Saturday, 8 November 2014

ஒரு கருமி பற்றிய குட்டிக் கதை

 ஒரு  கருமி  பற்றிய  குட்டிக்  கதை 
நான்  சிறு  வயதில்  படித்தது  




    அடிப்படைத்  தேவைகளுக்குக்கூட   செலவு  செய்யாமல்  கஞ்சனாக  இருப்பது  தவறு.   ஆயினும்   சிலர்   அப்படித்தான்  வாழ்கின்றனர்.

    ஒரு  பேர்பெற்ற  கருமி   தற்செயலாய்ப்   பூனைக்  குட்டி யொன்றைக்  கொன்றுவிட்டான்அது  பெரும்   பாவம்  என்பது  நம்பிக்கை  யல்லவாஅதனால்    நரகத்தில்  உழல   நேருமே  என்றெண்ணிக்    கவலை  கொண்டான்.

   எல்லாப் பாவங்களுக்கும்  பரிகாரம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களேஇதற்கு   இல்லாமலா  போகும் என  நினைத்து   ஒரு  புரோகிதரை  அணுகி,

  "ஐயாஒரு  பூனைக்   குட்டி  சாக  நான்   காரணமாய்  இருந்துவிட்டேன்கொல்வது  என்   நோக்கமல்ல;   இருந்தாலும்    அது  பாவந்தான்  என்று  நம்புகிறேன் .   என்ன  பரிகாரம்    செய்ய  வேண்டும்     என்பதைச்  சொல்லுங்கள்”  என்று  கேட்டான்.  

அகப்பட்டான்  ஒருவன்    என்று  மகிழ்ந்த   அவர் , " பசுவைக்  கொல்வது   எவ்வளவு  பாவமோ   அவ்வளவு  பாவம்  பூனையைக்  கொல்வதும்   என்று  சாஸ்திரம்   சொல்லுகிறது ;   அதைப்  போக்குவதற்கு   வழியையும்  காட்டுகிறதுஎன்று  பதில்  அளித்தார்.  

   ---   அதைச்  சொல்லுங்கள்  என்றுதான்  கேட்கிறேன்.

   ----  தங்கத்தால்   பூனை   செய்து  எனக்குத்  தானம்  கொடுத்தாயானால் ,
பாவம்  நீங்கிவிடும்.

    ----  தங்கமாஐயோஅவ்வளவு  பணம்   என்னிடம்   இல்லையே!

   ----   அப்படி   யென்றால்வெள்ளிச்  சிலை    கொடு.

    ----  அதற்கும்  வழி  இல்லைஐயரே.

    ----  செம்புதர  முடியுமே?

    ----  ஊகூம்,   இன்னம்   குறைவான  செலவாக   இருக்க  வேண்டும்.

    ---- பெரிய   பாவத்துக்கு  உரிய  பரிகாரம்  தேவை;    நீ  என்ன  இப்படிப்  பேரம்  பேசுகிறாய்போனால்  போகிறது,    வெல்லத்தால்  கொடு.

    ----  அது  முடியும்.   அதைக்  கொடுத்தால்    பாவம்     போய்விடும்  என்பது  நிச்சயந்தானே?

     ----  அதிலென்ன  சந்தேகம்?   அந்தப்  பாவத்தை    நான்   ஏற்றுக்கொண்டுவிடுவேன்.   அதிலிருந்து  நான்   நீங்குவதற்கு   எங்கள்  மொழியில் மந்திரம்   உண்டு.

     ---   இதோ   தருகிறேன்.

   கருமி  ஒரு    கைப்பிடி  வெல்லத்தில்  பூனை   உருவாக்கிக்  கொடுத்தான் . கிடைத்தவரைக்கும்   லாபம்  என  மகிழ்ந்த   புரோகிதர்  அதைக்  கையில் வாங்கியதுதான்  தாமதம்,   கருமி   அதைத்   தட்டிப்   பறித்துக்   கொண்டான்.
  
    கைக்கு  எட்டியது   வாய்க்கு  எட்டவில்லையே    என்ற  சோகத்துடன்  புரோகிதர்,  "அடப்   பாவி!   தானத்தைப்  பிடுங்கிக்கொண்டாயே!   யாராவது   இப்படிச்  செய்வார்களா?"      எனக்   கேட்டதற்கு,   அவன்,   "பூனையைக்  கொன்ற பாவம்  உங்களுக்குவெல்லம்  பிடுங்கிய  பாவம்   எனக்கு;   போய்  வாருங்கள்என்று  விடை   தந்தான்.

