Thursday, 15 November 2018

தமிழ் சினிமா: தொடக்கக் காலம்




   திரைப்படத்தின் வருகைக்கு முன்பு, மாலைப் பொழுதுகளை இன்பமாகக் கழிப்பதற்கு நம் முன்னோர் பாரத ராமாயணக் கதை கேட்டல் (தொடர்ச்சியாகப் பல நாள்), தெருக்கூத்து, வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம், மேடை நாடகம், நடனம், கரகாட்டம், கதா காலட்சேபம் முதலிய நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தினர்.

   சில நாடகக் கம்பெனிகள் நகரம் நகரமாய்ப் போய் மாதக்கணக்கில் தங்கிப் பல்வேறு நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்வித்தன. அவற்றுட் சில மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கன்னையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி, டி.கே.எஸ். பிரதர்ஸ் (டி.கே.சண்முகம்) கம்பெனி. இவற்றுள் நடித்தவர்கள் பின்னாளில் திரையில் தோன்றினார்கள்.

   படம் வந்த புதிதில் அதை சினிமா என ஒரு சாராரும் பயாஸ்கோப் என மறு சாராரும் சுட்டினர்; பயாஸ்கோப் விரைவிலேயே வழக்கொழிந்தது.

   பெரும்பாலும் தென்னங்கீற்றுக் கொட்டகைகளில் படங் காட்டினார்கள். ஆறு மாதத்துக்கு மட்டும் அரசு உரிமந்தரும். பின்பு பிரித்துவிட வேண்டும். மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்ட நடவடிக்கை. வேறிடத்தில் புதுக் கொட்டகை எழுப்பி அனுமதி வாங்கி நடத்துவர். அது touring Talkies எனப்பட்டது; பேச்சு வழக்கில் ‘’கீத்துக் கொட்டாய்‘’. உரையாடல், பாட்டு எல்லாம் அக்கம்பக்க வீடுகளுக்குத் துல்லியமாய்க் கேட்கும். தொலைவிலிருந்து சில ரசிகர் வந்து கொட்டகை யருகில் அமர்ந்து கேட்டு மகிழ்வதுண்டு. கல் கட்டடங் கட்டி நிரந்தரத் தியேட்டர் உருவாகிய பின்பு சத்தம் வெளி வரவில்லை.

   இரண்டிலும் உள்ளமைப்பு ஒன்றுதான். திரைக்கெதிரில் சுமார் ஐம்பது பேர் அமரக் கூடிய மணல் தரை; இதற்குப் பின்புறம் முறையே பெஞ்சு, பேக் பெஞ்சு, நாற்காலி. ஆண் தரைக்குப் பக்கவாட்டில் பெண் தரை. இரண்டுக்குமிடையே தடுப்புக் கட்டைச் சுவர். பெண்களுக்கு தரை மட்டுமே கதி. உயரத்தில் உட்கார அவர்களுக்கு வீட்டிலேயே அனுமதியில்லை. முஸ்லிம் பெண்களுக்கோ படம் பார்க்கவே உரிமை கிடையாது. இஸ்லாமிய ஆண் வர்க்கம் தடை விதித்திருந்தது.

   கட்டணங்கள் ஓர் அணா (1/16 ரூபாய்), இரண்டணா, நான்கணா (கால் ரூபாய்), ஆறு அணா. கவுண்ட்டரில் வாங்கிய டிக்கட்டை உள்ளே கொண்டுபோய் சீட்டு கிழிப்பவரிடம் தரவேண்டும்; (ஒவ்வொரு வகுப்புக்கும் தனிக் கிழிப்பாளர்) அவர் கிழித்துப் பாதியைத் திருப்பிக் கொடுப்பார். அது சோதனைக்கு உரியதாகையால் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பரிசோதகர் வந்து கேட்கும்போது அதைக் காட்டுவது அவசியம். சீட்டில், “பாதி டிக்கட் பரிசோதனைக்கு உரியது; வகுப்பு மாறி உட்கார்ந்தவரிடம் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அச்சடித்திருக்கும். மோசடிகளைத் தடுக்க இந்த ஏற்பாடு.

   3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்குக் கட்டணமில்லை. நாலைந்து வயதுப் பிள்ளைகளை அம்மா, அக்கா தங்கள் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு உட்புக முயல்வது உண்டு; விழிப்புடைய கிழிப்பாளர், கீழே இறக்கிவிட உத்தரவிட்டுச் சிறுவர்களின் உயரத்தைக் கவனித்து டிக்கட் வாங்கச் சொல்லிவிடுவார்; அதிர்ஷ்டம் இருந்தால், கும்பலில் கோவிந்தா போட்டு நுழைந்துவிடலாம்.

   ஒரே ப்ரோஜெக்டர்தான் பயன்படுத்தினர்; ஒரு ரீல் முடிந்ததும், விளக்கொன்றை ஏற்றிவிட்டு, அடுத்த ரீலை மாட்டுவர். ஐந்து நிமிடம் ஆகும். (தாமதமானால் சீட்டிகள் காதைத் துளைக்கும். “போடுடா படத்தை!” என்ற உரத்தக் குரல் கட்டளைகள் பிறக்கும்) அந்த நேரத்தில் சிறுவர்கள் முறுக்கு, பிஸ்கட், மிட்டாய், சோடா, பாட்டுப் புத்தகம் முதலியவற்றை விற்பார்கள். இடைவேளை கால் மணி நேரத்திலும் வாணிகம் நடைபெறும்.

