Saturday, 28 January 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 4


காட்சி 5
இடம்: நீதிமன்றம்.
பாத்திரங்கள் -- பாத்லேன், நீதிபதி, வியாபாரி, திபோ.




பாத்லேன் -- கனம் ஐயா, கர்த்தர் உங்களுக்கு இன்று நல்ல போணியும் உங்கள் மனம் விரும்புவதையும் அருள்வார்.

நீதிபதி -- உங்கள் வருகை நல்வருகையாகட்டும். ஏன் போர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? அமருங்கள்.

பாத்லேன் -- உடம்புக்கு ஒன்றுமில்லை; சும்மா வந்தேன்.

நீதிபதி --- சரி. வழக்கை சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்; முன்னேரத்தில் என் வேலை முடியும்.

வியாபாரி -- என் சாட்சிக்கு அவசர வேலை; முடித்துவிட்டு இப்போது வந்துவிடுவார். கொஞ்சம் காத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி --- எனக்கு வேறு வழக்கு இருக்கிறது; காத்திருக்க முடியாது. தொடங்கலாம். நீங்கள் தானே வாதி?

வியாபாரி -- ஆமாம், ஐயா.

நீதிபதி --- பிரதிவாதி எங்கே? வந்திருக்கிறாரா?

வியாபாரி -- அதோ, வாய் மூடி, மெளனியாய்.

நீதிபதி --- இரண்டு பேரும் இருப்பதால், வாதத்தை ஆரம்பியுங்கள்.

வியாபாரி -- கனம் ஐயா, நான் இவன்மேலே இரக்கப்பட்டு, சிறு வயதிலிருந்து வளர்த்தேன். ஆடு மேய்க்கிற பருவம் வந்ததும், என் இடையனாக்கி, என்னுடைய ஆடுகளை ஒப்படைத்தேன். ஆனால், ஐயா, இவன் ஆட்டை...

நீதிபதி --- இருங்கள், சம்பளம் கொடுத்தீர்களா?

பாத்லேன் -- இல்லை, கூலி தராமல் வேலை வாங்கினது எனக்குத் தெரியும்.

வியாபாரி --- ஆ! நீங்களா?

நீதிபதி -- ஏன் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

பாத்லேன் -- பல்வலி, ஐயா. முகத்தை நிமிர்த்த முடியவில்லை.

நீதிபதி --- நீங்கள் தொடருங்கள்; சீக்கிரம் முடியுங்கள்.

வியாபாரி --- பிஏர் ஐயா, உங்களிடந்தானே கம்பளி விற்றேன்!

நீதிபதி --- கம்பளியா? எந்தக் கம்பளி?

பாத்லேன் -- சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.

வியாபாரி --- என் கம்பளியை நீங்கள் தான் வாங்கினீர்கள்!

பாத்லேன் --- நான் நினைக்கிறேன், அவருடைய இடையன் என்னிடம் கம்பளி விற்றதாயும், அதைக் கொண்டு நான் கோட் தைத்துக்கொண்டதாயும் நம்புகிறார்.

நீதிபதி -- போதும், எதை எதையோ சொல்கிறீர்கள். மன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல், வழக்கு பற்றிப் பேசத் தெரியாதா?

பாத்லேன் --- அவருக்கு எவ்வளவு பதற்றம் என்றால் எங்கே விட்டார் என்பதே தெரியாமல் போய்விட்டது.

நீதிபதி -- நம்முடைய ஆட்டுக்குத் திரும்புவோம்; அப்புறம் என்ன ஆயிற்று?

வியாபாரி -- ஆறு ஓன் எடுத்தார், ஒன்பது பிரான்.

நீதிபதி -- நீங்கள் எங்கே இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பாத்லேன் -- அப்பாவி போல் தெரிகிறார். எதிர்த் தரப்பைக் கேட்கலாம்.

நீதிபதி --- நீங்கள் சொன்னது சரி;  நீ, வா இங்கே, சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- இது என்ன சங்கடம்! எதற்கு பே? ஆடா நான்? என்னிடம் பேசு.

திபோ ---- பே!

நீதிபதி -- கிண்டலா பண்ணுகிறாய்?

பாத்லேன் -- ஆட்டு மந்தையில் இருப்பதாக நினைக்கிறானோ?

