Wednesday, 10 September 2014

மனைவியே மணாளனின் இயக்குநர்

( நான்  இந்தியிலிருந்து  மொழிபெயர்த்து விரிவுபடுத்திய  குட்டிக்கதை)


    இளமையில்  அரியணை   ஏறிய  மன்னனொருவன்  இல்லறத்தில்  ஈடுபட   விரும்பித்  தனக்குத்  தகுதியான  அரச  குமாரியைத்  தேட  முற்பட்டபோது ,  முதிய  அமைச்சர்  கூறினார்:

  "வேண்டாம்  அரசரே,    திருமணத்துக்குப்  பின்பு    நீங்கள்  சுதந்தரமாகச்   செயல்படமுடியாது.  அரசியின்   ஆலோசனைப்படி  நடக்க  வேண்டியிருக்கும்.

---  எப்படிச்  சொல்கிறீர்கள்  அமைச்சரே,  இவ்வளவு  உறுதியாக?

--- அதுதானே  வழக்கம்.

---  நான்  நம்ப  மாட்டேன்.

---  ஒரு  சோதனை  செய்து  பாருங்கள்;   உண்மை   புலப்படும்.

---  அப்படியே  ஆகட்டும்."

  வேந்தன்  ஆணையிட்டவாறு,  நகரின்  அரச  மற்றும்   பிரபு  குடும்பத்தாருள்  திருமணம்  ஆனவர்கள்   உரிய  காலத்தில்   அரண்மனையில்   கூடினார்கள். ஏறக்குறைய  ஐம்பது   பேர்.

  " நீங்கள்  எல்லாரும்   கலியாணம்  செய்துகொண்டவர்கள்  தானே?

---  ஆம்,   அரசே.

--- சரி,  உங்களில்,  மனைவி  சொல்லே    மந்திரம்  என  நினைத்து,  அவளுடைய   பேச்சைக்   கேட்டு   நடப்பவர்கள்  அனைவரும்   என்  வலப்பக்கத்தில்  வந்து  நில்லுங்கள்;   சொந்தமாகச்  சிந்தித்து   செயல்படுபவர்கள்  எல்லாம்,   இடப் பக்கம்  நில்லுங்கள் .  என்னை  ஏமாற்ற  முயல்பவர்   கடுந்  தண்டனைக்கு  ஆளாவார்."

    மளமள  என்று  வலப்பக்கம்  போய்   நிற்கத்  தொடங்கினார்கள்;  ஒருவன்  மட்டும்,  சிறிது  நேரம்   தயங்கிவிட்டு,  இடப்புறம்  நின்றான்.   அரசனுக்கு  வருத்தம்:  ஆடவர்  சொந்த  புத்தி  இல்லாமல்  வாழ்கிறார்களே!   கொஞ்சம்  ஆறுதல்:  ஒருவனாவது சுதந்தரமாக  இயங்குகிறானே!

  அவனிடம்    சொன்னான்:

 "உன்னைப்   பாராட்டுகிறேன்;   நீ   எதையும்   உன்  அறிவுப்படி  யோசித்துத்   தானே  செய்கிறாய்?

 ---  இல்லை   மன்னா.

--- அப்படியானால்?

---   என்  மனைவி சொல்தான்  என்  வழிகாட்டி.

---   பின்   ஏன்  அவர்களோடு  சேரவில்லை?

---  கூட்டத்தில்   நிற்கக்  கூடாது  என்று  அவள்   சொல்லியிருக்கிறாள்."

                              ======================= 

(படம்: நன்றி இணையம்)

7 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான கதை மூலம் குடும்பத் தலைவியின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. ஏற்கனவே கேட்ட கதைதான் என்றாலும் உங்கள் மொழியில் சிறப்பு பெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்த கதைதானே என்று அலட்சியப்படுத்தாமல் வாசித்துப் பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  3. நானும் அந்த தனித்து நிற்பவன் போல் தான் சார், ஆனால் என்ன ஒண்ணு என் மனைவியும் என்னை கூட்டத்தோடு நிற்காதே என்று சொல்லியிருக்க வேண்டும் :(

    ReplyDelete
  4. மனைவி சொல்லுவதற்கு இடம் வைக்காமல் நடந்துகொள்கிற நீங்கள் பாராட்டுக்கு உரியவர்தான் .உங்கள் பின்னூட்டத்துக்கு எனது உள்ளம் நிறை நன்றி .

    ReplyDelete
  5. அருமையாக மொழியாக்கம்+ விரிவாக்கம் செய்து என்னைச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete