Friday, 3 August 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு


மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள்; அவை எல்லா மொழிகளிலும் உண்டு. 

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:


1 . வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei )
இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2. எர்ராரே ஹுமானும் ஏஸ்த்: ( Errare humanum est )
பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார். அவரிடமிருந்து நாம் பெற்றோம்.

Monday, 30 July 2012

இறையனும் இறைவனும்




காதலியின் எழிலைக் காதலன் மிகையாகப் பாராட்டுவது உயர்வு நவிற்சி அணியின்பாற்படும். தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் இவ்வழக்கம் உண்டு.


சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ? 


என்று பாரதியார் அவளுடைய ஒளி படைத்த கண்களைச் சூரிய சந்திரருடன் ஒப்பிட்டு வியந்து புகழ்ந்தார்.


பிரெஞ்சுத் தலைவன் தன் மனங்கவர்ந்தாளின் நயனங்கள் விண்ணில் ஒளிரும் வெள்ளியைவிடப் பிரகாசமானவை என உறுதிபட மொழிந்தான்.


"அந்திவெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்"


பால்கனியில் ஜூலியட்டின் முகந்தெரிந்ததும் ஆங்கிலக் காதலன்,


"எந்த ஒளி அந்தச் சன்னல்வழி பாய்கிறது?
அது கிழக்கு. ஜூலியட் சூரியன்" 

எனப் போற்றினான்.


சங்ககாலக் காதலன் தன் விருப்புக்குரியாளின் கூந்தல் எவ்வளவு அதிகமான மணங்கமழும் மலரையும் மிஞ்சக்கூடிய வாசனையை வீசுவது என்று புகழ விழைந்தான். அதை எவ்வாறு நயம்பட உரைப்பது என்று யோசித்தான். தானே சொன்னால் மதிப்பு இருக்குமா? நடுநிலையாளர் ஒருவர் கூறினால் உலகம் ஏற்கும். யாரிடங் கேட்கலாம்? 

பளிச்செனப் புலப்பட்டது ஓர் உண்மை. பூ மணத்தைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கக் கூடியது வண்டைக் காட்டிலும் வேறெதுவும் இல்லை என்ற உண்மைதான் அது. 

மதுவை (ஒயினை)க் கண்ணால் நோக்கியும் மோந்து பார்த்தும் நாவில் ஊற்றிச் சுவைத்தும் அதன் நிறம், தரம், சுவை ஆகியவற்றை நிர்ணயிக்கும் வல்லுநர்கள் மேலைநாடுகளில் உண்டு. அவர்கள் சரி(ஓ.கே.) சொன்ன பின்புதான் உயர்வான சரக்கு விற்பனைக்கு வரும். அவர்களைப் போல மலர்களின் நறுமணத் தராதரத்தைச் சீர்தூக்கிப் பார்த்துக் கருத்து சொல்லவல்ல நிபுணர் வண்டு. அதன் தீர்ப்புக்கு அப்பீல் இல்லை.


ஆகவே வண்டிடங் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் எந்த வண்டிடம்? 

இதோ, ஒன்று அவளின் குழலில் மொய்த்துவிட்டுப் பூவை நாடிப் பறந்து வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தகுதி வாய்ந்த நீதிபதி இதுவே.  

கேட்டுவிட்டான். 

பூந்தாதைத் தேர்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள வண்டே, எனக்காகச் செப்பாமல் நீ அனுபவத்திற் கண்டதை மொழி. நெடுநாள் பழகிய நட்பும் மயில் சாயலும் செறிவான பல்வரிசையும் உடைய என் தலைவியின் கூந்தலைப் பார்க்கிலும் அதிக நறுமணங் கொண்ட பூக்களும் உண்டோ, நீ அறிந்தவரைக்கும்?


(இல்லையென வண்டு விடையிறுத்ததாய்க் கொள்ளல் இலக்கிய இன்பத்துக்கேற்றது.) 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே?


இது சங்க நூலான குறுந்தொகையில் உள்ள பாட்டு. இயற்றியவர் இறையன் (மரியாதை ஆர் சேர்த்தால் இறையனார்.) 

இறையனும், இறைவனும் வெவ்வேறு. தலையனும் தலைவனும் ஒன்றா?


தலையன் - தலையை உடையவன் (மொட்டைத் தலையன்)

தலைவன் - வழி நடத்துபவன்.....


