Saturday, 1 June 2019

இந்திய இட சாரிக் கட்சிகள்






  1934-இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பிறந்தது. காங்கிரசில் இயங்கிய இட சாரிக் கொள்கையாளர்கள் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் அதை உருவாக்கினார்கள். முக்கியமானவர்கள் ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மது லிமாயி, அச்சுத் பட்டவர்த்தன், சந்திரசேகர் (பின்னாளில் பிரதமர் ஆனவர்), ராஜ் நாராயணன் (இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று வழக்குத் தொடுத்து வென்றவர்), ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (அண்மையில் காலமான கடைசி சோஷலிஸ்ட்).

  சுதந்தரம் கிடைத்த பின்பு அது காங்கிரசிலிருந்து வெளியேறித் தனிக் கட்சியாய் இயங்கிற்று.

  இது ஒரு புறம்; மறு புறத்தில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆச்சார்ய கிருபளானி, ஆச்சார்ய நரேந்திர தேவ் ஆகியோர் பிரதமர் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியேறிப் பிரஜா கட்சியைத் தோற்றுவித்தார்கள்.

  இரு கட்சிகளும் வளர்ச்சி குன்றி சவலைகளாய் இருந்தமையால் ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு என்றெண்ணி இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியெனப் புதுப் பெயர் சூட்டிக்கொண்டன. இணைப்பை ஏற்காமல் சோஷலிஸ்டுகளில் ஒரு சாரார் தொடர்ந்து கொஞ்ச காலம் செயல்பட்ட பின்பு சேர்வதே நல்லது எனக் கருதி அதில் ஜக்கியமானவுடன் பெயர் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி என்று மாறிற்று.

  இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாரையும் சிறையில் தள்ளி சர்வாதிகாரியாய்க் கோர தாண்டவம் ஆடியமைக்குத் தண்டனையாய்த் தேர்தலில் அவரையும் அடிவருடிகளையும் படுகுழியில் மக்கள் தள்ளிவிடவே ஜனதா கட்சித் தலைவர் மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்திய அரசு அமைந்தது; அதில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்தது; 2½ ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது; காரணமாய் இருந்தவர்கள் ராஜ் நாராயணனும் ஜார்ஜ் பெர்ணாண்டசும்.

  மக்களின் ஆதரவைப் பெற இயலாமற் போகவே கூடாரம் காலியாயிற்று; சிலர் காங்கிரசில் சேர்ந்தனர். மற்றவர் வெளியேறினர்.

  கட்சி இறுதி மூச்சை விட்டது. பாஜகவைப் போன்றே அது தமிழகத்தில் வேர் விடவேயில்லை.

  இந்தியாவின் முக்கிய கட்சியாகச் செயல்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழகத்தில் அதுதான் ஆண்ட காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாய் இயங்கியது. பெரும் பெருந் தலைவர்கள் அதிற் பிரகாசித்தார்கள்: ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், பால தண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, மணலி கந்தசாமி, சீனிவாச ராவ், க.சுப்பு.

  விவசாயக் கூலிகளாய் மிகக் கடினமாய் உழைக்க வேண்டியிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மிராசுதாரர்களின் கொத்தடிமைகளாய் உழன்று எதிர்த்துப் பேசவும் திராணியின்றி அல்லற்பட்டு ஆற்றாது காலங்காலமாய் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். படிப்பும் பொருளும் இல்லாத அவர்களை ஒன்று திரட்டியும் பண்ணையார்கள் மற்றும் காவல்துறை ஆகிய இரு பெருஞ் சக்திகளின் அடக்குமுறைகளைச் சிரமப்பட்டு சமாளித்தும் சங்கம் அமைத்து அவர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த அரும் பெருஞ் சாதனையைப் புரிந்தது கம்யூனிஸ்ட் கட்சிதான்.

  சோவியத் யூனியன் சிதைந்த பின்பு உலகு முழுதுமே கட்சி பின்னடைவை சந்தித்தது. தமிழ்நாட்டில் திமுக தலையெடுத்துக் கட்சியை ஓரந் தள்ளிற்று. வலம் இடம் எனக் கட்சி பிளவுபட்டதும் பலவீனத்துக்குக் காரணமாயிற்று.

