Saturday, 12 December 2015

பலசரக்கு


1 ---  அனுபவம்பட்டறிவு

    சமற்கிருதச் சொல் அனுபவம்;  அதைப்  பட்டறிவு  எனப்  பெயர்த்துள்ளோம்ஆனால்  இரண்டும்  வெவ்வேறு.

     முதன்முதலாகத்  தீயைத்  தொடுகிற குழந்தை  உடனடியாகக்  கையை  இழுத்துக்கொள்கிறதுசுரீர்  என்ற  சூடும்   வலியும்   வேதனையும்   அனுபவம்; இனி  நெருப்பைத்  தொடக்கூடாது   என்ற  முடிவு,  பட்டறிவு: பட்டதனால்  பெற்ற  அறிவு.

அனுபவம்,   உணர்ச்சி;  பட்டறிவு,   சிந்தனை.

 எனவே,  அனுபவத்தைப்  பட்டறிவு  என்பது  தவறு.

2 --- விளையாட்டு  வீரர் , வீராங்கனை    

 ஸ்போர்ட்சை விளையாட்டு என்கிறோம். விளையாட்டில் முன்னேறுவதற்குத் தேவைப்படும் பண்புகள்  உடல்வலிமை, பயிற்சி, தாக்குப்  பிடிக்கும்  திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கைஅனுபவம் அல்லவோ?  வீரத்துக்கு ஏது  இடம்அது  என்ன  போரா?

  ஆகவே விளையாட்டு வீரர்வீராங்கனை இரண்டும் தவறான  சொற்றொடர்கள்; இருப்பினும் வழக்கத்துக்கு வந்துவிட்டனவைத்துக்கொள்வோம்.

 3 ---  இரட்டைக்  கிளவி

   'கண்ணோடு   காண்பதெல்லாம்  தலைவா'   எனத்  தொடங்கும்,   நித்யஶ்ரீ  மகாதேவன்  பாடிய  திரைப்  பாடலில்,  'இரட்டைக்   கிளவி  உண்டல்லோ?' என்னும்  வினா  இடம் பெற்றுள்ளது; அது  சிலர்க்குப்  புரியாமல்  இருக்கலாம்அவர்களுக்காகக்  கீழ்வரும்  விளக்கம்:

      கலகல  என்று  நகைத்தாள்.
      தொணதொண  எனப்  பேசுகிறார்.

   மேற்காட்டுகளில்  ஒரு சொல் சேர்ந்து  இரண்டு  தடவை  வருகிறதுஅப்படிப்பட்ட  சொல்  இரட்டைக் கிளவி.

   இதற்கு  இலக்கணம்  நன்னூல்  396- இல்  உண்டு:

          "இரட்டைக்  கிளவி  இரட்டிற்பிரிந்து  இசையா"

பொருள் -- இரட்டையாக  வரும்  சொற்கள்  தனித்தனியே பிரியா. அதாவது , கல   என்றோ   தொண  என்றோ  தனியாக   வந்தால்  அர்த்தம்   இல்லை.

    மேலும்  காட்டுகள்:

   வெதவெதகடகடசிடுசிடுத்தான்பளபளக்கும்வழவழப்பான, சுறுசுறுப்பு, அருவருப்பு.

     பழமொழி:   பனங் காட்டு  நரி  சலசலப்புக்கு  அஞ்சாது.

      ஓடு ஓடுஅதுதான்  அதுதான்இவை  இரட்டைக்  கிளவியல்லஏனென்றால்  தனியாகப்  பிரித்தால்  பொருள் தரும்அடுக்குத் தொடர்  என  இவற்றுக்குப்  பெயர். மூன்று  முறை  நான்கு  முறைகூட  அடுக்கி வரலாம்:

        சிறு சிறு பிழைகள்.
       "ஒளிபடைத்த  கண்ணினாய் வா வா வா" (பாரதியார்)


   4 -- குத்தியும்  கொத்தியும்

         


குத்துதல் =   கூரிய கருவியை  ஒன்றனூடே  செலுத்தல்:  

முள்  குத்தும் , ஊசி குத்துகிறாள்கத்தியால்  குத்தினான்.

