Saturday, 3 December 2016

அச்சம்


 (இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது)

ஒரு குளிர்கால மாலையில்,  வடகிழக்குக் காட்டிலே பயணித்தேன்; வேட்டையாடுவது என் நோக்கம். வானம் மூடியிருந்தமையால்,  இருமணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு வந்துவிட்டது; வழிகாட்டியாய் ஒரு கிராமவாசி வந்தார்; ஊசியிலை மரங்களின் கீழே,  சிறு பாதையில் நடந்து சென்றோம். பலத்த காற்று அவற்றை அலறச் செய்தது; கிளைகளுக்கு இடையே தெரிந்த வானில்,  மேகங்கள் கலைந்து, பேரச்சத்துடன் ஓடியதைக் கண்டேன்; சூறைக் காற்றின் விளைவாய்,  எல்லா மரங்களும் எதிர்ப் பக்கமாய்ச் சாய்ந்து துன்பம் தாங்காமல் முனகின. கம்பளி உடையையும் விரைவான நடையையும் மீறிக் குளிர் என்னை நடுக்கிற்று.

  வனப் பாதுகாவலரொருவரின் வீட்டில் நாங்கள் இரவு சாப்பிட்டுத் தங்க வேண்டும். அவரைப் பற்றிய தகவல்களை வழிகாட்டி கூறினார்: இரண்டு ஆண்டுக்கு முன்பு,  திருட்டுத்தனமாய் மரம் வெட்டிய ஒருவனை அவர் கொன்றார்; அதிலிருந்து,  அந்த நினைவால் பாதிக்கப்பட்டவர்போல,  கலகலப்பை இழந்துவிட்டார்; புதல்வர் இருவரும் மணமாகி அவருடனேயே வசிக்கிறார்கள்.

 வீட்டை அடைந்தோம்; வழிகாட்டி கதவைத் தட்டினார்; பெண்களின் அலறல்கள் ஒலித்தன; கம்மிய ஆண்குரல் ஒன்று,  "யாரது?" எனக் கேட்டது; தம் பெயரை வழிகாட்டி சொன்னார்.

 கதவு திறந்ததும் நுழைந்தோம்.

 அங்கே நான் கண்டது மறக்கமுடியாத காட்சி: ஒரு முதியவர்,  நரைத்த தலையும் ஒளி உமிழும் கண்ணுமாய்,  கையில் வேட்டைத் துப்பாக்கியுடன்,  ஹாலின் நடுவே நின்றிருக்க,  இரு கட்டுமஸ்தான இளைஞர்கள்,  கோடரிகள் ஏந்தி,  கதவுக்குக் காவல் இருந்தார்கள்; இருள் படர்ந்த ஒரு மூலையில் பெண்கள் இருவர்,  முழங்காலிட்டு சுவரில் முகம் புதைத்திருந்தனர்.

 வழிகாட்டியின் விளக்கத்தை செவிமடுத்த பெரியவர்,  ஆயுதத்தை சுவரில் மாட்டிவிட்டு எனக்கு ஓர் அறையைத் தயார் செய்யக் கட்டளையிட்டார். சுற்றி வளைக்காமல் என்னிடம் பேசினார்: "நான் இரண்டு ஆண்டுக்கு முந்தி,  இதே தேதியில் இரவில் ஒரு திருடனைக் கொன்றேன்; போன ஆண்டு அவன் வந்து என்னைக் கூப்பிட்டான்; இன்றிரவும் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."

 இவ்வாறு சொல்லிவிட்டு,  " ஆகையால் நாங்கள் அமைதியாக இருக்க முடியவில்லை" என்று அவர் முடித்தபோது,  அவரது குரலில் இருந்த நடுக்கம் என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது.