  வலக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திராவின் அட்டூழியங்களுக்குத் துணை போனமையால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகித் தேய்ந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் ஒரே யோரிடத்தில் மட்டுமே வென்றது.

  இடக் கம்யூனிஸ்ட் கட்சி முந்தைய தேர்தலில் 9 இடமும் அண்மைய தேர்தலில் 3 இடமும் மட்டுமே பெற்றது. ஒரு காலத்தில் அது ஆட்சி புரிந்த வங்காளத்திலும் திரிபுராவிலும் ஓர் இடங்கூடக் கிடைக்கவில்லை.

  இரு கட்சிகளுக்கும் இன்றைய பாராளுமன்றத்தில் மொத்தம் ஐந்தே இடங்கள். எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

************
(படம் உதவி இணையம்)


Tuesday, 21 May 2019

பஞ்ச மா பாதகங்கள்





  ஏடுகளில் வாசிக்கிறோம், கேள்விப்படுகிறோம் பஞ்ச மா பாதகம் என்று. தமிழில் ஐம்பெருங் குற்றங்கள் எனலாம். அவை என்னென்ன?

  மனுஸ்மிருதி (X1-55) கூறுகிற பஞ்ச மா பாதகங்கள்: பார்ப்பனக் கொலை, சுராபானம் அருந்துதல், பார்ப்பனரின் பொன்னைக் கவருதல், குரு பத்தினியைப் புணர்தல், இப்பாதகங்களைச் செய்தோருடன் கூடியிருத்தல்.

  பார்ப்பனரல்லாதாரைக் கொல்லுதலும் அவர்களின் பொருளைத் திருடுதலும் பெரும் பாதகங்களாக அந்நூல் கருதவில்லை; ஆனால் மது அருந்துதல் மிகப் பெருங்குற்றம் என்கிறது. அறிவுக்கொவ்வாத கருத்துகள் இவை.

  பெரிய குற்றங்கள் ஐந்து என்று சங்க இலக்கியங்கள் வரையறுக்கவில்லை.

புறநானூறு (பா.34)

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர்க் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

ஆகிய அடிகளில் மூன்று பாதகங்களைக் குறிப்பிடுகிறது.

1. பசுக்களின் மடிகளை அறுத்த அறனற்றவர்கள்.
2. பெண்டிரின் கருவைச் சிதைத்தவர்கள்
3. பெற்றோரைத் துன்புறுத்திய கொடியவர்கள்.

ஆக்களையும் கர்ப்பிணிகளையும் பெற்றோர்களையும் கொன்ற தீயவர்களைத்தான் செய்யுள் சூசகமாகக் குறிப்பிடுவதாக உரையாசிரியர் விளக்குகிறார். இதன்படிப் பார்த்தால் கொலை என்ற ஒரு பாதகத்தை மட்டுமே புறநானூறு கூறுவதாகக் கொள்ளலாம். சரிதானே? கொலையைக் காட்டிலும் பெரிய கொடுமை வேறில்லை.

  ஆனால் சிலப்பதிகாரம் கொலையை விட்டுவிட்டு வேறு குற்றங்களைப் பற்றிக் கூறுகிறது.

(இந்திரவிழவூரெடுத்த காதை. அடி 128-131)

தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்

பொருள்:

1. தவ வேடம் தரித்துக் கொண்டு தீயொழுக்கத்தில் ஈடுபடுவோர் (போலிச் சாமியார்)
2. ரகசியமாகத் தீய நெறியில் ஒழுகும் வேசிகள்
3. அரசனுக்குத் துரோகம் புரியும் அமைச்சர்
4. பிறரது மனைவியை நாடுவோர்
5. பொய் சாட்சி சொல்பவர்
6. புறங் கூறுவோர்

இவற்றில் எதுவும் பெரிய குற்றம் என ஏற்க முடியாது.

  ஐம்பெருங் குற்றங்கள் என்று சொல்வது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கம். அவற்றை ஒரு தனிப்பாடல் பட்டியலிடுகிறது.

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவை கண்டாய்.