அதுபோல,
இறைவன் - கடவுள்

இறையன் - மனிதர் பெயர் (செழியன், செம்பியன், பாண்டியன் போல)


ஒரு புலவர் எழுதியதைக் கடவுள் எழுதியதாய் யாரோ ஒருவர் கற்பனை செய்து கட்டிய கதைதான் தருமி கதை. 

8 ஆம் நுற்றாண்டிலும் ஓர் இறையன் வாழ்ந்தார். அவரது இலக்கண நூல் "இறையனார் களவியல்" என்று அவர் பெயரால் சுட்டப்படுகிறது. (பட்டினத்தார் பாடல் என்பது போல) 

இந்த இறையனையும் அந்தக் கற்பனையாளர் ஒதுக்கித் தள்ளிக் களவியலை இறைவன் இயற்றியதாய்க் கதை விட்டார். தன் செயல் கடவுளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்குமே என்று அவர் சிறிதும் யோசிக்கவில்லை. 

களவியலில் பல நூற்பாக்கள், ஓர் எழுத்துக் கூட மாறாமல் தொல்காப்பியத்திலிருந்து எடுத்துச் சேர்க்கப் பட்டுள்ளன. முன்னோர் சொன்னதைப் பொன்னே போல் போற்றிப் பின்னோர் தம் நூலில் சேர்ப்பது முற்கால வழக்கந்தான். மனிதர்க்குப் பொருந்துகிற இது கடவுளுக்குப் பொருந்துமோ? 

இறைவன் தொல்காப்பியரைக் காப்பியடித்தான் என்றல்லவா ஆகிவிட்டது?

Wednesday, 25 July 2012

என் ஊர் காரைக்கால் (தொடர்ச்சி)





காரைக்காலில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையார். அவர் திருவந்தாதி, இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டுத் திருப்பதிகம் என்ற மூன்று செய்யுள் நூல்களை இயற்றுமளவுக்குத் தமிழ்ப் புலமை உடையவர். அவரது கதையைப் பெரியபுராணம் விவரிக்கிறது. அதன்படி  அவரது வரலாறு மாங்கனித் திருவிழா என்னும் பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஆனிப் பௌர்ணமியன்று முற்பகலில் அம்மையார்க்குத் திருமணம் நிகழ்ந்து இரவில் முத்துப் பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம் செல்வார்கள். மறு நாள் விழாதான் முக்கியமானது; அன்று மதியம் பரமசிவன் யாசகர் கோலத்தில் (பிச்சையாண்டவர் என்று பெயர்) அம்மையாரின் இல்லத்துக்கு உணவுண்ணப் போவார். சாமியைச் சூழ்ந்து தெருவை அடைத்துக்கொண்டு, நகரும் பக்தர் கூட்டத்தை நோக்கி, சிற்சில மாடிகளிலிருந்து மாங்கனிகள் வீசப்படும்; பழத்தைத் தாவிப் பிடிக்க முடிந்தவர்கள் பரவசத்துடன் தின்பார்கள். இரு வாரத்துக்குப் பின் விழா முடியும். 

முஸ்லிம்களுக்கு முக்கிய விழா காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்காவின் கந்தூரி. முதல் நாள் மாலை கண்ணாடித் தேர் ஊர்வலமும் பத்தாம் நாளிரவு சந்தனக் கூடு ஊர்வலமும் நடைபெறும். இந்த விழாவின் தேதிகள் ஆண்டுதோறும் மாறும்; பல ஆண்டுக்கொரு முறை இதுவும் ஆனி மாதத்தில் நடக்கும் . இப்போது அப்படித் தான் கந்துரி 30 / 6 இலும் மாங்கனி விழா 2 /7 இலும் தொடங்கி நிகழ்ந்தன. 

சுதந்தர விழா கொண்டாட்டத்துக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது: 

ஆகஸ்ட் 15 : இந்திய விடுதலை;

ஆகஸ்ட் 16 : பிரஞ்சியரிடமிருந்து விடுமுறை. 

