Wednesday, 17 July 2013

அற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3

                                 
                                  பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்    -   தந்தை
லுய்சய்ந்து         -  மகள்.
லிசேத்து             -  வேலைக்காரி .
லுய்க்கிரேஸ்   - மகளின்  ஒன்றுவிட்ட  அக்கா .
அமய்ந்த்து         -  பக்கத்து  வீட்டுக்காரி .
கிய்யோம்          -  திரைச்சீலை  வணிகர் .
ழோசு                  -    நகை  வணிகர் .

அற்புதச்  சிகிச்சை  ---  தொடர்ச்சி  1   
                 
     காட்சி - 2

ஸ்கானாரேல்   -  !     இதோ     உலவுகிற   என்  மகள்.     அவள்     என்னைப்  பார்க்கவில்லை.   பெருமூச்சு   விடுகிறாள்,    வானை  நோக்கி  விழிகளை  மேலேற்றுகிறாள்.   மகளேஎன்ன  இது?    என்ன  செய்கிறது   உனக்கு  என்று    என்னிடம்  கூற    நீ  விரும்பவில்லை .   சொல்லு,      உன்  சிறிய  இதயத்தைத்    திறந்து  காட்டு.   சொல்லுசொல்லு.    உன்  அருமை  அப்பாவிடம்  உன்  எண்ணங்களைத்  தெரிவி.     மாட்டாயா?   உன்னுடைய  அறை    போதுமான  அளவு  அலங்காரமாக     இருப்பதாகத்  தோன்றவில்லையோ?...  அது  அல்ல ...  எதையாவது  கற்க  வேண்டும்  என்று  ஆசைப்படுகிறாயா? ...  அதுவுமில்லை.    யாரையாவது  விரும்புகிறாயாகல்யாணம்  செய்துகொள்ள  விருப்பமா?
(ஆம்  என்று    சைகை  காட்டுகிறாள்கவனிக்காதது  மாதிரி  வந்துவிடுகிறார்.)
                                                                  
                               -------------------------------------------------------------- 
                   

     அற்புதச்  சிகிச்சை  --  தொடர்ச்சி  2

            காட்சி - 3


லிசேத்து  மகளிடம்  பேசினீர்களேஅவளுடைய  வருத்தத்துக்குக்  காரணம்  தெரிந்ததா?

ஸ்கானாரேல்  கேடு  கெட்டவள்;   என்னை  வெறுப்பேற்றுகிறாள்.

லிசேத்து  என்னிடம்  விடுங்கள்நான்  போய்க்  கொஞ்சம்  துருவிப்  பார்க்கிறேன்.

ஸ்கானாரேல்  தேவை  இல்லை. அவள்  இப்படி  இருக்க  விரும்புவதால், அப்படியே  விட்டுவிட  வேண்டும்  என்பது  என்  கருத்து.

லிசேத்து  என்னிடம்  விடுங்கள்  என்கிறேன்;    உங்களைவிட  என்னிடம்  சுதந்தரமாக    மனம்  திறக்கக்கூடும்.
                  என்ன  அம்மாஎன்ன  உங்களுக்கு  என்பதை  எங்களிடம்  சொல்லமாட்டீர்கள்அதனால்  எங்கள்  எல்லாரையும்  வருத்தப்படுத்த  விரும்புகிறீர்களாஎன்னிடம்  சொல்லுங்கள்அப்பாவிடமிருந்து  எதையாவது  பெற  ஆசைப்படுகிறீர்களாஉங்களை  மகிழ்விப்பதற்கு  எதையும்  அவர்  தவிர்க்கமாட்டார்  என்பதைப்  பல  முறை  சொல்லி  இருக்கிறார். நீங்கள்  விரும்பக்கூடிய  முழுச்  சுதந்தரத்தையும்  அவர்  தரவில்லையாஉலாவல்களும்  அன்பளிப்புகளும்  உங்களுக்கு  ஆசை  மூட்டவில்லையாயாரிடமாவது  உங்களுக்கு  வெறுப்பு  ஏற்பட்டதா? அல்லது  யாரிடமாவது  ரகசியக்  காதல்  தோன்றி  அவரை  மணக்க  விருப்பமா! புரிந்ததுஇதுதானா  விஷயம்ஐயாமர்மம்  வெளிப்பட்டதுஅதாவது .....