இந்தப் பாட்டை ஆய்வோம்:

1. காதல் – அளவு கடந்த காமம். இதைப் பெருங் குற்றமாக யாருங் கொள்வதில்லை. நிறையப் பெண்களுடன் தொடர்பு கொள்பவர்களை சமுதாயம் இழிவாகக் கருதுவதில்லை. ஆணாதிக்க சமுதாயமல்லவோ? ஒரு நாளும் அப்படிக் கருதாது. திருக்குறள் உள்பட்ட அற நூல்களுங் கூட, பிறன்மனை நயத்தலைக் கண்டிக்கின்றவே தவிரக் கன்னியரோடு, கைம்பெண்டிருடன், தொடர்பு வைப்பதையெதிர்த்து எதுவுங் கூறவில்லை.

2. கவறாடல் – சூதாடுதல். 
3. கள்ளுண்டல்.
இவையிரண்டும் தனி மனிதர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் மட்டுமே பாதிக்கும். மற்றவர்க்குக் கேடில்லை யாதலால் பாதகங்கள் என இவற்றைச் சொல்வதற்கில்லை.

4. பொய் மொழிதல் – இது எல்லோரும் செய்கிற காரியம். அன்றாடம் விளம்பரங்களில் புளுகுகளை அச்சிடுபவர்களையும் தொலைக்காட்சியில் வாய் கூசாமல் பொய்களைப் பரப்புபவர்களையும் பாதகர்கள் என்று சொல்லுதல் பொருந்துமா?
சில சமயம் பொய் தேவைப்படுகிறது. “புரை தீர்த்த நன்மை பயக்கிற” பொய்யை மெய்யாகக் கருதலாம் என்று குறள் கூறுகிறது.

5. ஈதல் மறுத்தல் – ஒருவர் பிறர்க்கு எதையாவது தரும்போது அதைத் தடுத்தல்.

இது எப்போதோ அரிதாக நிகழ்வது. இதனால் இரண்டொருவரோ மிகச் சிறுபான்மையினரோ இழப்படைவர். ஆதலால் இதைப் பெரும் பாதகம் எனல் தகாது.

  மிகப் பெருங் கொடுமையாகிய கொலையை விட்டுவிட்டு சாதாரணக் குற்றங்களைப் பூதாகாரமாக்கிக் காட்டுகிற இந்தப் பாடல், சிந்திக்காமல் கை போன போக்கிலே, இயற்றப்பட்டுள்ள பற்பல தமிழ்ப் பாட்டுகளுக்கு ஓர் எடுத்துக்காடு.

  சிறுபஞ்சமூலம் என்னும் அறநூல் வேறு பட்டியலைக் காட்டுகிறது:

பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது.

பாட்டுக்கு சிறு விளக்கம்:

மெல்லியலார் வையாமை – நம்மை விட அறிவு, கல்வி, உடல்வலிமை, செல்வம், செல்வாக்கு முதலானவற்றில் தாழ்ந்திருப்பவரைத் திட்டாமை.

வார்குழலார் நச்சினும் நையாமை – பெண்கள் தாமே விரும்பி நம்மை நாடினாலும் உடன்படாமை.

இப்பாடலின்படி ஐம்பெரும் பாதகங்களாவன:

1. பொய் சொல்லல்
2. கள் உண்ணல்
3. தாழ்ந்தவரை ஏசுதல்
4. பெண்ணாசை
5. ஊன் உண்ணல்

இங்கும் கொலை இடம் பெறாமை விசித்திரந்தான். புதியனவாய்ச் சொல்லப்பட்டவை திட்டுதலும் ஊன் உண்ணுதலும்.

1. திட்டுதல் – சாதாரண நிகழ்ச்சி. எப்போதாவது நிகழ்கிற மிகச் சிறு குற்றம். ஆகையால் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல.

2. ஊன் உணவு – உலக மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஊன் உண்ணுகின்றனர். இந்து மதம், யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய பெரிய சமயங்களுள் எதுவும் ஊனுணவை எதிர்க்கவில்லை, குற்றமாகக் கருதவில்லை. பற்பல உயிர்கள் பிறவற்றின் ஊனை உண்டுதான் வாழ்கின்றன. இதுவே இயற்கை நியதி.

ஆதலால் சிறுபஞ்சமூலம் உரைப்பதும் ஏற்புடையதல்ல.

அடுத்துக் கம்பராமாயணம்;

ஆரண்ய காண்டம் – கவந்தன் படலம்.

