Sunday, 30 August 2015

செல்லாதா?

              

   (சிறு வயதில்  நான் படித்த சில கதைகளை  அன்பர்களுடன் பகிர விரும்புகிறேன்; சிலர்க்கு முன்னமே தெரிந்திருக்கலாம்)





   போக்குவரத்து  வசதி  இல்லாக் காலம்.

   ஆணிமுத்து செட்டியாரும்  அவருக்கு அறிமுகமான பூவழகனும்  சேர்ந்து வாணிகத்துக்காகப்  பணத்துடன் வேற்றூருக்கு நடந்து சென்றனர். வழியில் சிறு  காடொன்றைக்  கடக்க நேர்ந்தது. முற்பகல்தான்  எனினும்பலவகை மரங்களின்  கனத்த  அடர்த்தி  காரணமாய்ப்  போதிய வெளிச்சம் இல்லை.

  "மடியில்   கனமிருந்தால்  வழியில் பயம் " என்பது  பழமொழி . கள்ளர்கள்  வருவார்களோ  என்ற அச்சம்  மேலிட்டவர்களாய்கடவுளை வேண்டிக்கொண்டு  விரைந்த அவர்கள், தொலைவில்கும்பலாய் ஐவர்  வரக் கண்டனர்.

   செட்டியார்  சொன்னார்:

  "திருடராக இருக்கலாம். நீ அதோ  அந்த  மரத்தடியில்  படுத்துக்கொள்; நான் கொஞ்ச  தூரத்தில் படுக்கிறேன்;  கைகாலை அசைக்காமல்,  ஓசை எதுவும் வெளிப்படுத்தாமல், மூச்சைக்கூட  பலமாய் விடாமல், செத்ததுபோலக்  கிடந்தால்,  அவர்கள்  கவனிக்காமல் போய்விடுவார்கள்".

   அப்படியே  செய்தார்கள். கூட்டம் நெருங்கியது. ஒருவனின்  கால் பூவழகனுடைய  உடம்பின்மேல்  இடித்ததுஅவன்  குனிந்து  பார்த்து, "இங்கே ஒரு பிணம் கிடக்கிறது"  என்றான்.

    தன்னைப் பிணம் என்று சொல்லக் கேட்ட பூவழகன், கடுங் கோபம் கொண்டு, "உங்கள் வீட்டுப்  பிணம்  இப்படித்தான்  மடியில் பணத்தைக்  கட்டிக்கொண்டு  படுத்திருக்குமோ?" என  அதட்டும் குரலில் கேட்டான்.

    உடனே அவனைப் பிடித்துத் தூக்கிப் பணத்தைப்  பிடுங்கிக்கொண்டனர். அதில்  ஒரு  நாணயத்தை  உற்று  நோக்கிய ஒருவன், "இது செல்லாக்  காசு  என்று  நினைக்கிறேன்" என்றவுடன்,  பூவழகன்,  "செல்லாதா? செல்லும்  செல்லாததற்கு அதோ படுத்திருக்கிற  செட்டியாரைக் கேள்" என யோசனை சொன்னான். அப்போதுதான்  அவரைப் பார்த்தார்கள்அவரது பணமும் பறி போயிற்று என்று  சொல்லவேண்டுமோ?

   இந்தக்  கதையிலிருந்து, "செல்லுஞ்  செல்லாததற்குச்  செட்டியாரைக்  கேள் " என்னும்  பழமொழி  பிறந்தது. எது குறித்தாவது  ஐயம் தோன்றினால்  இந்தப்  பழமொழியைப்  பயன்படுத்துவார்கள்.

                   ----------------------------------------------------

 (படம் ; நன்றி இணையம்)

Wednesday, 12 August 2015

உயர்ந்தவனா மனிதன்?

   
     பிற விலங்குகளைக் காட்டிலும் மேலானது மானிடப் பிறப்பு எனவும் நிறையப் புண்ணியம் 
செய்த உயிரே மனிதனாகும் எனவும் புல் பூண்டு பூச்சி பற்பல விலங்குகள் என்று மாறிமாறிப் 
பிறந்து இறுதியில்தான் மாந்தராவார் எனவும் மக்களிடையே நம்பிக்கை உண்டு; ஆனால் 
மனிதனும் ஒரு விலங்குதான் என  அறிவியல் பறைசாற்றுகிறது. குரங்கின் பரிணாமந்தானே 
மனிதன்?

