Sunday, 13 October 2019

வானாய்வு





  ஈராக், பாபிலோனியா, கிரேக்கம் முதலிய சில நாடுகளில் பழங்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இரவு நேர வானக் காட்சியைக் கவனித்துப் பார்த்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.
    
  வானாய்வுக் கண்டுபிடிப்புகள் 3000 ஆண்டு பழைமை வாய்ந்தவை. கோள்களின் சலனங்கள் உலகத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கின்றன எனவும் விண்மீன்களும் கோள்களும் மானிட வாழ்க்கையை நன்மையாகவோ தீமையாகவோ நிர்ணயிக்கும் எனவும் பாபிலோனியர் (பண்டைய ஈராக்கியர்) நம்பியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கண்டுபிடிப்புகளை அவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றைச் சுட்டு (செங்கல் போல) பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்.

  சந்திர சூரிய கிரகணங்கள் நிகழப் போகும் நாளையும் நேரத்தையும் அவர்கள் சரியாய்க் கணித்திருக்கிறார்கள். அவர்களின் முடிவுகளுள் சில தவறானவை எனினும் அந்த ஆய்வுகள் வானநூல் (astronomy) என்னும் அறிவியலுக்கு அடிப்படையாய் அமைந்தன.

  கிரேக்கர்களின் ஆராய்ச்சிகள் எழுத்திற் பதிவாகி ஆவணங்களாகியுள்ளன. ஆகையால் அவை பற்றி நிறையத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  தொடக்கத்தில் கிரேக்கர் எல்லா நாட்டு மக்களையும் போல பூமி தட்டையானது என்றே நம்பினார்கள். பொ.யு.மு.500 ஆம் ஆண்டளவில், கிரேக்கக் கணித வல்லுநர் பித்தகோரஸ் பூமி உருண்டையாக இருக்கிறது என்று கருத்தறிவித்தார். பூமியும் சூரியன் சந்திரன் கோள்கள் ஆகியவையும் நடுவிலுள்ள ஒரு தீயைச் சுற்றி வருகின்றன என்பதும் அவரது கண்டுபிடிப்பு. வெற்றுக் கண்களால் கண்டவற்றை வைத்துச் சிந்தித்து அந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எவ்வளவு அபாரமான மூளை!

  அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் பூமி உருண்டையாய்த் தான் இருக்கிறது என்பதை ஏற்றார். ஆனால் அது நிலையாக நிலைத்து நிற்கிறது மற்றவை அதைச் சுற்றி வருகின்றன என்று கருதினார். டாலமி என்னும் அறிஞரும் அரிஸ்டாட்டிலின் கருத்தே சரியானது என்று முடிவு கட்டினார்.

  இந்த இருவரின் முடிவு சில ஐயங்களை எழுப்பிற்று.

ஓர் எடுத்துக்காட்டு:

  சில சமயங்களில் செவ்வாய் பின்னோக்கி நகர்வதாய்த் தோன்றுகிறது (வக்ரம் என்று வடமொழியில் சொல்வார்கள்) அது ஏன் என்பது இன்று நமக்குத் தெரியும். பூமியும் செவ்வாயும் சூரியனைச் சுற்றி வருகையில் செவ்வாயைத் தாண்டி பூமி முன்னே செல்லும்போது செவ்வாய் பின்னால் நகவர்வதாகத் தோன்றுகிறது.

  பூமி அசையாமல் நிற்கிறது என்ற கொள்கையை ஏற்றால் இந்த வக்ரத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாது.

  1500 ஆம் ஆண்டளவில் போலந்து அறிஞர் Nicolaus Copernicus (1473 – 1543) முப்பது ஆண்டுக்காலம் தளர்வின்றி விடாமுயற்சியுடன் ஆய்வுகள் நடத்தி On the Revolution of the Heavenly Bodies என்ற நூலை வெளியிட்டார்.

  1. பூமியும் கோள்களும் சூரியனைச் சுற்றி வட்டப் பாதையில் பயணிக்கின்றன.

  2. சிறு வட்டத்தில் சுற்றுகிற ஒரு கோளின் வேகம் சூரியனை நெருங்கும்போது அதிகரிக்கும்.