    நீல  வண்ணத்தோர்  எழில்  பறவை, நீர்நிலைக்கு  மேலே, இறகடித்தபடி  நின்று  திடீரென  நீர்க்குள்  மூழ்கி   ஒரு  மீனைக்   குத்தி  எடுக்கும்: அது    மீன்குத்தி.   இதன்   சங்க  காலப் பெயர்சிரல்.
                          
குறள்:    

கொக்குஒக்க  கூம்பும்  பருவத்து  மற்றதன்
குத்துஒக்க  சீர்த்த  இடத்து.

ஐந்திணை   ஐம்பது; பா 24:

 கோலச்  சிறுகுருகின்  குத்து

         -- கொத்துதல்தோண்டுதல்.

      வேறொரு  பறவை   மரத்தண்டில்  அமர்ந்து  டொக் டொக்  என்று அலகால்  கொத்திப்   பட்டையைப்  பெயர்த்து  உள்ளிருக்கும்  புழு பூச்சியைத்  தின்னும்அது  மரங்கொத்தி.
 
5 ---  ஒப்பித்தலும்  ஒப்புவித்தலும்

ஒப்பித்தல் = மனப்பாடம்   பண்ணியதைப்  புத்தகம்  பாராமல்  சொல்லுதல்:

             ஆசிரியரிடம்   மாணவர்கள்  பாடத்தை  ஒப்பித்தார்கள்.

ஒப்புவித்தல் = உரியவரிடம்  சேர்த்தல், ஒப்படைத்தல்:

           பெட்டியை  அவரிடம்  ஒப்புவி.


 6 --  பல்லக்கு



     பரியங்க்கா  என்ற   வடசொல்   போர்த்துக்கீசிய   மொழியில்   பலான்க்கீம்  என  மாறி  ஆங்கிலத்துள்   நுழைந்து   பலென்க்கீன்  (palanquin)  ஆனதுஅதை  நாம்  பல்லக்கு  என்கிறோம்.

    முந்தைய  தமிழ்ச்சொல்  சிவிகை   ஓய்வு பெற்றது:

   குறள்  --      அறத்தாறு   இதுவென  வேண்டா   சிவிகை
                         பொறுத்தானோடு  ஊர்ந்தான்  இடை.


7 --  எட்டேகால்  லட்சணம்

இந்தச்  சொற்றொடரைக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்;

     எட்டேகால்  லட்சணமே   எமனேறும்  பரியே

     எனத்  தொடங்கும்  தனிப்  பாடல்   ஒன்றுண்டு.

 எண்களைக்  குறிக்கப்   பழந்தமிழர்  எழுத்துகளைப்  பயன்படுத்தினர்:

      1  -  ;   2 --    ;   7 -- ;   8 -- ;   1/4 -   

      அதன்படி

       எட்டேகால்:   அவ
      எட்டேகால்  லட்சணம்   = அவ லட்சணம்.   (அழகற்றது,  அசிங்கம்).

&&&&&&&&&&&&&&
(படங்கள் உதவி இணையம்)


Thursday, 3 December 2015

கண்ணதாசன்


    



  இவரது இயற்பெயர் முத்துதத்துப் போன இடத்தில் வைத்த  பெயர்  நாராயணன்எப்படிக் கண்ணதாசன்  ஆனார்? விவரித்திருக்கிறார்தம் சுயசரிதை, 'வனவாசம்', என்னும் நூலில்; அதில் அவர், 'அவன்'  எனத் தம்மைப்  படர்க்கையில்  குறிப்பிடுகிறார்.

    வேலை தேடி ஒரு  பத்திரிகை அதிபரைப் போய்ப் பார்த்தபோது  நடந்த  நிகழ்ச்சி,  பக்கம்  57, 58 இல், இடம்  பெற்றிருக்கிறது:

    "என்ன  பெயரில்  இதுவரை  தை  கட்டுரைகள்  எழுதியிருக்கிறீர்கள்?   என்று அவர்  கேட்டார்.

