Sunday, 26 January 2020

அளவைகள் (measures)




  அளவைகள் பலவகை. மனிதர் முதன்முதலில் தம் உடலுறுப்புகளைத் தான் எண்ணவும் அளக்கவும் பயன்படுத்தினர்; இது இயல்பு.

  எண்ணுவதற்குக் கைவிரல்கள் வசதியாய் இருந்தன: பத்து விரல் இருப்பதால் முதல் பத்தெண்களுக்கு ஒன்று இரண்டு எனப் பெயர் இட்டனர்; அதற்கு மேல் புதுப் பேர்கள் படைக்கவில்லை; பத்தை அடிப்படையாய்க் கொண்டே பதினொன்று (பத்து + ஒன்று), பதினாறு (10+6), பத்தொன்பது (10+9) எனவும் இருபது (இரு பத்து), முப்பது (மூன்று பத்து) எனவும் சொற்களை உருவாக்கினர்.

  வடமொழியிலும் தசம் = பத்து. ஏகாதசம் = 11. (ஏகம் + தசம்); துவாதசம் = 12 (துவா, 2; தசம், 10) எனப் போகிறது. ஆங்கிலத்தில், பிரஞ்சில், லத்தீனில் அப்படித்தான்.

  இவை எண்ணலளவை; இனி நீட்டலளவை:

  ஒரு விரற்கிடை (விரல்க்கு இடை) என்பது ஓர் அளவை; ஒரு விரலின் தடிமன், ஒரு விரற்கிடை. நான்கு விரல்களைச் சேர்த்து நீட்டினால் சுட்டுவிரலுக்கு இப்புறமிருந்து சுண்டுவிரலுக்கு அப்புறம் வரை உள்ள தொலைவு, நான்கு விரற்கிடை.

  ஐந்து விரல்களையும் அகல விரிப்போம்: கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் ஓர் ட்டை. கட்டை விரல் முனைக்கும் சுண்டுவிரல் முனைக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு சாண். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித வுடலின் அளவு எட்டு சாண், அவரவர் கையால். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்என்பது பழமொழி; “எறும்புந் தன் கையால் எண் சாண்என்றார் ஒரு புலவர்.

  முழம்: யாவரும் அறிவர்; இரு கைகளையும் விரித்தால், அதாவது முடிந்தவரை அகற்றினால், இடக்கையின் நடுவிரல் நுனியிலிருந்து வலக்கை நடுவிரலின் முனைவரை உள்ள தூரம், ஒரு பாகம். காலைத் தரையில் ஊன்றினால் விரல்களுக்கும் குதிகாலுக்கும் இடையில் இருக்கிற தொலைவு ஓர் அடி. ஆங்கிலத்திலும் foot ஒரு நீட்டலளவை.

  கையும் அளவையே. நாட்டு மருத்துவர்கள் தங்கள் செந்தூரம் முதலான தூள் மருந்துகளை ஒரு சிட்டிகை, அல்லது இரு சிட்டிகை (நோய்க்குத் தக்கவாறு) எடுத்துத் தேனில் குழைத்து நக்கச் சொல்வார்கள்; கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை மருந்து. நெல் முதலியவற்றைக் கையால் அள்ளினால் வருவது ஒரு கைப்பிடி; இதைத் திருக்குறள், ‘பிடித்துஎன்கிறது.

பிடித் தெருவும்” (1037)
பிடித்து + எருவும்: ஒரு பிடியில் அடங்கிய உரமும்.
கற்றது கைம்மண் அளவு” – நாலடியார்

  உடலில் பாதி பாகம் இடுப்பு: ஆதலால் அதற்கு அரை என்ற பெயர் கிடைத்தது. அரைஞாண்: இடுப்பில் ஆண்கள் கட்டிக் கொள்கிற கயிறு; பேச்சு வழக்கில் அரணா (அரணாக் கொடி); இடுப்பிலிருந்து முழங்கால் வரை உடலில் கால் பாகம், எனவே கால் என்பது உறுப்பின் பெயராயிற்று.

