிக்கும்.

மாரன் - எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி : உன் சோதனையில் தேறிவிட்டேன் ; என் தகப்பனார்க்கும் உதவ முடியும் .

குழலி - பிரமாதமான நடிப்புத் திறமை உங்களிடம் இருக்கிறது என்பதை நான் இன்றுதான் தெரிந்து கொண்டேன் ; முழுக்க முழுக்க நம்பிவிட்டேன் .

எழிலன் - நம்பினாலும் என்னை இடித்துரைக்காமல் அன்பாய் , ஆறுதலாய்த் தெம்பூட்டும் வகையில் பேசினாயே ! மெய்யாகவே நீ என் வாழ்க்கைத் துணை தான் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதியாயிற்று.