 என்னால் முடிந்த அளவு அவரைத் தைரியப்படுத்தினேன்; சரியாய் அந்த சமயம் பார்த்து அங்கே போய் மூடநம்பிக்கை விளைவித்த அச்சச் சூழ்நிலையைக் காணும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருந்தது; பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எடுத்துக் கூறி,  எல்லாரையும் அமைதிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டேன்.



 கணப்பின் அருகில் ஒரு நாய்,  அடர்த்தியான மீசையுடன்,  நீட்டிய கால்களில் மூக்கைப் புதைத்தபடி,  உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. கடும் புயல் அந்தச் சிறிய வீட்டைத் தாக்கிற்று; மரங்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதைக் கதவருகே அமைந்திருந்த சன்னலின் கண்ணாடியின் ஊடே,  மின்னல் ஒளியில் கண்டேன்.

 நான் எவ்வளவோ முயன்றும்,  வீட்டாரைப் பிடித்தாட்டிய திகில் அகலவில்லை; பேச்சை நிறுத்தினேனோ இல்லையோ,  அவர்கள் யாவரும் தொலைவில் ஏதேனும் குரல் கேட்கிறதா என்பதைக் கவனிப்பதில் முனைந்தனர். மடத்தனமான அவர்களின் பீதியைக் கண்டு அலுப்புற்று நான் படுக்கப் போகலாம் என்று நினைத்த சமயம்,  பெரியவர் நாற்காலியினின்று திடீரெனக் குதித்து,  துப்பாக்கியை ஏந்தி,  குளறியபடி,  'வந்துட்டான்,  வந்துட்டான், குரல் கேக்குது!' என்றார்; ஆண்கள் கோடரிகளைத் தூக்கினார்கள். அவர்களை அமைதிப்படுத்த நான் எண்ணிய அதே கணம்,  நாய் திடுமென விழித்துத் தலையை நிமிர்த்திக் கழுத்தை நீட்டிக் கணப்பை நோக்கியபடி மரண பயமூட்டி ஊளையிட்டது. அனைவரின் கண்களும் அதை நோக்கின; அது எதையோ பார்த்து மிரண்டாற்போல,  எழுந்து அசையாமல் நின்றுகொண்டு,  கண்ணுக்குத் தெரியாத,  இன்னதென்று புரியாத,  எதையோ எதிர்த்து மீண்டும் ஓலமிடத் தொடங்கிற்று. உடல் முழுதும் ரோமம் குத்திட்டு நின்றமையால்,  பயங்கரமான எதுவோதான் அதன் ஊளைக்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

 முதியவர்,  'அவனை மோப்பம் பிடித்துவிட்டது; அதன் எதிரில்தானே கொன்றேன்!' எனக் கூவினார்; கலக்கமுற்ற பெண்கள் நாயோடு சேர்ந்து அலறினார்கள்.

 என்னையும் மீறி உடம்பு நடுங்கியது. அந்த இடத்தில்,  அந்த நேரத்தில்,  உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதர்களுக்கிடையே,  நாயின் அத்தோற்றம் கிலியூட்டத்தான் செய்தது. பேரச்சம் என்னையும் பற்றிக்கொண்டது; எது குறித்து? தெரியவில்லை.

 யாவரும் சலனமின்றி,  வெளிறிப்போய்,  ஒரு பயங்கர நிகழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு,  தீட்டிய காதும் படபடக்கும் இதயமுமாய்,  சிறு ஓசைக்கும் அதிர்ச்சி அடையும் நிலையில் காத்திருந்தோம். நாயோ ஹாலை சுற்றிச் சுற்றி வந்து,  சுவர்களை மோந்துகொண்டிருந்தது; அதன் செயல்கள் எங்களைப் பைத்தியமாக்கும்போல் இருந்தன. காற்றின் வேகம் குறைந்து வந்தது.  

