Wednesday, 9 March 2016

இலக்கணங்களில் பால் (gender)




வளர்ந்த மொழிகளில் இலக்கண நூல்கள் உள்ளன; அவையெல்லாவற்றிலும், ஒருமை - பன்மை, பெயர்-வினை, பால் என்னும் அடிப்படையான பிரிவுகளைக்  காணலாம்.

 ஆங்கிலத்தில்தான் பால் பகுப்பு வெகு எளிது; ஆண்பிறவி, ஆண்பால்; பெண்பிறப்பு, பெண்பால்; மற்றவையெல்லாம் அலிப்பால் (neuter).

  தமிழில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனவும் பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனவும் கூறப்படுகின்றன; விலங்குகள் பறவைகளில் ஆண் பெண் பார்க்காமல் ஒன்றன்பால், பலவின்பால் என எண்ணிக்கை கொண்டு பாகுபடுத்துகிறோம்; மொத்தம் ஐந்து பால்  உள்ளன; ஆனால் சிக்கல்  எதுவுமில்லை.

கடுவன், மந்தி, களிறு, பிடி --  ஒன்றன்பால்; 

கோழிகள், மாடுகள், பூச்சிகள் -- பலவின்பால்.

உயிரற்ற பொருள்களுக்கும் இப்படித்தான்:

 சாலை, பழம், வீடு -- ஒன்றன்பால்; 

செய்கைகள், தோணிகள், நோக்கங்கள் - பலவின்பால்.

 இது தெளிவாகத் தோன்றுகிறது; பிற மொழிகள் சிலவற்றில் இவ்வாறில்லை.

 அ) -- பிரஞ்சிலும் இந்தியிலும் ஆண்பால், பெண்பால் என இரண்டுதான் இருக்கின்றன; ஆனால் அர்த்தம் பார்த்துப் பாலை அறிதல் பெரும்பாலும் இயலாது.

 1  --  பிரஞ்சு: ஆண்பால் -- கணவன், அன்பு, கடமை, காற்று, சுவர், நெருப்பு, பறவை, மாதம், மூக்கு, விரல்.

       பெண்பால் -- ஆசிரியை, காது, தண்ணீர், நிறம், நீதி, பிரான்சு, போர்,  மலை, வட்டம், வறுமை.

 2 --  இந்தி: ஆண்பால் -- மாணவன், கத்தரிக்காய், குளியலறை, காது, கிழக்கு, செருப்பு,  நரி, பாம்பு, ரத்தம், வட்டி.

        பெண்பால் -- தாய், கற்பனை, தராசு, நாகரிகம்,  நிகழ்ச்சி, பசி, பேருந்து,   மழை, வணக்கம் (நமஸ்த்தே), வேட்டி.

  அக்காவின் கணவன் ஆண்தான் என்றாலும் அவனைக் குறிக்கும் ஜீஜா என்ற சொல் பெண்பால்! சமற்கிருதத்தில்,  மனைவி என்னும் பொருள் தரும் மூன்று சொற்களுள், ஒன்று பெண்பால், இன்னொன்று அலிப்பால், வேறொன்று  ஆண்பால் என்று படித்திருக்கிறேன்.

  சமற்கிருதத்தில் போலவே லத்தீனிலும் முப்பாலுண்டு. பிரஞ்சில் பால் கண்டுபிடிக்க உதவும் இடைச்சொற்கள் (articles) இருக்கின்றன: ஆண்பாலுக்கு லெ (le), பெண்பாலுக்கு லா (la). இவை சொற்களின் முன்னே எப்போதும் வரும்:

    le bureau, la table. 

  இவை இந்தியிலும் லத்தீனிலும் சமற்கிருதத்திலும் இல்லாமையால் பயின்று பயின்று தான் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

    1 பிரஞ்சு, 2 இந்தி, 3 லத்தீனில் பெயரடைகளுக்கும் பால் இருக்கிறது.

   1 - புதுப் புத்தகம் -- லெ நுவோ லீவ்ர்; புதுக்  கதவு -- லா நுவேல்லு போர்த்து.

   2 -  மஞ்சள் கைக்குட்டை - பீலா ரூமால்; மஞ்சள்  சட்டை - பீலீ கமீஜ்.

   3 - அழகிய குகை - பெல்லுஸ் கவுஸ்; அழகிய ரோஜா - பெல்லா ரொசா; அழகிய கவிதை - பெல்லும் கர்மேன்.