     சொந்தப்  பெயரைச்  சொல்ல  வந்த  அவன்   கொஞ்சம்  தயங்கினான்புனைபெயருக்குச்  செல்வாக்கு  இருந்த  காலம்  அதுஅதிலும்  தாசன்  என்று  வரும்  புனைபெயருக்கு   மரியாதையே  தனிபாரதிதாசன்கம்பதாசன்சக்திதாசன்காளிதாசன்  என்ற  பெயர்கள்  நாலு  பேருக்குத்  தெரிந்த  பெயர்களாக  விளங்கினஅவன்,  'என்ன  தாசன்என்று  சொல்லலாம்  என்று  யோசித்தான்சில விநாடி யோசனைக்குப்  பின்,  தான்  யோசித்துச்  சொல்வதை   அவர்  அறியாமல்  மறைக்க,  எங்கேயோ  நினைவில்  இருந்தவன்போல,  'என்ன  கேட்கிறீர்கள்?'  என்று  கேட்டான்.

        மீண்டும்  அவர்  பழைய  கேள்வியையே  திருப்பினார்அப்போதே  அவன்  முடிவு  கட்டியபடி, பளிச்சென்று, 'கண்ணதாசன் என்பது  என்  புனைபெயர்' என்றான்; அவரும் அது ஏதோ அறிமுகமான பெயர்போல் 'பார்த்திருக்கிறேன்   பத்திரிகைகளில்என்றார்.

      இதற்குப்  பெயர்தான்   சந்தர்ப்பம்  என்பது!   உண்மையில்  அவர்  அந்தப்  பெயரை  எந்தப் பத்திரிகையிலும்  பார்த்திருக்க  முடியாதுஅந்தப்  பெயரே  இரண்டு  நிமிடங்களுக்கு முன்னால்தான்  பிறந்தது!

 தெரியாததுபோல் காட்டிக்கொள்வது பெரிய மனிதர்களுக்கு   அழகில்லையல்லவாஅவர்  தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டார்அவனும்  சளைத்தானா?  "நீங்கள்  பார்த்திருக்கக்  கூடும்"  என்று   மட்டும்  கூறினான்.

                         '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''       
                      (படம் உதவி: இணையம்)

Monday, 23 November 2015

பாரதிதாசன்

பாரதிதாசன் (1891 - 1964)





   கவிஞர்  பாரதிதாசனின்  இயற்பெயர்  கனக. சுப்புரெத்தினம்புதுச்சேரியில்  தோன்றியவர். தமிழகத்துக்கு  ஒரு பாரதியார்புதுச்சேரி மாநிலத்துக்கு  ஒரு  பாரதிதாசன்.

   சுப்பிரமணிய  பாரதியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்குத்  தப்பி  சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து பத்தாண்டுக் காலம் (1908-1918) வாழ்ந்தார்.

   அரசு  பள்ளிகளில் தமிழாசிரியராய்ப்  பணியாற்றிய சுப்புரெத்தினம், 1908 இல், வேணு  நாய்க்கர் என்பாரது இல்லத்தில் நிகழ்ந்த  திருமணத்தின்போதுபாரதியாருக்கு  அறிமுகமானார். இருவர்க்கும்  நெருக்கம்  உண்டாயிற்று.

   பாரதியாரைப் பெரிதும் மதித்த சுப்புரெத்தினம்அவர்மீது தாம்  கொண்ட பக்தியின் அடையாளமாய்த் தம் பெயரைப் பாரதிதாசன் என  மாற்றிக்கொண்டார்அவர் தந்த  ஊக்கம்  இவரைக் கவிஞராக்கியதுபக்திப் பாடல்கள்  புனைந்தார் , பாரதியாரின்  பாராட்டைப்  பெற்றார்

   1 --  மயிலம்  ஶ்ரீ  ஷண்முகன் வண்ணப்  பாட்டு.
   2 --  மயிலம் ஶ்ரீ  சிவஷண்முகக்  கடவுள்  பஞ்சரத்நம்.
   3 -- மயிலம்  ஶ்ரீ  சுப்பிரமணியர் துதியமுது.

