Monday, 27 February 2017

பிள்ளையின் பாசம்


    (நான் மொழிபெயர்த்த மொப்பசானின் கதைகளுள் இதுவும் ஒன்று;  2014 பிப்ரவரி மஞ்சரியில் பிரசுரமானது)



  
அந்தச் சிற்றூரிலிருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில், அடுத்தடுத்து அமைந்திருந்தன இரு குடிசைகள். அவற்றில் வசித்தவர்கள், வளங்குறைந்த  மண்ணுடன் போராடித்தான் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது; குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை: குடிசைக்கு நான்கு!  பகல் முழுதும்  தெருவில் விளையாடிப் பொழுது போக்கினார்கள். துய்வாஷ் குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்; வல்லேன் குடும்பத்தில், மூன்று பெண், ஓர் ஆண். கஷ்ட ஜீவனம்; சூப், உருளைக்கிழங்கு, தூய காற்று ஆகியவையே முக்கிய உணவு.

  ஒரு பிற்பகல்; குதிரை வண்டியொன்று குடிசைகளின் எதிரே திடீரென நின்றது. ஓட்டி வந்த பெண், தன் பக்கத்தில் இருந்தவரை நோக்கி, " அதோ பார்ஆன்ரி, அந்தக் குழந்தைக் கூட்டத்தை. அவர்கள் புழுதியில் கும்மாளம் போடுவதும் அழகாகத்தான் இருக்கிறது" என்றாள். அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. திருமதி துய்ப்ளிஏரின் இந்த வியப்புப் பேச்சு அவருக்குப் பழக்கமானதுதான்அது அவருக்குத் துயரந் தரும்தம்மீது அவள் குற்றஞ் சுமத்துவதுபோல் அவருக்குத் தோன்றும்.

 அவள் தொடர்ந்தாள்: "அவர்களை நான் கொஞ்ச வேண்டும்அதோ அந்தக் குழந்தையைப்போல எனக்கு ஒன்று இருந்தால்!"

Wednesday, 15 February 2017

திருக்குறள் அறிமுகவுரை

  
நூல்களிலிருந்து -- 11





பேராசிரியர் தொ. பரமசிவன்



  பேராசிரியர் தொ. பரமசிவனின் கட்டுரைகள், 'உரைகல்என்னுந் தலைப்புடன் நூலாக 2014-இல் வந்துள்ளன. அவற்றுள் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்தலைப்பு:

                     திருக்குறள் அறிமுகவுரை

  "திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒன்பது அறிஞருள் ஒருவராகிய Kindersly  1810-இல்சில பகுதிகளை முதன்முதலில் அச்சு வாகனம் ஏற்றினார். அதே கால அளவில், எல்லீசன் எனத் தம் பெயரைத் தமிழாக்கியவரும் அன்றைய சென்னை மாநிலத் தலைமை நிதி அதிகாரியுமான F.N.Ellis  வள்ளுவதாசராய் வாழ்ந்திருக்கிறார். 1818-இல்சென்னையில் உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளுள் ஒன்று, சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளதுஇக்கிணற்றின் கைப்பிடி சுவரில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும் நம்  பார்வைக்கு உள்ளது. அதில்,

Monday, 6 February 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 5


காட்சி - 6
இடம் -- தெரு.   
பாத்திரங்கள் -- பாத்லேன்,  திபோ


பாத்லேன்-- என்னஇளைஞனே,   காரியத்தை நன்றாய் முடித்தேனா?
திபோ -- பே!
பாத்லேன் -- வழக்கு முடிந்துவிட்டது; இனிமேல், பே வேண்டியதில்லை. உனக்கு 
நல்ல யோசனை சொன்னேன், அல்லவா?
திபோ -- பே!
பாத்லேன் --- பயப்படாதே; இனி யாரும் உன்னை ஒன்றுஞ் செய்ய முடியாது. 
நன்றாய்ப் பேசலாம். என் கட்டணத்தைக் கொடு.
திபோ -- பே!
பாத்லேன் -- உன் பே தேவையில்லை; பணந்தான் தேவை.
திபோ -- பே!
 பாத்லேன் -- என்னகிண்டலா? தண்டனை கிடைக்காமல் காப்பாற்றினதற்குத் 
தொகை கொடுசீக்கிரம்.
திபோ -- பே!
பாத்லேன் -- பேசினபடி பணந் தரப் போகிறாயா, இல்லையா?
 திபோ -- பே!