 கிராமவாசி,  ஏதோ வெறியில்,  நாய்மீது பாய்ந்து பிடித்துத் தோட்டக் கதவைத் திறந்து,  வெளியே தள்ளினார்.  அது உடனே மெளனமாயிற்று.  எங்களுக்கோ அந்த அமைதி முன்பைவிட அதிகம் பயந்தந்தது.
 திடீரென அனைவர்க்கும் அதிர்ச்சி! உருவமொன்று வெளிச் சுவரில் உராய்ந்து சென்றது; கதவின் எதிரில் வந்து,  அதைத் தயக்கத்துடன் தொட்டாற்போல் தோன்றிற்று; சில நிமிட நிசப்தம். நாங்கள் திக்பிரமை அடைந்தோம். அது மீண்டும் வந்து சுவரை உராய்ந்தது; நகங்களால் சுரண்டியது.

 சன்னல் கண்ணாடிவழி,  திடீரென்று தோன்றியது தலையொன்று: காட்டு விலங்குகளின் கண்களையொத்த கண் கொண்ட வெள்ளைத் தலை; அதன் வாயினின்றும் வெளிப்பட்டது தெளிவற்ற ஒலி,  முறையிடுவது போன்ற முணுமுணுப்பு. அதே சமயம்,  வீட்டில் கேட்டது காதை செவிடாக்கும் சத்தம்: வன அலுவலர் சுட்டிருக்கிறார்! புதல்வர்கள் விரைந்தோடி மேசையைத் தூக்கி சன்னலை அடைத்து,  அந்த மேசைக்கு ஓர் அலமாரியை முட்டுக்கொடுத்தனர்.

 அந்த எதிர்பாராத வேட்டினால் எனக்கு ஏற்பட்ட உடல்,  மன அதிர்ச்சிகளால்,  நான் பிரக்ஞை இழந்து அச்சத்தால் இறந்துவிடுவேன் எனத் தோன்றிற்று.

 யாவரும் அதிகாலைவரை ஆடாமல் அசையாமல்,  ஒரு வார்த்தைகூடப் பேச இயலாமல்,  மதி மயங்கி முடங்கிக் கிடந்தோம். சூரியனின் கிரணம் ஒன்று துவாரம் வழியாய் உள்ளே வந்ததைக் கண்ட பின்தான் வெளியே போகத் துணிந்தோம்.

 அங்கே! சுவரை ஒட்டினாற்போல,  குண்டு பிளந்த வாயுடன்,  இறந்து கிடந்தது நாய்; தோட்டத்து வேலியின் அடியில் குழி தோண்டி,  அது தெருப் பக்கம் வந்துவிட்டிருந்தது!


        +++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 22 November 2016

பெரியவர் மோன்ழிலே


    ( பிரஞ்சு சிறுகதை மன்னர் மொப்பசான் எழுதியது; ஜனவரி 1997 மஞ்சரியில் வந்தது)

எங்கள் அலுவலகத்துப் பெரியவர் மோன்ழிலே பணி மூப்பர்பண்பாளர்; எங்களுக்குத் தெரிந்து அவர் பாரீசை விட்டு வெளியே சென்றதேயில்லை.   

 நாங்களோ, கோடை தொடங்கியதும், எல்லாரும் சேர்ந்துஞாயிறுதோறும்புற நகர்களுக்குப் போய்ப் புல்லில் உருண்டு புரள்வது அல்லது கழுத்துவரை நீரில் மூழ்கிக் கிடப்பது வழக்கம்.  
 
    ஒரு நாள்நாங்கள் சொன்னோம்:   

"அதை அனுபவித்துப் பாருங்கள், ஐயா; ஒரு முறை புற நகருக்கு வாருங்களேன்,  எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு".

    அவர் பதிலளித்தார்:   

 "போயிருக்கிறேனேஇருபது ஆண்டுக்கு முன்பு;   அப்பப்பா, போதும்அது போதும்".

    "அப்படியா? அதைப் பற்றி சொல்லுங்களேன்".

     "அதற்கென்ன, சொல்கிறேன். உங்களுக்கு புவாலேனைத் தெரியுமல்லவா, பழைய எழுத்தர்?".