                                                 +++++++++++++++++++++++++

Wednesday, 22 October 2014

பிழையும் திருத்தமும் - 2

பிழையும் திருத்தமும் - 2

இது வேறு பட்டியல்


 பிழை 

திருத்தம் 
 1. அருகாமையில்

 அருகில்
 2. இளைய சகோதரன்
 தம்பி

 3. எட்டிப் போ
 எட்டப் போ  (எட்டும்எட்டாதுஎட்டாக்  கனி)
 4. ஏமாந்தார்
 ஏமாறினார்

 5. ஒருக்கால்
 ஒருகால்

 6. சிகப்பு
 சிவப்பு (செக்கச்  சிவந்த  கழுநீரும்  -  கலிங்கத்துப்  பரணி)
 7. சில்லரை                           
  சில்லறை

 8. சுடு தண்ணீர்                        
 வெந்நீர்

 9. செல்வந்தர்                          
  செல்வர்

 10. திகட்டுதல்                           
 தெவிட்டுதல்

 11. துடை ( உடலுறுப்பு )                 
தொடை 

 12. தொத்து  நோய்                      
 தொற்று  நோய்

 13. நீர்வீழ்ச்சி                           
அருவி

 14. பனிரெண்டு                          
 பன்னிரண்டு

 15. (பரிசை)  வெல்லுங்கள்             
 (பரிசைப்பெறுங்கள்

 16. மனசு , மனது                       
  மனம்  (மனமார,  மனத்தில்)

 17. மாற்றாந்தாய்                         
 மாற்றான்  தாய்

 18. முயற்சிப்போம்                       
முயல்வோம்

 19. மூத்த  சகோதரர்                     
 அண்ணன் ,  தமையனார்

 20. மென்மேலும்                         
 மேன்மேலும்


இரு  விதமாக  எழுதப்படுபவை:

            1. உலாவுதல்  
உலவுதல் 
                           2.  கருப்பு 
கறுப்பு
                           3. கூடு 
கூண்டு
                           4. சலங்கை 
சதங்கை
                           5. சறுக்கல்  
சருக்கல் 
                           6. துளை
தொளை
                           7. பொருத்தவரை 
பொறுத்தவரை
                           8. மங்களம் 
மங்கலம்
                           9. மெல்ல
மெள்ள
                         10. வேர்வை 
வியர்வை


Thursday, 2 October 2014

பிழையும் திருத்தமும்

             
       தமிழைப்   பிழைகளுடன்  எழுதுவோர்  பலப்பலர்;  மெத்தப்  படித்தோரும்  விலக்கல்ல.   தவறு  இல்லாமல் எழுத  விரும்புவார்  சிலராவது  இருக்கக்  கூடும். அவர்களுக்குப்  பயன்படும்  இச்  சிறு  பட்டியல்.



 பிழை 

 திருத்தம்
 1.  அடசல்  

அடைசல்  

(அடைந்து  கிடப்பது )

 2. அடுத்தப்  பக்கம்                              

அடுத்த பக்கம்
 3. அடையார்  (ஊர் )                            

அடையாறு
 4. அட்டைக்  கரி
அட்ட  கரி  

(அட்ட = சமைத்த;  அடுதல் = சமைத்தல் -----> அடுப்பு .
 (அதிகக்  கருப்பைக்  குறிப்பது) 
 சமையல்  பாத்திரத்தின்  அடியில்  பிடித்துள்ள  கரியே   அட்ட கரி.

 5. அரசுப் பணி
அரசு பணி
  
(அரசு பள்ளி,  அரசு  பேருந்து)

 6. ஆட்சேபணை 
ஆட்சேபனை  

(கற்பனை,  யோசனை,  ரசனை  போல )

 7. ஆளுனர்   
ஆளுநர்  ( இயக்குநர் ,   ஓட்டுநர் )