ஸ்கானாரேல் -  (குறுக்கிட்டுநன்றி  கெட்ட  மகளே,    நான்  இனி  உன்னிடம்  பேச   விரும்பவில்லை;     உன்  பிடிவாதமும்  நீயுமாக  இருங்கள்.

லுய்சய்ந்து -  அப்பா,   சங்கதியை  நான்  சொல்ல  எனக்கு  அனுமதி  தர  நீங்கள்  விரும்பினால்  ...

ஸ்கானாரேல் உன்மேல்  நான்  வைத்திருந்த  பாசத்தையும்  கைவிடுகிறேன். .
லிசேத்து  ஐயாஅவர்களுடைய  துயரம் ...

ஸ்கானாரேல் கேடுகெட்டவள்என்னைச்  சாகடிக்க  விரும்புகிறாள்.

லுய்சய்ந்து -  அப்பாநான்  விரும்புவது  ...

ஸ்கானாரேல் உன்னை  எப்படியெல்லாம்  வளர்த்தேன்அதற்குக்  கைம்மாறல்ல, இது.

லிசேத்து  ஆனால்ஐயா ...

ஸ்கானாரேல் இல்லைஅவள்மேலே  நான்  பயங்கரக்  கோபத்தில்  இருக்கிறேன்.

லுய்சய்ந்து -  நான்  சொல்வது  ...

ஸ்கானாரேல் எனக்கு  உன்மேலே  பாசம்  கொஞ்சங்கூட  இனி  இல்லை.

லிசேத்து   -  அப்படி  ...

ஸ்கானாரேல் அவள்  ஒரு  ஏமாற்றுக்காரி.

லுய்சய்ந்து -  எனக்கு  ...

ஸ்கானாரேல் நன்றி  மறந்தவள்  நீ.

லிசேத்து  நீங்கள்  ...

ஸ்கானாரேல் அவளுக்கு  என்ன  கஷ்டம்  என்பதை  என்னிடம்  சொல்ல  விரும்பாத ஒரு  கேடுகெட்டவள்.

லிசேத்து  கணவனைத்தான்  விரும்பு  ...

ஸ்கானாரேல் -  ( காதில்  விழாததுபோல்  நடித்துஅவளை  நான்  கைவிடுகிறேன்.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் அவளை  வெறுக்கிறேன்.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் அவள்  என்  மகளல்ல.

லிசேத்து  - கணவன்.

ஸ்கானாரேல் அவளைப்  பற்றிப்  பேசாதே.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் பேசாதே  என்கிறேன்.

லிசேத்து  கணவன்கணவன்கணவன்.
                                                                                           ( தொடரும் )                       

Monday, 15 July 2013

அற்புதச் சிகிச்சை - காட்சி 1

                                       
             (17 ஆம்  நூற்றாண்டுப்  பிரஞ்சு  நகைச்சுவை  நாடக  ஆசிரியர்  மொலிஏர்  இயற்றிய  ஒரு  சிறு  நாடகத்தின்  சில  காட்சிகளை  மொழிபெயர்த்து  வழங்குகிறேன். இது  மஞ்சரி  ஜூலை 2013   இதழில்  வெளிவந்தது)

                                   பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்   -   தந்தை
லுய்சய்ந்து       -  மகள்.
லிசேத்து          -  வேலைக்காரி.
லுய்க்கிரேஸ்   - மகளின்  ஒன்றுவிட்ட  அக்கா.
அமய்ந்த்து      -  பக்கத்து  வீட்டுக்காரி.
கிய்யோம்       -  திரைச்சீலை  வணிகர்.
ழோசு             -    நகை  வணிகர்.

                               காட்சி    1

ஸ்கானாரேல்   -   எவ்வளவு  கஷ்டமானது  இந்த  வாழ்க்கைபழங்  காலத்  தத்துவ  அறிஞர்  சொன்னது  போலசொத்து  இருந்தால்  சண்டை  உண்டுஒரு  துன்பம்  வருவதில்லை  அடுத்தது  வராமல். எனக்கு  ஒரேயொரு  மனைவி  இருந்தாள்அவள்  இறந்துவிட்டாள்.

கிய்யோம்    -  எத்தனை  மனைவி  வேண்டுமென்று   விரும்புகிறீர்கள்?