இராம இலக்குவர் கவந்தனைப் பார்க்கின்றனர். அவன் பெரிய பாதகன். அவர்கள் அவனைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள்?

வேதநூல் வரன்முறை விதிக்கும் ஐம்பெரும்
பாதகம் திரண்டுயிர் படைத்த பண்பிலான்.

பொருள் – வேதமானது வரிசையாய்க் கூறுகிற பஞ்ச மா பாதகங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து உயிர்பெற்று வந்தது போன்ற கொடியவன்.

அந்தப் பாதகங்கள் என்னென்ன என்பதைக் கம்பர் விரித்துரைக்கவில்லை. உரைகாரரின் கருத்துப்படி அவை: கள்ளுண்ணல், களவு செய்தல், கொல்லுதல், பொய்யுரைத்தல், பிறர்மனை நயத்தல்.

  பரவாயில்லை, இவர் கொலையைச் சேர்த்திருக்கிறார். இதை மட்டுமே பெரும் பாதகம் என ஏற்கலாம். பிறன்மனை நயத்தல் தீயொழுக்கமே தவிரப் பாதகமாகக் கருத முடியாது. மற்றவையுந்தான்.

  நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் தம் வலைத்தளத்தில் கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை ஆகியவை பாதகங்கள் எனக் குறித்துள்ளார். (பதிவுத் தேதி 26-7-18. தோன்றிற் புகழொடு…)

கொலையைப் பட்டியலிற் சேர்த்தது சரியானது.

முடிவுரை – ஐம்பெருங் குற்றங்கள் எவையெவை என்பதில் ஒத்தக் கருத்தில்லை. பழங்கால சமுதாயத்தில் நிகழ்ந்த (இப்போதும் நிகழ்கிற) குற்றங்களுள் ஐந்தை, அவரவர் தத்தம் கொள்கை, நம்பிக்கைக்கேற்ப தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறார்கள். நம் காலத்தில் மிக மோசமான, சமுதாயம் முழுதையுமே பாதிக்கக்கூடிய பாதகங்கள் நடக்கின்றன.

  ஐம்பெரும் பாதகங்களாக நான் கருதுவது;

               1. கொலை (தனி மனிதர்)
               2. பயங்கரவாதம் (terrorism – கும்பல் கொலை)
               3. கடத்தல் (பெண்கள், போதை மருந்து)
               4. மோசடி (போலி ஆவணம்)
               5. பாலியல் வன்கொடுமை

1. ஒருவரை சொத்துத் தகராறு, சாதி மதக் கட்சிப் பகைமை, பழிக்குப் பழி, கள்ளக் காதல், குடும்பப் பிணக்கு முதலியவை காரணமாகக் கொல்கிறார்கள். காரணமின்றியே கூட மனவெறியர் (psycho) கொலை செய்கின்றனர்.

2. Taliban, IS முதலான அமைப்புகள் பொதுமக்களை, மாணவர்களைப் படுகொலை புரிகின்றன.

3. பெண்களைக் கடத்தி விற்கிறார்கள். விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள். பற்பலரைப் போதையில் ஆழ்த்தி அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிற மருந்து, கஞ்சா ஆகியவற்றை நாடு விட்டு நாடு கடத்தி உலக சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.

4. மனைப் பத்திரம், சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு, ATM அட்டை ஆகியவற்றைப் போலியாய்த் தயாரித்து ஏமாற்றுகின்றனர். வேலை வாங்கித் தருவதாக, வெளிநாட்டுக்கு அனுப்புவதாகப் போலி வாக்குறுதி தந்து ஏமாற்றுதலும் இதிலடங்கும்.

5. குழந்தைகள், சிறுமிகள் என்று கூடப் பார்க்காமல், வன்புணர்ச்சிக்குப் பலியாக்குகிறார்கள். Gang rape என்ற கொடுமைக்கும் பஞ்சமில்லை.  

**********

Wednesday, 1 May 2019

நூல்களிலிருந்து – 22

கவிஞர் ஞானக்கூத்தன்

(சென்ற ஆண்டு காலமான கவிஞர் ஞானக்கூத்தன், “கவிதைகளோடு ஒரு சம்வாதம்என்ற தலைப்பில் 2004-இல் வெளியிட்ட நூலிலிருந்து ஒரு பகுதி)

  இலக்கியத் திருட்டு என்று சொல்லப்படுகிற விஷயம் தமிழில் 20-ஆம் நூற்றாண்டில்தான் தலையெடுத்தது.