1962 இல் பிரஞ்சுக்காரர் வெளியேறியபோது, விருப்பம் உள்ளவர் பிரஞ்சுக் குடியுரிமை பெறலாம் என்று வாய்ப்புத் தரப்பட்டது ; அதன்படி , பொதுமக்களுள் ஒரு பகுதியினரும் பிரஞ்சு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் பட்டாளத்தாரும், முன்னாள் அரசு அலுவலர்களுமாகச் சுமார் 500 காரைக்கால்வாசிகள் பிரஞ்சுக் குடிகளானார்கள். இவர்களும் சந்ததியினரும் 

1 - இந்திய அரசியலில் ஈடுபடக்கூடாது; 

2 - நம் நாட்டு அரசு அலுவல்குடும்ப அட்டை, அரசு சலுகைகள் பெற இயலாது.  

மற்றெல்லா உரிமைகளும் உண்டு: நிரந்தரமாய் வசிக்கலாம், வாணிகமும் தொழிலும் செய்யலாம், சொத்துகள் வாங்கலாம், விற்கலாம். 

இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கக் காரைக்காலில் ஒரு பிரஞ்சு இடைநிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. மேல் கல்விக்குப் புதுச்சேரி போகவேண்டும். வேலை வாய்ப்புகளைப் பிரான்சில் தேடவேண்டும். 

பிரான்சில் நடைபெறும் தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்கக் காரைக்காலில் ஒரு வாக்குச்சாவடியைப் பிரான்சு அரசு அமைக்கும். 

காரைக்காலின் கல்வி வளர்ச்சியில் பிரஞ்சு ஆட்சி அக்கறை செலுத்தவில்லை. பிரஞ்சு ஒன்றே பயிற்றுமொழி; ஏழாம் வகுப்புவரை நாள்தோறும் ஒரு பாடவேளை மட்டும் தமிழ்  கற்பித்தார்கள்; அதற்குமேல் பிரஞ்சு மாத்திரமே. உயர்நிலைக்குப் பின்பு படிக்கப் புதுச்சேரி போகவேண்டும். அங்குக் கல்லுரி இருந்தது; ஆனால் விடுதி (ஆஸ்டல்) இன்மையால் உறவினர் இருப்பின் அவர்கள் இல்லத்தில் தங்கிப் பயிலலாம். எத்தனை பேருக்கு இந்த வசதி இருக்கும்? ஆகவே உயர்கல்வி கற்ற காரைக்கால்வாசிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தனர்.  

இந்தியாவுடன் இணைந்த பின்பு , மகளிர் கலைக் கல்லூரி, ஆடவர் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி , மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி எனக் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன; ஆனால் மற்ற துறைகளில் சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி இல்லை. மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் தனி யூனியன் பகுதியாக ஆகிவிட்டால்தான் வளர்ச்சி சாத்தியம் என்றெண்ணி அந்தக் கோரிக்கையைக் காரைக்கால் மக்கள் சில ஆண்டுகளாக எழுப்பிவருகிறார்கள்; போராட்டக் குழு ஒன்று அமைத்துப் பலவித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். 

24 ஆண்டுகள் (கால் நூற்றாண்டு) பறந்துவிட்டன என் ஊரைவிட்டு நான் நீங்கி. இறுதியாய் 2003 இல் சென்றிருந்தேன்: எங்கள் வீதி கடை தெருவாகியுள்ளது; எங்கள் வீடு உட்படப் பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டுப் புத்துருவம் பெற்றுக் கடைகளாகவும் கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. 

நண்பர்கள், சக ஆசிரியர்கள், உறவினர்களுள் என் வயது உடையோர் ஆகியவர்களுள் கிட்டத்தட்ட யாரும் உயிரோடில்லை. 

காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன். 

குறிப்பு - விடுகதையின் விடை : குன்றிமணி (குண்டுமணி)

(படம் உதவி: இணையம்)

Saturday, 21 July 2012

என் ஊர் காரைக்கால் (1)




வங்கக் கடலுடன் அரசலாறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள சிறு நகரமாகிய காரைக்கால் நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஊர். சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகை உடைய இதன் எல்லைகள்: கிழக்கே கடல், மேற்கில் வாஞ்சியாறு, தெற்கே அரசலாறு, வடக்கில் கோயில்பத்து என்னும் சிற்றூர். தெற்கு வடக்காக 2 1/2 கி. மீ. அகலமும் கிழக்கு மேற்காக 3 1/2 கி. மீ. நீளமும் கொண்ட காரைக்காலும் இதை முப்புறமும் சூழ்ந்துள்ள பகுதிகளும் சேர்ந்த 160 ச. கி. மீ. பரப்பானது புதுச்சேரி மானிலத்தின் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. 