    "அவரா,   நன்றாகத் தெரியுமே!".

    "அந்த ராஸ்கலுக்குப் புற நகர் கொலோம்பில் ஒரு வீடு உண்டு;   ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அங்கே வரும்படி பல முறை அழைத்துக்கொண்டிருந்தான்; 'வா, மோன்ழிலே, அருமையான வாக்கிங்  போகலாம்' என்று சொன்னான்.   

    ஒரு காலைவேளையில் கொலோம்பை அடைந்தேன்; அலைந்து திரிந்து ஒரு சந்தின் கடைசியில்இரு சுவர்களுக்கு இடையே,    ஒரு பழங்கதவைக் கண்டுபிடித்து மணியடித்தேன்கதவு திறந்தது: விகாரமான, பழந்துணிகளால் மூடப்பட்ட,   அழுக்கேறிய, அருவருப்பான உருவமொன்று நின்றது; தலைமுடியில் கோழி இறகுகளை செருகியிருந்த அது என்னை விழுங்க விரும்பியதுபோல் தோன்றியது.  
 
 --- என்ன வேண்டும்?   

 -- புவாலேன்.   

 -- அவரிடம் உங்களுக்கு ஆகவேண்டியது?   

அந்த சிடுமூஞ்சியின் விசாரணை என்னை நெளீய வைத்தது. திணறியபடி சொன்னேன்: "வந்து... அவர் வரச் சொன்னார்".

-- ஓஹோ,  சாப்பாட்டுக்கு வருபவர் நீங்கள் தானா?

-- ஆம்.   

 வீட்டின் உள்பக்கம் திரும்பிய அவள், " புவாலேன்இதோ உன் நண்பர்" என்று கடுகடுத்த குரலில் கூறினாள்.   

    அவன் வந்து என் கையைக் குலுக்கிய பின்பு,  தோட்டம் என அவன் பெயர் சூட்டியிருந்த ஓர் இடத்துக்கு அழைத்து சென்றான். ஒரு சிறு பரப்பு: சுற்றியிருந்த உயரமான வீடுகள் காரணமாய்,  ஒரு நாளில் இரண்டொரு மணி நேரம் மட்டுமே வெயில்படும்; அங்கே சில பூச்செடிகள் சாவுப்படுக்கையில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தன.  
 
    அவன்,  "நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்என் மனைவியைப் பார்த்தாயல்லவா?   அவள் ஒருமாதிரி பெண்உனக்குப் புரிந்திருக்குமே! இன்றைக்குநான் உன்னை அழைத்திருப்பதால், எனக்குத் தூய ஆடை அளித்திருக்கிறாள்அதில் கறைகிறை பட்டதோ, தொலைந்தேன்அதனால்,   இந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உன்னை நம்பியிருக்கிறேன்" என்றான்.   

    இசைந்தேன். கோட்டைக் கழற்றி, சட்டைக் கைகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு,   முழு வலிமையுடன் ஒரு விதப் பம்ப்பைக் கையாளத் தொடங்கினேன். அது விசிலடித்தும் புஸ் எனப் பெருமூச்சு விட்டும் காசநோயாளிபோல் கரகரப்பான ஓசையெழுப்பிக்கொண்டு மெல்லிய நீர்த்தாரையைப் பீய்ச்சிற்று. ஒரு தடவை பூவாளியை நிரப்பப் பத்து நிமிடம் தேவைப்பட்டது. நான் தொப்பல்!

புவாலேன் எனக்கு ஆணையிட்டான்: "இங்கே... இந்த செடிக்கு... இன்னம் கொஞ்சம்.. போதும்.. அந்த செடிக்கு.."