  பத்திரிகைகள் தங்களுக்கு வேண்டிய படைப்புகளை முதலில் விஷயதானம்என்றே குறிப்பிட்டன; அதாவது இந்த விஷயங்கள் தானமாகக் கொடுக்கப்படுவதால்தனம்பெறத் தகுதியற்றவை என்று பொருள்; ஆனால் விஷயம் தானத்தன்மை போய்சன்மானம்பெறத் தகுதியான பொருளான போது பிரச்னை தொடங்கிவிட்டது. சன்மானம் பெறத் தகுதி உடைய ஒருவர், உரிமை உடையவராக இருக்கும் நிலையில் அவரை அத்தகுதியிடத்திலிருந்து நீக்கித் தனதாக்கிக் கொண்டு தொகையைத் தான் பெற வேறொருவர் முயல்வதால் முன்னவர் பாதிக்கப்படுகிறார். அவர் பண இழப்புக்கு ஆளாகிறார்; அவருக்குச் சொந்தமான பொருளை இன்னொருவர் தன்னதாக விற்றுவிடுகிறார், பலனடைகிறார்.

  முற்காலத்தில் அப்படியில்லை; ஒரு நூலில் ஆசிரியன் இயற்றாத பகுதிகளை வேறொருவர் இயற்றி முதல் ஆசிரியன் பெயரிலேயே வழங்கும்படி செய்துவிடுவார். அவை இடைச்செருகல் என்று சொல்லப்பட்டது. வெள்ளியம்பலக் கவிராயர் என்பவர் பல செய்யுள்கள் இயற்றிக் கம்பராமாயணத்தில் நுழைத்துவிட்டார் என்று சொல்லப்படுவதுண்டு.

  மூல ஆசிரியனின் அழகுணர்ச்சி, அவனது நூலின் கட்டுக்கோப்பு இவற்றை அறியாமல் அவனது நடையைப் பின்பற்றி இச்செய்யுள்கள் எழுதப்பட்டுவிடுகின்றன. ஒட்டக்கூத்தர் ஒரு ராமாயணம் எழுதும் திறமை உடையவர்தான்; ஆனால் ராமாயணத்தில் பிற்பகுதியான உத்தர காண்டத்தையே அவர் விரும்பி எழுதியிருக்கிறார். கம்பனின் ராமாயணத்துக்குள் நுழையவில்லை. கூத்தரின் உத்தர காண்டம் சிறப்புடையது: அது ஒரு போட்டிக் காவியமல்ல; சொல்லப்போனால் கம்பரைக் காட்டிலும் விநோதமானவர் கூத்தர்.

  சங்கப் பாட்டொன்றில் ஒரு நாயகி சொல்கிறாள்:

  தண்ணீர்க்குடத்தை அமிழ்த்தினால் விலகும் பாசி, குடத்தை எடுத்ததும் விலகிய இடத்தை மீண்டும் பிடித்துக் கொள்வது போல இந்தப் பசலை காதலன் என்னைத் தீண்டினால் விலகி, அகன்றதும் மீண்டும் பிடித்துக் கொள்கிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சர்

   இந்த உவமைச் செய்தியை இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவன் தொடர்பாகக் கூறியிருக்கிறார் என்பதை இந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ஒரு கட்டுரையிலிருந்து அறிகிறோம். பரமஹம்சர் சங்கப் பாட்டை அறிந்தவரல்ல; ஆனால் ஒரு அசாதாரணமான அனுபவம் இரண்டிடத்திலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேதாவிகளின் புத்தி ஒற்றுமையானது (ஸம்வாதின்யா மேதாவி நாம் புத்யா) என்றொரு சமஸ்கிருத கவிதையியல் அறிஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னார். பார்க்கப் போனால் மேதாவிகளின் புத்தி ஒற்றுமையாக இருக்கிறது என்பதைப் போலவே அவர்களைக் கவரும் விஷயமும் ஒற்றுமைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

&&&
(படங்கள் உதவி - இணையம்)

Sunday, 21 April 2019

வரலாற்று நிகழ்வுகள் – 2





  1) ஒன்பது ஆண்டுக்காலம் தமிழக முதல்வராய் நல்லாட்சி நடத்திக் கர்மவீரர் என்றும் கறை படாத கைக்குச் சொந்தக்காரர் என்றும் கல்விக் கண் அளித்தவர் என்றும் ஏழை பங்காளர் என்றும் மக்களால் போற்றப்பட்ட காமராஜருக்கு ஒரு மறுபக்கம் உண்டு.