ஆகியவை  அவருடைய  முதல்  நூல்கள்.

 ( மயிலம்  என்பது புதுச்சேரிக்கு அருகில்  உள்ள  தமிழ்நாட்டு  ஊர்).

   பாரதியார், 1928 இல், சென்னைக்குப்  போய்விட்ட  பின்புபாரதிதாசன்  பெரியாரின்  தொண்டராகித் தன்மானம், பகுத்தறிவு, நாத்திகம் முதலிய  முற்போக்குக்  கொள்கைகளைக்  கடைப்பிடித்து அவை  குறித்துத்  தீவிரமான  கவிதைகள்  இயற்றிப் "புரட்சிக் கவிஞர்" எனப்  போற்றப்பட்டார்கலப்புத்  தமிழை முதலில்  பயன்படுத்தியவர் பிற்பாடு  தனித்தமிழ்ப்  பற்றாளர் ஆகிப்  பிறமொழிச்  சொல்  கலவாமல்  பாடினார்.

   ஆயிரந்தலை  வாங்கிய  அபூர்வ  சிந்தாமணி, பொன்முடி முதலான  சில  படங்களுக்குப்  பாட்டும்  உரையாடலும்  எழுதினார்அபூர்வ  சிந்தாமணியின், "அன்னம்  நடை பயில  ஆயிழை  வராததினால்என்னும்  பாடல் இலக்கிய நயமுடையதுஅவரது  பல  பாடல்கள்  படங்களில் இடம்  பெற்றன:

   1 ---ஆலையின்  சங்கே
   2 --ஆடற்  கலைக்  கழகு
   3 --துன்பம் நேர்கையில்
   4 --வெண்ணிலாவும்  வானும்  போல 
   5 --தமிழுக்கும் அமுதென்று பேர்
   6 --வளமார் எமது  திராவிட நாடு
   7  --சங்கே  முழங்கு

   திராவிடர்  கழகத்திலிருந்து தி.மு.. பிரிந்தபோது பெரியாரின்  ஆதரவாளராய்  நீடித்தார்.

  பாரதியாரைப்  புகழ்ந்து  பலபல  கவிகளை  இயற்றியுள்ள  பாரதிதாசன்  1946 இல்  திருச்சி  வானொலியில் நிகழ்ந்த  கவியரங்கில்  நீண்டதொரு  பாவில்  அவரைப்  போற்றிப்  பாடினார்அதில்  சில  அடிகள்:

   பைந்தமிழ்த்  தேர்ப்பாகன்  அவனொரு
  செந்தமிழ்த்  தேனீ  சிந்துக்குத்  தந்தை
  நீடுதுயில்  நீக்கப்  பாடிவந்த நிலா
  காடுகமழும்  கர்ப்பூரச்  சொற்கோ.

 இறுதிக்காலம் வரை பார்ப்பன  எதிர்ப்பில் மும்முரங்  காட்டிய  பாரதிதாசன்  அந்தச் சாதி பாரதியாரின்மீது வைத்த மதிப்பை எள்ளளவுங்  குறைக்கவில்லை.

  புதுச்சேரி மாநில அரசு நிகழ்ச்சிகளில் பாரதிதாசனின், "வாழ்வினில் செம்மையைச்  செய்பவள்  நீயேஎன்ற  பாட்டு  தமிழ்த் தாய் வாழ்த்தாகப்  பாடப்படுகிறது.