                      (போகிறான்)

பாத்லேன் -- எவரையும் ஏமாற்ற என்னால் முடியும் என்று நினைத்திருந்தேன்;
என்னைவிடப் பெரிய ஆளாய் இருக்கிறான், ஆடு மேய்க்கிறவன்.

                                                   (முடிவு)

குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபேஉங்கப்பனுக்கும் 
பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.

                                                   [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[


Saturday, 28 January 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 4


காட்சி 5
இடம்: நீதிமன்றம்.
பாத்திரங்கள் -- பாத்லேன், நீதிபதி, வியாபாரி, திபோ.




பாத்லேன் -- கனம் ஐயா, கர்த்தர் உங்களுக்கு இன்று நல்ல போணியும் உங்கள் மனம் விரும்புவதையும் அருள்வார்.

நீதிபதி -- உங்கள் வருகை நல்வருகையாகட்டும். ஏன் போர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? அமருங்கள்.

பாத்லேன் -- உடம்புக்கு ஒன்றுமில்லை; சும்மா வந்தேன்.

நீதிபதி --- சரி. வழக்கை சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்; முன்னேரத்தில் என் வேலை முடியும்.

வியாபாரி -- என் சாட்சிக்கு அவசர வேலை; முடித்துவிட்டு இப்போது வந்துவிடுவார். கொஞ்சம் காத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி --- எனக்கு வேறு வழக்கு இருக்கிறது; காத்திருக்க முடியாது. தொடங்கலாம். நீங்கள் தானே வாதி?

வியாபாரி -- ஆமாம், ஐயா.

நீதிபதி --- பிரதிவாதி எங்கே? வந்திருக்கிறாரா?

வியாபாரி -- அதோ, வாய் மூடி, மெளனியாய்.

நீதிபதி --- இரண்டு பேரும் இருப்பதால், வாதத்தை ஆரம்பியுங்கள்.

வியாபாரி -- கனம் ஐயா, நான் இவன்மேலே இரக்கப்பட்டு, சிறு வயதிலிருந்து வளர்த்தேன். ஆடு மேய்க்கிற பருவம் வந்ததும், என் இடையனாக்கி, என்னுடைய ஆடுகளை ஒப்படைத்தேன். ஆனால், ஐயா, இவன் ஆட்டை...

நீதிபதி --- இருங்கள், சம்பளம் கொடுத்தீர்களா?

பாத்லேன் -- இல்லை, கூலி தராமல் வேலை வாங்கினது எனக்குத் தெரியும்.

வியாபாரி --- ஆ! நீங்களா?

நீதிபதி -- ஏன் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

பாத்லேன் -- பல்வலி, ஐயா. முகத்தை நிமிர்த்த முடியவில்லை.

நீதிபதி --- நீங்கள் தொடருங்கள்; சீக்கிரம் முடியுங்கள்.

வியாபாரி --- பிஏர் ஐயா, உங்களிடந்தானே கம்பளி விற்றேன்!

நீதிபதி --- கம்பளியா? எந்தக் கம்பளி?

பாத்லேன் -- சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.

வியாபாரி --- என் கம்பளியை நீங்கள் தான் வாங்கினீர்கள்!

பாத்லேன் --- நான் நினைக்கிறேன், அவருடைய இடையன் என்னிடம் கம்பளி விற்றதாயும், அதைக் கொண்டு நான் கோட் தைத்துக்கொண்டதாயும் நம்புகிறார்.

நீதிபதி -- போதும், எதை எதையோ சொல்கிறீர்கள். மன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல், வழக்கு பற்றிப் பேசத் தெரியாதா?

பாத்லேன் --- அவருக்கு எவ்வளவு பதற்றம் என்றால் எங்கே விட்டார் என்பதே தெரியாமல் போய்விட்டது.