 8. இட ஒதூக்கீடூ
இட ஒதுக்கல்

 9. இணைய தளம்
இணையத் தளம்

 10. உயிர்க் கொல்லி
உயிர் கொல்லி

 11. உள்ளூர  
உள்ளுற

 12. எசகு  பிசகு 
இசகு  பிசகு

 13. கட்டு கடை 
கட்டுக்  கிடை  

(கட்டுக்கு + இடை )  துணிக்   கட்டுகளுக்கு  இடையில்  விற்காமல்  கிடப்பது

 14. கவிச்சி
கவிச்சு  =  மீன் நாற்றம்

 15. குத்துச் செடி
குற்றுச்  செடி 

(குற்றெழுத்து  போல -குறுமை = சிறுமை

 16. குளுமை
குளிர்மை

 17. கோரைப் பல்
கோரப் பல் 

(கோரம் = அசிங்கம்)

 18. சில காலம்
சிறிது காலம் 

(எண்ணக்கூடிய பொருள்களுடன்தான் சில அல்லது    பல வரலாம்: சில நாள், பல மாதம்).

 19. பயண சீட்டு
பயணச் சீட்டு

 20. பிசிர்
பிசிறு



                        



Wednesday, 10 September 2014

மனைவியே மணாளனின் இயக்குநர்

நான்  இந்தியிலிருந்து  மொழிபெயர்த்து விரிவுபடுத்திய  குட்டிக்கதை)


    இளமையில்  அரியணை   ஏறிய  மன்னனொருவன்  இல்லறத்தில்  ஈடுபட   விரும்பித்  தனக்குத்  தகுதியான  அரச  குமாரியைத்  தேட  முற்பட்டபோதுமுதிய  அமைச்சர்  கூறினார்:

  "வேண்டாம்  அரசரே,    திருமணத்துக்குப்  பின்பு    நீங்கள்  சுதந்தரமாகச்   செயல்படமுடியாதுஅரசியின்   ஆலோசனைப்படி  நடக்க  வேண்டியிருக்கும்.

---  எப்படிச்  சொல்கிறீர்கள்  அமைச்சரேஇவ்வளவு  உறுதியாக?

--- அதுதானே  வழக்கம்.

---  நான்  நம்ப  மாட்டேன்.

---  ஒரு  சோதனை  செய்து  பாருங்கள்;   உண்மை   புலப்படும்.

---  அப்படியே  ஆகட்டும்."

  வேந்தன்  ஆணையிட்டவாறுநகரின்  அரச  மற்றும்   பிரபு  குடும்பத்தாருள்  திருமணம்  ஆனவர்கள்   உரிய  காலத்தில்   அரண்மனையில்   கூடினார்கள். ஏறக்குறைய  ஐம்பது   பேர்.

  " நீங்கள்  எல்லாரும்   கலியாணம்  செய்துகொண்டவர்கள்  தானே?

---  ஆம்,   அரசே.

--- சரிஉங்களில்மனைவி  சொல்லே    மந்திரம்  என  நினைத்துஅவளுடைய   பேச்சைக்   கேட்டு   நடப்பவர்கள்  அனைவரும்   என்  வலப்பக்கத்தில்  வந்து  நில்லுங்கள்;   சொந்தமாகச்  சிந்தித்து   செயல்படுபவர்கள்  எல்லாம்,   இடப் பக்கம்  நில்லுங்கள்என்னை  ஏமாற்ற  முயல்பவர்   கடுந்  தண்டனைக்கு  ஆளாவார்."

    மளமள  என்று  வலப்பக்கம்  போய்   நிற்கத்  தொடங்கினார்கள்ஒருவன்  மட்டும்சிறிது  நேரம்   தயங்கிவிட்டுஇடப்புறம்  நின்றான்.   அரசனுக்கு  வருத்தம்ஆடவர்  சொந்த  புத்தி  இல்லாமல்  வாழ்கிறார்களே!   கொஞ்சம்  ஆறுதல்ஒருவனாவது சுதந்தரமாக  இயங்குகிறானே!

  அவனிடம்    சொன்னான்:

 "உன்னைப்   பாராட்டுகிறேன்;   நீ   எதையும்   உன்  அறிவுப்படி  யோசித்துத்   தானே  செய்கிறாய்?

 ---  இல்லை   மன்னா.

--- அப்படியானால்?

---   என்  மனைவி சொல்தான்  என்  வழிகாட்டி.

---   பின்   ஏன்  அவர்களோடு  சேரவில்லை?

---  கூட்டத்தில்   நிற்கக்  கூடாது  என்று  அவள்   சொல்லியிருக்கிறாள்."

                              ======================= 

(படம்: நன்றி இணையம்)