Tuesday, 20 May 2014

பிழையான தகவல்கள்




1  --  சிலர்  கூறுவர்செய்தி என்று பொருளுடைய news  என்னும் ஆங்கிலச் சொல்,  north,  east,  west,  south  ஆகியவற்றின் முதல் எழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது எனவும் நான்கு திக்குகளிலிருந்தும் செய்திகள் வருவதால் அந்தச் சொல் மிகப் பொருத்தமானது எனவும்.

    அது ஆதாரம் அற்ற கூற்று.

  புதிய என அர்த்தம் தரும் niwe  என்னும் ஆங்கிலோ சாக்சன் மொழியின் வார்த்தையிலிருந்து உருவானது new  என்று அகராதி தெரிவிக்கிறதுஇதன் இறுதியில் சேர்ந்து news   ஆனது.

  செய்தியைக் குறிக்கிற பிரஞ்சுச் சொல்,  "நுவேல்" (nouvelle);  இதற்கும் புதிய என்பதே பொருள்.



 2 --  சதுரங்க விளையாட்டைச் சுட்டும் ஆங்கிலச் சொல் chess;   இந்த வார்த்தை எப்படி உருவாக்கப்பட்டது என்று ஒரு வார இதழில் அண்மையில் படித்தேன்அதில் எழுதப்பட்டிருந்தது:

      "சதுரங்கக் காய்களின் பெயர்கள் carts,  horses, elephants, soldiers;  இவற்றின் முதலெழுத்துகளைச் சேர்த்து chess  என்கிறோம்"

    இது தவறான தகவல்.

   1  -  காய்களுள் முக்கியமானவை ராஜாவும் ராணியும்ஆங்கிலத்தில் king,  queen;  இவற்றின் முதல் எழுத்துக்களான k -ஐயும் q - ஐயும் விட்டுவிட்டுப் பெயர் வைப்பார்களா?

    2  -  carts  முதலான நான்கு சொற்களும் எந்தக் காலத்திலும் பயன்பட்டதில்லை. சரியான பெயர்கள்,  rooks,  knights,  bishops,  pawns ஆகியவைதான்இவற்றின் எதன் முதலெழுத்தும் chess- இல் இல்லை.

   3  -  அந்த விளையாட்டின் பழைய பிரஞ்சுப் பெயர் esches ;  இதிலிருந்தே chess  என்னும் சொல் தோன்றிற்று. (இப்போது பிரஞ்சில் echecs  என்கிறார்கள்).
                                         =======================                                  

Saturday, 10 May 2014

தேங்காய்




தேங்காய் - இந்தச் சொல்லின் தொடக்க வடிவம்: தெங்கங்காய். தென்னை மரத்தின் பழைய பெயர், தெங்கு. நன்றி ஒருவற்கு எனத் தொடங்கும் வாக்குண்டாம்  செய்யுளில், “தளரா வளர் தெங்கு என வருதல் காண்க.

 தெங்கு + அம் + காய் = தெங்கங்காய். அம் என்பது இரண்டு பெயர்ச் சொற்களை இணைக்கப் பயன்படுவது; சாரியை என்பார்கள்.

  வேறு காட்டுகள்:
நாற்று + அம் + கால் = நாற்றங்கால்;
ஆறு + அம் + கரை = ஆற்றங்கரை;
தென்னை + அம் + கீற்று = தென்னங்கீற்று.

  தெங்கங்காய் முற்றினால், தெங்கம்பழம். நாய் பெற்ற தெங்கம்பழம் என்னும் பழமொழியை அறிந்திருப்பீர்கள். ஒரு நாயிடம் முற்றிய தேங்காய் கிடைத்தால், அதனை அது உருட்டி விளையாடக்கூடும், பயன்படுத்தாது. தேங்காயை எவராவது எடுக்கப் போனால், குரைக்கும், கடிக்க வரும். தானும் உபயோகிக்காமல் பிறர்க்கும் ஈயாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைக் குறிப்பது அந்தப் பழமொழி.

  (“வைக்கோல் போர் நாய் என்றும் சொல்வதுண்டு: வைக்கோல் போரின் அடியில் படுத்திருக்கும் நாய் வைக்கோலைத் தின்னப்போவதில்லை; தின்ன வரும் மாட்டையும் விரட்டும்.)



