Tuesday 27 August 2019

பஃறுளி ஆறு



  குமரி முனைக்குத் தெற்கில் பெருநிலப் பரப்பு இருந்ததாயும் அதன் பெயர் தமிழில் குமரி கண்டம் எனவும் ஆங்கிலத்தில் லெமுரியா எனவும் அதைக் கடல் விழுங்கிவிட்டது என்றும் சிலர் கூறி அதற்கு ஆதாரங்களுள் ஒன்றாக சிலப்பதிகாரத்தின் சில அடிகளைக் காட்டுவர்:

  வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
  பஃறுளி யாற்றுடன் பன்மனை யடுக்கத்துக்
  குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

  (சிலம்பு 11 : அடி 18-20)

  இதன் பொருள்:

கூரிய வேலைத் தன் மேல் (பாண்டியன்) எறிந்தமையால் கடலானது அவன் மீது பகைமை கொண்டு அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆற்றையும் குமரி மலையையும் மூழ்கடித்தது.

(பல துளி = பல்துளி = பஃறுளி)

  அது தவறான தகவல். குமரி கண்டம் மறைந்த பின்பு தோன்றியது மூன்றாம் தமிழ்ச் சங்கம் என்பர். அப்போது அந்த ஆறு இருந்தது என்பது புறம் 9 ஆம் பாட்டால் தெரிகிறது. அதில் புலவர் நெட்டிமையார், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் கீழ்க்காணுமாறு வாழ்த்துகிறார்:

வாழிய குடுமி
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

கருத்து – பஃறுளி ஆற்றிலுள்ள மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை கொண்ட ஆண்டுக்காலம் வாழ்க!

  தம் காலத்தில் இருந்த ஓர் ஆற்றைத்தானே புலவர் வாழ்த்துவதற்குப் பயன்படுத்தியிருப்பார்?

  சரி, இப்போது இருக்கிறதா? இருக்கிறது. தற்காலப் பெயர் பறளியாறு. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாற்றுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில் உற்பத்தியாகி இறங்கி வருகிறது. மாத்தூர் தொட்டிப் பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாக வரும் அந்த ஆறு அருவிக்கரை வழியே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வளாகத்தைத் தொட்டபடி மூவாற்றுமுகத்தில் கோதையாற்றுடன் இணைகிறது.

  தொட்டிப் பாலம் என்பது மாத்தூர் பகுதியிலுள்ள கணியான்பாறை என்ற மலையையும் கூட்டுவாயுப் பாறை என்னும் குன்றையும் இணைத்துப் பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கும் நடுவில் 1971-இல் கட்டப்பட்ட பாலம்.

  பஃறுளியாறு இன்று வரை மக்களுக்கு நீர் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதைக் கடல் கொள்ளவில்லை. சிலப்பதிகார ஆசிரியர் தம் காலத்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

  இலக்கியம் கூறுவது சான்றாகக் கொள்ளத்தக்கதல்ல.

&&&&&&&

Wednesday 14 August 2019

புதுச்சேரியில் அடிமைகள்



  (Pierre Bourda என்பவர் 2005 அக்டோபரில் L’esclavage a Pondichery (புதுச்சேரியில் அடிமை முறை) எனத் தலைப்பிட்டு எழுதிய ஒரு பிரெஞ்சுக் கட்டுரையின் சுருக்க மொழிபெயர்ப்பு.)

  போர்க் கைதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் அடிமைகளாக நடத்தப்படுவார்கள்என்றொரு சட்டத்தை முகலாய மன்னர் இயற்றிய காலந்தொட்டு இந்தியா முழுதும் அடிமை முறை வழக்கத்துக்கு வந்தது. அவர்களது எண்ணிக்கை குறைவென்பதும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடற்குரியவை.

  பிரஞ்சிந்தியாவைப் பொருத்தவரை அரசும் நீதித்துறையும் அடிமை முறையை ஏற்றிருந்தன. கீழ்ச் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளுள் ஒன்று அடிமை வாழ்வு.