  +++++++++++++++++++
படம் உதவி : இணையம்



Monday, 16 November 2015

கவிஞரின் தாயார்




   மின்சாரம்  வராத  காலத்தில்பேய்  பிசாசு  பற்றிய  நம்பிக்கையும்  அச்சமும் நிறைந்திருந்தன;  இரவில், திருடர்  மற்றும்  தவிர்க்கமுடியாக்  காரணத்தால் வெளியே  போகவேண்டியவர் தவிர, மற்ற  எல்லாரும் இல்லத்தின்  உள்ளேயே  உறைந்தனர். மருண்டவன்  கண்ணுக்கு  இருண்டதெல்லாம்  பேயாய்த்  தோன்றி  நடுங்க  வைத்த  காலம்  அது! "ராத்திரி  ஒருவனைப் பேய் அடித்துவிட்டதுவாயாலும்  மூக்காலும் ரத்தம்  கக்கி  செத்துக்கிடந்தான்என, சில காலை வேளைகளில், மக்கள் பேசிக்கொண்டதைக்  கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த சுவை மிக்க நிகழ்ச்சியொன்றை நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்தம் நூலொன்றில்  ("தாயார்  கொடுத்த  தனம்அல்லது  "என்  கதை"; சரியாக  நினைவில்லை; அறுபது ஆண்டுக்குமுன்பு வாசித்தது) விவரித்துள்ளார்:

 அவரது  தாயார் ஏட்டையாவின் (தலைமைக் காவலர்மனைவி.

  ஊரைப் பேயச்சம் பிடித்தாட்டிற்று; ஆனால் இவர், தாம் அஞ்சாதது  மட்டுமன்றி, 'அப்படியொன்று இல்லைஎன்று பெண்களிடம் கூறி விழிப்புணர்வு  ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

  இருள் மண்டிய ஒரு மாலை வேளையில்தமது வீட்டின் கொல்லைப்  பக்கத்தில் சிறிது தொலைவில் இருந்த குளத்தில் நீர் மொண்டுகொண்டு வந்தபோது தமக்குப் பின்னால் மரக்கிளையின்  சலசலப்பு  கேட்டுத்  திரும்பிப்  பார்த்தார்; மரத்திலிருந்து குதித்த ஓர் உருவம் தலைவிரிகோலமாய்க் கைகளை அகல விரித்தபடி தம்மை நெருங்கக்கண்டு  உஷாரானார்அது ஓடி வந்து இவரை விரட்டியதுகொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடித் தலையில்  குடத்தால்  ஓங்கி  மொத்தியவுடன்  ஓட்டம்  பிடித்தது.

   சில நாளுக்குப்பின்பு, தலையில் கட்டுடன் சந்தைக்கு வந்திருந்த ஓராள்  அங்கு இவரைப் பார்த்ததும், முகம் வேறுபட்டுப் பதுங்கவேஅவனைப்  பிடிக்கும்படி  தம்முடன்  வந்திருந்த  காவலரிடம்  சோன்னார்.

  தம்மைத்  தாக்கிய  பேய் அவன்தான்  என்பது  விசாரணையில்  தெரிந்தது.  அவன்  வாக்குமூலம் தந்தான்:

   பூசாரி பணம்  தந்து  ஏவினாராம்; மூட  நம்பிக்கைக்கு எதிராக  அந்த  அம்மா  பிரச்சாரம்  செய்வதால்  தம்மிடம் மாந்திரிகம்  செய்துகொள்ள  வருபவர்களின் எண்ணிக்கை  குறைவதாகவும் அவரைப்  பயமுறுத்திப் பேய் நம்பிக்கையை  உண்டாக்கினால்  வருமானம்  அதிகரிக்கும்  என்றும்  அவர்  சொன்னாராம்.

  இன்றைக்கும் பற்பலர் பேய் பிசாசு காத்து கருப்புக்குப் பயப்படுகையில்நூறு  ஆண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் ஒரு பெண்மணி பகுத்தறிவைப்  பயன்படுத்துபவராயும் நெஞ்சுரம்  மிக்கவராயும்  திகழ்ந்தமை  போற்றுதலுக்கு  உரியது.



    ***********