 தேங்காய் என்பதற்குத் "தேங்காதே" எனவும் பொருளுண்டு. திருமணங்களில் ஏன் தேங்காய் வழங்குகிறார்கள்?  நகைச்சுவையாய் ஒரு காரணம் சொன்னார் தமிழறிஞர் அரசஞ் சண்முகனார். மணம் முடிந்துவிட்டது, போய்விடு; இங்கே தேங்காதே (தங்கிவிடாதே) என்பதை நாசுக்காய்த் தெரிவிப்பதற்குத் தேங்காய் கொடுக்கிறோம் என்றார் அவர்.

 பிஞ்சுத் தேங்காயை ளநீர்’  என்கிறோம்; இச்சொல்லை விளக்கியுள்ளார் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்: இதில் உள்ள நீர்தமிழல்ல;  இந்தியாவின் மொழிகளுள் ஒன்றான முண்டாவில், நீர் என்பது தேங்காயைக் குறிக்கும்; எனவே, இள நீர் = இளந் தேங்காய் என்பது அவரது விளக்கம்.

         (முண்டா இன மக்கள் கிழக்கிந்தியவாசிகள்)
               -------------------------------------------


Saturday, 19 April 2014

தொல்காப்பியம் - ஒரு விளக்கம்



  நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். அது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்,  பொருளதிகாரம் ஆகிய மூன்று பிரிவுகள் உடையது. எழுத்துகளின் இலக்கணம் கூறுவது முதல் பிரிவுஅடுத்தது சொற்களுக்கு இலக்கணம் இயம்புவது; ஆகவே பொருளதிகாரம், சொற்களின் பொருளுக்கு இலக்கணமாஅல்ல,  சொற்பொருள் சொல்வது அகராதி, இலக்கணமாகாது.

   வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பது பொருளதிகாரம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன்; வாழ்வுக்கு இலக்கணம் இருக்க முடியுமா என  வியப்பு மேலிட்டது. "பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை" என்னும் தலைப்பில் ஒரு தமிழறிஞர் இயற்றிய நூலை வாசித்தேன்;   நம் முன்னோரின் அக வாழ்க்கையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வாறு விவரிக்கிறது என்பதை அந்த நூல் விளக்கியிருந்தது. எனக்குப் பல ஐயங்கள் தோன்றின. அவை தீர்ந்தன, நான் பல்லாண்டுக்குப் பின்பு தொல்காப்பியம் கற்றபோது.

  பொருளதிகாரம் என்பதில் பொருள் என்னும் சொல் சப்ஜெக்ட் என்ற அர்த்தம் உடையது;  "மாந்த நேயம்" என்ற பொருள் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்ந்தது என்னும்போது அந்தச் சொல் அவ்வாறு அர்த்தம் தரக் காண்கிறோம். பழந்தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த சப்ஜெக்ட் பற்றிப் பாடுகின்றன என்பதைத் தொகுத்து,  வகைப் படுத்தி,  திணை, துறை முதலிய பெயர்களைச் சூட்டி,  விளக்குவதுதான் பொருளதிகாரம். (அது வாழ்க்கையின் இலக்கணம் அல்ல).

    அகப் பாடல்களில் இடம் பெறுகிற பாத்திரங்களுள் முக்கியமானவை: தலைவன்,  தலைவி, அவளுடைய தோழி,  செவிலித்தாய். தலைவியைப் பெற்றவள் நற்றாய் எனப்படுவாள்இவளுக்குப் பெரும் பங்கில்லைதலைவியை வளர்த்தவளுக்கே (செவிலித்தாய்) முதன்மை; இவளுக்குத் தலைவியின் வயதில் ஒரு மகள் இருப்பாள்;  இவள்தான் தோழி.

  இப்படி,  நாடகப் பாத்திரங்கள் போல் சிலரைப் படைத்து,   அவர்கள் பாடுவதாகப் புலவர்கள் கற்பனை செய்தவையே அகப் பாட்டுகள். இவை ஐந்து நூல்களில் உள்ளன: குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு, கலித்தொகை,  ஐங்குறு நூறு.

  காதலர் சந்திப்பது குறிஞ்சித் திணை;  தலைவன் பிரிவது பாலை; தலைவி பொறுமையாகக் காத்திருப்பது முல்லைத் திணை; புலம்புவது நெய்தல்; இல்லறம் நடத்துவது மருதம். இவ்வாறெல்லாம் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது.

  ( நம் காலத் தமிழ்த் திரைப்படங்களை ஆதாரமாய்க் கொண்டு,   சுமார் 500 ஆண்டுக்குப் பின்பு ஆராய்கிறார் ஒருவர் என வைத்துக்கொள்வோம்; 21-ஆம் நூற்றாண்டுத் தமிழரின் அக வாழ்வைப் புரிந்துகொள்வது அந்த ஆராய்ச்சியின் நோக்கம். அவரது முடிவு என்னவாக இருக்கும்?