வியாபாரி -- என் துணியை வாங்கின ஆள்,  நீங்களல்ல என்று சொல்லுங்கள்
பார்ப்போம். கனம் ஐயா, உங்களுக்குத் தெரியாது, இவர் எவ்வளவு தந்திரமாய்...

நீதிபதி --- நிறுத்துங்கள்; கிறுக்கா நீங்கள்? அதை விட்டுவிட்டு வழக்குக்கு வாருங்கள்.

வியாபாரி - சரி, ஐயா. அது என்னைப் பாதித்த விஷயம்; ஆனால் இன்றைக்கு அது பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டேன்; இன்னொரு நாள் பார்த்துக்கொள்கிறேன். ஆறு ஓன் கொடுத்ததை சொன்னேன். என் ஆடுகள்... மன்னியுங்கள், இந்த வழக்குரைஞர்... என் இடையன் ஆடு மேய்த்தபோது... மூன்று வெள்ளி தருவதாக சொன்னார். விஸ்வாசமாக இருப்பேன் என்றான். மூன்று ஆண்டு ஆயிற்று. பணமுந் தரவில்லை, துணியுந் தரவில்லை. ஆரோக்கியமாய் இருந்த ஆடுகளைக் கொன்று தின்றுவிட்டு ரோமத்தையும் விற்றிருக்கிறான். கம்பளி வாங்கியவர், வீட்டுக்கு வா, வெள்ளிப் பணம் தருவேன் என்றார்.

நீதிபதி -- என்னய்யா சொல்கிறீர்கள்? கருத்துமில்லை, அர்த்தமுமில்லை; இதிலே கொஞ்சம்; அதிலே கொஞ்சம். ஒன்றுமே புரியவில்லை.

பாத்லேன் -- ஆடு மேய்க்கக் கூலி கொடுக்கவில்லை.

வியாபாரி -- என் பரிதாப நிலைமை எனக்குத்தான் தெரியும்; உங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது.

நீதிபதி -- அப்படி யென்ன உங்களுக்கு?

வியாபாரி -- இவர் ஏமாற்றிவிட்டார்; ஆனால் என் வாக்குறுதிப்படி ஒன்றுஞ் சொல்லமாட்டேன் ; ஆடு பற்றிப் பேசுவேன்.

நீதிபதி -- சீக்கிரம் பேசி முடியுங்கள்.

பாத்லேன் -- இந்தப் பையனுக்கு வழக்குரைஞர் இல்லாமல் எதுவும் சொல்லத் தெரியாது போலிருக்கிறது; நீங்கள் அனுமதித்தால், நான் கேசை எடுத்துக்கொள்வேன்.

நீதிபதி -- என்ன தொகை கிடைக்கப்போகிறது?

பாத்லேன் -- ஒன்றும் வேண்டாம், ஏழைக்கு உதவி.

நீதிபதி -- சரி.

பாத்லேன் -- இங்கே வா, உன் தரப்பை சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- பே யா? என்ன பே? உன்னுடைய நன்மைக்காகத்தான் நான் பேசுகிறேன்; புரிகிறதா?

திபோ -- பே!

பாத்லேன் -- ஆமாம், இல்லை என்று சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- ஒழுங்காகப் பேசாவிட்டால் உனக்குத்தான் கஷ்டம்.

திபோ -- பே!

பாத்லேன் -- இந்த இளைஞன் ஒரு பைத்தியம் போல் தெரிகிறது, ஐயா; இவனை மந்தைக்கு அனுப்புங்கள்.

வியாபாரி -- இவனா பைத்தியம்? உங்களைவிடப் புத்திசாலி; நன்றாகப் பேசுவான்.

பாத்லேன் - அப்படித் தெரியவில்லை; ஆடு மேய்க்க அனுப்புங்கள், ஐயா; கிறுக்குகளை வைத்துக்கொண்டு வழக்கா?

வியாபாரி -- அனுப்புவதா? என் வாதத்தைக் கேட்காமலா?

நீதிபதி -- வேறென்ன செய்ய? அவன் பேச முடியாதவனாக இருப்பதால்...

வியாபாரி -- ஐயா, ஐயா. என்னைப் பேச விடுங்கள்; என் வழக்கைக் கேளுங்கள்.