   பெண்கள் பகுதியிலிருந்து சில சமயங்களில் கூச்சல் கிளம்பும்; சிறு சிறு தகராறுகள்; படம் ஓடிக் கொண்டிருக்கையில் கூட சண்டை நடக்கலாம். ஆண்களிடமிருந்து “சத்தம் போடாம இருங்கடி!” என்ற உரத்த கண்டனக் குரல்கள் எழுந்து அமைதியுண்டாக்கும். மற்றபடி பெரும்பாலும் பரிபூர்ண நிசப்தம்தான்.

   மக்களைக் கவர்ந்திழுப்பதற்குப் புதுப்புது வழிகளில் விளம்பரஞ் செய்தனர்;

1.     நாள்தோறும் பகல் வேளைகளில் ஒரு பார வண்டியில் அமர்ந்து பேண்டு வாத்தியம் ஒருவர் இசைக்க, முனையில் உட்கார்ந்திருப்பவர் வழங்குகிற துண்டறிக்கையைப் பெரியவர்கள் எளிதாகப் பெறுவார்கள்; சிறுவர்களோ, “அண்ணேன்! அண்ணேன்!” என்று கெஞ்சிக் கொண்டு கை நீட்டியபடிக் கொஞ்ச தொலைவு ஓடித்தான் வாங்கவேண்டும். அப்படியோடிய அனுபவம் எனக்கு உண்டு. துண்டறிக்கையில் படத்தின் பெயர், நடிகர்களின் பெயர்கள், முக்கிய பாட்டுகளின் தொடக்க அடிகளைக் குறித்துக் “கேட்கத் தவறாதீர்கள்” என்ற வாசகம் இடம் பெறும். வண்டியின் இரு புறமும் பெரிய விளம்பரத் தட்டிகள் கட்டியிருக்கும்.


 2.     மாலை நேரங்களில், படம் தொடங்குவதற்கு ½ மணி முன்பு கொட்டகை வாயிலில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து ஒருவர் தொடர்ந்து பேண்டு கொட்டுவார். வாசலின் இரு புறங்களிலும் படத்தின் முக்கிய காட்சிகளடங்கிய பத்துப் பதினைந்து போட்டோக்கள் (Stills-cabinet size) வைக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கண்டு களிப்பதற்கு ஒரு கூட்டம் கூடும்; ஏற்கனவே படம் பார்த்தவர்களும் போய் போட்டோ பார்த்துத் தம் நினைவுகளை மலரச் செய்வார்கள்.


 3.     சில படங்களின் சீட்டுகளை வெடியில் வைத்து வான வீதியில் பறக்க விடுவதுண்டு. நாளும் நேரமும் முன்கூட்டியே அறிவித்துவிடுவர். டமார்! என ஒரு சத்தம் எங்கிருந்தோ கேட்கும். அண்ணாந்து விண்ணில் அங்குமிங்கும் தேடினால் சிறு பாராசூட் ஒன்று பறந்து செல்வதைக் காணலாம். அதனடியில் தொங்கும் சிறு பையில் இரு டிக்கட் வைத்திருப்பார்களாம். அது போகுந்திசை நோக்கி விரட்டிக் கொண்டு ஓடுவோம். அது பாட்டுக்கு ஜாலியாய்க் காற்றில் மிதந்தபடி அப்புறமும் இப்புறமும் அசைந்துகொண்டு பயணிக்கும். தங்கு தடையுண்டோ அதற்கு? நாமோ குறிக்கிடும் வீடுகளின் மேலேறி ஓடுகளை மிதித்து நொறுக்கிக்கொண்டு விரைய முடியுமா? பக்கத்துத் தெரு வழியாய்த் தான் ஓட வேண்டும். ஒரு கட்டத்தில் அது எட்டாக் கனி என்ற எதார்த்தத்தை உணர்ந்து, நின்றுவிட வேண்டியதுதான்.


 உண்மையாகவே அதில் டிக்கட் இருந்ததா? எத்தனை? எந்த அதிர்ஷ்டசாலியின் கையில் சிக்கியது? அல்லது எல்லார்க்கும் பே பே காட்டிவிட்டு மறைந்ததா? விளங்காத மர்மம். ஊடகங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் எந்த மர்மமும் இறுதிவரை மர்மம்தான். 

ஆக, அது ஒரு சாமர்த்தியமான விளம்பரம்.

4.     அதைக் காட்டிலும் நூதனமான, புத்திசாலித்தனமான விளம்பரமொன்றை ஒரேயொரு தடவை செய்தனர்;


ஒரு காலை நேரத்தில் சுவர்களில் பெரியதொரு அறிவிப்பு காணப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த செய்தி:

என் மகளைக் கடத்திச் சென்றவனைக் கண்டுபிடித்து அவளை மீட்டுத் தருபவருக்கு ரூபாய் பத்தாயிரம் தரப்படும்.

                                                                              இப்படிக்கு,
                                                                     சிவசங்கரன் பிள்ளை.

அடேயப்பா! பத்தாயிரம்! (இன்றைய மதிப்பு 1 கோடி).

வாசித்தவர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டார்கள். ஓரிழவும் புரியவில்லை. இது குறித்தே எங்கும் பரபரப்பான பேச்சு!

மறுநாள் புதிய அறிவிப்பு:

பெண்ணைக் கடத்தியவன் நானே! என்னைச் சந்திக்க இன்று மாலை அல்ஹாம்ப்ராவுக்கு வருக.

