Monday, 26 January 2015

கருத்துச் சுதந்தரம்


   எல்லாரும்  ஒரு விஷயம்  பற்றி  ஒரே  கருத்தைக் கொண்டிருக்கமுடியாது. அவரவர்  தத்தம் அறிவு, கொள்கை , கல்வி, மதம் முதலானவற்றின் அடிப்படையில்தான்  கருத்து தெரிவிப்பார்கள்;  அவை ஒன்று போல் இருக்க இயலாது  அல்லவா ? நம் கருத்தைச் சொல்ல  நமக்கு  உரிமை  உள்ளதுபோல்  பிறர்க்கும் தமது கருத்தை வெளீயிட உரிமை உண்டு.

  கருத்துச் சுதந்தரம்  மிக முக்கியமானது; ஆனால்  ஆட்சியாளர்களும் மதவெறியர்களும் தமக்கு  எதிரான  கருத்து வெளியிடுவோரை ஒடுக்குவதும் தாக்குவதும் சகஜம்.

  தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி  அப்படித்தான் செய்தது: "பொன்மொழிகள்" நூலுக்காகப் பெரியார், "ஆரிய மாயை" க்காக அண்ணாதுரை, "காந்தியார்  சாந்தி யடைய" வுக்காக ஆசைத்தம்பி  ஆகிய   திராவிட இயக்கத்தாரைச்  சிறைப்படுத்தினர்; புலவர்  குழந்தை  இயற்றிய  "இராவண  காவியம்" தடை  செய்யப்பட்டது.

  "சாத்தானிக்  வெர்சஸ்"  (Satanic verses)  எழுதிய சல்மான் ருஷ்டியும்  "லஜ்ஜா"  வின் ஆசிரியை தஸ்லிமா நசுரீனும்  முஸ்லீம்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக   அயல்  நாடுகளில்   தஞ்சம்  புக நேரிட்டது.

     இவை எல்லாம் நம்  கால  நிகழ்வுகள்.

     சில நூற்றாண்டுக்கு முன்பு,  ஐரோப்பாவிலும்  புரட்சிக் கருத்துகளை வெளியிட்டோர் அவதிக்கு ஆளாயினர்.

     "மனிதன் தூயவனாகப் பிறக்கிறான்; சமுதாயம் அவனைக் கெடுக்கிறது" என்ற கருத்து கொண்ட ருசோ,  தம் "எமீல்" என்னும் நூலில்,   மதக் கட்டுப்பாடுகளையும் சடங்குகளையும்  சமயத்தின்  பேரால்  நிகழ்ந்த கொடுமைகளையும்  சாடினார்; விலக்கப்பட்ட கனியை ஆதாமும் ஏவாளும்  உண்டதால் அவர்களின் சந்ததியாகிய மானிடர் யாவரும்  பாவிகள் ஆயினர் என்ற விவிலியச் செய்தியை  அவர் ஒப்பவில்லை.




     "எல்லா நூல்களும்  மனிதர்  இயற்றியவைதான்.  கடவுள் நமக்கு  அறிவை  அளித்தது அதைப் பயன்படுத்தாமல்  இருப்பதற்காபுத்தியை அடகு  வைத்துவிட்டு, "நம்பு, நம்புஎன்று வற்புறுத்துவது இறைவனை  அவமதிப்பதாகும்"

      மேற்கண்டவை அவரது சிந்தனையின் விளைவாய். வெளிப்பட்டவை .

       அவருடைய இன்னொரு நூல்,  "சமுதாய  ஓப்பந்தம்" மன்னராட்சியை எதிர்த்தும், குடியரசைத்  தோற்றுவிப்பதன் அவசியத்தையும் நன்மைகளையும் விவரித்தும் புதுமைக் கருத்துகளைப் பரப்பியது .