    பறவை அறிஞர் சாலிம் அலி கூறியுள்ளார்:

   “பிற உயிர்களிலிருந்து மனிதன் எவ்வகையிலும் மாறுபட்டவனல்லன் என்று நான் 
உறுதியாக நம்புகிறேன். மற்ற விலங்குகளுக்கு உள்ள ஆதாரமான தூண்டுதல்கள், இயல்புகள், 
பழக்க வழக்கங்கள்தான் இவனிடமும் இருக்கின்றன; ஆனால் மனித மூளை அதிக வளர்ச்சி 
பெற்றுவிட்டது; அதைக் கொண்டு தன்  செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்டு 
அமைத்துக்கொள்ள முடிகிறது; அதே சமயம் கடவுள் விதித்த விதி என்று நினைத்துப் 
பிற உயிர்களைவிடத் தானே   உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத் தனக்குள்ளே 
கற்பித்துக்கொண்டிருக்கிறான்.

     டார்வின், மற்ற உயிர்களிலிருந்து இயற்கைத் தேர்வின் வழியாக உருவானவன்தான் 
மனிதன் என்று சொன்னார்; இதை நம்புவது எனக்கு எளிதாக  இருக்கிறது. எனவே மனிதன் 
என்பது உன்னதம் பெற்றதொரு வாலில்லாக் குரங்குதான் என்றே நம்புகிறேன். மனிதனைப் 
போலவே விலங்குகளிடமும் அழகியல் மற்றும் நெறிமுறை எண்ணங்கள் இருக்கத்தான் 
செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் போவர் பறவைகள் குறித்துப் பார்க்கலாம்:
       
போவர் பறவை
     
     ஆண் பறவை கவனத்துடன் தரைப் பகுதியொன்றைத் தேர்ந்தெடுத்து சுத்தஞ்  செய்து 
அங்கே சுள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கூடு கட்டுகிறது; வண்ணப்  பொருட்களைக் கவனத்துடன்  
பார்த்து எடுத்து வந்து கூட்டின் உட்புறத்தினை அழகு  செய்கிறது; பல வேளைகளில் அந்தப் 
பொருட்களை வெகு தூரத்திலிருந்தும் கொண்டுவருகிறது; இவையெல்லாம் தன் 
பெட்டையை மகிழ்விக்கத்தான்.

தூக்கணாங்குருவி
     
     நம் நாட்டிலேயே தூக்கணங்குருவியை எடுத்துக்கொள்ளலாமே! இதிலும்  ஆண்தான் 
கூடு கட்டுகிறது; கூடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது இதே போன்ற பல கூடுகளைப்  
பார்த்து ஒன்றைப் பெண் குருவி தேர்ந்தெடுக்க அதற்குப்  பிறகு ஆண் குருவி கூட்டைக் 
களிமண்ணை  வைத்து வண்ண மயமான மலரிதழ்களைப் பொருத்தி அழகு செய்து முற்றாகக் 
கட்டி முடிக்கிறது. ஒரு பெண்துணையைக் கவர இவற்றையெல்லாம் செய்கிறது ஆண்!“
      
     (ச. முகமது அலி இயற்றிய “பறவையியல் அறிஞர் சாலிம் அலி“ என்னும்  நூல். 
பக்கம் 71 – 73)

                                +++++++++++++++
(படங்கள்: நன்றி இணையம்)

Sunday, 2 August 2015

மாந்தர் வரலாறு (தொடர்ச்சி- 2)


    நிமிர்ந்த இனத்திலிருந்து  2 //மு  பரிணமித்தது  ஹொமோ செப்பியன்ஸ்  (Homo sapiens); செப்பியன்ஸ் = புத்திசாலி.  இதன்  பிரிவுகள் இரண்டு:

   1 --- ஹொமோ செப்பியன்ஸ் நீயெண்டெர்த்தாலென்சிஸ் -- நீயெண்டெர்த்தால்கள் 35,000 / முன்வரை மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள்  என்பதை  அறிவோம்.