ஸ்கானாரேல்  -  அவள்  இறந்துவிட்டாள்நண்பரே.     இந்த  இழப்பு    என்  உணர்ச்சியுடன்   தொடர்பு  உடையது;    இதை    நான்  நினைவுகூர  முடிவதில்லை,   அழாமல்.   அவளது  நடத்தை  பற்றி  அதிக  மனநிறைவு  எனக்கு    இருந்ததில்லை;    ஆனால்  சாவு    எல்லாவற்றையும்  சரி செய்துவிடுகிறது .  அவள்  செத்துவிட்டாள்அவளுக்காக  அழுகிறேன்; அவள்  உயிரோடு  இருந்திருந்தால்நாங்கள்  சண்டை  போட்டுக்கொண்டு  இருந்திருப்போம்கடவுள்  எனக்கு  அளித்த  குழந்தைகளுள்  ஒரு  பெண்ணை  மட்டுமே  விட்டுவைத்தார்;   அந்த  மகளால்  எனக்குச்   சங்கடங்கள்ஏனென்றால்உலகின்  மிக  ஆழ்ந்த  துன்பத்தில்பயங்கர  சோகத்தில்  அவளை  நான்  காண்கிறேன்அதிலிருந்து  அவளை  மீட்க  வழி  காணோம்அதன்  காரணங்களை  என்னால்  அறிய  முடியவில்லைஅதனால்  செய்வது  அறியாமல்  திகைக்கிறேன்ஒரு  நல்ல  யோசனை  தேவைப்படுகிறது.   நான்  என்ன   செய்ய  வேண்டும்  என்று  சொல்லும்படி     உங்கள்  எல்லாரையும்  வேண்டுகிறேன்.

ழோசு  -  என்னைப்  பொருத்தவரை,    ஆடையும்  நகையும்  தான்    இளம்  பெண்களை  அதிகம்  மகிழ்விப்பவை   என்பது  உறுதி;   நான்  நீங்களாக  இருந்தால்,    அவளுக்கு  வாங்கித்  தருவேன்,   அதுவும்  இன்றைக்கேஅழகான  வைர  அல்லது    மாணிக்க  அல்லது  மரகத  அட்டிகை.

கிய்யோம்    -  நானோ,    உங்கள்  இடத்தில்  நான்  இருந்தால்மனித  உருவங்கள்  பொறித்த,   எழில்  மிக்க    திரைச்சீலை  ஒன்றை  வாங்கிக்  கொடுப்பேன்அவளது  அறையில்  தொங்கவிட்டால்,    அவளுடைய  கண்ணுக்கும்  மனத்துக்கும்  அது  விருந்தாகும்.

அமய்ந்த்து  -   கொஞ்ச  காலத்துக்கு  முன்பு    அவளைப்  பெண்கேட்ட    அந்த  இளைஞருக்கு    அவளை  மணம்  முடிக்க  வேண்டும்,      எவ்வளவு  முடியுமோ    அவ்வளவு  விரைவில்.

 லுய்க்ரேஸ்  - உங்கள்  மகள்    திருமணத்துக்குச்    சிறிதும்  தயாரில்லை    என  உறுதியாகச்  சொல்கிறேன்.    உலகம்  அவளுக்கு    ஒத்து  வராது;   அவளை  ஒரு  மடத்தில்  சேர்க்கும்படி  யோசனை  சொல்கிறேன்:     அங்கு  அவளது  குணத்திற்கு ஏற்ற  சூழ்நிலையைக்  காண்பாள்.

ஸ்கானாரேல் இந்த  எல்லா  யோசனைகளும்    நிச்சயமாக    அற்புதமானவைஆனால்    அவை  சிறிது  தன்னலம்  சார்ந்தவை    என்று  நினைக்கிறேன்நீங்கள்    எனக்கு  யோசனை  கூறுவது    உங்கள்  நன்மைக்காகவே   என்பதைப்  புரிந்துகொள்கிறேன்.  

நீங்கள்  நகைக்  கடைக்காரர்,   ழோசுஉங்கள்  புத்திமதியில்    தன்  சரக்கைத்  தள்ளிவிட    ஆவல்  கொண்டுள்ள    ஒரு  மனிதரின்    வாடை  வீசுகிறது.    கிய்யோம்,     நீங்கள்  திரைச்சீலை  விற்பவர்;   உங்களைச்  சங்கடப்படுத்துகிற  சீலை  எதையோ    வைத்திருப்பது  போலத்  தோன்றுகிறீர்கள்.    அமைந்த்து,    உங்கள்  காதலனுக்கு     என்  மகள்மீது  நாட்டம்  இருப்பதாகச்    சொல்லப்படுகிறது;   ஆகையால்    அவள்  வேறு  ஒருவனின்  மனைவி  ஆவதில்    உங்களுக்கு  வருத்தம் இருக்காது.   அருமை லுய்க்ரேஸ்,    அவளைத்  துறவி  ஆக்க    நீ  சொன்ன  அறிவுரை,     என்  சொத்துக்கு  வாரிசு  ஆக  விரும்புகிற  ஒரு  பெண்ணின்  தந்திரமே. 
ஆகையால்அன்பர்களே,   உங்கள்  யோசனைகளுள்    ஒன்றைக்கூட  நான்  ஏற்கமாட்டேன்.   