       வெகுண்டெழுந்தார்கள் ஆதிக்கவாதிகளான அரசர்களும்   மத வெறியர்களும்:  எமீல்  வெளியான சில நாள்களில், பிரஞ்சு நாடாளுமன்றம் அதைப்  பறிமுதல்  செய்யவும் கொளுத்தவும் ஆணை பிறப்பித்தது; கைதி ஆவதைத் தவிர்க்க,  ருசோ, பிரான்சில் தாம் வாழ்ந்த மோன்மோரான்சி என்ற ஊரிலிருந்து  அவசர அவசரமாய்  வெளியேறினார்;  தாம் பிறந்த நகரான ஜெனீவாவுக்கு  (ஸ்விட்சர்லாந்து) செல்லமுடியவில்லை: அங்கு எமீலுக்கு மட்டுமன்றி சமுதாய ஒப்பந்தத்துக்கும்  எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது; பாதுகாப்பான  புகலிடம் கிடைக்காமல் தவித்தார்.

       கத்தோலிக்கர், ப்ரொஸ்டென்ட்  ஆகிய  இரு கிறித்துவ   சமயத்  தலைவர்களும் அவருக்கு எதிராய்ச் செயல்பட்டமையால், பொதுமக்கள் அவரைத்  தம் பகைவராய்க் கருதினார்கள்.

        ஒருவழியாய், மொத்தியே என்னும் நகரில்  அவர்  தங்கி இருந்தபோது  (1765)  அவருடைய இல்லத்தின்மீதுஇரவில்ஒரு கும்பல்  கல் வீசித்  தாக்கியது; சேன் பிஏர் என்ற சிறு தீவுக்கு ஓடிப்போனார். ஆட்சி நாடு கடத்தியது.

       தஞ்சம் அடைந்த இங்கிலாந்தில்  வசிக்க  முடியாமல், 1767 இல் மீண்டும் பிரான்சை அடைந்து  ஊரூரய்த் திரிந்து பதுங்கி அலைந்து  காலங்கழித்து  இறுதியில் பாரிசில், 1770 இல், நிலையாய்த் தங்கினார். 1778 இல், 66 வயதில்   காலமானார்.

       அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அனுபவித்த துன்பங்களும் அவருக்கு மனத்தளர்ச்சியை ஏற்படுத்தின.

      1789 இல்  நிகழ்ந்த  புரட்சி  முடியாட்சியை ஒழித்துக்  குடியரசைத் தோற்றுவித்தது.  ருசோவுக்குச்  சிலை எழுப்பிப் பெருமைப்படுத்தினர்.

      காலப்போக்கில், முஸ்லிம்  நாடுகளைத் தவிர,  உலகின் பெரும்பாலான மற்ற தேசங்கள்   எழுத்துச்  சுதந்தரத்தையும் கருத்துச் சுதந்தரத்தையும் போற்றத்  தொடங்கின.

                          -------------------------------------------

15 comments:

  1. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பீன்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. எல்லாம் புரிந்த பிறகு சிலை வைக்கத் தோன்றுகிறது...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி .

      Delete
  3. இதேநிலையில் தான் கார்ல்மார்க்சும் இருந்தார் . அவருடைய பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளுக்கே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் ஒன்றினைந்து பந்தாடியது

    ReplyDelete
    Replies

    1. மெய்தான் , பெரும்பாலாருடைய கருத்துக்கு எதிர்க் கருத்து தெரிவித்தவர் பலர் கொல்லப்பட்டதும் உண்டு .

      Delete
  4. வணக்கம்
    ஐயா.

    தகவல் பகிர்வுக்கு நன்றி... அறிந்தேன்.. த.ம3
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .

      Delete
  5. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

    ReplyDelete
    Replies
    1. அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும்போது நிச்சயம் வருவேன் .

      Delete
  6. காலத்துக்கேற்ற பதிவு. கருத்துச் சுதந்திரம் பற்றியும் ரூசோவின் துயர் நிறைந்த வாழ்க்கை பற்றியும் பல அறியாத தகவல்களையும் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  7. மாதொரு பாகன் எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கட்டாயப்படுத்திச் சர்ச்சைக்குரிய சில பாகங்களை நீக்கச் சொல்லியிருக்கின்றனர். எழுத்தாளம் பெருமாள் முருகன் இறந்து விட்டான் என அவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார். நாகரிகம் வளர்ந்த இன்றைக்கே இப்படியென்றால் அன்றைக்கு ரூசோ எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார் என்று அறிய முடிகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றி நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  8. பொருத்தமான காட்டுடன் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி . அடுத்த சாரலில் இது பற்றிய கட்டுரை வரும் .

    ReplyDelete