Monday, 28 May 2018

இந்துக்களின் வேதங்கள்





  “வேதங்கள் தெய்விகம் வாய்ந்தவை. இவற்றிற்கு அபௌருஷேயங்கள் என்னும் அடைமொழியை ஈந்து அவை மக்களால் ஆக்கப்படாத தெய்விக நூல்கள் என ஆஸ்திகர்கள் போற்றுவார்கள்.” (1)

   அதாவது கீதையைக் கிருஷ்ண பகவான் அருளியது போல வேதங்களை இறைவன் படைத்தான்.

  ஆனால் உண்மை வேறு:
 
   “கண்ணுவர்கள், கோதமர்கள், கிரித்சமதர்கள், விருகதுக்தன் முதலிய ரிஷிகளால் பாடப்பட்டவை வேதப் பாடல்கள்.” (2)

   “வேதங்கள் ஒரு தனிக்கவியின் ஆக்கமல்ல. இவை வெவ்வேறு காலங்களில் கவிகள் பலரால் பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்டு நெடுங்காலம் வழங்கிவரும்போது ஒருகால் ஒன்று சேர்த்துப் பிரிவு பிரிவுகளாகத் தொகுத்து அமைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பின்னரே வேத இலக்கியம் இன்று காணப்படும் உருவைப் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இவ்வேத இலக்கியத்தைக் குறிக்க வரும் பெயர்களுள் திரயீவித்யா என்பது ஒன்று. மூவகை வித்தை என்பது இதன் பொருள். இருக்கு, யசுர், சாமம் என்பவையே இவ்வித்தையின் முப்பெரும் பிரிவுகள். நான்காம் வேதமான அதர்வம் நெடுங்காலத்துக்குப் பின்னரே வேத இலக்கியத்தில் இடம்பெற்றமையால், இது இங்கு வேதங்களுள் ஒன்றாகக் கூறப்படாதிருக்கக் காண்கிறோம்.” (3)

  எனவே, வேதங்கள் மக்களின் படைப்பு, அவை வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவாகிறது.

   “இப்பாட்டுகளைப் பாடியபோது ஆரியர்களுக்குக் கடவுள் பற்றிய விழுமிய அறிவு இல்லை." பண்டை நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற் கடவுளின் உண்மையை உணர்ந்தவர் அல்லர். அதனையுணராமையின் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணரார் ஆயினர். தம்மால் கருதப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் முதலான சிறு தெய்வங்களையே வேண்டி வணங்கிவந்தனர். (4)

  “வேதங்கள் ஒன்றேயான ஈஸ்வரனைச் சொல்லவில்லை. பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறது. அவர்கள் மனிதர்களைப் போன்ற ஓர் இனந்தான். (5)

  “இருக்கு என்பதற்குப் பாட்டு என்று பொருள். இருக்கு வேதப் பாடல்கள் பெரும்பாலும் அக்காலத்தில் வழிபட்ட தெய்வங்களை விளித்து அவர்களிடமிருந்து தமக்கு வேண்டிய பொருள்களை இரந்து கேட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு அவர்களைப் போற்றிக் கூறும் முறையில் அமைந்து விளங்குகின்றன. (6)

  ‘நான் உனக்கு நெய் முதலிய ஆகுதிகளைத் தருகிறேன். நீ எனக்கு வீரர்களான மக்களையும் பசுக்களையும் மழையையும் நீண்ட ஆயுளையும் தா’ என்பதே இருக்குப் பாக்களில் தெய்வங்களை நோக்கி மீண்டும் மீண்டும் வேண்டிய வேண்டுகோள்.” (7)

   “உலகியல் விஷயங்கள், அரசர்களைப் போற்றிக் கூறும் பகுதிகள், தத்துவக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் முதலியவற்றையும் இருக்கு வேதத்தில் அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கக் காண்கிறோம்.” (8)

   இருக்கு மறையின் உள்ளடக்கம் இது; மற்ற வேதங்கள் ஆரியர்களின் பகைவர்களை இழித்தும் பழித்துங் கூறி அவர்களையழிக்கும்படி தெய்வங்களை வேண்டுகின்றன. ஆடு, பசு, எருது, குதிரை முதலியவற்றைக் கொன்று இயற்றும் வேள்விகளை விவரிக்கின்றன. மனிதனைப் பலியிட்டு வேட்ட யாகமும் உண்டு; இது புருஷமேதம் எனப்பட்டது; நரபலி என்றும் பெயர். கீழானவன் என்று கருதப்பெற்ற சூத்திரனைப் பலியிட்டிருப்பார்கள் என்று யூகிக்கலாம்.

