Wednesday, 13 November 2013

கைகேயி



  இராமனுக்கு முடி சூட்டுவதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாரா வகையில்ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியவள் கைகேயிஅவளைத் தூண்டியவள் அவளது ஊழியள் மந்தரை. ஆகையால்எல்லாரும் கருதிக்கொண்டிருப்பதுகைகேயி மிகப் பொல்லாதவள்சூழ்ச்சிக்காரிகணவர்மீது இரக்கங் காட்டாமல் அவர் உயிர் இழக்கக் காரணமான பாதகி என்பது. கம்பர், அவளைத் தீயவை யாவையினும் சிறந்த தீயாள்” எனப் பழித்தார்அவளுக்குத் துர்ப்போதனை செய்து, மனத்தை மாற்றிக் கெடுத்த மந்தரை யென்ற கூனியை அவர்,  “கொடுமனக் கூனி”  என்று தூற்றினார்.

  ஆனால்மாறுபட்ட கருத்து உடைய தமிழறிஞர் ச. சோமசுந்தர பாரதியார்தம் கருத்தை விளக்கி, “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” என்னுந் தலைப்பில் ஒரு நூல் இயற்றி இருக்கிறார். நூலின் உள்ளடக்கத்தைத் தலைப்பே வெளிப்படுத்துகிறது. 

 தசரதனிடத்தில் ஒரு குறை உண்டாயிற்றுஅதை நீக்கி நிறை செய்தவள் கைகேயி என்பது அவருடைய ஆராய்ச்சி முடிவு.

  கேகய மன்னனிடம் தசரதன் சென்றுஅவனது மகளாகிய கைகேயியைத்  தனக்கு மணம் முடித்துத் தரும்படி கேட்டபோதுஅவன் மறுத்தான்; அவன்  சொன்ன காரணம்:

  “முன்பே திருமணம் ஆன உனக்கு என் மகளைத் தந்தால்இவளுக்குப் பிறக்கும் மகன்ஆட்சி  உரிமை பெறமுடியாதுமூத்த மனைவியின் புதல்வனே மன்னன் ஆவான்எனவேஒரு பிரம்மச்சாரி வேந்தனுக்குக்  கைகேயியை மனைவியாக்கிஎன் பேரன் அரசன் ஆவதற்கு வழி வகுக்கத்தான் நான் விரும்புகிறேன்”.

 அப்போது தசரதன்கைகேயியின் மகனுக்குத் தனது நாட்டை ஆளும்  உரிமையைத் தருவதாக வாக்களித்து அவளை மணந்தான்.

 பின்பு,  இராமனிடம் கொண்ட அதிகப் பாசத்தால்னுக்கு முடி சூட்ட  விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்;  பரதனுக்குத்தான் உரிமை என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுத்திக்கொண்டிருந்தது. ஆதலால், விழாவின்போது, பரதன் அங்கிருப்பது நல்லதல்ல என முடிவு செய்து, அவனைக் கேகய நாட்டுக்கு அனுப்பினான்.

 இராமனைத் தன் மகன்போலவே கருதி இருந்த கைகேயி, அவன்  அரியணை ஏறுவது குறித்து மகிழ்ச்சிதான் அடைந்தாள்தசரதனின் வாக்குறுதியை அறிந்திருந்த மந்தரைதக்க சமயத்தில் அதைக் கைகேயிக்கு நினைவூட்டவே, தன் கணவன் வாக்குத் தவறினான் என்ற அவப்பேர் வாங்காமல் தடுத்தாள் என சோமசுந்தர பாரதியார் விளக்கினார்.

 வால்மீகி ராமாயணத்தை ஆய்ந்து கண்ட  முடிவு இது.


    ==========================================

படம் உதவி: இணையம்

Wednesday, 6 November 2013

துரியோதனன்


--- மகாபாரதத்தில் வில்லன் யார்?

--- இதென்ன கேள்வி? ஐயம் இல்லாமல்  துரியோதனன் தான்.



--- அப்படியானால்,

1 -- பாண்டவர், கெளரவர் என அனைவரும் மதித்துப் போற்றிய பெரியவர் பீஷ்மர், ஏன் போரில் துரியோதனனை ஆதரித்தார்? முதல் பத்து நாளும் அவனுடைய படைத் தலைவராய்ப் பாண்டவரை எதிர்த்து அல்லவா  அவர் போர் புரிந்தார்!

2 -- துரோணர் 105 பேருக்கும் குரு; அவருக்கு மிகப் பிடித்த சீடன் அருச்சுனன்; ஆனால் அவனை அவர் எதிர்த்தது ஏன்? பீஷ்மர் இறந்த பின்புதுரியோதனனின் அடுத்த தளபதியாய் அவர் செயல்பட்டாரே!
  இரு பெரியவர்களும் கடவுளாகிய கண்ணனுக்கு எதிராய், ஒரு வில்லனுக்குத் துணை போயிருப்பார்களா?