நீதிபதி -- வீண் வேலைதான்.

பாத்லேன் -- இரண்டு பேரும் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

வியாபாரி -- நீங்கள் பணந் தராமல் துணியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போனீர்கள்; அது யோக்கியர்களின் வேலையல்ல.

பாத்லேன் -- யாரிடமோ கொடுத்துவிட்டு என்னைக் கேட்கிறீர்கள்.

வியாபாரி -- உங்கள் முகம், குரல், கோட் எல்லாம் எனக்குப் பரிச்சயம்.நல்லவர் கெட்டவர் தெரிந்துகொள்ள எனக்குப் புத்தி இருக்கிறது. நீதிபதி அவர்களே, என் மன சாட்சிப்படி...

பாத்லேன் -- ஐயா, முடித்து வையுங்கள்; இரண்டு மூன்று ஆடு, அற்பம். இதற்குப் போய் வழக்கா?

வியாபாரி --- ஆடாவது, மாடாவது! உங்களிடந்தான் பேசுகிறேன். என் பணத்தைக் கொடுங்கள்.

நீதிபதி -- இதென்ன குளறுபடி!

வியாபாரி --- நான் கேட்பது ...

பாத்லேன் -- இரண்டு ஆட்டைத் தின்றால்தான் என்ன? அவன் எவ்வளவோ உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருப்பான்.

வியாபாரி -- பாருங்கள் ஐயா. நான் துணி பற்றிக் கேட்கிறேன், இவர் ஆடு பற்றிப் பேசுகிறார். ஆறு ஓன்! எங்கே?

பாத்லேன் -- பாவம், அந்தப் பையன்! சில ஆட்டுக்காகத் தண்டிக்கப் போகிறீர்களா?

வியாபாரி -- இப்படிப்பட்ட ஆளிடம் துணி விற்கச் செய்தது பிசாசின் வேலையாய்த்தான் இருக்கும். ஐயா, அவரிடம் நான் கேட்பது...

நீதிபதி --- நீங்கள் கேட்பதை நான் தள்ளிவிடுகிறேன். இந்தா, நீ போ மந்தைக்கு.

திபோ --- பே!

வியாபாரி --- ஐயையோ, ஐயா, எனக்கு சேர வேண்டிய..

பாத்லேன் -- இவர் ஓயவே மாட்டாரா?

வியாபாரி -- உங்களுடன்தான் தகராறு; சாமர்த்தியமாய்ப் பேசி ஏமாற்றித் துணியை எடுத்துப் போனீர்.

நீதிபதி --- உங்கள் இரண்டு பேராலும் பெரிய தொந்தரவு. இந்தாப்பா, மன்றம் உன்னை விடுவிக்கிறது, புரிகிறதா? போ, திரும்பி வராதே.

பாத்லேன் --- ஐயாவுக்கு நன்றி சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- போதும் பே! போய்ச் சேர்.

வியாபாரி -- நியாயமா அவனை விடுவது?

நீதிபதி -- நான் வேறு வழக்கை விசாரிக்க வேண்டும்.


*******

 தொடரும்...

(படம் நன்றி இணையம்)




Tuesday, 17 January 2017

வல்லவனுக்கு வல்லவன் - 3


காட்சி - 4                                                                                 
இடம்: வீடு.
பாத்திரங்கள் --  திபோபாத்லேன்,   கீய்மேத். 



                              
திபோ -- வழக்குரைஞர் ஐயா!

பாத்லேன் -- மறுபடியும் வந்துவிட்டார்.

கீய்மேத்.  -- இல்லை, வேறு ஆள்.

பாத்லேன் -- கர்த்தர் உன்னைக் காக்கட்டும்; என்ன விஷயம்?

திபோ - சங்கடத்தில் இருக்கிறேன்; நீங்கள் உதவ வேண்டும். என் எஜமானர் வழக்கு போட்டிருக்கிறார்; அவருடைய ஆடுகளை ரொம்ப காலமாக மேய்த்துப் பராமரித்து வந்தேன்ஆனால் அவர் குறைவாய்க் கூலி தந்தார்.

பாத்லேன் -- யார் உன் எஜமானர்?