  3. பூமி தன் அச்சில் 24 மணி நேரத்தில் ஒரு முறை முழுதாகச் சுழல்கிறது.

  மேற்கண்ட அவரது ஆய்வு முடிவுகள் மூன்றும் சரியானவை, பாதைகள் வட்டம் என்பதைத் தவிர.

  கோப்பர்நிக்கசின் கருத்துகளை மேம்படுத்தினவர் Johannes Kepler (1571 – 1630) என்ற ஜெர்மானிய வானறிஞர்.  

இவர் தெரிவித்த 3 விதிகள்:

  1. கோள்களின் பாதை நீள்வட்டம்.

  2. ஒரு கோளின் பாதை நீளமாய் இருந்தால் அது சூரியனை ஒரு சுற்ற ஆகும் நேரம் அதிகமாகும்.

  3. எந்தக் கோளும் சூரியனை நெருங்கும்போது விரைவாகச் சுற்றும்.

  நவீன வானறிவியல் எக்கச்சக்கமாக முன்னேறி மகத்தான, அற்புதமான, நுட்பமான கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது. இதற்கு அடிப்படை அமைத்துப் பெரும் பங்காற்றியவர் Galileo Galilei (1564 -1642) என்ற இத்தாலியர். ஹாலந்தில் தொலைநோக்காடி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து அவர் சொந்தமாய் ஒன்றை உருவாக்கி அதன் வழி நோக்கி சந்திரனின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், ஜூப்பிடரின் நான்கு துணைக் கோள்கள், சனியின் வளையங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். சந்திரனைப் போன்றே வெள்ளிக்கும் தேய்பிறை வளர்பிறை உண்டென்றார். சூரியனில் கரும்புள்ளிகள் காணப்படுவதையும் அவை நகர்கின்றன என்பதைக் கவனித்து சூரியனும் தன் அச்சில் சுழல்கிறது என்னும் உண்மையையும் அறிவித்தார்.

  இங்கிலாந்தின் Isaac Newton (1642 – 1727) கூறிய 3 விதிகள் பிரசித்தம். அவரால் புவியீர்ப்பு விசை குறித்து அனைவரும் அறிந்து கொண்டனர்.

  தொல்கால வானறிஞர்கள் சனிதான் அதிக தொலைவிலுள்ள கோள் என்று கணக்கிட்டிருந்தனர். 1781 வரை அந்தக் கணிப்பு நீடித்தது. அந்த ஆண்டில் William Herschel (1738 – 1822) என்கிற இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானிய ஆய்வர் சனிக்கப்பாலுள்ள யுரேனசைக் கண்டுபிடித்தார்.

  இன்னொரு கோளான நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டமை ஆய்வால் அல்ல, கணிதத்தால் என்பது வியப்புக்குரிய செய்தி. யுரேனசின் சஞ்சாரத்தை ஆய்வு செய்தவர்கள் அது சில சமயம் மிக விரைவாயும் வேறு சமயங்களில் மெல்லவும் நகர்வதைக் கவனித்தார்கள். இதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? வேறொரு கோளின் ஈர்ப்பு விசையாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தார்கள்.
 
  அது எங்கே உள்ளது? இங்கிலாந்தின் John C. Adams, பிரான்சின் Le Verrier என்ற இரு ஆய்வர்கள் தனித்தனியே கணக்குப் போட்டு ஒரே சமயத்தில் கோளின் இருப்பிடத்தைத் துல்லியமாய்க் கணித்தனர். 1846 இல் Johann Galle என்னும் ஜெர்மானியர் அவர்கள் இருவரும் சுட்டிய இடத்தில் ஒரு கோள் இருப்பதைக் கண்டு கூறினார். நெப்டியூன் என்று பெயர் சூட்டப்பட்டது.

  புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் Clyde Tombaugh என்னும் அமெரிக்கர். அது 1930 இல்: அதை dwarf கோள் என்கிறார்கள். ஆற்றல் குறைந்த கிரகம்.