 எல்லாவற்றையும் நோக்கும்போது, பாலைப் பொருத்தவரை, தமிழ்  எளிதே என்பதை அறிகிறோம்.

          ***********************************
(படம் உதவி - இணையம்)

Sunday, 28 February 2016

கம்பன் கவிதை

நூல்களிலிருந்து – 4

'கம்பன் கவிதை' என்ற தலைப்புடைய நூலொன்று 1926-இல் வெளிவந்தது; கம்ப ராமாயணத்தைப் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய 17 கட்டுரைகள் கொண்ட அதில், முதலாவது, வ. வே. சுப்ரமணிய அய்யர் (வ.வே.சு. அய்யர்) இயற்றியது; அதிலொரு பகுதியைக் கீழே பகிர்கிறேன். தலைப்பு: கம்பராமாயண ரசனை.

"சீதையைத் தேடுவதற்காக இலங்கையில் ஒவ்வொரு வீடாக அனுமன் நுழைந்து சென்றான் என்று சொல்லிவரும்போது, 9-வது சருக்கத்தில், வால்மீகி, 'பிரகஸ்தன் வீட்டையும் மகாபார்சுவன் வீட்டையும் கும்பகர்ணன் அரண்மனையையும் இந்திரசித்தன் அரண்மனையையும் விபீஷணன் மந்திரத்தையும்' என்று வேறொரு வர்ணனையும் இல்லாமல் ஜாபிதாவாக அடுக்கிக்கொண்டு போகிறான். கம்பன், தன் வர்ணனைக்கு, வேறுபடுத்தி வைத்தலால் வரும் அழகைத் தந்து வைத்திருக்கிறான்.


 உதாரணமாகக் கும்பகர்ணனை அனுமன் கண்டான் என்னும்போது, அவன் ஆதிசேஷனைப் போலவும், பரந்த கடலைப் போலவும், உலகத்திலுள்ள இரவெல்லாம் ஒரே இடத்தில் செறிந்து நின்றது போலவும், தீவினை யெல்லாம் உடல்பெற்றுத் தோன்றியது போலவும் இருந்தான் என்றும் பிறவுமாக வர்ணிக்கிறான். விபீஷணனது அரண்மனையிற் பிரவேசித்ததும், அவன் தோற்றத்தினின்று அவனது தன்மையை அனுமன் ஊகித்துக் கிரகித்துக்கொண்டு, அரக்கர் நாட்டில் பகிரங்கமாக வசித்தல் அசாத்தியம் என்பது கண்டு, அவர்களைப் போன்றதோர் உடலை எடுத்துக்கொண்டு வசிக்கும் அறத்தைப் போலிருக்கிறான் என்று அவன் நினைத்தான் எனக் கவி கூறுகிறான். இந்திரசித்தனை அனுமன் கண்ணுற்றான் என்பதற்கு முன்னேயே,

  'இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான்'

 என்று ஓர் கட்டியம் கூறிவிட்டு, அவனைக் கண்ணுற்றபோது, ஆச்சரியப்பட்டு,

   'வளையும் வாள்எயிற்று அரக்கனோ, கணிச்சியான் மகனோ,
   அளையில் வாளரி அனையவன் யாவனோ, அறியேன்
   இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
   உளைய உள்ளபோர் இவனொடும் உளதுஎன உணர்ந்தான்'

என்றும்,

  'சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடு மாலாம்
   அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?'

என்றும் நினைப்பதாகக் கூறுகிறான்.

  (அரக்கர் தலைவனாகிய ராவணன்தானோ, சிவனது மகனாகிய முருகனோ, குகையில் சிங்கம் தூங்குவதுபோல் தூங்கும் இவன் யாரோ, தெரியவில்லை, இலக்குவனும் இராமனும் பல நாள் தவிக்கும்படி போரிட வல்லவன் என்பதை உணர்ந்தான்; சிவன், பிரம்மா, திருமால் ஆகியோரைத் தவிர இன்னொருவர் இவனுக்கு நிகர் எனக் கூறுவது அறிவாகுமா?)

  இந்த மேற்கோள்களினின்று, பிறருடைய கதைகளை சுவீகரித்து அவற்றை முதனூலாசிரியன் போலவே சுதந்தரமாகவும் கம்பீரமாகவும் நடத்திக்கொண்டு போவதில் கம்பன், ஹோமரின் கதைகளை சுவீகரித்துக் கையாண்ட எஸ்கூலனுக்கும் ஸோபோகிளனுக்கும் ஓர் படி உயர்ந்தவன் எனவே அறிஞர் கண்டுகொள்வர்.