  இவ்வாறு பல அளவைகளாய் உடல் பயன்பட்டுள்ளது; இனித் தமிழரின் வேறு வகை அளவைகளைக் காண்போம்;

  தொலைவை அளக்கும் அளவையின் அலகு, காதம். அது சுமார் 10 மைல். “நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடையூருக்கும் காதம், கடையூருக்கும் காழிக்குங் காதம்என்று தஞ்சாவூர் மாவட்டத்தார் சொல்வது வழக்கம். (நாகைநாகப்பட்டினம், காரைகாரைக்கால், கடையூர்திருக்கடையூர், காழிசீர்காழி)

  விகடராமன் குதிரை மாதம் போம் காத வழிஎன்று கிண்டலடித்துள்ளார் காளமேகப் புலவர்.

  அறிவு முதிர்ந்த பின்பு ஒன்றுக்குக் கீழும் எண்ணினர் (பின்னம்). அதற்குக் கீழ்வாய் இலக்கம் என்று பெயர். தொல்காப்பியருக்கு முந்தியே தமிழர்களுக்கு பின்னங்கள் தெரியும்.

  சில பின்னங்களுக்குப் பெயர் சூட்டிய பெருமை நம் முன்னோர்க்குண்டு:

 1/80 = காணி
 1/16 = வீசம் அல்லது மாகாணி
 1/8 = அரைக்கால் (காலில் பாதி)
 3/8 = காலே அரைக்கால் (காலும் அரைக்காலும்)
 3/16 = மூன்று வீசம்
 5/8 = அரையே அரைக்கால்
 3/4 = முக்கால்

இவை சில எடுத்துக்காட்டு.

  என் சிறு வயதில் திண்ணைப் பள்ளிக்கூடம் பார்த்திருக்கிறேன். அங்கு மனக்கணக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டது. பின்ன வாய்பாடு புத்தகங்கள் இருந்தன; அந்த வாய்பாடுகளை மனனம் செய்தல் வேண்டும்.

  ஒரு மாகாணி மாகாணி
  பத்து மாகாணி அரையே அரைக்கால்
  நூற்று மாகாணி ஆறே கால்
  இரு மாகாணி அரைக்கால்
  - - - - - -
என்று வாய்விட்டுச் சொல்லிக் கற்க வேண்டும்.
வகுத்தலையும் பெருக்கல் வாய்பாடு கொண்டே செய்தனர்.

  காட்டு: “139 ரூபாயை 3 பேருக்குக் கொடுஎன்பது கணக்கு.
(3 ஆல் வகு என்று சொல்தில்லை, வகுத்தல் என்பதே தெரியாது.)
3 பேருக்கு 139 ரூபாயை எப்படிப் பங்கிடுவது? ஆளுக்கு எவ்வளவு?

  முந்நான்கு பன்னண்டு
  மூணு நாப்பது நூத்திருபது
  மூவாறு (மூன்று ஆறு) பதினெட்டு
ரூபாயில் மூன்றிலொரு பங்கு 33 காசு

எனவே விடை: 46 ரூ. 33 காசு

  இந்த விதமாகக் கணக்குப் போட்டுப் போட்டுப் பயிற்சி பெறுவதால் மாணவர்கள் எந்தக் கணக்கின் விடையையும் நொடிகளில் சொல்லிவிடுவார்கள்.

  ஆங்கிலேயர் காலத்திய நாணயங்கள் ரூபாய், அணா, காசு.

1 ரூபாய்க்கு 16 அணா;
1 அணாவுக்கு 12 காசு.

அடிக்கடி ரூபாய் அணா காசு கணக்குப் போட வேண்டிய தேவை ஏற்பட்டது; ஆகவே எல்லா வகைப் பள்ளிகளிலும் பெருக்கல் வாய்பாடுகளை 16 வரை கற்க வேண்டியிருந்தது.

  13 ரூபாய்க்கு எத்தனை அணா? 13 x 16 = 208 அணா;
  9 அணாவுக்கு எத்தனை காசு? 9 x 12 = 108 காசு;
  ரூபாய்க்கு காசு எத்தனை? 16 x 12 = 192

300 ரூபாய்க்கு மேல் கணக்கிட வேண்டிய அவசியம் நேராது. 100 ரூபாய் என்பதே பெருந்தொகை. அந்த நோட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை; அது பச்சை நிறத்தில் இருந்தது போலும். ஏதாவது பெருஞ் செலவு பற்றிய பேச்செழுந்தால், “அதுக்கெல்லாம் ஒரு பச்சை நோட்டு வேணும்என்று சொல்வார்கள்.