(தொடரும்  )

Monday, 8 July 2013

கலித்தொகைக் காட்சி - 3

ஏறு தழுவல் விழா நிகழ்ந்தது; அஞ்சுதல் அறியாத, நெஞ்சுரம் மிக்க இளைஞர் பலர் காளைகளுடன் மோதுவதற்கும் அவற்றின்மீது பாய்ந்து தழுவுவதற்கும் வசதியான நிலையில் ஆயத்தமாய் ஆர்வமுடன் கணப்பட்டனர். 




அவிழ்த்து விடப்பட்ட வலிய ஏறுகள் ஆக்ரோஷமாய் ஓடி அவர்களைத் தாக்கின. அப்போது:

தூசிப் படலம் எழுந்தது;
காளைகளை எதிர்கொண்டனர் இளைஞர்;
கொம்புகள் கவிழ்ந்து குத்தின;
தழுவ முயன்றோர் தோற்றுக் கலங்கினர்.

விறுவிறுப்பு மிக்க, விரைந்து நிகழ்ந்த செயல்களைக் கவிஞர்,  இரண்டே சீர் உடைய அடிகளால் வர்ணிக்கிறார்:

எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்.

இந்த உத்தியைக் கண்ணதாசன் கையாண்டார்:

கொட்டியது மேளம்,
குவிந்தது கோடிமலர்,
கட்டினான் தாலி.

கலித்தொகை எதிரொலி கேட்கிற தல்லவா?

இதோ கம்பர்: வில்லை நாண் ஏற்றுவதற்கு இராமன் அதன் அருகில் சென்றான்;

முழு நிகழ்ச்சியையும் நுணுக்கமாகப் பார்த்துச் சுவைப்பதற்காக அவையோர் கண் கொட்டாமல் கவனித்தனர்.

ஆனால்! வில்லை எடுத்தது தெரிந்தது, முறிந்த ஒலி கேட்டுவிட்டது .

" எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்"

++++++++++++++++++++++++++++++


Wednesday, 3 July 2013

ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும்


           நம்  முன்னோர்  ஆதார  பூர்வமாய்  வரலாறு  எழுதாமை  ஒரு  பெரிய  குறைதான்;   அது  பரவாயில்லை.    ஆனால்    அவர்களுள்  சிலர்  நெஞ்சாரப்  பொய்  சொல்லி   உண்மையை  அறியவொட்டாமல் குழப்பி விட்டமைதான்   பெருந்  தவறுதொல்காப்பியர்திருவள்ளுவர்இளங்கோகம்பர், ஔவையார்  முதலிய   படைப்பாளர்    பற்பலரைப்  பற்றிய    புளுகு  தகவல்களை  அவர்கள்  எழுதிப்  பரப்பியிருக்கிறார்கள்.
           அவற்றுள்  ஒன்று,   ஒட்டக்கூத்தர் - புகழேந்தி  குறித்த   வதந்திஅவர்கள்  இருவரும்   கைவர்  எனவும்    புகழேந்தியை  ஒட்டக்கூத்தர்  கொடுமைப்படுத்தினார்  எனவும்    விரிவான  கதை    உண்டு.
           ஒட்டக்கூத்தர்  12 ஆம்  நூற்றாண்டுக்காரர்;    புகழேந்தி   13  ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்தவர்.    அவர்கள்  இருவரும்  ஒரே  சமயத்தில்,   ஒரே  இடத்தில்  உறைந்து     பூசலிட்டனர்     என்ற   புனைசுருட்டை  இட்டுக்கட்டியவரும்  பரப்பியவரும்    நேர்மை  அற்றவர்கள்    என்று    குற்றம்  சாற்றுவது  தவறாகாது.

                         ++++++++++++++++++++++++++++++++