                                                                                             இப்படிக்கு,
                                                                                         மாயா மாயவன்.

பக்கத்தில் மாயா மாயவன் பட விளம்பரம்!


    வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் கண்விழித்துப் புண்ணியம் சம்பாதித்து நல்ல கதி அடைவதற்கு வசதியாக நான்கு காட்சிகள் காட்டப்பட்டன. தியேட்டருக்கு ஒரு படம் என மாறி மாறிப் பார்த்து இரவைக் கழித்துவிடலாம். ஆயினும் எல்லார்க்கும் இது முடிவதில்லை. மூன்றாங் காட்சியிலேயே மூத்தவளின் வசப்பட்டுவிடுவோர் நிறையப் பேர்.

   தமிழ்ப் படங்கள் போதிய எண்ணிக்கையில் உற்பத்தி ஆகாமையால் சிறிய ஊர்களிலும் பிற மொழிப் படங்கள் திரையிடப்பட்டன. நிறைய இந்திப் படங்கள் எங்கள் ஊரான காரைக்காலுக்கும் வந்தன. நினைவில் நிற்பவை: ரத்தன், அன்மோல் கடி, ஜுக்னு, ஹண்டர்வாலி, டாக்கூ கி லட்கி, கஜான்ச்சி, ஆவாரா. அவற்றின் செவிக்கினிய பாட்டுகளைத் திரையிலும் இசைத் தட்டிலுங் கேட்டு தமிழ்ச் சமுதாயம் சொக்கிப் போயிற்று. இது குறித்து எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் தம் ”நினைவுகளின் சுவட்டில்” என்னும் நூலில் (பக்.76) எழுதியுள்ளதை இங்கே பதிகிறேன்:

“ரத்தன் பாட்டுகள் தமிழ்நாடு பூராவும் எதிரொலித்தன. நிறையத் தமிழ்ப் படங்களில் அந்தப் படத்தின் மெட்டுகளைக் காப்பியடித்துப் பாட்டுகள் வந்தன. அன்மோல் கடியும் பாட்டுகளுக்குப் புகழ் பெற்ற படம். இந்த இரண்டு படங்களும் தமிழ்ப் படவுலகில் ஒரு பெரிய பூகம்ப மாற்றத்தை விளைவித்தன.”

அவரது கூற்றுக்குச் சான்றாக நான் ஒரு காட்டு தருகிறேன்:

ரத்தன் – அக்யாங் மிலாக்கே
ஜியாபர் மாக்கே
ச்சலே நஹீஞ் ஜானா
ஓ! ச்சலே நஹீஞ் ஜானா
ஓ!ஓ! ச்சலே நஹீஞ் ஜானா

தமிழ் – கொஞ்சுங் கிளி சோலை
நெஞ்சை யள்ளும் வேளை
மனோகர மாரா
ஓ! மனோகர மாரா
ஓ! ஓ! மனோகர மாரா.


  அன்மோல் கடியிலும் ஜுக்னுவிலும் கதாநாயகி நூர்ஜகான்; அந்தக் கால பி. சுசீலா. அவரது இனிய குரல், கேட்டாரை மயக்கிற்று. 1947-இல் அவர் பாக்கிஸ்தானுக்குப் போய்விட்டார்.

K.L. சைகால்
   இந்தியில் பிரமாதமாய்ப் பாடுகிற ஒருவரின் பெயர் சைகால் என்று கேள்விப்பட்டிருந்தேன். தென்னிந்திய சைகால் P.G. வெங்கடேசன் என்ற விளம்பரத்துடன் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. இவர் நடித்த ‘தக்ஷ யக்ஞம்’ பார்த்தேன். அதில் ஒரு பாடல் பாடினார். சில அடிகள் இன்னம் மறந்துபோகவில்லை.

பவானியை சதியெனவே நீயறிந்திடாயோ மூடா?
பண்ணின உன் பாபமதின் பலனறிகு வாயோடா?
ஈசனே உன் கோபம் இவ்வுலகம் அறியாதா?
ஈசனுக்குக் கோபம் வந்தால் ஏழ்கடலுந் தீயாதா?

   சுமார்தான். அவரைக் காட்டிலும் மேன்மையாய் பாகவதரும் மகாலிங்கமும் பாடினார்கள். இந்தி சைகால் மெய்யாகவே தலைசிறந்த பாடகர் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். அவரது பாட்டைக் கேட்டு மகிழும் பேறு எனக்குக் கிட்டவில்லை. எழுத்தாளர் கி.ராஜ நாராயணனுக்குக் கிடைத்திருக்கிறது. அவர், சைகால் என்று ஒரு படுபாவி பாடுவாம் பாருங்கள்; அய்யோ! கொள்ளை கொண்டவன் என்னை என்று சொல்லி வியந்தாராம். (கழனியூரான் நூல்: கி.ரா. சங்கீத நினைவலைகள்)

   அப்போதே இந்திப் படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தனர்; டைகர் நாயும் பகதூர் குதிரையும் பிரசித்தம்.

   தெலுங்குப் படங்களும் தமிழர்களை மகிழ்வித்தன: தல்லி பிரேமா, கொல்லபாமா, பானுமதி அறிமுகமான ஸ்வர்க்கசீமா. இதில் அவர் பாடிய ’பாவுரமா’ ரொம்ப ஹிட்.