3 -- பீமனிடம் அடி வாங்கித் துரியோதனன் இறந்து வீழ்ந்ததும், தேவர்கள் வென்றவனைச் சட்டை செய்யாமல், தோற்றவனின் உடல்மீது மலர்மாரி பொழிந்தது ஏன்?

 மேல் வினாக்களை எழுப்பி, (அதாவது மாற்றி யோசித்து) விடை கண்டவர் ஒரு தமிழறிஞர்.

 அவர் ச. சோமசுந்தர பாரதியார்.
 
  அவரது முடிவு: துரியோதனன் வில்லன் அல்ல!

  1 - பாண்டவரின் அரசை அவன் சூழ்ச்சியால் கைப்பற்றினானே?

   --- பந்தயம் வைத்துத் தோற்றால் பறிபோகும் தானே!

  2 --- திரவுபதியைத் துகில் உரியச் செய்தவன் கொடியன் அல்லவா?

    --- சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டு அவள் துரியோதனனுக்கு அடிமை ஆனாள்முன் காலத்தில் அடிமைகள் இடுப்புக்குமேல் துணி அணியக்கூடாது. ஆகையால் மேலாடையைக் களைய மறுத்தது அவள் தவறு. அதனால்தான் துகில் உரிதலை எதிர்த்துப் பாண்டவர்கள் குரல் எழுப்பவில்லை.

    நம் காலத்திலுங்கூட, வேலையாட்கள் முதலாளியைக் கண்டால் முண்டாசை அவிழ்த்துவிடுகிறார்கள்; தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறார்கள். இதேபோல், பக்தர்கள் கடவுள் சந்நதிக்குச் செல்கையில், துண்டை இடுப்புக்கு மாற்றுகிறார்கள்; திருச்செந்தூர் முதலான சில கோவில்களில் ஆண்கள் சட்டையுடன் சந்நதிக்குள் நுழையமுடியாது. பழைய காலத்து வழக்கம் ஆயிரக் கணக்கான ஆண்டுக்குப் பின்பும் தொடர்கிறது.

   சென்ற நூற்றாண்டுவரை, கேரள மகளிர் ரவிக்கை அணிய  உரிமையற்று வாழ்ந்தனர். துணிவுடன் அணிந்த சிலரின் ரவிக்கைகளைப்  பழமைவாதிகள் கிழித்தார்கள்: அது, “ரவிக்கை கிழிப்புப் போராட்டம்” எனப்படுகிறது.

  3 --- அவளைத் தன் தொடைமீது அமரச்சொன்னது தவறு தானே?

    அடிமைப் பெண்ணிடம் அவ்வாறு உத்தரவு இட எசமானுக்கு உரிமை இருந்தது.

   4 -- பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகையைக் கொளுத்த உத்தரவு இட்ட கொலை பாதகன் தானே துரியோதனன்?

     அது குற்றம் தான். மற்றபடி அவன் நல்ல மைந்தன், நல்ல அண்ணன், நல்ல கணவன், நல்ல நண்பன். தான் இல்லாத சமயத்திலும், தன் அந்தப்புரத்துக்குக் கர்ணன் வந்து தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும் உரிமை தந்த பண்பாடு அவனிடம் இருந்தது.

    துரியோதனன் பக்கம் நியாயம் இருந்ததால்தான் பீஷ்மர், துரோணர் முதலியோர் அவனுக்கு ஆதரவு தந்தார்கள்.

   இனிப் பாண்டவரின் சங்கதியைப் பார்ப்போம்:

 1 -- எந்த நாட்டிலும், எக்காலத்திலும், ஓர் அரசனுக்குப் பின்  அவனது  மூத்த மகன்தான் ஆள உரிமையுடையவன் என்பது பொது விதி. அதன்படி, திருதராட்டிரனை அடுத்து, மூத்த புதல்வன் துரியோதனன் மாத்திரமே மன்னன்அவனுடைய 99  சொந்தத் தம்பிகளுக்கே  நாட்டில் பங்கு கிடையாது.  அப்படியிருக்க, அவனது சிறிய தந்தை பாண்டுவின் மக்களாகிய பாண்டவர்களுக்கு ஏது உரிமை? இவர்கள் திருதராட்டிரனின் கருணைக்குப் பாத்திரர் ஆகித் தனி நாடு பெற்றார்கள். தன் தேசத்தின் ஒரு பகுதியைப் பாண்டவர்கள் வசப்படுத்திக்கொண்டமையால், சூதாட்டத்தின் மூலம் அதை மீட்டுக்கொண்டான் துரியோதனன்.