  செவ்வாய்க்கும் ஜூப்பிடர்க்கும் இடையில் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று 18 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் கணக்கிட்டார்கள்; ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். 1801 இல் இத்தாலியர் Giuseppe Piazzi ஒரு சிறு கோளைக் கண்டு Ceres என்று பெயர் சூட்டினார். மேன்மேலும் நடந்த ஆய்வுகளில் ஏகப்பட்ட, அதாவது லட்சக் கணக்கில், சிறு சிறு கோள்கள் அங்கு இருப்பது தெரிய வந்தது. அவற்றை asteroids என்கின்றனர். சிதைந்துபோன ஒரு கோளின் சிதறல்கள் எனக் கூறுகின்றனர்.

  ஆரியர்களும் மிகப் பழைய காலத்திலேயே வானத்தை ஆராய்ந்து பல உண்மைகளை அறிந்தார்கள். சந்திரன் இரவுதோறும் வெவ்வேறு விண்மீனுக்கருகில் நகர்வதைக் கவனித்து அந்த விண்மீன்கள் மொத்தம் 27 எனக் கணக்கிட்டு அஸ்வினி, பரணி முதலிய பெயர்களை வைத்தனர்; கோள்கள் 12 விண்மீன் கூட்டங்களின் வழியே பயணிப்பதறிந்து அவற்றை ராசிகள் என விளித்து மேஷம், ரிஷபம் எனத் தனித்தனிப் பெயருமிட்டனர். திரிசங்கு மண்டலம், சப்தரிஷி மண்டலம், அருந்ததி, துருவன் முதலான பெயர்களையும் விண்மீன்களுக்கும் கூட்டங்களுக்கும் சூட்டினர். உத்தராயணம், தட்சிணாயணம், கிரகண காலங்கள் முதலானவற்றைக் கணக்கிட்டுப் பஞ்சாங்கம் தயாரித்தனர். கோள்கள் ராசி விட்டு ராசி மாறுவதைத் துல்லியமாய்க் கணக்கிட்டு குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்றெல்லாம் பெயர் வைத்தார்கள்.

  ஆண்டின் பெரும்பாலான இரவுகளில் தெளிவான விண்ணைக் காணக்கூடிய வாய்ப்புப் பெற்றிருந்தும் தமிழர்கள் ஆராய்ச்சிக்கான விருப்பார்வமோ (curiosity) முனைப்போ இல்லாமல் காலந்தள்ளி ஆரியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர்களுடைய ஆண்டுகள் (பிரபவ) முதலியவை, நட்சத்திரப் பெயர்கள் முதலானவற்றைப் பின்பற்றி வந்துள்ளனர். அவர்களின் சோதிட நூலை நம்பி நல்ல நாள், நல்ல நேரம், ஜாதகம் பார்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

  சோதிடத்துக்கும் வான நூலுக்கும் பெருத்த வேறுபாடுண்டு.



வானநூல்படி

சோதிடப்படி

1.
சூரியன்

விண்மீன்
கோள்
2.
சந்திரன்

துணைக்கோள்
கோள்
3.
செவ்வாய் à சனி

கோள்கள்
கோள்கள்
4.
பூமி

கோள்
X
5.
யுரேனஸ்

கோள்
X
6.
நெப்ட்யூன்

கோள்
X
7.
ப்ளூட்டோ

ஒரு வகைக் கோள்
X
8.
ராகு

X
கோள்
9.
கேது

X
கோள்

  நம் சந்திரனைப் போல் பற்பல சந்திரன்கள் உள்ளன. இவை பற்றிச் சோதிடம் எதுவும் அறியாது.

  அறிவியலையும் ஆராய்வையும் அடிப்படையாய்க் கொண்ட வானநூல் மேன்மேலும் முன்னேறிப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது. பழைய கருத்துகள் தவறெனத் தெரிந்தால் திருத்திக் கொள்கிறது. வான் ஆராய்ச்சிக்கு எல்லையில்லை.

&&&&&&
(படம் உதவி இணையம்)

Wednesday, 2 October 2019

பெருஞ்சோறு



  சங்க கால வேந்தர்களுள் ஒருவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். புலவர் முரஞ்சியூர் முடி நாகனார் அவனைத் தம் பாடலுள் (புறம் 2 : அடி 13 – 16)

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என்று புகழ்ந்திருக்கிறார்.