  ஆட்சிக் கட்டில் ஏறுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகக் காங்கிரஸ் தலைவராய்ப் பணியாற்றினார். பெரும்பாலான அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் போல அவரும் தம்மை மீறி யாரும் மேலே வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.

  அப்போதெல்லாம் தேர்தலுக்கு சீட் தரும் உரிமை அந்தந்த மாநிலத் தலைவர்களிடம் இருந்தது. மாற்றுக் கருத்துக் கொண்ட காங்கிரஸ்காரர்களுக்குக் காமராஜர் வாய்ப்பு மறுத்தமையால் கட்சிப்பற்று இருந்தபோதிலும் பற்பலர் வெளியேறினர். அவர்களுள் ஒருவர் .பொ.சி. எனச் சுருக்கமாய்ச் சுட்டப்பட்ட .பொ.சிவஞானம். இவர் விடுதலைப் போரில் தீவிரமாய் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகி. ஆனால் ராஜாஜி பக்தர். கட்சியிலிருந்து விலகிய இவர், “தமிழரசு கழகம்என்னுந் தனிக்கட்சி கண்டார். காரைக்குடி சா.கணேசன்சட்டை போடாத காங்கிரஸ்காரர்என்று புகழப்பட்டவர். (காந்தியடிகள் சட்டை போடாமையால் இவரும் போடுவதில்லை). இந்தத் தியாகிக்கும் சீட் கிடைக்கவில்லை; ராஜா சர் முத்தையா செட்டியாருக்குக் கிடைத்தது. இவர் நீதிக் கட்சிப் பிரமுகராய் இருந்து காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தியவர்! சா.கணேசன் விலகி ராஜாஜி தோற்றுவித்திருந்த சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். இவ்வாறு நீங்கியவர்களுள் மேலும் சில பிரபலங்கள்; எல்.எஸ்.கரையாளர் (காமராஜருக்கு முன்னர்த் தமிழகக் காங்கிரசின் தலைவராய்ப் பணிபுரிந்தவர்); பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் (இந்திரா காங்கிரசின் தலைவராய் ஆனார்), K.S.வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், V.K.ராமசாமி முதலியார் (காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்). இந்தக் கட்சி 1957 தேர்தலில் காங்கிரசின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு 25 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. ஆளுங்கட்சி காங்கிரஸ், எதிர்க்கட்சியும் காங்கிரஸ்! அத்தேர்தலில் முதன்முறையாய்ப் பங்குகொண்ட தி.மு.. 15 இடங்களில் வென்று மூன்றாம் இடத்துக்கு வந்தது.

  இப்படிக் கட்சியின் வலிமை தமிழ்நாட்டில் குறைந்துகொண்டே வந்தமைக்குக் காமராஜர் ஒரு காரணம்.

  இன்னொரு காரணம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்தரத்தை நசுக்குவதற்குக் காங்கிரஸ் மும்முரமாய்ச் செயல்பட்டமை.

  பெரியார் பொன்மொழிகள்” என்ற நூலுக்காகப் பெரியாருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை! “ஆரிய மாயை”க்காக அண்ணாதுரைக்கு ஆறு மாதம்; “காந்தியார் சாந்தியடைய” என்னும் புத்தகம் இயற்றிய ஆசைத்தம்பிக்கு (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) சிறை. புலவர் குழந்தையின் “இராவண காவியம்” என்னும் காப்பியத்துக்குத் தடை; வெளியிடக்கூடாது, விற்கக்கூடாது, வைத்திருக்கக்கூடாது.