  2 -- சூதாட்டத்தில் தன்னையும் தம்பிமாரையும் மனைவியையும்கூடப் பந்தயம் வைத்தமை தருமனின் பெருந்தவறு.

  3 -- துரோணர், தளபதியாய்ப் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அவரை வீரத்தால் வெல்ல முடியாது என்பது தெரியவர, அவரது மகனைப் பீமன் கொன்றுவிட்டான் என்று அர்த்தப்படும்படி, இரட்டைப் பொருள் உடைய  ஒரு வசனத்தை அவரிடம் தருமன் சொன்னான். அது கேட்டுபுத்திர சோகத்தில் அவர் ஆழ்ந்திருந்த சமயத்தில், அவரைக் கொன்றனர். குருவைச் சூழ்ச்சியால் கொன்ற பெரும் பாதகர் பாண்டவர்.

  4 -- கதாயுதத்தால் எதிரியை இடுப்புக்குக் கீழே தாக்கக்கூடாது என்பது போர்முறை. அதை மீறி, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்தினான் பீமன். (foul) ஆகையால்தான், தேவர்கள் அவனைப் புறக்கணித்துவிட்டு, விதி பிறழாமல் போரிட்ட துரியோதனன்மேல் மலர் தூவினார்கள்.

   மேலே விவரிக்கப்பட்டவை எல்லாம் ச. சோமசுந்தர பாரதியாரின் கருத்துகள். அவற்றை வெளியிட்ட அவர், மறுப்புரைகளை வரவேற்பதாய்த் தெரிவித்தார்எவரும் மறுக்கவில்லை.

           --------------------------------------------------

படம் உதவி; இணையம்.

Sunday, 3 November 2013

புகார்ப் புத்தகம்




திருமுடி தம் மனைவியுடன் கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் கடலூர்க்குப் போகக் காத்திருந்தார். கோடைக்காலப் பகல்! கேட்க வேண்டுமாவெயில் தகித்தது. பாட்டில் தண்ணீர் தீர்ந்துவிடவேநிலையப் பாத்திரத்தில் நிரப்பிக்கொள்ள எண்ணிஅருகில் போய்ப் பார்த்தால்! பாத்திரம் காலி!

பெருத்த ஏமாற்றம் உற்றார். பயணியர் சேவையில் முக்கியம் அல்லவா  குடிநீர் வழங்கல்?   அதுவும் வெயில் காலத்தில்கடமையை ஆற்றாத நிலையத் தலைவர்மீது கோபம் கொண்டார்.

துணைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து, " தண்ணீர் இல்லைகடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது  செல்வாக்கு உள்ளவர் வலுவான இயக்கம் தொடங்கிப் பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி முடுக்கிவிட்டாலொழிய நிலைமை திருந்தாது" என்று பொரிந்து தள்ளினார்.

தற்செயலாய்த் திரும்பிப் பார்க்கையில்கண்ணில் பட்டது சுவரில் தொங்கிய பலகை;  "புகார்ப் புத்தகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருக்கிறது" என்னும் ரகசியத்தை அது தெரிவித்தது.

புகார் எழுதப் போகிறேன் என்று கிளம்பினவரைத் தடுத்தார் மனைவி. "வேண்டாம்விடுங்கள்;    ஏதாவது காரணம் இருக்கும்" என்றார் அவர்.
" கேட்கிறேன், சரியான காரணமாய் இருந்தால் விடுவேன்; இல்லாவிட்டால் புகார்தான்"

நிலையத் தலைவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

            -  குடிநீர் இல்லையே!

            - தெரியும்.

            - வைக்கவேண்டியது உங்கள் கடமைதானே?

            - ஆமாம்.

            - ஏன் வைக்வில்லை?

            -  வைக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

            - காலிப் பாத்திரத்தைப் பார்த்தால் தெரியாதா?

            - வைக்க வைக்கக் காலியாய்த்தான் ஆகிறது.

            - சாப்பிடச் சாப்பிடப் பசித்தால் சாப்பிடாமல் இருப்பீர்களா?

            - ஏன்'யாநீங்கள் பயணியா அல்லது வம்புதும்புக்காரரா?

           -  இரண்டும்தான். புகார்ப் புத்தகம் கொடுங்கள்.

கொஞ்சமும் தாமதிக்காமல் புத்தகத்தைத் தந்தமை வியப்பளித்தது. கெஞ்சுவார் எனத் திருமுடி நம்பியிருந்தார்.