நீதிபதி -- நம்முடைய ஆட்டுக்குத் திரும்புவோம்; அப்புறம் என்ன ஆயிற்று?

வியாபாரி -- ஆறு ஓன் எடுத்தார், ஒன்பது பிரான்.

நீதிபதி -- நீங்கள் எங்கே இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பாத்லேன் -- அப்பாவி போல் தெரிகிறார். எதிர்த் தரப்பைக் கேட்கலாம்.

நீதிபதி --- நீங்கள் சொன்னது சரி;  நீ, வா இங்கே, சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- இது என்ன சங்கடம்! எதற்கு பே? ஆடா நான்? என்னிடம் பேசு.

திபோ ---- பே!

நீதிபதி -- கிண்டலா பண்ணுகிறாய்?

பாத்லேன் -- ஆட்டு மந்தையில் இருப்பதாக நினைக்கிறானோ?

வியாபாரி -- என் துணியை வாங்கின ஆள்,  நீங்களல்ல என்று சொல்லுங்கள்
பார்ப்போம். கனம் ஐயா, உங்களுக்குத் தெரியாது, இவர் எவ்வளவு தந்திரமாய்...

நீதிபதி --- நிறுத்துங்கள்; கிறுக்கா நீங்கள்? அதை விட்டுவிட்டு வழக்குக்கு வாருங்கள்.

வியாபாரி - சரி, ஐயா. அது என்னைப் பாதித்த விஷயம்; ஆனால் இன்றைக்கு அது பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டேன்; இன்னொரு நாள் பார்த்துக்கொள்கிறேன். ஆறு ஓன் கொடுத்ததை சொன்னேன். என் ஆடுகள்... மன்னியுங்கள், இந்த வழக்குரைஞர்... என் இடையன் ஆடு மேய்த்தபோது... மூன்று வெள்ளி தருவதாக சொன்னார். விஸ்வாசமாக இருப்பேன் என்றான். மூன்று ஆண்டு ஆயிற்று. பணமுந் தரவில்லை, துணியுந் தரவில்லை. ஆரோக்கியமாய் இருந்த ஆடுகளைக் கொன்று தின்றுவிட்டு ரோமத்தையும் விற்றிருக்கிறான். கம்பளி வாங்கியவர், வீட்டுக்கு வா, வெள்ளிப் பணம் தருவேன் என்றார்.

நீதிபதி -- என்னய்யா சொல்கிறீர்கள்? கருத்துமில்லை, அர்த்தமுமில்லை; இதிலே கொஞ்சம்; அதிலே கொஞ்சம். ஒன்றுமே புரியவில்லை.

பாத்லேன் -- ஆடு மேய்க்கக் கூலி கொடுக்கவில்லை.

வியாபாரி -- என் பரிதாப நிலைமை எனக்குத்தான் தெரியும்; உங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது.

நீதிபதி -- அப்படி யென்ன உங்களுக்கு?

வியாபாரி -- இவர் ஏமாற்றிவிட்டார்; ஆனால் என் வாக்குறுதிப்படி ஒன்றுஞ் சொல்லமாட்டேன் ; ஆடு பற்றிப் பேசுவேன்.

நீதிபதி -- சீக்கிரம் பேசி முடியுங்கள்.

பாத்லேன் -- இந்தப் பையனுக்கு வழக்குரைஞர் இல்லாமல் எதுவும் சொல்லத் தெரியாது போலிருக்கிறது; நீங்கள் அனுமதித்தால், நான் கேசை எடுத்துக்கொள்வேன்.

நீதிபதி -- என்ன தொகை கிடைக்கப்போகிறது?

பாத்லேன் -- ஒன்றும் வேண்டாம், ஏழைக்கு உதவி.

நீதிபதி -- சரி.

பாத்லேன் -- இங்கே வா, உன் தரப்பை சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- பே யா? என்ன பே? உன்னுடைய நன்மைக்காகத்தான் நான் பேசுகிறேன்; புரிகிறதா?

திபோ -- பே!

பாத்லேன் -- ஆமாம், இல்லை என்று சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- ஒழுங்காகப் பேசாவிட்டால் உனக்குத்தான் கஷ்டம்.