திபோ -- துணிக் கடைக்கார ழெரோம்.

பாத்லேன் -- ஆ! அவரா! கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. சரி, இருக்கட்டும். சொல்லு.

திபோ -- எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமா?

பாத்லேன் -- கண்டிப்பாகவழக்குரைஞரிடம் எதையும் மறைக்கக்கூடாது.

திபோ -- சில ஆடுகளை நான் கொன்று தின்றது உண்மை. அவை ஆரோக்கியமாகவும் வலுவாயும்தான் இருந்தன. பெரியம்மையால் இறந்ததாய் அவரிடம் சொன்னேன். அவர்,  "ஐயோ! நோய் ஆட்டை மற்ற  ஆடுகளோடு சேர விடாமல் நீக்கு" என்றார். நானும் அப்படித்தான் செய்தேன்ஆனால் வேறு விதமாய்: அதாவது சமைத்து சாப்பிட்டேன். இப்படிப் பல தடவை;   அவருக்கு சந்தேகம் வந்து ஆள் வைத்து ஒற்று பார்த்துக் கையும் ஆடுமாய்ப் பிடித்துவிட்டார். அவருடைய கட்சி வலுவானது என்று எனக்குத் தெரியும்;    நீங்கள் வாதாடி என்னை மீட்க வேண்டும். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது.

பாத்லேன் -- அப்படியா?   உன்னிடம் வசதி உண்டா? எவ்வளவு கொடுப்பாய்எதிர்க் கட்சியை நீர்த்துப் போகச் செய்து உன்னைக் காப்பாற்றினால்?

திபோ -- காசாய்த் தரமாட்டேன்வெள்ளி நாணயம் பெறுவீர்கள்.

பாத்லேன் -- அப்படியானால்நீ வென்றாய்எவ்வளவு மோசமான கேஸ் என்றாலும் என் வாதத் திறமையால் உடைத்துவிடுவேன். எத்தனை ஆடு அவரை இழக்கச் செய்தாய்?

திபோ -- மூன்று ஆண்டில் பத்துக்குமேல் இருக்கலாம்.

பாத்லேன் - அவருக்கு சாட்சி கிடைக்குமென்று நினைக்கிறாயா?

திபோ - நமக்கு ஒன்று கிடைத்தால் அவருக்கு நான்கு அகப்படும்.

பாத்லேன் -- இது நமக்குப் பெரிய பலவீனம். எனக்கு ஒரு யோசனை: நான் உன்  வழக்குரைஞர் என்பதையோ நாம் சந்தித்ததையோ காட்டிக்கொள்ளாமல் நான் மறைத்துவிடுவேன்.

திபோ -- அது எப்படி முடியும்?

பாத்லேன் -- முடியும். நீ பேசினால்,   கேள்விமேல் கேள்வி கேட்டு,   உன்னை மடக்கிக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்துவிடுவார்கள்; அதனாலே,   நீ என்ன செய்ய வேண்டுமென்றால்உன்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும்,  'பே!என்பதைத் தவிர நீ வேறொன்றும் சொல்லக்கூடாது. எரிச்சல் அடைந்து உன்னைக் கீழ்த்தரமாக வைதாலும்,   நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் குற்றம் சுமத்தினாலும்,  'பே!' என்றே சொல்லுவேறு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாதுஜாக்கிரதை! மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

திபோ-- அப்படியே சொல்லுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

பாத்லேன் --- நானே உன்னிடம் ஏதாவது கேட்டாலும் வேறு பதில் சொல்லாதே.

திபோ --  மாட்டவே மாட்டேன்நீங்கள் கற்றுக்கொடுத்தபடி,  'பே!அல்லாமல் வேறில்லை.

பாத்லேன் -- இதனால் வாதி நிலை குலைந்து போவார்நீ தப்பிப்பாய். எனக்குக்  கட்டணம் நான் திருப்தி படும்படி கொடு. என்ன சம்மதமா?

திபோ -- பே!

பாத்லேன் -- அப்படி நீதிமன்றத்தில் சொல்லுஇங்கேயல்ல.

திபோ -- கட்டணம் கொடுக்காவிட்டால் நான் மனிதனேயல்ல.