  பொருள்: அசைந்த தலையாட்டம் உள்ள குதிரைகளை யுடைய பாண்டவர் ஐவரோடும் பகைத்து, அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொண்ட, தும்பைப்பூச் சூடிய நூறு பேரும் போரிட்டுக் களத்தில் இறந்து போகப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை அளவு இல்லாமல் கொடுத்தவனே!

  இதற்கு உரையாசிரியர் ஔவை சு. துரைசாமி பிள்ளை தந்துள்ள விளக்கம்:

  பாரதப் போரில் இரு படைகளும் போர் செய்து மடியும் வரை அவர்களுக்கு இந்தச் சேர மன்னன் வேண்டிய அளவு உணவு வழங்கினான்.

  என்ன வேடிக்கை! 2000 கி.மீ.க்கு அப்பாலுள்ள போர்க்களத்துக்கு இங்கிருந்து எப்படி உணவு அனுப்பியிருக்க முடியும்? வழியிலேயே கெட்டுப் போய்விடாதா? அஸ்தினாபுரத்திலேயே ஏற்பாடு செய்திருக்க மாட்டார்களா? இயலவில்லை யெனில் அக்கம் பக்க நாடுகளின் உதவியை அன்றோ கோரியிருப்பார்கள்?

  இது குறித்துத் தமிழறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை தம் இலக்கியச் சிந்தனைகள் என்னும் நூலில் (பக். 42) பின்வருமாறு எழுதியுள்ளார்:

  “தென்னாட்டிலிருந்த அரசனொருவன் பாரத யுத்தம் நிகழ்ந்த குருக்ஷேத்திரத்திற்கு உணவுப் பொருள்களை யெல்லாம் எடுத்துச் சென்று அங்கே பொரக் கூடியிருந்த படைகளுக்கெல்லாம் உணவளித்தான் எனல் சரித்திர முறையில் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. அன்றியும் சேரர்கள் இவ்வாறு உணவளித்தார்கள் என்ற செய்தி வியாச மகாபாரதத்தில் கூறப்படவில்லை. அங்குச் சேரர்களைக் குறித்துக் காணப்படுவதெல்லாம் கர்ணனது திக்கு விஜயத்தில் இவனால் தோல்வியுற்றுத் துரியோதனனுக்குத் திறை செலுத்தினார்கள் என்பதும் பின்பு யுதிஷ்டிரது படையோடு சேர்ந்து போருக்கு உதவினார்கள் என்பதுமேயாம்.”

&&&&&

 

Saturday, 21 September 2019

ஏதேதோ – 3



1. தொட்ட பெட்ட என்பது கர்நாடகத்திலுள்ள ஒரு மலை: பெரிய மலை என்பது பொருள்.

2. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவர் காமத்துப்பாலை விட்டுவிட்டார்; தாம் துறவி ஆதலால் அதைப் புறக்கணித்தார்.

3. பார்வையற்றவர் யானை கண்ட கதை நமக்குத் தெரியும். அதை முதன் முதலில் கவிதையாய் இயற்றியவர் ஆங்கிலக் கவிஞர் John Godfrey Saxe (19 ஆம் நூ.) தலைப்பு: The blindmen and the elephant.

4. ஆவின் பால், தயிர், நெய், சாணி, சிறுநீர் ஆகிய ஐந்தன் கலவை வட மொழியில் பஞ்ச கவ்யம் எனவும் தமிழில் ஆனஞ்சு எனவுஞ் சொல்லப்படுகின்றன. (ஆன்+அஞ்சு)

சிவன்: “ஆனஞ்சு ஆடும் மெய்யன்
(அப்பர் தேவாரம் திருமுறை 6:10)

திருமால்: “ஆனின் மேய ஐந்தும் நீ
(திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம் 94)

5. இதழகல் பா என்பது உதடுகள் அசையாமல் பாடக்கூடிய பாட்டு. வடமொழியில் நிரோட்டகம்.

திருக்குறளில் 489 மட்டுமே இதழகல் பா:
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.

வாய்விட்டு சொல்லிப் பாருங்கள். உதடுகளுக்கு வேலையே இல்லை!