    பூவாளி ஓட்டை;    மலர்மேல் பட்ட நீரைவிட என் காலில் கொட்டியது  அதிகம். கால்சட்டையின் அடிப்பகுதி நனைந்து சேற்றைப் பூசிக்கொண்டது;    இப்படி பல தடவை நீர் பாய்ச்சுவதும் கால்களை நனைத்துக்கொள்வதுமாய் இருந்துவிட்டு, கடைசியில் ஓய்ந்துபோய் வேலையை நிறுத்தினேன்.  
     
    திருமதியின் குரல் தொலைவிலிருந்து கேட்டது: "வருகிறீர்களா   சாப்பாடு தயார்!"

 வீட்டில் வெயில் தகித்தது;  அரபு நாட்டு வெந்நீர்க் குளியலறைகூட அந்த சாப்பாட்டறையைக் காட்டிலும் வெப்பம் குறைந்துதான் இருக்கும்!

    மேசைமீது மூன்று தட்டு;   முள்கரண்டிகள்,  ஸ்பூன்கள்; நடுவே ஒரு சட்டியில் மாட்டுக்கறி + உருளைக்கிழங்கு கஞ்சி. உண்ணத் தொடங்கினோம்.    

    வெளிர் சிவப்பு நிறத் தண்ணீரால் நிரம்பிய ஒரு கண்ணாடிக் கூஜா என் பார்வையைக் கவர்ந்தது. சங்கடத்தில் நெளிந்த புவாலேன் அவளிடம், "ஏன், விசேஷ நாளில், சுயமான செந்திராட்சை மது கொஞ்சம் தரமாட்டாயா?" என்று கேட்டான்.  
 
கோபத்துடன் அவனது முகத்தை வெறித்துப் பார்த்தாள்: "எதற்குஇரண்டுபேரும் போதை தலைக்கேறி இன்று முழுதும் என் வீட்டில் கத்திக்கொண்டு கிடப்பதற்கா? விசேஷமாவது,  ஒண்ணாவது!"

    அவன் மவுனமானான். கஞ்சிக்கு அப்புறம், பன்றிக் கொழுப்புடன் தயாரித்த உருளைக்கிழங்கு கொண்டுவந்து வைத்தாள். உரையாடாமலே அதை உண்டு முடித்தோம். "அவ்வளவுதான்; எழுந்திருங்கள்" என்றாள். 
  
    அவன் மலைத்துப்போய் அவளை நோக்கி, " என்னது? அந்தப் புறாகாலையில் உரித்தாயே, அது?" எனக் கேட்டான்; அவள் இடுப்பில் கைகளுடன் பதில் அளித்தாள்: "போதாதாசாப்பிட்டது? நீ யாரையாவது அழைத்து வந்தால், வீட்டில் இருப்பதையெல்லாம் தின்று தீர்த்துவிடவேண்டும் என்று அர்த்தமாஇரவு நான் எதை சாப்பிடுவேன்?"

 நாங்கள் எழுந்தோம். நண்பன் என் காதைக் கடித்தான்: "ஒரு நிமிஷம்;   வருகிறேன்".

    சமையல் அறைக்குள் நுழைந்த மனைவியைத் தொடர்ந்தான். உரையாடல் என் காதில் விழுந்தது.   

    -- இருபது பிரான் தாயேன்.   

 ---என்ன செய்யப்போகிறாய்இருபது பிரானை வைத்துக்கொண்டு?   

 --தெரியவில்லை; என்ன செலவு வருமென்று முன்கூட்டியே சொல்ல முடியாது. கையில் பணம் இருப்பது நல்லது.  

 எனக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் இரைந்தாள்: "முடியாது; தர மாட்டேன். அந்த மனிதர் நம் வீட்டில் சாப்பிட்டிருப்பதால் அவர்தான் செலவு செய்ய வேண்டும்".

    புவாலேன் வந்தான். வாக்கிங் கிளம்பினோம். பண்பாடு காக்க விரும்பிய நான்,    அவளுக்கு முன்னால் குனிந்துதிக்கியபடி சொன்னேன்:

    "மேடம்,  நன்றி;   இனிய விருந்தோம்பல்".