   2 --- நவீன ஹொமோ செப்பியன்ஸ் (Modern Homo sapiens) -- கிழக்காப்ரிக்காவில் தோன்றி  அக் கண்டத்தின் வட பகுதியிலும் மேற்காசியாவிலும்  ஒரு //மு பரவினர். மேற்காசியாவில்தான், இஸ்ரேலின்  கலிலீ  (Galilee) பகுதியில், நாசரேத் அருகில், கஃப்ஜேஹ் (Qafzeh) குகையில், நவீனமனிதர்களின்  மிகமிகத் தொன்மையான எலும்புக் கூடுகள்  அகப்பட்டனஅங்கு   ஓர் இளம்பெண்ணும் அவளின் காலடியில் ஆறு வயதுக் குழந்தையும் புதைக்கப்பட்டிருந்தனர். ஏறக்குறைய  ஒரு /  பழமையான புதையல் அது. 1933 இல், ஐந்து மனிதக் கூடுகளும் பின்பு  1965 க்கும் 1975 க்கும்  இடையில், பிரான்சு நாட்டு பெர்நார் வாந்தேர்மீர்ஷ் (Bernard Vandermeersch) எனும் தொல்வரலாற்று நிபுணரால் பதின்மூன்றும் அகழ்ந்தெடுக்கப்பெற்றன. வயது வந்தோரும்  குழந்தைகளுமாக  எல்லாரும் புதையுண்டிருந்தனர்.

    இந்த மாதிரி  இடுகாடுகள்   பிரான்சு,  இத்தாலி, மத்திய ஆசியா, பாலஸ்தீனம் ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டன. இராக்கின் ஷனிடர் (shanidar) குகையில்  ஒன்பது கூடுகள் வெவ்வேறு ஆழங்களில் கிட்டின; அவற்றுள் அதிகப்  பழையதற்கு வயது  70,000 ஆண்டு.

    க்ரோ மஞ்ஞோன் இனம்,  'முற்பட்ட  ஹொமோ செப்பியன்ஸ்  செப்பியன்ஸ்' என்பதையறிவோம். இப்போது உலகம் முழுதும்  வாழ்கின்ற இனம் ஹொமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ்  எனப்படுகிறது. இதுவும்  கிழக்கு ஆப்ரிக்காவில் பிறந்தது; ஒரு  லட்சத்திலிருந்து  ஒன்றேகால் லட்சம்  ஆண்டுகளுக்கிடையே   அந்தக் கண்டத்தை விட்டு  அது  வெளியேறியிருக்க   வேண்டும்.

    மனிதர்களை வெள்ளை இனம், கருப்பினம், மங்கோலிய இனம், சிவப்பினம் எனப் பிரிப்பது இருபதாம்  நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்தது; ஆராய்ச்சி விரிவடைய அடைய, 'யாவரும் ஓரினம்,  வசித்த இடம்தட்பவெப்ப நிலை, சூழல் முதலானவற்றின் வேறுபாடும் மாறுபாடுமே அவர்களின்  தோற்ற வித்தியாசங்களுக்குக் காரணம்என்பது இறுதி  முடிவாய்  ஏற்கப்பட்டுள்ளது.


சிம்பன்சி


 மானிடர் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறலாம்:

              ஒரு பொது மூதாதை - பெருங்குரங்கு

   அதிலிருந்து ஒரு கிளை : பரிணாமம் உற்ற பெருங்குரங்குகள்; அதிலிருந்து  கிபன், ஒராங் உட்டான், கொரில்லா, சிம்பன்சி.

     மறு கிளை: ஆசைன்கள்; அதிலிருந்து ஹொமோ ஹெபிலிஸ், ஹொமோ இரேக்டஸ், ஹொமோ  செப்பியன்ஸ்.