  இவ்வாறு தி.க., தி.மு.க.காரர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்காய்ப் போட்டு அலைக்கழித்த கட்சிக்கு மக்கள் விடைகொடுத்து அனுப்பினார்கள். அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இப்போது அதே திமுகவிடம் சில இடங்களைக் கோரிப் பெற்று அதனுடைய தயவில் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

 2) திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலில் தி.மு.க.வின் மாநில மாநாடு 1955-இல் நிகழ்ந்தபோது இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன:

I) புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுத்தமை: கட்சியின் தொடக்கம் முதல் (1949), பொதுச்செயலாளராய்ப் பதவி வகித்தவர் அண்ணாதுரை. (கட்சிக்குத் தலைவர் கிடையாது). ஜனநாயக முறையில் கட்சி இயங்கவேண்டும் என்பதற்காக, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, புதுப் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற புதிய விதியின்படி இரா.நெடுஞ்செழியனைப் பதவியில் அமர்த்தினார்கள்.

  அவரை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பேசிய மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் சொந்தங் கொண்டாடிய விதம் சுவையாக இருந்தது.

1.தஞ்சை மாவட்டச் செயலர்:
    எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர்.

2.கடலூர்:
    நாராயணசாமியாய்ப் பிறந்தவரை நெடுஞ்செழியனாய் மாற்றியது எங்கள் மாவட்டத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

3.மதுரை:
    பாண்டியன் பெயரைச் சூட்டிக் கொண்டமையால் எங்களவர்.

4.கோவை:
    எங்கள் மாவட்டத்துப் பெரியாரின் சீடர்.

5.காஞ்சிபுரம்:
    எங்கள் மாவட்டத்தின் அண்ணாவுக்குத் தம்பி.

6.சேலம்:
    எங்கள் மாவட்டத்தின் மாப்பிள்ளை.

7.சென்னை:
    எங்கள் மாவட்டத்தில் வசிப்பவர்.

  இறுதியில் வழிமொழிய அண்ணாதுரை எழுந்தபோது பந்தலை அதிரச் செய்தது கைதட்டல்.

  அவர் கூறினார்:
  “நான் அதிக நேரம் பேசவேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைப் பலத்த கைதட்டல் மூலம் வெளிப்படுத்தினீர்கள். நன்றி. நாளை இறுதி நிகழ்ச்சியில் விரிவாகப் பேசுவேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

  “தம்பி வா, தலைமை தாங்க வா, உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி கூறுகிறேன், வா.”

  இப்போது கைதட்டல் முன்னதை மிஞ்சிற்று.

  ஈராண்டுக்குப் பின்பு வேறு பொதுச்செயலரைத் தேர்வது எளிதாக இல்லை. ஏற்பட்ட மிகக் கடுமையான போட்டி கட்சியைப் பிளவுபடுத்திவிடும் எனத் தோன்றியமையால், “நானே இருக்கிறேன்” என்று அண்ணாதுரை சொல்லிப் போட்டியைத் தவிர்த்தார். கடைசிக்காலம் வரை அப்பதவியில் நீடித்தார்.

  ஜனநாயக முயற்சி அற்ப ஆயுளில் மாண்டது.

II) 1957-இல் நடைபெறவிருந்த நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் கட்சி போட்டியிடலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு.

  ஒன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டன. போட்டியிட வேண்டும் என்பதற்கான சீட்டை ஒன்றிலும் வேண்டாம் எனத் தெரிவிப்பதற்கான சீட்டை மற்றதிலும் போடவேண்டும். எல்லார்க்கும் தரப்பட்ட சீட்டுகளை விரும்பிய பெட்டியில் பகிரங்கமாய்ப் போட்டனர். வேண்டும் என வாக்களித்தவர்களே மிகுதி.

  கழகம் நாடாளுமன்றத்துக்கு இருவரையும் சட்டசபைக்கு 15 பேரையும் அனுப்பிற்று. முக்கியமானவர்களுள் சம்பத், தில்லிக்கு; அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி சென்னைக்கு.

  1962-இல் சட்டசபைக்கு 50 பேர் போனார்கள். அண்ணாதுரையும் அன்பழகனும் தோற்கக் கருணாநிதி வென்று இறுதிக்காலம் வரை எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடியவர் என்னுந் தனிப்பெருமையைப் பெற்றார்.

  1967-இல் ஆட்சியைக் கைப்பற்றி அண்ணாதுரை முதலமைச்சரானார்.

&&&&&&