6. சில ஆறுகளுக்கு ராசிகள் பொருத்தப்பட்டுள்ளன:

  கங்கைக்கு மேஷம், யமுனைக்குக் கடகம், காவேரிக்குத் துலா.

  குரு என்னுங் கோள் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்கும். அது ஒரு ராசியை விட்டு அடுத்த ராசியில் நுழையும்போது (குருபெயர்ச்சி) இந்த ராசிக்குரிய ஆற்றில் குளித்தால் புண்ணியஞ் சேரும் என்பது நம்பிக்கை. அந்தக் குளியலுக்குப் பெயர் புஷ்கரம். மயிலாடுதுறைக் காவேரியில் துலா முழுக்கு (துலாஸ்நானம்) பேர் பெற்றது.

7. முதன்முதலாக உலகப் படத்தை (world map) வரைந்தவர் Gerardus Mercator என்ற டச்சுப் புவியலறிஞர் (1569 இல்). அதை Atlas க்குக் காணிக்கை ஆக்கினார்.

  கிரேக்கத் தலைமைக் கடவுளை எதிர்த்து Titans என்னுந் தேவர்கள் போரிட்டுத் தோற்றார்கள். Atlas ஒரு Titan. வானத்தைத் தோள்களில் சுமக்கும்படி அவனுக்கு Zeus தண்டனை வழங்கினார்; இக்கதை பிற்காலத்தில் சிறிது மாறி Atlas உலகத்தைச் சுமப்பதாய்க் கூறப்பட்டது. இதை மனத்திற் கொண்டுதான் Mercator தம் படத்துக்கு அப்பெயரைச் சூட்டினார். நாளடைவில் தேசப் படங்களின் தொகுப்பு atlas என அழைக்கப்படலாயிற்று.

8. கணபதியை முழுமுதற் கடவுளாய்க் கொண்ட மதம் காணாபத்யம். அது மகாராட்டிரத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது; அங்கிருந்து 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துள் நுழைந்தது.

  மராட்டியரின் நம்பிக்கைப்படி விநாயகரின் ஊர்தி மயில்; அவர்களது மொழியில் “மோர்”; ஆகவே பிள்ளையார்க்கு மோரேயா, மோரேஸ்வர், மயூரேஸ்வர் என்ற பெயர்கள் உண்டு. புனே நகருக்கு 60 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் புகழ் வாய்ந்த மோரேஸ்வர் கோயில் உள்ளது; அதனால் அவ்வூர் மோரேகான் எனப்படுகிறது.

  பிற்காலத்தில் தம்பிக்குத் தம் ஊர்தியை அண்ணன் அன்பளித்துவிட்டார்.

  புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சுதைச் சிற்பத்தில் பிள்ளையார் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார்.

9. நாட்டை அரசன் காக்காவிடில் என்னென்ன நேரும்?

  சட்டம் ஒழுங்கு சீர்குலையும், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்றாகி ஏழை எளியவர்கள் சொல்லொணாத் துன்பங்களிற் சிக்கி ஆற்றாது அழுது புலம்புவார்கள் என்று நாம் விடையளிப்போம்; ஆனால் பழங்காலத்துச் சிந்தனை வேறு.

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.”
(குறள் 560)

  பசும்பாலின் உற்பத்தி குறையும்; பார்ப்பனர் மறையோதார். இவையே திருவள்ளுவர் காலத்துக் கவலை.

  ஆப்பால் இல்லாவிடில் எருமைப்பால் உண்டே? வேதம் ஓதாமையால் என்ன கெட்டுவிடப் போகிறது? என்றெல்லாம் நமக்குத் தோன்றும்.

  மறை யோதுவதால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று முன்காலத்தார் நம்பியுள்ளனர்; அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிற இக்காலத்திலும் யாகம் நடத்தினால் உலக அமைதி ஏற்படும் என்றெண்ணுவோர் இருக்கிறார்களே!

  வேதம் ஓதுகிறவர்களுக்குப் புனிதமான பசும்பால்தான் தேவை.

10. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

என்னும் அடிகளை மேற்கோளாகக் காட்டி “உலகின் மூத்த குடி தமிழ்க்குடி” என ஆணித்தரமாக முழங்குவோர் உண்டு.