திபோ -- பே!

பாத்லேன் -- இந்த இளைஞன் ஒரு பைத்தியம் போல் தெரிகிறது, ஐயா; இவனை மந்தைக்கு அனுப்புங்கள்.

வியாபாரி -- இவனா பைத்தியம்? உங்களைவிடப் புத்திசாலி; நன்றாகப் பேசுவான்.

பாத்லேன் - அப்படித் தெரியவில்லை; ஆடு மேய்க்க அனுப்புங்கள், ஐயா; கிறுக்குகளை வைத்துக்கொண்டு வழக்கா?

வியாபாரி -- அனுப்புவதா? என் வாதத்தைக் கேட்காமலா?

நீதிபதி -- வேறென்ன செய்ய? அவன் பேச முடியாதவனாக இருப்பதால்...

வியாபாரி -- ஐயா, ஐயா. என்னைப் பேச விடுங்கள்; என் வழக்கைக் கேளுங்கள்.

நீதிபதி -- வீண் வேலைதான்.

பாத்லேன் -- இரண்டு பேரும் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

வியாபாரி -- நீங்கள் பணந் தராமல் துணியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போனீர்கள்; அது யோக்கியர்களின் வேலையல்ல.

பாத்லேன் -- யாரிடமோ கொடுத்துவிட்டு என்னைக் கேட்கிறீர்கள்.

வியாபாரி -- உங்கள் முகம், குரல், கோட் எல்லாம் எனக்குப் பரிச்சயம்.நல்லவர் கெட்டவர் தெரிந்துகொள்ள எனக்குப் புத்தி இருக்கிறது. நீதிபதி அவர்களே, என் மன சாட்சிப்படி...

பாத்லேன் -- ஐயா, முடித்து வையுங்கள்; இரண்டு மூன்று ஆடு, அற்பம். இதற்குப் போய் வழக்கா?

வியாபாரி --- ஆடாவது, மாடாவது! உங்களிடந்தான் பேசுகிறேன். என் பணத்தைக் கொடுங்கள்.

நீதிபதி -- இதென்ன குளறுபடி!

வியாபாரி --- நான் கேட்பது ...

பாத்லேன் -- இரண்டு ஆட்டைத் தின்றால்தான் என்ன? அவன் எவ்வளவோ உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருப்பான்.

வியாபாரி -- பாருங்கள் ஐயா. நான் துணி பற்றிக் கேட்கிறேன், இவர் ஆடு பற்றிப் பேசுகிறார். ஆறு ஓன்! எங்கே?

பாத்லேன் -- பாவம், அந்தப் பையன்! சில ஆட்டுக்காகத் தண்டிக்கப் போகிறீர்களா?

வியாபாரி -- இப்படிப்பட்ட ஆளிடம் துணி விற்கச் செய்தது பிசாசின் வேலையாய்த்தான் இருக்கும். ஐயா, அவரிடம் நான் கேட்பது...

நீதிபதி --- நீங்கள் கேட்பதை நான் தள்ளிவிடுகிறேன். இந்தா, நீ போ மந்தைக்கு.

திபோ --- பே!

வியாபாரி --- ஐயையோ, ஐயா, எனக்கு சேர வேண்டிய..

பாத்லேன் -- இவர் ஓயவே மாட்டாரா?

வியாபாரி -- உங்களுடன்தான் தகராறு; சாமர்த்தியமாய்ப் பேசி ஏமாற்றித் துணியை எடுத்துப் போனீர்.

நீதிபதி --- உங்கள் இரண்டு பேராலும் பெரிய தொந்தரவு. இந்தாப்பா, மன்றம் உன்னை விடுவிக்கிறது, புரிகிறதா? போ, திரும்பி வராதே.

பாத்லேன் --- ஐயாவுக்கு நன்றி சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- போதும் பே! போய்ச் சேர்.

வியாபாரி -- நியாயமா அவனை விடுவது?

நீதிபதி -- நான் வேறு வழக்கை விசாரிக்க வேண்டும்.


*******

 தொடரும்...

(படம் நன்றி இணையம்)