   பற்பல  நாட்டு அறிவியல் வல்லுநர்கள்  கஷ்டம் பாராமல், காலங் கருதாமல், கடுமையாய் உழைத்து, ஆராய்ந்து, மனிதர் தோன்றிய வரலாற்றை அறிந்து கூறியிருக்கிறார்கள்அவர்கள் ஹோமரின் இதிகாசங்களிலோ ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலோ தகவல் திரட்டவில்லை; அறிவியல்  முறைப்படி, பல்லாண்டு  களப்பணி செய்து, கைக்கெட்டிய பொருள்களை அளந்து,  ஒப்பிட்டு, காலம் நிர்ணயித்து, ஊகித்து, கலந்தாலோசித்து, விவாதித்து, முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் பின்காணும் வெவ்வேறு  அறிவியல் துறைகளில் நிபுணர்கள்:

    -- மண்ணூல்.  Geology

     --அகழ்வு ஆய்வியல்.  Archaeology

     --புதைபடிவ ஆய்வியல் . Palaeontology

     -- மானிட இயல். Anthropology

     --விலங்கு  இயல்.

     -- தாவர இயல்.

     - இயற்கை இயல்.

    -- உடற்கூற்று இயல். Anatomy

    --  மரபணு இயல். Genetics

   --  வேதியியல். Chemistry

   --  இயற்பியல்.  Physics

   ---  புவி இயல்.  Geography

   ஆராய்ச்சிகள் தொடர்கின்றன: 29 - 5 - 15 இந்து  ஆங்கில நாளிதழில்  ஒரு  செய்தி:

  "வடக்கு ஸ்பெய்னில் 43 //முந்தைய, கிட்டத்தட்ட முழுமையான, எலும்புக் கூடொன்று கிடைத்துள்ளது; 13 மீட்டர் செங்குத்து ஆழத்தில் மேற்கொண்டும் கூடுகள் காணப்படுகின்றன எனவும் குறைந்தது 28 இருக்கலாம்  எனவும்  ஆய்வர்கள் தெரிவித்தார்கள்."  

  ஆகவே, புதுக்கருத்து தோன்றலாம், பழையது, தவறு எனக்  கைவிடப்படலாம் அல்லது உறுதியுறலாம். எதுவானாலும் அடிப்படைக் கண்டுபிடிப்பான  'குரங்குதான் மனிதனின் மூலம் '  என்பது மாறாது.

   மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் பொதுவான மூதாதை பற்றிய முடிவு  நன்கு வேரூன்றிவிட்டது; 1960 இலிருந்து செய்த டி.என். (DNA) மற்றும் மூலக்கூறு ஆய்வுகள்  மனிதர்களும்  சிம்பன்சிகளும் ஒரே குடும்ப  உறுப்பினர்கள் என்று  உறுதிப்படுத்தியுள்ளன.

 பழங்காலத்தைக் குறித்த எல்லாக் கோட்பாடுகளும் எலும்பாராய்ச்சியால் மட்டுமே பெறப்பட்டவையல்ல; மரபணு, தட்ப வெப்பம், சுற்றுச் சூழல், பிற விலங்குகள் முதலானவற்றின் ஆய்வாலுந்தான். புதையெலும்பு ஆய்வர் எலும்புகளைத் தேடுகிறார்; எங்கே தோண்டவேண்டும் என்பதை ஊகிக்கிறார் மண்ணூலார்; அகழ்வர்கள் தோண்டுகிறார்கள்; வேதியியலாரும் இயற்பியலாரும் எலும்புகளின் காலத்தைக்  கணக்கிட, மரபணு  இயலார்  செல்களில்  பரிணாம வரலாற்றைக்  காண்கிறார்.

  பரிணாமம் பற்றிய கொள்கை பலமாக நிலைபெற்றுவிட்டது. மனிதப் பரிணாமம் என்பது  விலங்குத் தன்மை, கரடுமுரடு  ஆகியவற்றிலிருந்து  மேம்பாடு, பண்பாடு, நாகரிகம்   நோக்கிய  படிப்படியான முன்னேற்றம்  அல்ல; வாழும் வழிகளைத் தேடி மேற்கொள்ளப்பட்ட முடிவற்ற முயற்சிகள், எண்ணற்ற  மற்றும்  திரும்பத் திரும்ப  நடந்த  சோதனைகள்  (experiments) ஆகியவற்றின் விளைவே  பரிணாமம்சாத்தியமான  ஒவ்வொரு திசையிலும் நிகழ்ந்த அந்தச் சோதனைகளே வாழ்வில் நாம் பார்க்கிற வேறுபட்ட  தோற்றங்களுக்குக் காரணம்.