   டார்ஜான் என்கிற ஆங்கிலப் படம் புகழ்பெற்றது; இதை முன்னோடியாய்க் கொண்ட வனராஜா கார்ஜான் தமிழில் தயாரானது.

   டப்பிங் தோன்றாத காலம். மொழி புரியவில்லையென மக்கள் எதையும் புறக்கணிக்கவில்லை.

   தமிழில் சண்டைப் படங்களும் எடுக்கப்பட்டன. பேர் பெற்ற ஸ்டண்ட் நடிகைகள் K.T. ருக்மணியும் R.B. லட்சுமி தேவியும்.

     
  சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்தவர்கள் M.K. தியாகராஜ பாகவதரும் T.P. ராஜலெட்சுமியும். இவர் ஏராளப் படங்களின் கதாநாயகி; கோவலன், சாவித்ரி – சத்யவான், ஹரிச்சந்திரா, நந்தகுமார், மிஸ். கமலா. ஆயினும் நடிகர்களுக்கு சமுதாயம் மதிப்பு தரவில்லை. “கூத்தாடிகள்” என்ற உதாசீனப் பெயர்தான் அவர்களுக்குக் கிடைத்தது.

   T.P. ராஜலெட்சுமி முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்கு உரியவர். மிஸ். கமலாவை அவரே இயக்கினார்.

   நாட்டிய தாரகை பத்மா சுப்ரமண்யத்தின் தந்தை K. சுப்ரமண்யம் பேர் பெற்ற தமிழ் இயக்குநர். பவளக்கொடி (பாகவதர் அறிமுகம், 55 பாட்டு!), சேவா சதனம் (அறிமுகம் எம்.எஸ். சுப்புலெட்சுமி), முதல் பெண் குழந்தை நட்சத்திரம் இடம்பெற்ற பால யோகினி, S.D. சுப்புலெட்சுமி நடித்த சதாரம், அனந்த சயனம் எனப் பற்பல படங்களை இயக்கியவர் அவர்.

   தமிழரல்லாத இயக்குநர்களும் நல்ல தமிழ்ப் படங்கள் உருவாகக் காரண கர்த்தாக்கள்:

எல்லிஸ் டங்கன் படப்பிடிப்புத் தளத்தில்
எல்லிஸ் R. டங்கன் (Dungan) என்னும் அமெரிக்கர்: அம்பிகாபதி, சகுந்தலை, மீரா, மந்திரிகுமாரி.

    
ஆங்கிலேயர் எம்.எல். டாண்டன் (Tandon):  யயாதி, தேவதாசி.

Y.V. ராவ்
நடிகை லெட்சுமியின் தகப்பனார் Y.V. ராவ் (தெலுங்கர்): சிந்தாமணி, சாவித்திரி.

வேறொரு தெலுங்கர் B.R. பந்துலு: நாமிருவர், கர்ணன், வீர பாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ஆயிரத்தில் ஒருவன்.

   உலகப் போரின் போது பிலிம் பற்றாக்குறை காரணமாக 14,000 அடிக்குள் படம் முடியவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. களிப்பு நேரக் குறைப்பால் ரசிகர்கள் பெரிதும் அதிருப்தியுற்றார்கள். ஆனால் வெளிக்காட்ட இயலவில்லை. நம் அரசாய் இருந்தால் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி, தியேட்டர் முற்றுகை, சாலை மறியல், கொடும்பாவி கொளுத்தல், பேருந்து நொறுக்கல், ஊர்தி எரிப்பு, பொதுச்சொத்து சூறை என அடேயப்பா! எத்தனை யெத்தனை வழிகளில் எதிர்ப்பைக் காட்டலாம். வெள்ளைக்காரப் பாவி இந்த சுதந்தரங்களைத் தரவில்லையே!

படங்கள் உதவி - இணையம்

Tuesday, 30 October 2018

திரைப்படம் கடந்துவந்த பாதை



  தொடக்கப் படங்களில் ஒலி சேர்க்கப்படவில்லை; அதற்கான தொழில்நுட்பம் அறியாக் காலம். அவை ஊமைப்படம் எனப்பட்டன. கதை எளிதில் புரிவதற்காக நிகழ்ச்சிகளை அதிகமாய்ச் சேர்த்திருந்தார்கள்.

  நான் சிறு வயதில் “பம்பாய் மெயில்” என்ற ஊமைப்படம் பார்த்தேன். கிணற்றிலிருந்து ஓராளைத் தோளில் தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறிவந்த காட்சியும் இரண்டு பேர் எதிரெதிரே ரிவால்வரை நீட்டியபடி நின்ற காட்சியும் நினைவில் நிற்கின்றன.

  பின்பு ஒலியுடன் வந்த படங்களின் விளம்பரத்தில், “தமிழ் பேசும் பாடும் படம்” என்ற விளக்கம் இடம்பெற்றது. அவற்றில் உரையாடல் கொஞ்சம்; பாட்டுகள் எக்கச் சக்கம்! “கர்ணாமிர்தமான 50 பாடல்” என்று விளம்பரஞ் செய்தனர்.

  “வள்ளி திருமணம்” படத்தில் முருகனிடம் நாரதர், தாம் வழியில் நூதனமான ஒரு கனியைக் கண்டதாகவும் அது அவன் உண்பதற்குப் பொருத்தமானது என்றும் கூறினார்.

  உடனே ஒரு வினா-விடைப் பாட்டு:

-    மார்க்கத்தில் கண்ட கனிதனக்குள்ள
  சிலாக்கிய மென்ன முனியே?

