இலக்கணவிதிகளைக் கூறும் செய்யுள்கள் வட மொழியில் சூத்திரங்கள் எனவும் தமிழில் நூற்பாக்கள் எனவும் சுட்டப்படுகின்றன. அவை அமைகிற வரிசையை அழகிய சொற்றொடரால் நன்னூல் குறிப்பிடுகிறது; அந்த வரிசை நான்கு வகைப்படும்:
1 -- ஆற்றொழுக்கு -- ஒரு விதியைக் கூறும் ஒரு சூத்திரம், அதற்குத் தொடர்புடைய அடுத்த சூத்திரம், இப்படித் தொடர்ந்து செல்லும் வரிசைக்கு ஆற்றொழுக்கு என்று பெயர்.
ஆற்றில் நீர் ஓடுகிறது, அதைத் தொடர்கிறது பின்னால் வரும் நீர். இதை மனத்திற் கொண்டு சூட்டிய பெயர்.
2 -- அரிமா நோக்கம்
- பல நூற்பாக்களையடுத்து இடம் பெறும் ஒரு சூத்திரமானது, தனக்கு முன்னால் உள்ள அத்தனைக்கும் பொதுவான விதியைச் சொன்னால், அது அரிமா நோக்கம்.
அரிமா என்பது சிங்கம்; அது கொஞ்ச தொலை நடந்து சென்றபின் , நின்று, தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்குமாம். (மெய் தானா என்பது
விலங்கு நூலார்க்குத்தான் தெரியும்). அப்படி சிங்கம் நோக்குவது போல், இந்த நூற்பா, முந்தைய பாக்களைத் தழுவி, விதி சொல்கிறது அல்லவா?
3 -- தவளைப் பாய்த்து
-- அதாவது தவளைப் பாய்ச்சல்: தவளை, ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குப் பாயும்போது, இடையில் ஒரு சிறு நிலப் பகுதியைத் தாண்டுகிறது அல்லவா?
ஒரு பா இருக்கிறது; இதற்கும் அடுத்த சில பாக்களுக்கும் தொடர்பு இல்லை; ஆனால், அதன்பின்பு வரும் பாவுடன் தொடர்பு கொள்கிறது. காட்டாக 28- ஆம் பாவின் விதியும் 33 - ஆம் சூத்திரத்தின் விதியும் சம்பந்தம் உடையது. இதுதான் தவளைப் பாய்த்து. நான்கு பாக்களைத் தாண்டிவிடுகிறது.
4 -- பருந்தின் வீழ்வு ----
பல நூற்பாக்கள் ஆற்றொழுக்காகத் தொடர்ந்து செல்ல, அடுத்து வரும் ஒன்று, தனக்கு முன்னால் உள்ள எல்லாப் பாக்களுக்கும் மட்டும் அன்றி, பின்னால் வரப் போகிற சிலவற்றுக்கும் பொருந்தும் ஒரு விதியைச் சொன்னால், அது பருந்தின் வீழ்வு (bird's
eye view).
பருந்தானது மேலே வட்டம் அடித்துக்கொண்டு கீழேயுள்ள எல்லாவற்றையும் கவனிப்பது போன்றது.
நன்னூல்:
ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ்வு அன்னசூத் திரநிலை.
ஒரு கட்டுரையிலும் இந்த நான்கு நிலைகளைக் காணலாம்:
தொடர்ச்சியாகக் கருத்துகளை அடுக்கினால், ஆற்றொழுக்கு. முன்னால் உள்ள சில பத்திகளின் எல்லாக் கருத்துகளுக்கும் தொடர்புடைய பொதுவான ஒரு கருத்தைச் சொல்வது அரிமா நோக்கம். 4 ஆம் பத்தியின் கருத்தை 7 ஆம் பத்தியில் நினைவுபடுத்தி மேலும் அதை விளக்குவது தவளைப் பாய்த்து . முன்னால் எழுதியது, பின்னால் சொல்லப்போவது, யாவற்றையும் தழுவும் கருத்து, பருந்தின் வீழ்வு.
============================