  அவை புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வெண்பாவின் ஈற்றடிகள்.

  நூலின் ஆசிரியர் பற்பல ஆய்வுகளைச் செய்து அந்த முடிவுக்கு வந்து அதை எடுத்துரைத்திருக்கிறாரா? இல்லையில்லை. அது ஓர் எடுத்துக்காட்டுச் செய்யுள் (example):

  போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு வீரன் தன் பகைவனை நோக்கித் தன் குடும்பப் பெருமையை இவ்வாறு சொல்கிறான். “நெடுங்காலத்துக்கு முன்பே என் குடும்பம் முதன் முதலாக வாள் போரிட்டு அனுபவப்பட்டது” என்கிறான். யாரிடம்? இன்னொரு தமிழனிடம். இருவருந் தமிழ்க் குடியே. செய்யுளில் மூத்த குடி என்பது ஒரு மறவனின் சொந்தக் குடியைக் குறிக்கிறது.

  இக்காலத்திலும் தகராறு செய்கிற இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து “என்னை யார்னு நெனச்சே? என் தாத்தா தாசில்தார்; அப்பா காவல் ஆய்வாளர்; என் கிட்டே மோதினா அதோகதி ஆய்டுவே!” என்று எச்சரிக்கக் கேட்கிறோம் அல்லவா?

இதைக் "குடிநிலையுரைத்தல்” என்று இலக்கணங் கூறுகிறது.

இலக்கண விதி:
மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறரறியும் குடியுரைத்தன்று.

பொருள்: ஞாலத்து – உலகில், தொன்மை – பழைமை, மறன் – வீரம், பிறரறியும் குடியுரைத்தன்று – பிறர்க்குத் தெரியும்படி எடுத்துக் கூறல்.

  இதற்கு எடுத்துக்காட்டாக அந்த அடிகள் வந்தன.

  இது போல எத்தனையோ விதமாகக் குடிப்பெருமை கூறலாம்.

&&&&&&&&&&


Wednesday, 11 September 2019

குற்றப் பரம்பரைச் சட்டம்


நூல்களிலிருந்து – 24




(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவராகிய தா.பாண்டியன் “ஜீவாவும் நானும்” என்னுந் தலைப்பில் இயற்றிய நூல் 2015 இல் வெளிவந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி இது.)

குற்றப் பரம்பரைச் சட்டம்

  இந்தச் சட்டம் ஆங்கிலத்தில் சுருக்கமாக C.T.Act எனவும் Criminal Tribes Act விரிவாக எனவும் அழைக்கப்பட்டது. Criminal Tribes என்றால் குற்றம் புரிவதையே இயல்பாகக் கொண்ட பரம்பரையினர் என்று அர்த்தம். குற்றம் இழைப்பது அவர்களது குலக் குணம் என்று பட்டஞ் சூட்டினான் வெள்ளையன். செக்காணுராணி முதல் கூடலூர் வரையுள்ள பிரமலைக் கள்ளர்களுக்கு மட்டுந்தான் இந்தச் சட்டம் இடியாக விழுந்தது. சாதியின் பெயரே கள்ளர் என அமைந்துவிட்டதே! விடுவானா வெள்ளையன்? இவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டத்தைப் போட்டுவிட்டான்.

  மதுரை மாவட்டத்தில் பிறந்த பிரமலைக் கள்ளர் யாராக இருந்தாலும் 16 வயது முடிந்தவுடன் காவல் நிலையத்தில் கைவிரல்கள் அனைத்தின் ரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். பெயரும் ரேகையும் ஒரு பெரிய ரிஜிஸ்தரில் வைத்திருப்பார்கள்.

  மாலை 6 மணிக்கு மேல் எந்த நேரத்திலும், நள்ளிரவோ அதிகாலையோ, ஒரு அரிக்கேன் விளக்கோடு ஒரு ஏட்டும் ஒரு போலீசும் துப்பாக்கியுடன் வந்து விசிலடிப்பார்கள். ஆண்கள் பூராவும் திரண்டு வரிசையாகக் காலை மடக்கி உட்காரவேண்டும்.