1936 ஆம் ஆண்டளவில் விலைவாசி:

2 போண்டா அரையணா (இப்போதைய 3 பைசா)
அஞ்சலட்டை முக்காலணா (5 பைசா)
கவர் (envelope) ஒன்றே காலணா (8 பைசா)
சினிமா தரை டிக்கட் 2 அணா (12 பைசா)
ஒரு பெரிய பாட்டில் மண்ணெண்ணெய் 2 ½ அணா (15 பைசா)
நல்ல குடை 12 அணா (75 பைசா)
ஒரு பவுன் – 22 ரூபாய்

1942 இல் புதுச்சேரி அம்மணி வாசம் என்ற விடுதியில் ஒரு நாள் தங்க அறை வாடகை 75 காசு.

  பெரும்பாலும் காசும் அணாவுமே புழக்கத்தில் இருந்தன. காசு என்பது சில பகுதிகளில் தம்பிடி என்றும் துட்டு என்றும் சல்லி என்றும் அழைக்கப்பட்டது. “கையில் சல்லிக்காசு இல்லைஎன்ற சொற்றொடர் அடிக்கடி காதில் விழுந்தது. (சல்லி ஆகிய காசு) முக்கால் துட்டு என்றொரு நாணயம் இருந்ததாக முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதியுள்ளார்.

  வாடி என் கப்பக்கிழங்கே
  என் அக்கா பெத்த முக்காத் துட்டே
  பாடாதே வாயத் தொறந்தே
என்ற பாடலடிகள் நினைவுக்கு வருகின்றனவா?
(தொடரும்)
(படம் உதவி இணையம்)

Thursday, 16 January 2020

தீ





  இன்றியமையாத் தேவையாகிய தீயை வேண்டியபோது உண்டாக்குவதற்குப் பழங்காலத்தில் சக்கிமுக்கி என்ற கற்களை ஒன்றோடொன்று பலமாய்த் தட்டி அப்போது பறக்கிற பொறிகளைப் பஞ்சு, துணி முதலான பொருள்களிற் பிடித்து அவற்றை ஊதி ஊதிப் பெரிதாக்கினர் எனப் படித்திருக்கிறோம். மரத்துடன் மரம் உராய்ந்து காடுகளில் நெருப்புப் பிடிக்கிறது அல்லவா? அதைப் பார்த்து அது குறித்து சிந்தித்து அம்முறையைக் கடைப்பிடித்ததும் உண்டு.

  2002 இல் நான் ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறை போயிருந்தபோது அங்கத்திய பூர்வ குடிகள் மத்து போன்ற ஒரு மரக்கட்டையால் மரத்தட்டு ஒன்றின்மீது தயிர் கடைவது போல் அழுத்தியும் மிக விரைவாகவும் கடைந்து தீயுண்டாக்கியதைப் பார்த்தேன்; ஒருவர் கடைய இன்னொருவர் தேங்காய் நார் போன்ற பொருளில் தீப்பொறிகளைப் பிடித்தார்.

  சங்க காலத் தமிழர்க்கு இந்த உத்தி தெரிந்திருந்தது என்பதை அகநானூற்றால் அறிகிறோம்:

பா 274, அடி 5:
கடைகோல் இறு தீ அடைய மாட்டி

உரை – கடையுங் கோலிலிருந்து எழுந்த சிறு தீயை அது வளர்வதற்கு விறகில் சேர்த்து.

அந்தக் கோல் “தீக்கடைக் கோல்” எனப்பட்டது.

  சிரமத்தைக் குறைக்க எண்ணிய பிற்காலத் தமிழ்ச் செல்வர் ஒரு தடவை பிறப்பித்த தீயை உமியிற் சேகரித்து நிரந்தரமாக வைத்திருந்தனர்; மேலே மேலே உமியைப் போட்டு நெருப்பு அவியாமல் பாதுகாத்தனர். இப்பழக்கம் சுமார் 200 ஆண்டுக்கு முன்பு வரை நீடித்தது. ஏழை எளியவர்கள் அவர்களை யண்டித் தீப் பெற்றுக் கொண்டார்கள். செல்வர்கள் தம் அதிருப்திக்கு ஆளாகிறவர்களுக்குத் தண்டனையாய், “யாரும் இவர்களுக்கு நெருப்புத் தரக்கூடாது” என்று ஆணையிடுவார்கள். மீறுகிறவர்களுக்கும் அது கிடைக்காமற் போய்விடுமாதலால் யாவரும் அடங்கியே வாழ்வர்.