 ஊர்தேடு படலம் போன்ற கட்டங்களில் கவிக்கு நீண்ட உபதேச வர்ணனை மாலையை ஆக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது; ஆனால் இவற்றை வெறும் வர்ணனை மாத்திரம் நிரப்பின், படிப்போருக்கு சலித்துப்போம். இவற்றோடு பொருந்திய உணர்ச்சிகள் விரவி வருவதே ரசனைக்கு அழகு தரும். இவ்விரகசியம் மகா கவிகளுக்குத்தான் தெரியும்.

    -----------------------------------------------------

Saturday, 20 February 2016

உபாயம் நான்கு


  


ஆரியர்கள், காரியஞ்சாதிப்பதற்கான ஐந்து தந்திரங்களைக் கண்டறிந்து, பட்டியலிட்டு, அவற்றை விளக்குவதற்குப் பஞ்ச தந்திரக் கதைகளை  இயற்றியதோடு நில்லாமல் நான்கு உபாயங்களையும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். அவை வாழ்க்கையில் என்றும் பயன்படுபவை. 

      அவைசாம தான பேத தண்டம்.

1 - சாமம்  --  நேரடியாகவோ அதிகாரம் அல்லது செல்வாக்கு உடைய ஒருவரைத் துணைக் கொண்டோ எதிராளியுடன் பேச்சு நடத்தி உடன்பாடு எய்திப் பிரச்சனைக்குத் தீர்வு காணுதல். இதுவே சிறந்தது, பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவது, நீடித்த பயனை நல்க வல்லது, பக்க விளைவு இல்லாதது. 

2 - பேதம்  --  எதிராளிகள் ஒருவர்க்கு மேல் இருந்தால், அவர்களிடையே பேதம் (பிளவு) விளைவித்துப்  பலவீனப்படுத்தித் தனது பிடிக்குள் ஒரு  சாராரைக்  கொண்டுவந்து காரிய  சித்தி பெறும் வழி.

3 - தானம் --  இதில் பல வகை  உண்டு: அன்னதானம், சொர்ண தானம்,  கோதானம், பூதானம், கன்னிகாதானம் முதலியவை. 

  பக்தர்களின்  தானங்கள், 'தங்களுக்குப்  புண்ணியம் சேரும், அதன்  பலனாகப்  போகிற கதி  நல்லதாகும்' என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

   சாதாரண மக்கள் சொர்ணதானம் (பணம், பொருள், விலையில்லா மிக்சி  முதலானவை) மூலம்  பயனடைகிறார்கள். சில  சமயம் இது லஞ்சம் என்னும்  பெயர் பெறுகிறது. இன்று பெருவாரியாகப் புழக்கத்தில் உள்ள உபாயம் இதுவே எனில் மிகையாகாது. அரசு அலுவலகங்களில் வேலை முடிக்க இது உதவுகிறது; இன்னதுக்கு இன்ன ரேட் என்று நிர்ணயித்து அதிகாரத் தொனியில் கேட்டு வாங்கும் துணிச்சல் மிக்க அதிகாரிகளுக்குப் பஞ்சமில்லை. 

 பணமோ பதவியோ சலுகையோ தந்து எதிர்க்கட்சிக்காரரை ஆளுங்கட்சியானது  தன் வலையில் வீழ்த்துவது நம் நாட்டு அரசியலில் சகஜம். 

4 - தண்டம்  -- வன்செயல்அடி, உதை, கொலை முதலியவை இதிலடங்கும்.  மேற்சொன்ன வழிகள் உதவாதபோது இந்த உபாயம் நாடப்படுவது உண்டு; குழந்தைகளுக்கு எதிரான வன்செயல்கள், எழுத்தாளரை ஒடுக்குதல், அரசியல் கொலைகள் இதன்பாற்படும். 

        *************************

Thursday, 11 February 2016

அஞ்சறைப் பெட்டி




1   --  சிறுவர்களுக்கான தேவதைக் கதைகள் ஆங்கிலத்தில் பல உண்டு.   அவற்றுள் சிண்டரெல்லா  (Cinderella),  தூங்கும் அழகி (Sleeping Beauty) ஆகிய  இரண்டுக்கும்  மூலம்  பிரஞ்சு.