-    பார்க்கும் பொழுதே ஐம்புலனுக்கும்
  சுவைதருந் தீங்கனியே!

-    பட்சிகள் கண்டா லிந்நேரம் அதைப்பற்றிப்
  பட்சித்திடாதோ சொல்வீர்.

-    பட்சிகள் கண்டால் பறந்தோடு மாகையால்
  பட்சமுடன் செல்வீர்.

-    எட்டாத கொம்பில் இருந்திடில் அக்கனி
  எப்படிக் கொய்திடலாம்?

-    எட்டும்படிக் கிரு கொம்புண் டதைப்பற்றி
-                ஏறிப்பறித் திடலாம்.




பவளக்கொடியில் அல்லியரசியின் மகன் பவளத்தேர் கேட்டான். அவ்வளவுதான்! பாட்டு!

-    மாணிக்கத்தால் தேரியற்றி
நானுனக்குத் தாரேண்டா.

-    மாணிக்கத்தேர் தந்தை தந்தார்
ஆதலாலது வேண்டாம்.

-    நீலக்கல்லால் தேரியற்றி
நானுனக்குத் தரேண்டா.

-    நீலத்தேரோ கிருஷ்ணன் தந்தார்
ஆதலாலது வேண்டாம்.


அல்லிக்கு வேறு வழியில்லாமற் போகவே பணிப் பெண்களை நோக்கிப் பாடுகிறாள்:

பவளமெங்கே விளைகிறது பாவையரே
பவளமெங்கே?
பாலகன்தேர் வேண்டுமென்ற தாலதனைக்
கொண்டுவரப் பவளமெங்கே?
எத்தனை தூரம் இருக்குதக்காடு?
யாவர்க்குரிய இடம்? ஏது ஏற்பாடு?

(மீதி மறந்து போயிற்று.)

இவ்வாறு எதற்கெடுத்தாலும் பாட்டு.

  ஒவ்வொரு படத்துக்கும் உரிய எல்லாப் பாட்டுகளும் அடங்கிய புத்தகம் கொட்டகையில் விற்பனை செய்யப்பட்டது. விலை ஓர் அணா (1/16 ரூபாய்).

  சொந்தக் குரலில் இனிமையாய்ப் பாட வல்லவர்களே நடிக்க வாய்ப்புப் பெற்றனர். S.D. சுப்புலெட்சுமி, T.P. ராஜலெட்சுமி, V.A. செல்லப்பா, M.K. தியாகராஜ பாகவதர், P.U. சின்னப்பா, T.R. ராஜகுமாரி, T.R. மகாலிங்கம் (குழந்தை நட்சத்திரம்) முதலியோர் ஒளிவீசினர்.



  ஆரம்பத்தில் ஒரு படத்துக்கு இரு தலைப்பிட்டனர்:

-    சந்திரசேனா அல்லது மயில்ராவணன்
-    சிந்தாமணி அல்லது பில்வமங்கள்
-    மோகினி ருக்மாங்கதா அல்லது ஏகாதசி விரத மகிமை
-    சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
-    வசந்த சேனா அல்லது மிருத் சகடிகா
-    சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு
-    பாலாமணி அல்லது பக்காத் திருடன்

  இரு வேறு படங்களுள் ஏதாவதொன்றைக் காட்டுவார்கள் போலும் என்று தவறாய் நினைத்தவர்கள் உண்டு.

  பின்னர் நீள நீளமான தலைப்புகள் தோன்றின;

- கணவனே கண்கண்ட தெய்வம்
- மணாளனே மங்கையின் பாக்கியம்
-    ஆயிரந் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
-    பானை பிடித்தவள் பாக்கியசாலி
-    பெற்ற மகனை விற்ற அன்னை
-    யானை வளர்த்த வானம்பாடி
-    தாய் மகளுக்குக் கட்டிய தாலி
-    ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது
-    பூ ஒன்று புயலானது
-    தை பிறந்தால் வழி பிறக்கும்
-    தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
-    ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

  பாட்டுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வந்தது; வசனம் அதிகமாய் இடம் பெற்றது. ஆனால் தரம் சுமாராய்த்தான் இருந்தது.

  ஆர்ய மாலா படத்தில் D.V. சாரி வசனம்:

பார்வதி – இளைய கன்னி எங்கே?

சிவன் -  இறந்தாள் இளைய கன்னி; கொன்றுவிட்டான் இந்தப் பாதகன். நீச்சா, பதிதா, என் முன்னே நில்லாதே, போ. நீ பூலோகத்தில் பல ஜன்மங்கள் எடுத்துக் கடைசி ஜன்மத்தில் நீச்சரால் வளர்க்கப்பட்டுக் காமாந்தகனாய்த் திரிந்து எந்த இளைய கன்னி உயிரிழக்கக் காரணமானாயோ, அவள் பொருட்டே கழுவிலேற்றப்படுவாய்.

பார்வதி – மைந்தனிடமா இந்தக் கோபமும் சாபமும்?

சிவன் – மைந்தன்! கொலைகாரனை மைந்தன் என்று கூற உன் நா கூசவில்லையா?

பார்வதி – போகட்டும், க்ஷமித்துவிடுங்கள்.

சிவன் – கொலைக் குற்றத்துக்கா க்ஷமை?”