  வாழும்  உயிர்கள் தலைமுறைக்குத் தலைமுறை பெரிய அளவிலோ  சிறிய அளவிலோ மாறிக்கொண்டிருக்கின்றன.

 காட்டு: இரு தலைமுறைக்கு முன்பு  சிறுவர்களுக்கு 28  பற்கள் இருந்தன; வாலிபத்தில்  4 கடைவாய்ப் பற்கள்  முளைத்தன; ஆக மனிதனுக்கு 32  பற்கள் எனக் கணக்கிட்டோம். இன்றைய இளைஞர்களுக்கு அவை  முளைக்காமையால்   28 தான்.

  நம் குறுகிய ஆயுட்காலத்தில் எல்லா மாற்றங்களையும் அறிய முடிவதில்லை.

   புறப்பொருள் வெண்பா மாலை என்றோர்  இலக்கண நூல் உண்டு; சங்க காலத்துக்குப் பிற்பட்ட அதில், உதாரணத்துக்காகப் பாவொன்று  காட்டப்பெற்றுள்ளது:

    கல்தோன்றி  மண்தோன்றாக்  காலத்தே  வாளோடு
    முன்தோன்றி மூத்த  குடி.

 என்று தமிழ்க் குடியின் பழமையை அது பறைசாற்றுகிறது. பிறக்கும்போதே வாள் வைத்திருந்ததாம்! இடுப்பில் தொங்கியதா அல்லது கையில் பிடித்திருந்ததா என்பது  சொல்லப்படவில்லை. புலவரின்  கற்பனை எனப்  பாராட்டலாமே யொழிய  வரலாற்று உண்மையெனக் கொண்டு ஆதாரமாய்க் காட்டுதல் தவறு. முன் தோன்றியது ஆப்ரிக்கக் குடியே! அதுவும் மண் தோன்றாக்காலத்தில் அல்ல; கல் தோன்றிமண் தோன்றி, மணல் தோன்றி, ஒரு  செல்லுயிர் தோன்றி, பல  செல்லுயிராய்ப் பரிணமித்து, கணக்கற்ற உயிரினங்கள் உருவாகிப் பெருகிப் பரவிப் பாரை நிறைத்ததற்குப் பல நூறாயிரம் ஆண்டுக்குப் பின்னர்எடுத்துக்காட்டாக, பாம்புகள் ஊரத் தொடங்கியது  13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு; மானிடர் வந்து  சில லட்ச வருடங்களே ஆயின.

                          முற்றிற்று.


                    ++++++++++++++++++++++++++

Tuesday, 21 July 2015

மாந்தர் வரலாறு - தொடர்ச்சி 1


        
கிபன்கள்

  டச்சு  உடற்கூற்றியலார்   எழேன்  துய்புவா   (Eugene  Dubois),   1887-இல்  அந்நாட்டு   மருத்துவக்  குழுவில்   இடம்  பெற்று   டச்சுக்    காலனியாய்   இருந்த   சுமத்ராவுக்கும்   பின்பு  ஜாவாவுக்கும்   சென்றார்.   ஹெக்கேலின்  ஆதரவாளரான   அவர் ,   ஆசியாவில்   கிபனிலிருந்து மனிதன்  வந்தான்   என   உறுதியாய்  நம்பியவர்.  சுமத்ராவில்   கிபன்ஒராங் உட்டான்    இரண்டும்   வாழஜாவாவில்  கிபன்  மாத்திரமே  வசித்தது .   கிபனின்  பழைய  எலும்புக் கூடுகள்   அகப்படும்  என்னும்   எதிர்பார்ப்புடன்  அவர்   பல மாதம்   இடைவிடாமல்  அகழ்ந்ததில்ஒரு   மானிட உருவத்தின்   எலும்புகளை    ஜாவாவில்  எடுத்தார்   (1891);   அவைமுகவாய்க்கட்டையின்    ஒரு  பகுதி ,   மண்டை யோட்டின்   மேல் மூடி,   இரண்டு  தனிப்  பற்கள்,   ஒரு  தொடையெலும்பு.     இவை,    நிமிர்ந்து   நடந்த    ஒரு    விலங்கினுடையவை     என்பது சர்வ நிச்சயம்மண்டை ஓட்டின் கொள்ளளவு  பெருங்குரங்கினுடையதைவிடப்  பெரியதாய்   இருந்தது;   ஆகவே  அந்த  மிருகம்பெருங்குரங்குக்கும்  மனிதனுக்கும்  இடைப்பட்டது   என  முடிவு  கட்டிய  அவர்பிதிக்காந்த்ரப்பெஸ்   இரேக்டஸ்  (pithecanthropus  erectus )   என்ற  பெயரை   சூட்டினார்;   அதன் பொருள்:   நிமிர்ந்த  குரங்கு-மனிதன்.   பிற்காலத்தில்    'ஜாவா  மனிதன்'   எனப்  பெயர்   மாறிற்று.