   யசுர் என்றால் உரைப் பகுதிகள். இது கிரியைகளைப் பற்றி விளக்கங்கூற உரைநடையில் பெரும்பாலும் அமைந்த நூல். சாமம் என்றால் இசை பெருக்கி இராகம் இழைத்துப் பாடும் பாட்டு. அதர்வ வேதம் மாந்திரிக நூலாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது.

   வேதங்களை வியாசர் என்பவர் தொகுத்தார் எனவும் ஆதலால் வேத வியாசர் எனப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது. அவர் முறையாய்த் தொகுக்கவில்லை. எடுத்துக்காடு: சாம வேதத்தில் 1549 பாக்கள் இருக்கின்றன; இவற்றுள் 75 தவிர ஏனைய எல்லாம் இருக்கு வேதத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இந்த 75-இலும் சில பாட்டுகள் வேள்விமுறை கூறும் வேறு நூல்களிலிருந்து வந்தவை. (9)

  வேதத்தில் தெஇளவாக விளங்காத பகுதிகள் எத்தனையோ இருக்கின்றன. வேதங்களின் கருத்தை அறிய முயலுதல் அநாவசியம் என்பது ஆன்றோர் கருத்து. இதே கருத்துடன்தான் இன்னும் வேதங் கற்போர், ஓதும் முறையையே பன்னிரண்டு ஆண்டுகள் முழுதும் கற்கின்றனர். (10)

  அதாவது அர்த்தம் புரியாமல் குரு சொல்வதைத் திருப்பிச் சொல்லி ஓதுகின்றனர்.

    இவ்வாறு பல குறைபாடுகள் இருப்பினும் இந்திய இலக்கியங்களுள் பழமை சான்றவை என்ற பெருமை வேதங்களுக்கு உண்டு. இவற்றின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள் சிறப்பான தத்துவக் கருத்துகள் பொதிந்தவை.








குறிப்புகள்
(1)  வடமொழி இலக்கிய வரலாறு. பேரா. கா. கைலாசநாத குருக்கள் இயற்றியது. பக். 28.
(2)  வேளாளர் நாகரிகம். மறைமலையடிகள். பக். 89.
(3)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 42.
(4)  வேளாளர் நாகரிகம். பக். 44.
(5)  சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்.’
(6)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 51.
(7)  மேற்படி நூல். பக். 83.
(8)  மேற்படி நூல். பக். 52.
(9)  மேற்படி நூல். பக். 127.
(10) மேற்படி நூல். பக். 86.

(படங்கள் உதவி - இணையம்)

3 comments:

  1. ஐயா வணக்கம்நான் ப்கவத் கீதையை தமிழில் எழுதி இஒருந்தேன் அதில் என் என் எண்ணப் பகிர்வாக /கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பதில் பதினேழாம் சுலோகத்தில் “இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும் ஓங்காரம், ரிக், சாம யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே” என்று வருகிறது. அதர்வண வேதம் அவருக்குத் தெரியாதா? அப்போது அதர்வண வேதமே இருக்கவில்லையா என்று என்னுள் கேள்வி எழுந்தது./என்று எழுதி இருந்தேன் வேதங்கள் ஆன்மா போன்ற வை நம்மை மூளைச் சலவை செய்யவே உதவியாய் இருக்கிறது கேள்வி கெட்காமலேயே உடன் பட வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா , உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கீதையை நீங்கள் தமிழில் எழுதியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன் .பாராட்டு . பெரிய முயற்சி .

    ReplyDelete
  3. வருக ஐயா , உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete