நூல்களிலிருந்து
– 4
'கம்பன்
கவிதை' என்ற தலைப்புடைய நூலொன்று 1926-இல் வெளிவந்தது; கம்ப ராமாயணத்தைப் பற்றி வெவ்வேறு
அறிஞர்கள் எழுதிய 17 கட்டுரைகள் கொண்ட அதில், முதலாவது, வ. வே. சுப்ரமணிய அய்யர் (வ.வே.சு.
அய்யர்) இயற்றியது; அதிலொரு பகுதியைக் கீழே பகிர்கிறேன். தலைப்பு: கம்பராமாயண ரசனை.
"சீதையைத்
தேடுவதற்காக இலங்கையில் ஒவ்வொரு வீடாக அனுமன் நுழைந்து சென்றான் என்று சொல்லிவரும்போது,
9-வது சருக்கத்தில், வால்மீகி, 'பிரகஸ்தன் வீட்டையும் மகாபார்சுவன் வீட்டையும் கும்பகர்ணன்
அரண்மனையையும் இந்திரசித்தன் அரண்மனையையும் விபீஷணன் மந்திரத்தையும்' என்று வேறொரு
வர்ணனையும் இல்லாமல் ஜாபிதாவாக அடுக்கிக்கொண்டு போகிறான். கம்பன், தன் வர்ணனைக்கு,
வேறுபடுத்தி வைத்தலால் வரும் அழகைத் தந்து வைத்திருக்கிறான்.
உதாரணமாகக் கும்பகர்ணனை அனுமன் கண்டான் என்னும்போது,
அவன் ஆதிசேஷனைப் போலவும், பரந்த கடலைப் போலவும், உலகத்திலுள்ள இரவெல்லாம் ஒரே இடத்தில்
செறிந்து நின்றது போலவும், தீவினை யெல்லாம் உடல்பெற்றுத் தோன்றியது போலவும் இருந்தான்
என்றும் பிறவுமாக வர்ணிக்கிறான். விபீஷணனது அரண்மனையிற் பிரவேசித்ததும், அவன் தோற்றத்தினின்று
அவனது தன்மையை அனுமன் ஊகித்துக் கிரகித்துக்கொண்டு, அரக்கர் நாட்டில் பகிரங்கமாக வசித்தல்
அசாத்தியம் என்பது கண்டு, அவர்களைப் போன்றதோர் உடலை எடுத்துக்கொண்டு வசிக்கும் அறத்தைப்
போலிருக்கிறான் என்று அவன் நினைத்தான் எனக் கவி கூறுகிறான். இந்திரசித்தனை அனுமன் கண்ணுற்றான்
என்பதற்கு முன்னேயே,
'இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான்'
'இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான்'
என்று ஓர் கட்டியம் கூறிவிட்டு, அவனைக் கண்ணுற்றபோது,
ஆச்சரியப்பட்டு,
'வளையும்
வாள்எயிற்று அரக்கனோ, கணிச்சியான் மகனோ,
அளையில்
வாளரி அனையவன் யாவனோ, அறியேன்
இளைய வீரனும்
ஏந்தலும் இருவரும் பலநாள்
உளைய உள்ளபோர்
இவனொடும் உளதுஎன உணர்ந்தான்'
என்றும்,
'சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடு மாலாம்
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?'
என்றும்
நினைப்பதாகக் கூறுகிறான்.
(அரக்கர் தலைவனாகிய ராவணன்தானோ, சிவனது மகனாகிய
முருகனோ, குகையில் சிங்கம் தூங்குவதுபோல் தூங்கும் இவன் யாரோ, தெரியவில்லை, இலக்குவனும்
இராமனும் பல நாள் தவிக்கும்படி போரிட வல்லவன் என்பதை உணர்ந்தான்; சிவன், பிரம்மா, திருமால்
ஆகியோரைத் தவிர இன்னொருவர் இவனுக்கு நிகர் எனக் கூறுவது அறிவாகுமா?)
இந்த மேற்கோள்களினின்று,
பிறருடைய கதைகளை சுவீகரித்து அவற்றை முதனூலாசிரியன் போலவே சுதந்தரமாகவும் கம்பீரமாகவும்
நடத்திக்கொண்டு போவதில் கம்பன், ஹோமரின் கதைகளை சுவீகரித்துக் கையாண்ட எஸ்கூலனுக்கும்
ஸோபோகிளனுக்கும் ஓர் படி உயர்ந்தவன் எனவே அறிஞர் கண்டுகொள்வர்.
ஊர்தேடு படலம் போன்ற கட்டங்களில் கவிக்கு நீண்ட உபதேச
வர்ணனை மாலையை ஆக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது; ஆனால் இவற்றை வெறும் வர்ணனை மாத்திரம்
நிரப்பின், படிப்போருக்கு சலித்துப்போம். இவற்றோடு பொருந்திய உணர்ச்சிகள் விரவி வருவதே
ரசனைக்கு அழகு தரும். இவ்விரகசியம் மகா கவிகளுக்குத்தான் தெரியும்.
-----------------------------------------------------
வணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//இவற்றை வெறும் வர்ணனை மாத்திரம் நிரப்பின், படிப்போருக்கு சலித்துப்போம். இவற்றோடு பொருந்திய உணர்ச்சிகள் விரவி வருவதே ரசனைக்கு அழகு தரும்.//
ReplyDelete:) அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
வ.வே.சு. அய்யர் இயற்றிய ’கம்பராமாயண ரசனை’ என்பதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் பகிர்ந்துகொண்டு, மேலும் சில விளக்கங்கள் அளித்துள்ளதற்கு, பாராட்டுகள் + நன்றிகள், ஐயா.
தொடர்ந்து வாசித்து விவரமாக விமர்சித்து நீங்கள் எழுதும் பாராட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல .
Deleteஉங்கள் பாராட்டுரை எனக்கு ஊக்கமூட்டுகிறது .நன்றி .
ReplyDeleteவ வே சு ஐயரின் கம்பராமாயண ரசனை கட்டுரையின் இச்சிறுபகுதியைப் படிக்கும் போது கம்பராமாயணத்தை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. ரசனை மிகுந்த பகுதியை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது படித்து சுவைக்கலாம் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteஅருமையான விளக்கம் ...பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி .
Delete