   "ஐந்து நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் இளைஞர் இரு பாலாரும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; காதலிப்பதை வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டனர்; இருவர்க்கு இடையில் காதல் அரும்பியதும், அவர்கள் கடற்கரை,  பாறை உச்சி ஆகிய இடங்களில் நின்றுகொண்டும்,  பூங்காக்களில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு ஓடியும் ஆடிப் பாடி மகிழ்வது வழக்கமாய் இருந்தது"

    இது எவ்வளவு தவறான முடிவு?  கற்பனையையும் நிஜ வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொண்ட முடிவல்லவா? இது போன்றதுதான் சங்கப் பாக்களைச் சான்றாக வைத்துப் பண்டைத் தமிழரின் வாழ்வைச் சித்திரிப்பது.)

   புறம் பற்றிய பாட்டுகளின் சப்ஜெக்ட்களுக்கும் திணை, துறை முதலான இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. காட்டாக,  ஒருவரைப்  புகழ்வது பாடாண்திணை; பாடு + ஆண் + திணை.

  யாப்பு,  மரபு முதலிய இலக்கணங்களும் பொருளதிகாரத்தில் இருக்கின்றன.

                       ====================


 (படம் நன்றி: இணையம்)
 


Tuesday, 8 April 2014

நீரும் நெருப்பும்


  


நகரங்களில் குழாய் வழிக் குடிநீர் கிடைக்கிறதுசிற்றூர்களில் கிணறு, குளம், ஆறு முதலிய  நீர்நிலைகள் வழங்குகின்றன. நினைத்த நேரத்தில் ஒரு குச்சியைக் கொளுத்தி நெருப்பைப் பெறுகிறோம். இவ்வாறு நீரும் நெருப்பும் எளிய முயற்சியால் அடைய முடிகிறது.

  முன் காலத்தில், நெருப்பு தேவையானால், தீக் கடைகோலை, ஒரு மரத் தட்டில் அழுத்திப் பலமாய்த் தேய்த்து உராய்வால் தோன்றும் பொறியைத் தேங்காய் நாரில் பற்ற வைத்து ஊதியூதி அதிகமாக்கிப் பயன்படுத்தினர். விரும்பும் போதெல்லாம் அதை உடனடியாயும் எளிதாயும் பெறுவதற்குச் செல்வர்கள் தம் இல்லத்தில், உமியில், அதைச் சேமித்து வைத்து அணையாமல் பராமரித்தார்களாம்; மற்றவர்கள் அவர்களிடம் போய், தேங்காய் நார்மூலம்,  தீயைத் தம் வீடுகளுக்கு எடுத்துவந்தார்களாம்.

  நீருக்கும் பணக்காரர் கருணை தேவைப்பட்டது; அவர்கள் அனுமதித்தால், அவர்களின் தோட்டத்துக் கிணற்றில் சேந்திக்கொள்ளலாம்.

 இரு பொருள்களும் அன்றாட அத்தியாவசிய தேவை அல்லவாஆகவே, ஏழைகள் அவர்களிடம் குழைய வேண்டிய கட்டாயம் இருந்தது. யாராவது ஒருவர், பணக்காரனை எதிர்த்துப் பேசினால் அல்லது செயல்பட்டால், "அவனுக்கு யாரும் நீரும் நெருப்பும் தரக்கூடாது" என்ற கட்டளை பிறக்கும். யாவரும் அதை ஏற்றாகவேண்டும். இப்போதுகூட,  கட்டப் பஞ்சாயத்துத் தலைவர், கிராமத்தில் சிலரை ஒதுக்கி வைத்து, "அவர்களுடன் ஒருவரும் தொடர்பு கொள்ளக்கூடாது" என ஆணையிட்டு அமல்படுத்துகிறார்; நாளேடுகளில் வாசிக்கிறோம். அரசு, சட்ட திட்டங்கள், காவல் துறை, தீர்ப்பு மன்றம் ஆகியவை உள்ள இந்தக் காலத்திலேயே, இந்த நிலை எனில், இவை இல்லாத பழங் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்!

    நெருப்புக் குச்சியை உருவாக்கியவரும் பாதுகாக்கப்பட்ட நீரை வழங்கும் ஊராட்சியாரும் செல்வர்களின் பிடியிலிருந்து ஏழைகளை விடுவித்தனர் எனலாம்.

                           =========================