 ஷார்ல் பெரோ (Charles Perrault) என்னும் 17-ஆம் நூற்றாண்டு  எழுத்தாளர் இயற்றிய சாந்த்ரியோன் (Cendrillon), லாபேல்    புஆ  தொர்மான்  (La Belle au bois  dormant) ஆகியவை  அந்த மூலப்  படைப்புகள்.

2 --  கிரேக்க ஈசாப்பின்  கதைகள்தமிழ் உள்படபல்வேறு மொழிகளில்  பெயர்க்கப்பட்டு, பாரெங்கும் பரவியுள்ளன; காக்கையும்  நரியும் (பாட்டி வடை சுட்ட கதை), பொன்முட்டை  இட்ட வாத்துஆமையும்  முயலும்  முதலானவை   பிரசித்தம்.

   அந்த உரைநடைக்  கதைகளை லத்தீன் கவிஞர் ஃபேத்ருஸ் (Phaedrus) செய்யுள் வடிவில் மொழிபெயர்த்ததுடன்புதுக்கதைகளும் இயற்றி  சேர்த்தார். அவற்றுள்  ஒன்று, 'ஓநாயும் நாயும்';  இதன் மையக்கருத்தைத் தழுவிசுப்ரமணிய பாரதியார், 'ஓநாயும் வீட்டு நாயும்' என்னுந் தலைப்பில்  உரைநடையாய்த் தந்துள்ளார்; மூலத்தைக் குறிப்பிடாமையால்அவருடைய  சொந்தப்  படைப்பு என்று   தவறாக  நம்ப  இடமேற்பட்டுவிட்டது.

3 --- சேடிஸ்ம்  (sadism)  பிறரைத் துன்புறுத்தி, அவர்கள் படுந்துயரைக்  கண்டு பரவசமடையும்   கொடிய   மனப்பான்மை.

  18- ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த மர்க்கீ தெ சாத் (Marquis de Sade) என்ற பிரபலமாகாத பிரஞ்சு எழுத்தாளர் அத்தகைய குரூர மனம் படைத்தவர். உடற்பசி தீரப் பெண்களைப்  பல விதமாய்  இம்சித்து இன்புற்றவர்அவரது  பெயரிலிருந்து பிறந்த பிரஞ்சு சொல் சதீஸ்ம்  (sadisme). அவரது கொடுமை அவரை சிறைக்கு அனுப்பிற்று.   மர்க்கீ என்பது  பிரஞ்சு  பிரபு   பட்டம்.

   அதற்கு  எதிர்சொல் மசொக்கிஸ்ம் (masochism). ஆஸ்ட்ரிய (Austria) நாட்டு (ஆஸ்த்ரெலியா அல்லமசோக் (Masoch) 19-ஆம் நூற்றாண்டுக்காரர்; இளமையில் சில புதினங்கள் இயற்றிய அவர்பின்பு மனக் கோளாறுக்கு ஆளாகிதம்மைக்  கொடுமைப்படுத்தும்படி பெண்களிடம் கோரிஅவர்கள்   இழைத்த  துன்பத்தில்  இன்பங் கண்டார்.

4 --- அரபி கடலில் உள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றுபெயரைப்  பார்த்து, ' யப்பாலட்சம்  தீவுகளா?' என மலைக்காதீர்கள். பெயர்தான் அப்படிமொத்தம்  27 தான், அதிலும் 17 காலி.  

    பூர்விகப் பெயர் லக்கடீவ் (Laccadive); 1973-இல் லக்ஷத்வீப் (Lakshadweep)  எனப்  பெயர்  மாறியது.

5- ஒரு வயதுக்கு உட்பட்ட மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் (பெரும்பாலும் பெண்) தூங்கும்போது இறந்துவிடுவதுண்டு; கட்டில் இறப்பு (cot death) எனப் பேச்சு வழக்கிலும் சிட்ஸ் (SIDS-Sudden Infant Death Syndrom) என  மருத்துவ மொழியிலும் அழைக்கப்படுகிற இந்தத் துயர நிகழ்வுக்குக்  காரணம்   தெரியாமையால், மருத்துவப்  புதிராகக் கருதப்படுகிறது.

     அப்படி ஒரு  பெண் குழந்தை ஏணையில் இயற்கை எய்தியமை எனக்குத்  தெரியும்.

   ///////////////////////////////////////