     1929-இல்,   சீனாவின்  பீக்கிங்  பிரதேசத்தில்   கிடைத்த  கூடு   'பீக்கிங்  மனிதன்'   எனப்பட்டது;   இதற்கும்  ஜாவா மனிதனுக்கும் இடையே  மறுக்க  இயலா  ஒற்றுமைகள்  தென்பட்டன.   அடுத்த  வருடம்    ரால்ஃப்  வான்  கேனிக்ஸ்வால்ட்   (Ralph  von  Koenigswald ) --  ஜெர்மன்   புதை படிவ  ஆய்வாளர் --ஜாவாவில் மேற்கொண்டும் எலும்புகளைத்  தோண்டியெடுத்தார்.  இவையும்  பீக்கிங்  எலும்புகளும்  மனிதனுடையவை என்பதை   ஆராய்ச்சிகள்  நிரூபித்தனஹொமோ  இரேக்டஸ்  (Homo erectus)  -  நிமிர்ந்த  மனிதன் --  என்றழைத்தனர்.   லத்தீன்ஹொமோ = மனிதன்.

     நிமிர்ந்த  மனிதனில்   இரு  வகை  இருப்பதாய்க்  கண்டறியப்பட்டது:

  1  --  ஹொமோ    இரேக்டஸ்  இரேக்டஸ்  --  ஜாவா மனிதன்;

   2 --  ஹொமோ  இரேக்டஸ்  பெக்கினென்சிஸ் --  பீக்கிங்  மனிதன்.

     பேராசிரியர்  ரேமன்ட்  டர்ட்   (Raymond Dart)   ஆஸ்ட்ரேலியாவில்  பிரிஸ்பேன்  நகரில்   பிறந்தவர்   (1893 - 1988);    உடற்கூற்றியலர்தென்னாப்ரிக்காவில்  பணியாற்றியபோது  அங்குக்  கிட்டிய  எலும்புக்  கூட்டை    ஆராய்ந்து,    ஆஸ்ட்ராலொப்பிதேக்கஸ்   ஆஃப்ரிக்கானுஸ்   (Australopithecus  africanus)  என்று  பெயர்  வைத்து,   மனிதர்களுக்கும் பெருங்குரங்குகளுக்கும்    இடைப்பட்ட  மற்றும்  அதுவரை   அகப்படாத  இனம்  எனத்  தெரிவித்தார்.

      ஆஸ்ட்ராலொ = தெற்கத்தியபிதேக்கஸ் = குரங்குதென்குரங்கன்   என்று  இதை  மொழிபெயர்த்தார்   தேவநேயப்  பாவாணர்.

         அதுவரைக்கும்  அகப்படாதது  என்ற   டர்ட்டினுடைய   கருத்து  சரி;   ஆனால்   அது  மனிதனின்  மிகப்  பழைய  மூதாதையுடையது  என்பது  பின்   கண்டுபிடிப்புகளால்  தெரிந்தது.   ஆஸ்ட்ராலொப்பிதேசைன்   ( Australopithecine )   என  அதன்    பெயர்   மாற்றப்பட்டதுசுருக்கமாக  ஆசைன்  என்போம்.   கிழக்காப்ரிக்காவில்  50  //மு  அல்லது   அதற்கும்  முந்தி  வாழ்ந்தது  அந்த   இனம்.  (கிழக்காப்ரிக்கா   என்பது  எத்தியோப்பியா , கென்யாடான்சானியா  ஆகிய  மூன்று  நாடுகள்  அடங்கிய பிரதேசம்).