  இந்த அடிமைத் தனத்திலிருந்து மக்கள் மீள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் தீக்குச்சியை உருவாக்கியவர்களும் அதை எல்லார்க்கும் எளிதில் கிடைக்கச் செய்தவர்களுமே.

  தீக் கடைதல் கஷ்டமாய் இருந்தபோது பிணத்தை எரியூட்டுவதற்கான நெருப்பை வீட்டிலேயே பற்றவைத்து ஒரு சட்டியில் சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு நொடியில் கொளுத்த முடிகிற இந்தக் காலத்திலும் கொள்ளிச்சட்டி கொண்டு போகிற வேலையைத் தவிர்க்கலாமே!

Saturday, 4 January 2020

யார் இவர்கள்?





 ரேஷன் கடையில், வங்கியில், வாக்குச் சாவடியில், மக்கள் வரிசையாய் நிற்குமிடத்துக்குக் கடைசியாய் வந்து பிறரை முந்துவதற்கு சகல முயற்சியும் செய்கிறார்கள்.

  கடைகளில் சிலர் பொருள் வாங்கிக் கொண்டிருக்கையில் அப்போதுதான் வந்து “எனக்கு ஒரே யொரு சாமான், கொடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிடுகிறார்கள்.

  வங்கியில் டோக்கன் பெற்ற பின்பு, இருக்கையில் அமர்ந்து “கூப்பிடட்டும்” என்றெண்ணிப் பொறுமையாகக் காத்திராமல் counter அருகில் கும்பலாய் நின்றுகொண்டு தலையை நீட்டி நீட்டி உள்ளே நோக்குகிறார்கள்; பணம் பெற வருகிறவர்களுக்கு இடந் தராமல் லேசாக உடலை நெளித்து அவர்களை சிரமப்பட வைக்கிறார்கள்.

  பள்ளி, திருமண மண்டபம், வங்கி முதலான பொதுக் கட்டடங்களின் வாயிற் படிகளில் நின்றபடி உரையாடுகிறார்கள்; பிறர் ஏறவோ இறங்கவோ சங்கடப்படுவதை சட்டை செய்வதில்லை.

  சாலை விதிகளைத் துச்சமாய் மதித்துத் தங்கள் வசதிக்கு ஏற்றபடி ஊர்தி செலுத்துகிறார்கள்.

  கைப்பேசியைக் கன்னத்தால் இடுக்கிக்கொண்டு தலையை ஒருபுறஞ் சாய்த்தவாறே இருவீலர் ஓட்டுகிறார்கள். பேச்சில் கவனம் சாலையிலுங் கவனம் என ஈரவதானஞ் செய்கிறார்கள். உயிர்க்கு ஆபத்து விளையக்கூடுமே என்பது பற்றிக் கவலையில்லை. சரி போகட்டும், அவர்களின் உயிரைப் போக்கிக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டுதான்; ஆனால் இதரரை விபத்துக்கு ஆளாக்குவது என்ன நியாயம்?

  போஸ்ட் கண்ட இடமெல்லாம் கால் தூக்கும் நாய் போலப் பூங்கா, சாலையோரம், ரயில் நிலையம் என எங்கே பெஞ்சு பார்த்தாலும் காலை நீட்டிப் படுத்துவிடுகிறார்கள். நால்வர் அமர்வதற்கு உரிய இடத்தை ஒருவரே ஆக்ரமிக்கிறோமே என்னுங் குற்றவுணர்வு சிறிதுமில்லை.

  திரைப்படக் கொட்டகையில் விசிலடித்தும் உரத்த குரலில் விமர்சித்தும் பிறர் அமைதியாய்ப் படம் பார்க்கவிடாமல் அட்டகாசம் புரிகிறார்கள்.

  இவ்வாறும் இன்னம் பல வழிகளிலும் தம்மை மாத்திரமே, தம் சௌகர்யத்தை மட்டுமே மனத்துட் கொண்டு ஒழுகும் இவர்கள்  யார்?

  வேறு யார்? பண்பாடற்ற இவர்கள் திண்ணமாகத் தமிழர்கள் தான்.

&&&&
(படம் உதவி இணையம்)