பாத்லேன் -- பத்து மணிக்கு விசாரணை தொடங்கும். நான் முன்கூட்டியே போய்விடுவேன்நீ அப்புறமாக வா. இரண்டு பேரையும் ஒன்றாக யாரும் பார்த்துவிடக்கூடாது.

திபோ -- சரிங்கநீங்கள் எனக்காக வாதாடப் போகிறீர்கள் என்பது  தெரியக்கூடாதுஅப்படித்தானே?

பாத்லேன் -- புத்திசாலி! வாதிக்கு ஓட்டம் நிச்சயம்.. நீ எனக்குக் கணிசமாகப் பணம் கொடுக்க வேண்டும்.

திபோ -- அது பற்றி சந்தேகமே வேண்டாம். 

                              (போகிறான்)

பாத்லேன் -- (தமக்குள்) மூன்று வெள்ளியாவது தருவான்.

                                           ++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)





Saturday, 7 January 2017

வல்லவனுக்கு வல்லவன் - 2


காட்சி - 3   --   இடம்: வழக்குரைஞர் இல்லம்.

                வியாபாரி, கீய்மேத், பாத்லேன்.

   (கடைக்காரரை ஏமாற்றுவதற்குக் கணவரும் மனைவியும் தயார்)





வியாபாரி -- ஐயாவழக்குரைஞர் ஐயா!

கீய்மேத் -- எது சொல்வதாக இருந்தாலும்மெதுவாகப் பேசுங்கள்.

வியாபாரி -- கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

கீய்மேத் -- இன்னம் மெல்ல.

வியாபாரி -- எங்கே அவர்?

கீய்மேத் -- அந்தோபடுக்கையில் கிடக்கிறார், பாவம், பதினொரு வாரமாய்.

வியாபாரி --- யார்?

கீய்மேத் -- மன்னியுங்கள்நான் உரத்துப் பேசத் துணியவில்லைஅவர் பலவீனமாக இருக்கிறார்.

வியாபாரி -- யாரைப் பற்றி சொல்கிறீர்கள்?

கீய்மேத் -- பிஏர்.

வியாபாரி -- என்னது? செத்தமுன்னே வந்து துணி வாங்கவில்லையா?

கீய்மேத் -- யார்,   இவரா?

வியாபாரி --  ஒரு மணிகூட ஆகியிருக்காதுகாக்க வைக்காமல் பணத்தைக் கொடுங்கள்.

கீய்மேத் -- என்னகதையா விடுகிறீர்கள்?

வியாபாரி -- உங்களுக்கென்ன கிறுக்காஒன்பது பிரான்,  என் பணம். அவரை வரச்சொல்லுங்கள்.   

கீய்மேத் -- அவரால் முடியாதே!

வியாபாரி -- வழக்குரைஞர் பிஏர் பாத்லேன் வீடுதானே இது?

கீய்மேத் -- ஆமாம், மெல்லப் பேசுங்கள். அவர் தூங்கட்டும்.

வியாபாரி -- மெல்ல என்றால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலவா
அவர் ஆறு ஓன் கம்பளித் துணி இன்று வாங்கினார்.

கீய்மேத் -- இன்றைக்காபதினொரு வாரமாய்ப் படுத்துக் கிடக்கிறார்.

வியாபாரி -- இதோ பாருங்கள்ஆறு ஓன் துணிக்குப் பணங்கொடுங்கள்.

கீய்மேத் --- யாரிடங் கொடுத்தீர்கள்?

வியாபாரி -- இவரிடந்தான்.

கீய்மேத் --- இவருக்கு எதற்குக் கம்பளி?   இவர் வெள்ளை மட்டுமே உடுத்துவார்.

வியாபாரி -- நான் அவரிடம் பேச வேண்டும்.

பாத்லேன் -- கீய்மேத், கொஞ்சம் வொய்ன் கொடு, என்னைத் தூக்கி விடு.

வியாபாரி -- அவர் குரல் கேட்கிறது.

கீய்மேத் -- ஆமாம்.

பாத்லேன் -- இங்கே வாஎதற்காக சன்னல்களைத் திறந்தாய்? போர்த்துவிடு.  இந்தக் கருப்பு மனிதர்களைப் போகச் சொல். தடதடாமொற மொற.   அவர்களை என்னிடம் அழைத்து வாஅழைத்து வா.