புத்தகத்தில் கடைசிப் புகார் எழுதி இரண்டு ஆண்டுக்குமேல் ஆகியிருந்தது; விழிப்புணர்ச்சியே இல்லாத பயணிகள்!  அவ்வப்போது புகாரைப் பதிந்தால்தானே பொதுத்துறை நிறுவனங்கள் உருப்படும்தாம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதை எண்ணிப் பெருமிதம் பொங்க, புகாரை எழுதிபக்கத்தில் நின்ற இரு பயணிகளிடம் (இவர்கள் தண்ணீர் இல்லை எனப் புலம்பிக்கொண்டிருந்தவர்கள்) சாட்சிக் கையெழுத்துப் பெற்றுப் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். வாசித்துப் பார்த்த நிலையத் தலைவர்முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், வைத்துக்கொண்டார்.

வெற்றிப் புன்னகை சிந்தியவாறே வந்து துணைவியிடம் விவரித்த திருமுடி இறுதியில் தெரிவித்தார்:  "கடமை தவறிய குற்றவுணர்வு கொஞ்சங் கூட இல்லை என்பது மட்டுமல்ல,    திமிராயும் பேசினார்;   மாட்டி விட்டுவிட்டேன்;   சரியான பாடம் படிப்பார்."

அருஞ் சாதனை புரிந்த மன நிறைவு.

ஒரு மாதத்துக்குப்பின் அஞ்சலட்டை வந்தது;   விசாரணைக்கு மேலதிகாரி அழைத்திருந்தார். திருமுடிக்குப் பெருமை பிடிபடவில்லை. "புகார் வேலை செய்கிறதுஎன்னாலான சிறு தொண்டு நாட்டுக்கு ஆற்றியிருக்கிறேன்" என்னும் எண்ணத்துடன்,   குறிப்பிட்ட நாள்நேரத்தில் குடந்தை சென்றார். சாட்சிகளும் வந்திருந்தார்கள். மூவரும் உற்சாகத்தோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

திருமுடி அழைக்கப்பட்டார்.

  -  நீங்கள்தான் திருமுடியா?

  - ஆமாம்.

  - சொந்த ஊர்?

  - கடலூர்.

   -  என்ன வேலை?

   -  நகராட்சி அலுவலர்.

   -  இங்கே வந்து போக எவ்வளவு செலவாகும்?

   -  ஐம்பது ரூபாய்.

    -  விசாரணை விசாரணை என்று நாலு தடவை இழுத்தடித்தால்வீண் செலவு ஒரு புறம்அலைச்சல் மறு புறம்அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். இதை எல்லாம் யோசித்துப் பார்த்தீர்களா?

     -  இல்லைஆனால் தட்டிக் கேட்க யாராவது வேண்டும்.

     -  தட்டிக் கேட்டாலும் சரி, முட்டிப் பார்த்தாலும் சரிஎன்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்எங்கள் அலுவலர்மேலே நாங்கள் நடவடிக்கை எடுப்போமாகாப்பாற்றத்தான் பார்ப்போம்.

      -  அப்புறம் எதற்குப் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பு?

      -  இருக்கிறது என்றால் வாங்கி எழுது என்றா அர்த்தம்?

என்ன பதில் சொல்வது எனத் திருமுடிக்குத் தெரியவில்லைமௌனம் காத்தார்.

அதிகாரி தொடர்ந்தார்: "பேசாமல் வாபஸ் கடிதம் கொடுத்துவிட்டுப் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்."

விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்ட திருமுடி அவ்வாறே செய்த பின்புசாட்சிகளின் கண்ணில் படாமல் நழுவினார்.

புகார்கள் இல்லாமல் புத்தகம் ஏன் காலியாய் இருந்தது என்பது இப்போது புரிந்தது. எல்லாரும் புத்திசாலிகள்தாம் மட்டும் பைத்தியக்காரர் என்று நொந்தார்.

                             +++++++++++++++++++

Monday, 28 October 2013

மருச் சொற்கள்


தமிழில் சில சொற்கள் காலப் போக்கில் தம் உருவத்தில் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றை மருச் சொற்கள் என்கிறோம். கீழ்க் காணும் பட்டியல் அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டும்:

நேயம் - நேசம்.     
தொகுப்பு - தோப்பு.  
பண்டி - வண்டி.
வாயில் - வாசல்.    
இரும்பொன் - இரும்பு. 
அரிக்கும் சட்டி - அரிக்கன்சட்டி.

பெருமகன் என்னும் ஆண்பாற் சொல் பெருமான் எனவும் பெருமகள் என்ற பெண்பாற் சொல் பெருமாள் எனவும் சுருங்கின;   இந்த வார்த்தை பிற்காலத்தில் ஆணாகிய திருமாலைச் சுட்டவேபெண்பாலுக்கு வேறு சொல் படைத்தனர்: அது பெருமாட்டி.

காலப் போக்கில்பெருமான்பிரான் ஆயிற்றுபெருமாட்டிபிராட்டி ஆகியது.

பெருமகன் - பெருமான் - பிரான்.   
பெருமகள் - பெருமாட்டி - பிராட்டி.

                    ++++++++++++++++++++++