(இதுவும் லா
ஃபோந்த்தேன் கதைதான்)
ஒரு முதியவர், நூறாண்டு கடந்தவர், காலனிடம் முறையிட்டார்: "திடீரென வந்து உடனடியாகப் புறப்படக் கட்டாயப்படுத்துகிறாய்; என் முறியை (உயில்) இன்னம் எழுதவில்லை; பேரனுக்கு வேலை வாங்கித் தரவேண்டும்; வீட்டை எடுத்துக் கட்ட
வேண்டியிருக்கிறது. முன்தகவலாவது தந்திருக்கலாமே? கெடு கொடுக்காமல் உயிரைப் பறிப்பது நியாயமா?"
காலன் பதில் சொன்னான்:
"முதியவரே, நான் திடுதிப்பென்று வரவில்லை; நான் அவசரக்காரன் என நியாயமின்றிப் புகார் செய்கிறீர்.
நீர் நூறு வயதைத் தாண்டிவிடவில்லையா? உம்மையொத்த வயதானவர் இரண்டு பேரைப் பாரிசில் காட்டும்; பத்து பேரைப் பிரான்சில் காட்டும். உமக்கு நான் முன்னெச்சரிக்கை தந்திருக்க வேண்டுமெனச் சொல்கிறீர். நான் எச்சரிக்கவில்லையா? நடை, அசைவு, அறிவு, உணர்வு எல்லாம் படிப்படியாய்க் குறைந்தனவே! சுவை குன்றியது, செவி கேட்கவில்லை; யாவும் மங்கின. உம் தோழர்கள் செத்ததை அல்லது சாவுப் படுக்கையில் விழுந்ததை அல்லது நோய்வாய்ப்பட்டதை உம்மைக் காணச் செய்தேன்.
இவையெல்லாம் என்ன, முன்னறிவிப்பு அல்லாமல்?
போவோம் முதியவரே, பேச்சில்லாமல். உமது முறி
இல்லையென்றால் நாட்டுக்கு ஒரு குறைச்சலும் ஏற்பட்டுவிடாது".
அறிவாளியைச் சாவு அதிரச் செய்வதில்லை; புறப்பட அவர் எப்போதும் தயார், பயணம் நெருங்கும் சமயத்தை முன்னறிவிப்புகள் மூலம் உணர்ந்திருப்பதால். ஆயத்த நிலையில் இல்லாமையைக் காட்டிலும் அறியாமை
வேறில்லை.
***********************
(படம்; நன்றி இணையம்)