           அங்கு,   பல்வேறு  பகுதிகளில்  கண்டெடுத்த    ஆசைன்கள்   இரு  பிரிவு   கொண்டவை:

           ஒன்றுவலுமிக்கது;    மற்றதுபலங்குறைந்தது

          இரண்டுக்கும்  பொதுவான  அம்சங்கள்  புலப்பட்டனமுன்துருத்திய  முகம், அதிகம்  வளராத  புருவம், கண்ணுக்குமேல்   உப்பிய  எலும்பு , முகவாய்க்கட்டை  இல்லாமைபெரிய  கடைவாய்ப்  பற்கள்.   மூளை   சுமார் 500   கன செ. மீ. அளவு;  (இக்கால  மனிதனுக்கு  சராசரி 1400  கன  செ.மீ. ). மூளையளவும்  உடல் வீதங்களும்  (proportions)  அவை  பெருங்குரங்கு  எனக்  காட்டினநிமிர்ந்த  நிலையில்  இரண்டு   கால்களால்   நடந்த போதிலும்  மரந்தொற்றும்   பழக்கத்தை  அவை   கைவிடவில்லை.

        முதற் பிரிவுசைவம் ;   அது   10 //மு   அற்றுப்போய்விட்டது.

      மற்ற  பிரிவு  ஆசைன்கள்   ஊனும்  உண்டன;   இவற்றுள்  ஒரு   பகுதி, காட்டினின்று  வெளியேறி,   ஆற்றோரமாய் நடந்து,    புல்வெளிகளை  அடைந்ததுகல்லாயுதங்களை   உருவாக்கிய   முதலினம்    இதுவே .     கல்  கருவிகள்  ஆப்ரிக்காவில்  மூன்று  இடங்களில்  கிடைத்தன:

              1 --  எத்தியோப்பியாவில்  கடா கோனா (Kada  Gona)  எனுமிடம்;

.             2  -- அந்  நாட்டிலேயே   ஒமோ (Omo)   என்ற  வேறிடம்;

              3 --  கென்யாவில்  ட்டூர்க்கானா  (Turkana ) எரியின்   கிழக்குப்   பகுதி.

          இவை   20 //மு  பயன்பட்டவையாம்.    இன்னமும்   மனிதராகிவிடாத  பெருங்குரங்குகளுக்கு   சிந்தனை வளர்ச்சி  ஏற்பட்டமைக்கு   இந்த ஆயுதங்கள்  தக்க   சான்றுகள்.

     டான்சானியா  நாட்டில்   ஒல்டுவாய்  (Olduvai )   என்ற  பிரதேசத்தில்  உள்ள  ஆழமான   மற்றும்  ஒடுங்கிய  பள்ளத்தாக்கு,   வரலாற்றுக்கு    முற்பட்ட  இனங்களின்  எலும்புக் கூடுகள்  பலவற்றை  வழங்கிப்  புகழுற்றது.   லூய் லீக்கி  (Louis Leakey ) -  1903-1972 - அவருடைய   மனைவி   மேரி  -1913-1996 - ஆகிய    இரு  பிரபல  ஆங்கில  மானிடவியலார்கள்   அங்கு  அகழ்ந்து   ஆசைன்  கூடுகள்  சிலவற்றை   வெளிக்கொணர்ந்தனர்.   இவை    இரண்டாம்  வகையைச்   சேர்ந்தவை.

      அதே  இடத்தில்    மேரி,   ஒரு   புது மனித  இனத்தின்    கூட்டைக்  கண்டுபிடித்தார்   (1961);  இதற்கு    ஹொமோ   ஹெபிலிஸ்   (Homo  habilis) என்பது   அவர்   தேர்ந்தெடுத்த  பெயர் .   ஹெபிலிஸ்திறமைசாலிஅதன்  கைகளுக்குக்   கல்லை   அழுத்தமாய்ப்  பற்றும்   திறமை  இருந்தது .  மேரியின்   மகன்   ரிச்சர்ட்   (Richard)  அந்த  இனத்தின்   மேலும்  முழுமையான   கூட்டை  அகழ்ந்தெடுத்தார்  (1972 ).   18 //   முந்தியது    என  மதிப்பிட்டனர்.