எடுத்துக்காட்டு:

  Manuel Desouza என்ற 15 வயது வேலைக்காரச் சிறுவன் தன் எஜமானனாகிய Chezneau விடம் திருடிய குற்றத்துக்காக அவரிடம் ஆயுட்காலம் முழுதும் அடிமைச் சேவகஞ் செய்யவேண்டும் எனவும் திருட்டில் ஒத்துழைத்த Pedro என்னும் 10 வயது பையன் அதே எஜமானிடம் அடிமையாக விற்கப்பட வேண்டும் என்றும் 1710 ஜனவரியில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

  பெற்றோர் சிலர் பஞ்சக் காலத்தில் தம் பிள்ளைகளை விற்றிருக்கின்றனர். பிரான்சிலிருந்து 1690 இல் புதுச்சேரிக்கு வந்த Challe என்பவர் அது பற்றிக் கீழ்க்காணுமாறு எழுதி இருக்கிறார்:

  மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிந்த போதிலும் பிள்ளைகளை சர்வ சகஜமாக விற்கிறார்கள். ஒரு கப்பலின் கேப்டன் ஏழு வயது சிறுமியொருத்தியை விலைக்கு வாங்கிக் கிறித்துவ மதத்துக்கு மாற்றி Seraphine எனப் புதுப் பெயர் சூட்டினார்.”

  மொரீஷியஸ் நாட்டில் ஆளுநராய்ப் பதவி வகித்த Labourdonnais 1746 இல் புதுச்சேரிக்கு மாற்றலான போது சில ஆப்ரிக்கர்களை விலைக்கு வாங்கி அழைத்து வந்தார். சென்னை மீது பிரஞ்சியர் படையெடுக்கையில் அவர்கள் மாலுமிகளாயும் ஊழியர்களாயும் உழைத்தார்கள்; பின்பு அவர்களுட் சிறப்பாய்ப் பாடுபட்ட சிலர்க்குக் கைம்மாறாக விடுதலை வழங்கப்பட்டது; மற்றவர்கள் இங்கே தனியார்களால் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

  Anquetil Duperron என்பவர் எழுதியபடிஅடிமை வாணிகம் இந்தியாவில் நடைபெறவில்லை. வேலை செய்வதற்காகச் சிலரை விலை தந்து வாங்கினார்களே யொழிய பிறர்க்கு விற்பதற்காக அல்ல. இது புதுச்சேரியின் நிலைமை; ஆனால் வங்காளத்தில் பயங்கர வெள்ளங்களும் அவற்றின் விளைவாகப் பஞ்சங்களும் அடிமை வியாபாரத்துக்குச் சாதகமாயின; ஏழைகளை வாங்கி மொரீஷியசில் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் விற்றனர்.”

  ஆனந்தரங்கப் பிள்ளையின் 25.6.1743 தேதியிட்ட நாட்குறிப்பு கீழ்க்காணுந் தகவலைத் தெரிவிக்கிறது;

  வணிகர் Soude தம் இல்லத்தில் சில ஆடவரையும் பெண்டிரையும் சங்கிலியாற் பிணைத்து ரகசியமாய் வைத்திருந்தார். இந்திய அடிமை வர்த்தகர் ஒருவர் அவரிடம் அவர்களை அடைக்கலப் படுத்திப் பின்பு கப்பலில் ஏற்றி மொரீஷியசுக்கு அனுப்பினார். அது கண்டுபிடிக்கப் பட்டது. பெத்தோ கனகராயன் என்ற பிரமுகரிடமும் ரங்கப் பிள்ளையிடமும் Soude தம்மைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவர்களோ ஆளுநர் துய்ப்ளேக்சுக்குத் தகவல் தெரிவித்தார்கள்: அவர் அந்த வியாபாரியைச் சிறையிலடைத்து அடிமைகளுக்கு விடுதலை யளித்தார்.”