உரையாடலை மேம்படுத்தினார் பாரதிதாசன். 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் அவரது உரையாடலுக்குக் காட்டு:

சாமியார் – அடக்குவார்கள், அடங்காதே.
சிந்தாமணி – கிடக்கிறார்கள், கோழையல்ல நான்.

இருந்தாலும் அம்பிகாபதி, சிவகவி, கண்ணகி ஆகிய படங்களின் வசனந்தான் மக்களைக் கவர்ந்தது. பிரமாதமாய் உரையாடல் இயற்றிப் புகழடைந்தார் இளங்கோவன். அவரைத் தொடர்ந்து அண்ணாதுரை, கருணாநிதி, கண்ணதாசன், பாலச்சந்தர் ஆகியோர் சுவை மிகுந்த, பொருள் பொதிந்த, இலக்கிய நயங்கமழ்ந்த வசனம் எழுதிப் படங்களின் வெற்றிக்கு உதவினர்.



  காலஞ்சென்ற எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் தம் “நினைவுகளின் சுவட்டில்” என்ற நூலில் எழுதியுள்ளதை (பக். 147) இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

  “அண்ணாதுரையின் ஓர் இரவு, நல்ல தம்பி போன்ற படங்கள் தமிழ் சினிமா உலகையே உலுக்கிவைத்தன. கதை வசனம் சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. என்ற எழுத்துகளைத் திரையில் பார்த்ததுமே தியேட்டர் கைதட்டலில் அதிரும். தமிழ் சினிமாவில் இது போன்று நிகழ்வது அதுதான் தொடக்கம்.

  பிடித்த பாட்டுகளை மக்கள் பாடிப் பாடிப் பரவசமடைந்தது போன்றே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்லிச் சொல்லி இன்புற்றார்கள்.

  பாடலாகட்டும் வசனமாகட்டும் எல்லாம் செவிக்கின்பம் நல்குவதுதானே? (audio). படத்தில் காட்சிக்கல்லவோ (video) முதன்மை தரவேண்டும்?  அதை நோக்கி இப்போது தமிழ் சினிமா முன்னேறுகிறது.  

(படங்கள் உதவி - இணையம்)


Wednesday, 10 October 2018

குழந்தைகளும் தெய்வங்களும்


நூல்களிலிருந்து – 20


குழந்தைகளும் தெய்வங்களும்

(2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” என்னும் நூலில் அவர் தமது வாழ்க்கை வரலாறு பற்றி எழுதியிருக்கிறார். பக். 262 -267 –இல் மேற்படி தலைப்பில் கூறப்பட்டவற்றைத் தொகுத்துப் பதிகிறேன். நூல் பதிப்பித்த காலம் 2009.)

  கணினி வாங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதை வைத்துக்கொண்டு என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள்! எனக்கு இது ஒரு தட்டச்சு யந்திரமாகத்தான் இருக்கிறதே ஒழிய, இதற்கு மேல் அதன் எல்லையற்ற சாத்தியங்களை எனக்குச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஐந்து வயது சின்ன சின்ன வால்கள் கூட என்ன அனாயாசமாக இதன் எதிரில் உட்கார்ந்து என்னென்னமோ செய்கிறார்கள்! எப்படி இந்தக் குஞ்சு குளுவான்களுக்கு இவ்வளவு சீக்கிரம் புரிந்துவிடுகிறது? இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  புதிய தலைமுறைக் குழந்தைகள் தமக்கு முந்திய அத்தனை தலைமுறைகளும் சேர்த்து வைத்துள்ள அறிவார்ந்த அனுபவ சேகரிப்புக்கும் வாரிசுகள்; அவ்வளவும் அவர்களுக்குப் பிதிரார்ஜிதமாகக் கிடைத்துவிடுகின்றன. இரண்டாவது அவை வளரும் சூழல். இந்தக் குழந்தைகளுக்கு இப்போது கிடைப்பதை விட நமக்கு நம் சிறு பருவத்தில் கிடைத்தது மிக மிகக் குறைவு.

  இருப்பினும் நம் குழந்தைகளுக்கு நாம் மோழைகள்தான்.

  எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் பங்களாதேஷின் ஓர் ஒதுங்கிய கிராமத்துச் சிறுவர்களுக்குத் தன்னைத் தெரிந்திருக்கிறதே, தன்னை ஓர் ஹீரோவாகக் கொண்டாடுகிறார்களே என்று பிரஞ்சுக் கால்பந்தாட்ட வீர்ர் ஜினதீன் ஜிடானுக்கு ஒரே வியப்பு. அந்தக் குழந்தைகள் ஜிடானைச் சூழ்ந்துகொண்டு அட்டகாசமாக ஆர்ப்பரிப்பதைப் பார்த்து மனம் எவ்வளவு மகிழ்கிறது! எனக்கு வயது 74; ஆனால் நான் ஜிடானைப் பற்றி அறிந்ததே இந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போதுதான். இந்தக் குழந்தைகளுக்கு 9 – 10 வயதிலேயே ஜிடானைத் தெரிந்துவிட்டது. உலகம் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டது. இதெல்லாம் டி.வி. செய்த மாயம் என்று சொல்லலாம்.

