ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கப்பல் பயண அனுபவம் பெரும்பாலும் வாய்த்திராது. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிட்டிற்று.
பிரஞ்சுக் காலனியாய் இருந்த வியட்நாமில் ஓராண்டு வசித்தபின், பிரான்சுக்குப் போவதற்காக, சைகோன் (இப்போதைய பெயர் ஓச்சிமின் சிட்டி) துறைமுகத்தில், மரேஷால் ழோஃப்ர் ( Marechal
Joffre) என்ற பிரஞ்சுக் கப்பலில் 14 -07 -1948 இல் ஏறி 26 நாள் ( கிட்டத்தட்ட ஒரு மாதம்!)
பயணித்தேன்.
இலங்கையர் இருவரும் நானும் ஆக மூவரே தமிழர்
; 10, 15 வியட்நாமிய இளைஞர்: மேற்
கல்விக்காகவோ வேலை தேடியோ சென்றவர்கள்; மற்ற யாவரும் பிரஞ்சியர். மொத்தம் 200 பயணிகள் இருக்கலாம்.
சிங்கப்பூரில் கப்பல் நின்றுவிட்டுக் கொழும்பை
அடைந்ததும் இலங்கையர் இறங்கினர்.
முதல் நாள்
, மூன்று தளங்களுக்கும் போய்ச் சுற்றினேன்: முடி வெட்டும் கடை, சலவைக் கடை, பல்பொருள் விற்பனை
அகம், சாராயக் கடை
முதலியன கண்டேன். புதுச் சூழ்நிலை, புதிய இடம், அறிமுகமற்ற மனிதர்கள்: அனுபவம் புதுமை!
சில நாள் மகிழ்ச்சியாய்க் கடந்தன.
மேல் தளத்தில் அமர்ந்து, சுற்றுமுற்றும் பார்க்கையில்
, கப்பலானது கடல்
நீரை இரு புறமும் நுரை பொங்கக் கிழித்துக்கொண்டு
முன்னேறுவது கண்ணுக்கு விருந்தளித்தது; அவ்வப்போது
, சற்றுத் தொலைவில், சுறா மீன்கள் கடலுக்கு மேலே துள்ளி அரை வட்டமடித்துப் பாய்வதைக் கண்டு களிக்கலாம்; அரிதாக, ஒரு கப்பல் எங்களை நோக்கி வந்து
, மெது மெதுவாகத் தாண்டிச் செல்லும். மற்றபடி, எங்கெங்கும் நீர், நீர்,
நீர்! நீரன்றி வேறில்லை!
உலகின் முக்கிய செய்திகளைச் சுருக்கமாகத் தட்டச்சு செய்து காலையில் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார்கள்; (இந்திய நிகழ்வுகள் அநேகமாக இடம் பெறா). கப்பல் எந்தத் துறைமுகத்தை எப்போது அடையும், எவ்வளவு காலம் நிற்கும், இறங்கிச் சுற்றிப் பார்க்க
அனுமதி உண்டா என்னும் விவரங்களை அதில்
வாசித்தறியலாம்; ஐந்தாறு நாளுக்கு ஒருமுறை,
"இன்றிரவு கடிகாரத்தை ஒரு மணி நேரம் தாமதப்
படுத்திக்கொள்ளுங்கள்"
என்ற யோசனை இருக்கும்.
இரவில், கப்பல் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பேரெழிலுடன் திகழும். அந்த விளக்கொளியில், மேல் தளத்தில்,
பொழுது போக்குக்காக
, குத்துச் சண்டை, ஓரங்க நாடகம், ஆடல் பாடல் என சிற்சில நாள்களில் கலை
நிகழ்ச்சிகளைப் பயணிகள்
நிகழ்த்தினார்கள்.
எப்போதாவது , எங்கோ வெகு தொலைவிலிருந்து, ஒரு கலங்கரை விளக்கம் தன் புள்ளி போன்ற ஒளியைச் சுழற்றும்; அப்போதெல்லாம் என் மனத்தில் ஏக்கம் பிறக்கும்: அதோ, அங்கே
, மனிதர்கள் காலாரத் தரையில் நடக்கிறார்கள்!
கொழும்பிலிருந்து ஜிபுத்திக்கான ஒருவாரப் பயணத்தின்போதுதான் துன்புற்றோம்: கப்பல் இப்படியும் அப்படியும் சாய்ந்தாடி, மேல் தளத்திலிருந்த எல்லாரையும் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்
பக்கத்துக்குத் தள்ளிப் பந்தாடியது.
பலர்க்கு மயக்கம், சிலர் வாந்தி எடுத்தனர். நல்ல வேளை! சில மணி நேரத்தில் விமோசனம்
கிட்டிற்று.
ஜிபுத்தியில் எங்களுக்கு முன்னரே சில கலங்கள் நங்கூரமிட்டுக் காத்திருந்தன; சூயஸ் கால்வாயைக் கடந்து நடுநிலக் கடலை அடைய வேண்டும்; ஒரு சமயத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும். மனிதன் வெட்டிய கால்வாய் அல்லவோ? அகலம் அதிகமில்லை.
வடக்கிலிருந்து ஒவ்வொரு கப்பலாய், இடைவெளி
விட்டு, வந்துகொண்டிருந்தது; அது முடிந்தபின், இங்கிருந்த கப்பல்களை வரிசைப்படி அனுப்பினார்கள்.
பிரான்சின் மிகப் பெரிய துறைமுகமாகிய மர்சேயை ( Marseiille ) 10-08-1948 இல், நல்ல வண்ணம் அடைந்து யாவரும் இறங்கினோம்.
அப்பாடா!
கடற்பயணம் படுபோர்! இதைக்காட்டிலும்
போர், வான்
பயணம்; ஆனால் விரைவாய் முடிந்துவிடும்.
------------------------------------------------------------------