  பிரஞ்சு மன்னர் 16 ஆம் லூய் 22.2.1792 இல் ஓர் உத்தரவு பிறப்பித்தார்;

  இந்தியச் சிறுவர்களைக் கடத்தியோ பணத்துக்கு வாங்கியோ அடிமையாக்குவதும் வெளிநாட்டில் வாங்கிப் புதுச்சேரிக்குக் கொண்டுவருவதும் இந்தத் தேதியிலிருந்து சட்ட விரோதம். அண்மையில் அப்படி யழைத்துவரப்பட்டு இன்னம் விற்கப்படாமல் உள்ளவர்களை மூன்று நாளுக்குள் கப்பலில் ஏற்றித் திருப்பி அனுப்பிவிட வேண்டும், அல்லது புதுச்சேரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.”

  அது முதல் அடிமை முறை ஒழிந்தது.

Sunday 4 August 2019

பிரஞ்சிந்தியாவில் தேர்தல்





  இப்போதைய புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரஞ்சியரின் ஆட்சிக்காலத்தில் பிரஞ்சிந்தியா என அழைக்கப்பட்டது.

  அப்போது இங்குக் காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி என்றெல்லாம் கொள்கையடிப்படையில் கட்சிகள் தோன்றவில்லை. தனிப்பட்ட பிரமுகர்கள் கட்சி நடத்தினார்கள்; புதுச்சேரியில் கெப்ளே கட்சி, ஷண்முக வேலாயுத முதலியார் கட்சி, காரைக்காலில் தோமாஸ் பிள்ளை கட்சி, சவரிப் பிள்ளை கட்சி ஆகியவை குறிப்பிடற்குரியவை.

  பிரான்சின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இங்கு நடந்த விதம் விசித்திரமானது.

  பிரான்சிலிருந்து சில வெள்ளையர் தேர்தலுக்காகவே இங்கு வந்து வேட்பாளராய்ப் போட்டியிடுவார்கள். வெல்பவர் யாரோ அவரே ஐந்தாண்டுக்குப் பிரஞ்சிந்திய மக்களின் பிரதிநிதி. தேர்தல் முடிந்தவுடன் தாய்நாட்டுக்குத் திரும்பிவிடுகிற அவரை மறுபடி காணமுடியாது என்பதைச் சொல்ல வேண்டுமா?

  பிரஞ்சு அரசியலமைப்புப்படி தேர்தல்களை அரசு நடத்தக்கூடாது, மக்களே நடத்துவார்கள்; அதுவே ஜனநாயகம். படித்தவர்கள் பண்பாடு மிக்கவர்கள் நிறைந்த பிரான்சில் அவை அமைதியாய் ஒழுங்காய் சிறப்பாய் நடக்கலாம்; இங்கு எதிர்பார்க்க முடியுமோ?

  தேர்தல் தேதியை அரசு அறிவிக்கும், வாக்குச் சாவடிகளையும் அமைக்கும்.

  ஒரு வாரத்துக்கு முன்பே, தமிழக ரௌடிகள் பலரை இரு தரப்பும் வரவழைத்துத் தங்க வைத்துக் கறியுணவும் சாராயமும் தாராளமாய்த் தந்து பராமரிக்கும்.

  தேர்தல் நாளன்று அவர்கள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவார்கள், சில சாவடிகள் ஒரு கட்சியின் வசமாகும், மற்றவை எதிர்க் கட்சியிடம் சிக்கும்.