அவள் பதிலுக்கு,  "சரி சரிதிரும்பி வரும்போது அவர் நிதானத்தில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும், தெரிகிறதா?" என்றாள். நாங்கள் புறப்பட்டோம். 



கொளுத்தும் வெயிலில்ஆற்றங்கரையை அடைந்தோம். என் பசி தீரவில்லை;   "ஏதாவது சாப்பிட வேண்டும்" என்றேன். ஒரு குடிசையுள் அழைத்து சென்றான்: அது ஒரு சாராயக் கடை; மாலுமிகள் நிறைந்திருந்தார்கள்.   

    "பார்வைக்கு இப்படி இருக்கிறதேயொழிய, அருமையான இடம்" என்றான். சாப்பிட்டோம், ஒயின் பருகினோம்இரண்டாம் கிலாசிலேயே அந்தப் பயலுக்குப் போதை தலைக்கேறிவிட்டது; ஒயினில் அவள் ஏன் நிறைய நீர் கலந்திருந்தாள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவன் சொற்பொழிவாற்றத் தொடங்கினான்; எழுந்தான்சர்க்கஸ் வேலைகள் செய்ய முனைந்தான்; கைகலப்பில் ஈடுபட்ட இருவர்க்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முற்பட்டான்கடை உரிமையாளர் மட்டும் தலையிட்டிராவிட்டால் எங்கள் இருவரையுமே நொறுக்கியிருப்பார்கள்.   

அவனைக் கைத்தாங்கலாய்ப் பக்கத்துத் தோப்புக்குக் கூட்டிச் சென்று படுக்க வைத்தேன். நானும் படுத்தேன்,   தூங்கிவிட்டேன்.  
 
 நான் விழித்தபோது இரவு கவிந்திருந்தது. அவனை உலுக்கி எழச்செய்தேன். கிளம்பினோம். கும்மிருட்டுவழியைக் கண்டுபிடித்துவிட்டதாய் சொன்னான். இடம் வலம் என மாறிமாறித் திரும்பி அழைத்துப் போனான். வானமும் தெரியவில்லைதரையும் தெரியவில்லை. எங்கள் மூக்கு உயரத்துக்கு நீண்டிருந்த, ஈட்டி போன்ற கழிகள் நிறைந்த ஒரு சிறு காட்டில் அலைந்தோம்; அவை திராட்சை செடிகளுக்கு நட்டிருந்த கொம்புகளாய் இருக்கலாம். நடந்தோம்நடந்தோம், அங்கேஇங்கே திரும்பியும் தடுமாறியும் கைகளை நீட்டிக்கொண்டும்  குருட்டுப்போக்கில் நடந்தோம்வெளியேறும் வழி தெரியவில்லை. அவன் உதவி கோரித் தொண்டை கிழியுமாறு கத்தினான்;  நானும் பலங்கொண்ட மட்டும் குரலெழுப்பினேன்.   

    நல்ல காலமாய் கிராமவாசியொருவர் எங்கள் குரல் கேட்டு வந்து வழி காட்டினார்.   

வீடுவரை புவாலேனை அழைத்துச் சென்ற நான்வாயிலில் விட்டுவிட்டு  நழுவப் பார்த்தேன். திடீரெனக் கதவு திறந்ததுகையில் மெழுகுவர்த்தியுடன் தோன்றியவளைக் கண்டதும் எனக்குக் குலை நடுங்கிற்று.    

 "அயோக்கியா! எனக்குத் தெரியுமேநீ அவரைப் போதையிலேதான் அழைத்து வருவாய் என்று" எனக் கத்தினாள். எடுத்தேன் ஓட்டம்.   

    இப்போது தெரிகிறதா,  நான் ஏன் மணம் செய்துகொள்ளவில்லை என்பதும் புறநகர்க்கு ஏன் போவதில்லை என்பதும்".   

                 -----------------------------------------------------