       ஹொமோ  ஹெபிலிஸ்   20  லட்சத்திலிருந்து  15 //மு    மறைந்தது.

     டொனால்ட்   ஜொகான்சனும்  (Donald  Johanson )  அவரது   பிரஞ்சியர்  மற்றும்  அமெரிக்கர்  அடங்கிய    குழுவினரும்   எத்தியோப்பியாவில்   நிகழ்த்திய  அகழ்வில்,   40%  பூர்த்தியான  கூடொன்றை    1974 இல்   தோண்டியெடுத்தனர்ஆசைன்களின்   வலிமை  குறைந்த   இரண்டாம்   வகைப்  பெண்ணின்   மிச்சம்  என்பதறிந்து   வைத்த  பெயர்  லூசி  (Lucy).   இந்தக்   கண்டுபிடிப்பால்இருகால்  நடைவரலாற்றுக்குப்   பெரிதும்  முற்பட்ட  காலத்திலேயே பழகிவிட்டது   என்று    ஐயமின்றித்  தீர்மானித்தனர்.        

     ஈராண்டுக்குப்  பிற்பாடுடான்சானியாவில்,   லேட்டோலி   (Laetoli )  எனுமிடத்தில், (ஒல்டுவாய்க்கு  30 மைல்  தொலைவுஎரிமலைச்   சாம்பலில்மனிதனுடையவை  போன்ற  காலடிச்  சுவடுகள்  பதிந்திருந்தமை  தெரியவந்ததுஅவை  36 /  பழமை  வாய்ந்தவை . 1978-இல்மேரி  லீக்கி   ஒரே  இடத்தில்   இரண்டு  பேரின்   அடிச் சுவடுகளைக்   கண்டார்;   ஆராய்ச்சி   அளித்த  தகவல்கள்:

  1 ---  இருவர்   சேர்ந்து   நடந்திருக்கின்றனர்ஒருவர்  140 செ.மீ.  உயரம், மற்றவர் 120;

     2 -- 50 /  முன்பே  இரு   காலால்  நடந்துள்ளனர்.

     ட்டூர்க்கானாவின்  கீழைக்   கரையில்   இரு  மண்டை  ஓடுகளும்  (1970)  மேலைக்  கரையில்   நேரியோக்கொட்டொம்   (Nariokotome)  என்ற  இடத்தில்  ஒரு   முழுக்  கூடும் (1984)  கிடைத்து,   நிமிர்ந்த   மனிதர்    ஆப்ரிக்காவில்  உருப்பெற்றனர்  என்பதை  உறுதிப்படுத்தின.

   நிமிர்ந்த  மனிதர்கள்   இப்போதைய  மனிதர்களுக்கு   மிக  நெருக்கமானவர்கள்அவர்களுள்  சிலர்    1.7 மீஉயரம்   வளர்ந்தார்கள்;     மூளை  775 .செ.மீட்டருக்கும் 1250  . செ. மீட்டருக்கும்  இடைப்பட்ட  அளவுடையது;   உறுதியான முகவாய்க்கட்டைபெரும்   பற்கள்சூரிய  ஒளிக்குத்  தடுப்புப்போல   அடர்ந்த  புருவ  அரண்    ஆகியவை   அவர்களின்   சில  உறுப்புகள்.

   பல   நூறாயிரம் ஆண்டு   தாங்கள்  வசித்த  சஹாராவின்  தெற்குப்   பாகத்தினின்று    அவர்கள்   புலம் பெயர்ந்து  வட  ஆப்ரிக்காஆசியாஐரோப்பா   என  வேறு  பிரதேசங்களுக்குப்  பரவினார்கள்ஹொமோ  ஹெபிலிசைக்  காட்டிலும்  மேம்பட்ட  தோற்றங்  கொண்டிருந்த  அவர்கள்  நிச்சயமாக  ஹெபிலிஸ்  இனத்தின்  வழித் தோன்றல்கள்தான்.   16  லட்ச  ஆண்டிலிருந்து  2 // முன்வரை அவர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள் .


 ( தொடரும் )