  1957-ஆம் வருடம். நான் தில்லிக்குச் சென்ற புதிது. கரோல்பாகில் ஒரு சங்கீத விழா. ஒரு நாள் பந்தலில் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை, கச்சேரி நடுவில், “சங்கராபரணம் நன்னால்லே” என்று சொல்லிச் சிணுங்கியதைக் கேட்டு அந்தப் பக்கம் பார்த்தால் அது நான்கு வயதுப் பெண் குழந்தை. “அப்படியெல்லாம் சொல்லப்படாதுடி குழந்தே” என்று பெற்றோர் அடக்கினர். குழந்தைகளுக்கு இவ்வளவு நுண்ணிய உணர்வுகள் எப்படி சாத்தியமாகின்றன? இதில் தென்னிந்தியாவே ஒரு தனிக் கலாச்சாரம்தான். இங்கே தான் குழந்தைகளை மேதைகளாகக் கொண்டாடுகிறோம். ஒரு பாலமுரளி கிருஷ்ணா, மாலி, ரவி கிரண், மாண்டலின் சீனிவாஸ் போன்றோர் போற்றப்படுகிறார்கள். மேடைக் கச்சேரி வாழ்க்கை குழந்தையிலேயே தொடங்கிவிடுகிறது. வட இந்தியாவில் என்ன மேதைமை தெரிந்தாலும் குழந்தைகளுக்கு மேடை தரப்படுவதில்லை.

  நம் மரபில் நாம் குழந்தையைத் தெய்வம் என்போம். தெய்வங்களைக் குழந்தைகளாகப் பாவித்து அன்பையும் பாசத்தையும் பொழியும் ஒரு பார்வை பெரியாழ்வாரிடமிருந்து தொடங்குகிறது. வரலாற்றிலேயே முதன்முதல் அவர்தான் தெய்வத்தைக் குழந்தையாக்கி மகிழ்ந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய கற்பனை! ஆனந்தமான கற்பனை! கண்ணனது சிறு பருவத்து விளையாட்டையும் குறும்புகளையும் பாடி ஒரு புதிய உலகையே தந்து சென்றிருக்கிறார். அதைத்தான் பாகவதம் சொல்ல, வடநாடு முழுவதும் அது பக்தி இயக்கம் பரவச் செய்தது. பெரியாழ்வாருக்கு முன்பு கண்ணனைக் குழந்தையாக வட இந்தியா அறிந்ததில்லை; துவாரகை மன்னனாகத்தான் அதற்குத் தெரியும்.

  இது நமக்கே உரிய பாவம் என்று நினைத்திருந்தேன். டோரன்டோவில் உள்ள ஒண்டேரியோ கலைக்கூடத்தில் குழந்தைப் பருவ ஏசுவைப் பாதிரியார் ஒருவர் விரல் பிடித்து இட்டுச் செல்லும் ஓவியம் பார்த்தேன். “ஏசு குழந்தையாக இருந்தபோது பாதிரியார் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டேன். அது ஏசுவைக் குழந்தையாகப் பாவித்த கற்பனை என்று விளக்கம் சொன்னார்கள்.

Tuesday, 25 September 2018

நூல் விமர்சனம் (புதிய வேர்கள்)




  திருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது.

  இப்போதெல்லாம் நிறையப் பெண்கள் தம் அனுபவங்களை, சிந்தனைகளைக் கதை, கவிதைகளில் வெளியிடுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதெற்கு?” என்று எதுகை மோனையோடு ஆண் வர்க்கம் வினவி மகளிர்க்குக் கல்விக் கண் திறக்காமல் காலங்காலமாய்ப் பார்த்துக் கொண்டது. கீழ் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுவின் கட்டளை; பெண் தாழ்ந்தவள், ஆதலால் கல்வி மறுக்கப்பட்டது. எத்தனையோ முற்போக்காளரின் முயற்சியால் பெண் கல்வி பரவிற்று; அதன் நல்ல விளைவுகளைப் பற்பல துறைகளிற் காணமுடிகிறது.

  அம்மாவின் ஆசை, அன்னையர் தினம் ஆகிய இரு கதைகளும் தாய்மார்களின் பாசம் நிறை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தன் வைராக்கியத்தை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அதற்காக மகனுக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தக்கூடாது என அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறாள் முதல் தாய்; வைராக்கியம் நிறைவேறாமலே போய்விட்டால் கூட வருந்தமாட்டாள். மகனின் நல்வாழ்வு தானே முக்கியம்? பிள்ளைகளுக்காக எத்தியாகமுஞ் செய்யத் தயங்காத பெரும்பாலான நற்றாய்களின் பிரதிநிதி அவள். அவளது குண சித்திரம் நன்கு தீட்டப்பட்டுள்ளது. இரண்டாந்தாய் உணவைக் கூடப் புறக்கணித்துவிட்டு மகனது அழைப்புக்காக ஏங்கித் தவியாய்த் தவிக்கிற நிலை நமக்குப் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது. “பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்”. புதல்வனைக் காட்டிலும் மகள் பாசமுடையவள் என்ற மறுக்கவியலா உண்மை போகிற போக்கில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளமை நயம்.

  இவற்றோடு தொடர்புடையது “தண்டனை”. இதிலும் அன்னை மனங்களின் விழுமிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. குற்றவாளியின் தாயினது நெஞ்சம் துருவி ஆராயப்பட்டுள்ளது. இக்கதை சிறந்த படைப்பு.