கீய்மேத் -- என்ன இதுஏன் இப்படி அசைகிறீர்கள்?

பாத்லேன் -- உனக்குப்  புரியாதுஅதோ ஓரு கருப்புப் பாதிரியார் பறக்கிறார். அவருக்கு ஒரு அங்கி கொடு. பூனை, பூனை! எவ்வளவு வேகமாக ஏறுகிறது!

கீய்மேத் --- என்னென்னவோ உளறுகிறீர்கள்.

பாத்லேன் -- இந்த மருத்துவர் என்னைக் கொல்லுகிறார்கஷாயத்தைக் குடிக்கச் செய்து.

கீய்மேத்  - ஐயா,   வந்து பாருங்கள்எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று.

வியாபாரி - உண்மையாகவே நோயாளியா? இப்போதுதானே 
கடைத்தெருவிலிருந்து வந்தார்!

கீய்மேத் --- கடைத்தெருவிலிருந்தா?

வியாபாரி -- பின்னேஐயா, பிஏர்,   என் துணிக்குப் பணங் கொடுங்கள்.

பாத்லேன் -- வாருங்கள். இரண்டு மாத்திரைகல்லைவிடக் கெட்டி. தின்றேன்மீண்டும் எனீமா எடுக்க வேண்டுமா?

வியாபாரி --- எனக்கென்ன தெரியும்? என் பிரச்சினையா அது? எனக்கு வேண்டியது ஒன்பது பிரான் அல்லது மூன்று வெள்ளி.

பாத்லேன் -- மூன்று கருப்பு உருண்டைகளையும் மாத்திரை என்றா சொல்கிறீர்கள்? பல்லையே ஆட்டங்காணச் செய்துவிட்டன. கர்த்தரே! இனிமேல் அதைத் தராதீர்கள். என்ன குமட்டல்! அதைவிடக் கசப்பு வேறில்லை.

வியாபாரி -- என்னுடைய ஒன்பது பிரான் கொடுக்கவில்லை.

பாத்லேன் --- எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார்! தூக்கில் போட வேண்டும்!

வியாபாரி --- பணம் அல்லது துணி.

பாத்லேன் --- சிறுநீரைப் பாருங்கள்அது சொல்லவில்லையாநான் செத்துக்கொண்டு இருக்கிறேன் என்று?

கீய்மேத் --- போங்கள் ஐயா! அவரைச் சங்கடப்படுத்தாதீர்கள்.

வியாபாரி --- ஆறு ஓன்! அதை நான் இழப்பதாசொல்லுங்கள்,   மனசாட்சிப்படி.

கீய்மேத் --- ஐயோ! இவ்வளவு தொல்லைப்படுத்துவதாஇந்த அளவு கல்மனமா? நீங்கள் டாக்டர் என்று அவர் நினைத்துக்கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பதினொரு வாரம்தொடர்ச்சியாய், படுக்கையில்!

வியாபாரி -- தெய்வமே! எப்படி இந்த நோய் வந்தது என்பது புரியவில்லை. இன்றைக்கு வந்து துணி வாங்கினாரே!

கீய்மேத் --- ஐயோமாதாவேஉங்களுக்கு ஞாபகம் சரியில்லை. என்னைக்  கேட்டால் நீங்கள் போய் ஓய்வெடுங்கள் என்பேன். உங்களை இங்கே பார்த்து நிறைய பேர் வதந்தி பரப்பக்கூடும். தயவு செய்து வெளியே போங்கள். மருத்துவர் வருகிற நேரம்.

வியாபாரி --- யார் எதைப் பரப்பினாலும் எனக்குக் கவலையில்லை
ஏனென்றால் என் மனம் தூய்மையானது. சரி, வாத்துக்கறி அடுப்பில் இருக்கிறதா?

கீய்மேத் -- ஆகா! என்ன அருமையான கேள்வி! நோயாளி உணவா அதுவீட்டுக்குப் போய்த் தின்னுங்கள்வாத்து!

(கடைக்காரர் போகிறார். அவருக்கு ஒரே குழப்பம்: துணி வாங்கியவர் இவர்தானா அல்லது வேறு ஆளா?)

                                      \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(படம் உதவி - இணையம்)