  அந்தந்தப் பகுதி பிரமுகர்கள் தங்களைத் தாங்களே தேர்தல் அதிகாரிகள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். தெருக்களில் உருட்டுக் கட்டைகளுடன் சுற்றித் திரிகிற ரௌடிகள் வாக்களிக்க ஒருவரும் வராமல் விரட்டிவிடுவார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிற காலம் போல் பொதுமக்கள் வீட்டுக்குள் பத்திரமாய்த் தங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

  வாக்களிப்பு நேரம் முடிந்ததும் தேர்தல் அதிகாரிகள் ஓர் அறிக்கை தயாரிப்பார்கள்; எதிர்க் கட்சிக்கு ஒரு வோட், தங்கள் கட்சிக்கு பாக்கி எல்லா வோட்டும் என்று எழுதி வாக்குப் பெட்டிக்குள் போட்டு சீல் வைத்துத் தூக்கிக்கொண்டு கும்பலாய்ப் போய் அரசிடம் ஒப்படைப்பார்கள். எதிர்க் கட்சி ரௌடிகள் வழியில் தாக்குதல் நடத்திப் பெட்டியைப் பிடுங்கிப் போய் வேறு அறிக்கையுடன் அரசிடம் தருவதுமுண்டு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

  அயலூர்களுக்கு நிரந்தரமாயப் போய்விட்டவர்களும் காலமானவர்களும் கூட வோட் போட்டவர்களுள் அடங்குவர். வாக்குச் சீட்டுகளைச் சாவடிகளிலேயே எரித்துவிடவேண்டும் என்பது சட்டமாதலால் சரிபார்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

  தேர்தல் முடிவை அரசு அறிவிக்கும். அதிக வலுவுள்ள ரௌடிகளின் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெறும்.

  1910 இல் அச்சிடப்பட்ட சிறு நூலொன்று எங்கள் வீட்டில் இருந்தது; அதன் தலைப்பு:

பொலித்தீக் பூர்வோத்தரமும் போல்புளூசேன் எலக்சியமும்

(பொலித்தீக் = அரசியல்; போல்புளூசேன் = வெள்ளைக்கார வேட்பாளரின் பெயர்; எலக்சியம் = தேர்தல்)

  அந்நூலின் விவரப்படி இந்த வேட்பாளரை இந்துக்களும் இவரை யெதிர்த்துப் போட்டியிட்ட லெமேர் என்ற பிரஞ்சுக்காரரை முஸ்லீம்களும் ஆதரித்துள்ளார்கள்; அதன் விளைவாய் நடந்த மதக் கலவரத்தை அந்த நூல் செய்யுள் நடையில் விவரிக்கிறது.
  சில அடிகள் மட்டுமே நினைவில் நிற்கின்றன:

  அறுபது வயது கிழவரையா லாஆஷ் துரைதானும்
   அய்யோ பாவம் அவரேன் வந்தார் அந்தக் கலகத்திலே?

(லாஆஷ் ஏன்ற வெள்ளையர் தாக்கப்பட்டார்.)

  இந்துக்களின் தலைவராய்ச் செயல்பட்டவர் சி.மு. சாமிநாத பிள்ளை என்பவர்; அவரைச்சிங்கம் சாமிநாதன்என நூல் புகழ்கிறது. அவர் கூறியதாக இரு அடிகள்!

  அண்ணா வாடா தம்பி வாடா
     மிட்டாய் நடேசா
   ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
     என்றன் தோழரே.

தேர்தலில் புளூசேன் வென்றார்.

  என் பாட்டனார் இரவில் திண்ணையில் படுத்து உறங்குவது வழக்கம். கலகம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது அவரை வற்புறுத்தி உள்ளே தூங்க வைத்திருந்தார்களாம். நள்ளிரவில் வெளியே மடார் மடார் என்ற சத்தமும் அய்யோ அய்யோ என்ற அலறல் குரலும் கேட்டிருக்கின்றன. காலையில் விஷயம் விளங்கிற்றாம்.

  யாரோ ஒருவர் திண்ணையில் படுத்துத் தூங்கியிருக்கிறார்; என் பாட்டனார் எனத் தவறாய் நினைத்து முஸ்லிம்கள் சிலர் அடித்துள்ளார்கள்.

  மின்சாரம் இல்லாக் காலம்!