  ரேகை பதித்த ரிஜிஸ்தர்படி பெயர்களைக் கூப்பிடுகையில், “ஆஜர் ஏட்டையா” எனச் சொல்லவேண்டும்.

  வெளியூர்க்குப் போவதானால் கிராம அதிகாரியிடம் அனுமதிச் சீட்டு எழுதி வாங்கிச் செல்லவேண்டும்; இது ராதாரிச் சீட்டு எனப்பட்டது; அனுமதிச் சீட்டுப் பெற்றுத்தான் திரும்பவேண்டும். இரண்டு அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டியிருந்தது. லஞ்ச ரேட் அரைக்கால் ரூபாய், அதாவது இப்போதைய 12 காசு. இந்தப் பணத்துக்கும் கோழியை விற்றுத்தான் சமாளிக்கவேண்டும்.

  ராதாரிச் சீட்டு இல்லாமல் எங்காவது காணப்பட்டால் சந்தேகக் கேஸ் போட்டு ஆறு மாதத் தண்டனை தருவார்கள்.

  பல தீய விளைவுகள் ஏற்பட்டன. போலீசின் வேட்டையால் விவசாய வேலை கெட்டு வறுமை வளர்ந்த்து. பொய் வழக்குகளால் கோர்ட்டுக்கு அலைந்து இருந்த சொற்ப நிலங்களையும் பலர் இழந்தனர். கிராம அதிகாரிகளாகப் பெரும்பாலும் வேறு சாதிக்காரர்கள்தான் இருந்தனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதும் தங்களது நிலத்தில் காசு தராமல் வேலை வாங்கியதும் பகைமையை வளர்த்துவிட்டது. இது பிரமலைக் கள்ளர்கள் பிற சாதியினர்மீது வெறுப்புக் கொள்ளக் காரணமாயிற்று.

  இன்னொரு தவற்றையும் வேண்டுமென்றே போலீஸ் செய்தது. சிலரைத் தண்டிப்பதற்காக ஊரில் உள்ள முக்கியமான ஓரிருவர் முதுகில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சுமக்க வைப்பார்கள். ஏற மறுப்பவர்களை அடிப்பார்கள்; ஏறினால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. கள்ளர்கள் மகா ரோசக்காரர்கள். இவற்றை எதிர்த்துப் போராடிப் போலீசை வெட்டி வீழ்த்தியதும் உண்டு. ஊரையே வளைத்துப் போலீஸ் சுட்டபோது பெருங்காமநல்லூரில் 12 பேர் இறந்தனர்; கல் எறிந்தே பெரும் போலீஸ் படையைத் துரத்தியடித்தனர்.

  இந்த நிகழ்ச்சிகள் மாறாத பெரும் வடுவைப் பதித்துவிட்டன. தாழ்த்தப்பட்டோர் இயற்கையில் எதிரிகள் அல்லர்; சேர்ந்து வாழ வேண்டியவர்கள்; ஆனால் வெள்ளையர்க்கு ஏவல் புரிந்த காவல்துறை இந்தச் சட்ட அமலின்போது பகைமையை விதைத்துவிட்டது. அதன் விளைவுதான் தேவர் – தாழ்த்தப்பட்டோர் பகைமையாக இன்றும் நீடிப்பது.

  இந்தச் சட்டத்தை எதிர்த்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி முதலியோர் இயக்கம் நடத்தினர். மக்களிடம் பரப்புரை செய்ய சாலையே இல்லாத வயல்களிலும் வரப்புகளிலும் நடந்து சென்று கூட்டம் போட்டுப் பேசினார்கள்.

  கொடுமையான இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று 1937 தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. வென்று ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைந்தது. பல மாதங்களாகியும் சட்டம் ரத்து ஆகாமையால் தேவர் போராட்டம் தொடங்கிக் கைதானார்; காங்கிரஸ் ஆட்சியில் கைதான முதல் காங்கிரஸ் தலைவர் தேவர்தான்; அவரது விடுதலைக்காக ராமமூர்த்தியும் ஜீவாவும் தொடர்ந்து போராடினார்கள்.

  நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த பின்பு சட்டம் காலாவதி ஆனது.

**************************
(படம் உதவி இணையம்)