இந்த மாவட்டத்தின் வடக்கே தரங்கம்பாடியும், தெற்கில் முஸ்லிம்களின் புனிதத் தலமான நாகூரும் இருக்கின்றன; நாகூருக்கும் அதற்குச் சற்றுத் தெற்கிலுள்ள நாகப்பட்டினத்துக்கும் இடையே உள்ள காடம்பாடி மறைமலையடிகளை ஈன்ற பெருமையுடையது. 

( காரைக்கால் மாவட்டம் புதுச்சேரிக்குத் தெற்கில் 150 கி. மீ. தொலைவில் இருக்கிறது என்பதும் இடைப்பட்ட பிரதேசம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடற்குரியது) 

புதுச்சேரியில் போன்றே காரைக்கால் தெருக்கள் கோணல்மாணல் இன்றி, நூல் பிடித்தாற்போல் நேர்நேராய் அமைந்து எழிற்கோலம் காட்டுவதால், "காரைக்கால் வீதியழகு" என வெளியூர்க்காரர்களால் புகழப்படுகிறது "காரைக்கால் கருப்பு, சென்னைப்பட்டினம் சிவப்பு" என்று விடுகதையிலும் என் ஊர் இடம்பெற்றுள்ளது. இதன் விடை உங்களுக்குத் தெரியுமா? (இறுதியில் சொல்வேன் ) 

என் ஊரின் சிறப்பு மூன்று மத மக்களும் பெரிய எண்ணிக்கையில் கலந்து ஒற்றுமையாய் வாழ்வது: கைலாசநாதர் கோயில் தெரு, பெரமசாமி பிள்ளை தெரு, சின்னக்கண்ணு செட்டித் தெரு, மெய்தீன் பள்ளி வீதி, மாமாத்தம்பி மரைக்காயர் தெரு, காதர் சுல்தான் வீதி, மாதாகோயில் தெரு, தோமாஸ் அருள் வீதி, தாவீது பிள்ளை தெரு எனத் தெருப் பெயர்களில் மும்மத மணம் கமழ்வதை உணரலாம்.

பெரும்பாலான இந்துக்கள் வேளாளர்கள்; சோழ நாட்டுக்காரர் ஆகையால் சோழிய வேளாளர் எனப்படுகின்றனர். இவர்களின் சாதிப் பட்டம் பிள்ளை (இச் சொல்லுக்குப் பலசாலி என்று பொருளுண்டு ) 

முஸ்லிம்கள் மரைக்காயர் எனப்படுதற்குக் காரணம் ஒரு காலத்தில் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்தமை. இவர்கள் ஊனுணவு விரும்பிகள். திருமணம் முதலிய இன்ப நிகழ்ச்சியானாலும் சாவு முதலான துக்க நிகழ்வு ஆனாலும் ஆட்டுக் கறி பிரியாணி பரிமாறப்படும். முஸ்லிம் மாதர்கள் உடல் முழுதும் வெள்ளைத் துப்பட்டாவால் போர்த்துக்கொண்டுதான் வெளி இடங்களுக்கு வருவார்கள். முஸ்லிம் தமிழ் சிறிது வேறுபடும். அப்பா - வாப்பா; அம்மா - உம்மா; அக்கா - லாத்தா; அண்ணன் - நானா; கொழம்பு - ஆணம்; நின்னான் - நிண்டான்; எழுதுனான் - எளுவினான்; வாங்கித் தா - வேங்கித் தா; அவங்க சொன்னாங்க - அக சொன்னாக. 

தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவியது போலக் காரைக்காலில் கிறித்துவ ஆதிக்கம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. இந்துக்கள் உழவில் ஈடுபட, முஸ்லிம்கள் திரவியம் தேடுவதற்குத் திரைகடல் ஓட, கிறித்துவர்கள் கல்வி கற்று, வேலை வாய்ப்புகளும் பட்டம் பதவிகளும் அரசியல் தலைமையும் போட்டி இல்லாமல் பெற்று உயர்ந்தார்கள். இவர்களும் ஆட்சி புரிந்த வெள்ளையரும் ஒரே மதம் என்பதும் ஏற்றத்துக்கு உதவியது. 

மும்மதத்தாரையும் பற்றி என் ஊரில் வழங்கும் ஒரு கருத்து: "முஸ்லிம் உண்டு கெட்டார், கிறித்துவர் உடுத்துக் கெட்டார், இந்து வைத்துக் கெட்டார்."

( தொடரும் )