  “ஒரு சொட்டுக் கண்ணீர்” தமிழ் மனைவியர் பற்பலரின் இரங்கற்குரிய நிலைமை பற்றியது. வாழ்க்கைத் துணையைக் கொடுமைப்படுத்துவதற்குப் படித்தவர்கள்கூடத் தயங்குவது இல்லை. இக்கதையின் கருவுடன் தொடர்பு கொண்டது இறுதிப் படைப்பு. கூட்டு வாழ்க்கை சிதைந்துபோய்த் தனிக்குடும்பம் அவசியமாகிவிட்ட இன்று, இருவருஞ் சம்பாதித்தால்தான் சுக வாழ்க்கை சாத்தியம். மனைவி மட்டும் அக வேலை, புற வேலை என இரண்டு சுமையைத் தாங்குகிறாள். எவ்வளவு துன்பம் என்பதை ஆண் எண்ணிப் பார்ப்பதில்லை. யாவற்றிலும் வெள்ளையரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுகிற நம் ஆடவர், அவர்கள் குடும்பப் பணிகளில் பங்கேற்பது போல, தாமும் செயல்பட்டுத் துணைவியின் பாரத்தை முடிந்த அளவு குறைக்கவேண்டும்.

  “புதைக்கப்படும் உண்மைகள்” கதையுஞ் சிறப்பானதே. திருப்பங்களுடன் கூடியதாயும் அதிகார வர்க்கத்தின் தகிடுதத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதாயும் அமைந்த இது, “பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் முக்கால மெய்யை நம் மனத்தைத் தொடுமாறு உணர்த்துகிறது.

  “பெண் பார்க்கும் படலம்” நகைச்சுவை ததும்பும் படைப்பு. கன்னத்தில் அறைவது போல் பளார் பளார் என வினாத் தொடுக்கும் முற்போக்குக் கன்னியரை இதிற் சந்திக்கிறோம். “நான் மாப்பிள்ளை, நாங்கள் பையன் வீட்டார், உயர்ந்தவர்கள்” என்னுஞ் செருக்குடன் பெண் பார்க்கச் செல்லும் சில ஜன்மங்களின் தலைக்கனத்தை அவர்கள் குறைக்கிறார்கள்.

  யாவற்றிலும் மேம்பட்டது “புதிய வேர்கள்”. இதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்தமை மிகப் பொருத்தம். அவலம், நகை, வாஞ்சை என பல ரசங்களை வாரி வழங்கும் இது ஒரு கை தேர்ந்த படைப்பாளியை அடையாளங் காட்டுகின்றது. பிறந்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் துயரும் வேதனையும் வாசகர் நெஞ்சத்தை உருக்குகிற விதமாய், யதார்த்தமாயும் துல்லியமாயும் புலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய எண்ணம் சாமர்த்தியமாய், பொருத்தமாய்ப் புகுத்தப்பட்டுள்ளது, நல்ல உத்தி. இதை வாசிக்கையில் சங்கப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

  சிறுமியொருத்தி புன்னை விதையூன்றி நீர் வார்த்து வளர்த்தாள். அவள் பருவமெய்தினாள், அது மரமாயிற்று. அதன் நிழலில் வந்து நின்றான் தலைவன், தலைவியை எதிர்பார்த்து.

  அவனிடந் தோழி கூறினாள்;

  “ஐயா, இம்மரம் தலைவியின் வளர்ப்பு. அவளிடம் ஒரு நாள் தாயார் கூறினார், “நீ வளர்க்கிற புன்னை உனக்குத் தங்கை” என்று. அன்றிலிருந்து தலைவியும் உடன்பிறப்பாகவே கருதியுள்ளாள். தங்கையை அருகில் வைத்துக் கொண்டு உன்னோடு பேசி, சிரித்து, மகிழ அவளால் முடியுமா? வெட்கமாக இருக்காதா? ஆதலால் வேறு ஒரு மரத்தின் நிழலுக்குப் போ.”

  நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
  அம்ம நாணுதும் நும்மொடு நகையே.
  (நற்றிணை 172)

  நுவ்வை – தங்கை

  தாவரங்களுடனும் உறவு கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனிய தகவலை இப்பாட்டு தருகிறது; அதே மாதிரி உறவை இந்தக் கதைத் தலைவியும் வளர்த்திருக்கக் காண்கிறோம்.

  பெரும்பாலானவை குடும்பக் கதைகள். சிறு சிறு மர்மங்கள் வாசிப்புச் சுவையைக் கூட்டுகின்றன. தரமான நகைக்கும் பஞ்சமில்லை.

  ஒரு காட்டு:

  “பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே எமனின் எருமை வாகனம் நிற்பது போல் தோன்றவே, பயந்து கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டார்.

  “என்னமோ தெரியலடா. கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதற்கே உங்கப்பா நடுங்குறாரு.” என்று முதல் மனைவி தன் பையனிடம் சொன்னபோதுதான் நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.”

  சமுதாய மற்றும் பொருளியல் சிக்கல்கள் குறித்துச் சிந்திக்க வைக்குங் கருத்துகள் இல்லை; ஆனால் ஆற்றொழுக்கான நடையும் கருத்துத் தெளிவும் உயிரோட்டம் மிக்க உரையாடல்களும் போற்றற்குரியன. சந்திப் பிழை வாக்கியப் பிழை அறவே இல்லாமல் எழுதியிருப்பதற்கு ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர். பெரிய எழுத்தாளர்களே சறுக்குகிற இடம் இது. மனவுணர்வுகளை நன்கு வெளிக்கொணரும் ஆற்றல் மிக்க இவர் மேன்மேலும் முன்னேறித் தலைசிறந்த படைப்புகளை ஈன வாழ்த்துகிறேன்.