Thursday, 5 July 2018

மறைந்த தங்கப்பா

ம.இலெ.தங்கப்பா



   புதுச்சேரித் தமிழறிஞர் .இலெ. தங்கப்பா தம் 84-ஆம் அகவையில் மே 31-ஆம் நாள் காலமானார். ஜனவரியிறுதியில் இதய நோய்க்கு ஆளான அவர், தக்க சிகிச்சை மேற்கொண்டு வந்தும், பலனின்றிப் போயிற்று. கவிஞர், முற்போக்கு சிந்தனையாளர், மொழிபயெர்ப்பாளர் ஆகப் பல துறைகளில் புகழெய்திய அவர், ‘தெளிதமிழ்என்ற தனித்தமிழ் இலக்கிய மாதச் சிற்றிதழின் ஆசிரியராயும் பணியாற்றினார். புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய்த் திறம்படக் கற்பித்த அவர், ஆங்கிலத்திலும் நிறையறிவு பெற்றிருந்தார்.

   சாகித்ய அகாதெமியின் விருதை இருமுறை பெற்றமை அவரது திறமையைப் பறைசாற்றப் போதுமானது:

1.   தமிழ் அகப் பாடல்களைத் தேர்ந்து மொழிபெயர்த்து Love Stands Alone என்னுந் தலைப்பில் வெளியிட்ட நூலும்
2.   குழந்தைகளுக்கான தமிழ்ப் பாட்டுகள் என்ற படைப்பும்

   அவ்விருதுகளைப் பெற்றுத் தந்தன.

   அவரது எழுத்துப்பணி அவ்வளவோடு நின்றுவிடவில்லை.
  
-    முத்தொள்ளாயிரத்தின் மொழிபெயர்ப்பு நூல் Penguin வெளியீடாக Red Lilies and Frightened birds என்னுந் தலைப்பில் வந்தது.
-    நாலடியார், புறநானூற்றுப் பாக்கள், திருமந்திரப் பாடல்கள் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார்.
-    20-ஆம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் Andre Gide இயற்றிய Les Nourritures Terrestres என்ற படைப்பை ஆங்கில வழித் தமிழில்மண்ணின் கனிகள்என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
   
கொஞ்சம் sample தருகிறேன்:

1.   புறம் 221. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது மனம் வருந்திப் பொத்தியார் பாடியது:

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோ என்னே
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தனை யுலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

He gave to the singers
  And won much fame.
He gave to the dancers
  And gained many a heart.
Men of virtue paid him homage.
  His sceptre was never bent.
Men of wisdom paid him tributes.
  His friendship was constant.
Gentle and sweet to women,
  And tough before his men
He was a sanctuary
  To the noble.
Reckoning nothing of this
  Thoughtless Death
Has claimed this worthy soul.
   Let us come together
   In our sorrow
O poets of thoughtful words
And condemn Death.
  For, alas,
Plunging this world in sorrow
  Our great patron
  In all his glory
Has become
  A monument of stone.


2.   புறம் 248. ஒரு கைம்பெண்ணின் அவலத்தை ஒக்கூர் மாசாத்தியார் எடுத்துரைக்கிறார்.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லாயினவே.

Woe unto me!
When I was young
This lily supplied me with leaves
Now that my husband is dead
It provides me with seeds
Which I must cook and eat
At an untimely hour
Denying myself regular meals.

3.   15.8.2017 தெளிதமிழில் வந்தது:

    கொள்ளையரை ஒழிப்போம்

பன்னாட்டு வாணிகரும் உள்நாட்டுக்
  கொள்ளையரும் பழிசேர் வாழ்க்கைப்
புன்னோக்கின் ஆட்சிசெய்யும் புல்லியரும்
  உள்ளுளவாய்ப் புரிந்துகூடி
இந்நாட்டின் வளம்முழுதும் தின்கின்றார்;
  எளியவரின் நிலம் பறித்தே
அன்னார்தம் வாழ்வுரிமை அழிக்கின்றார்.
  இதன் பெயர்தான் ஆட்சியாமே!
குடியாட்சி நாடிதென்று கூறுவதோ?
  ஆள்பவராம் கொள்ளைக் காரர்
முடியாட்சி மன்னரினும் முப்பகட்டாய்
  வாழ்கின்றார்; முடியா மக்கள்
அடிவயிற்றில் அடிக்கின்றார்; ஐயகோ!
  சான்றோரே, அறஞ்சார்ந் தோரே!
இடியேறாய் முழக்கமிட்டே எழுந்திடுவோம்
  கொள்ளையரை ஒழிப்போம், வாரீர்!

பின்குறிப்புதம் சடலத்தைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

4 comments:

  1. 04/02/2018 என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு இவர் தாம் தலைமையேற்பதாக இருந்தது. உடல்நலக்குறைவால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டமே. புதுவை மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர். இவர் மறைவு தமிழுக்கும், புதுவைக்கும் பேரிழப்பு. மறைந்த பின்னும் தம் உடம்பை மருத்துவ ஆராய்ச்சிக்காக இவர் கொடுத்திருப்பது அறிந்து மனம் நெகிழ்ந்தேன். போற்றுதலுக்குரிய தமிழறிஞர்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் , போற்றுதலுக்குரியவர் ; முற்போக்கு எண்ணங்களைப் பரப்பியவரின் மறைவு தீப்பேறே . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. புதுவையில் நடைபெற்ற எங்கள் புத்தக வெளியீட்டுவிழாவில் தமிழறிஞர் ம.லெ. தங்கப்பா அவர்கள்தான் தலைமை என்று அறிந்தபோதுதான் அவரைப் பற்றி அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. அன்னாரை என்னால் நேரில் காண இயலாமலும் அவருடைய உரையைக் கேட்க இயலாமலும் போய்விட்டது. ஒரு மாபெரும் தமிழறிஞரைத் தவறவிட்ட வேதனை மண்டுகிறது.

    இப்பதிவில் எடுத்துக்காட்டாகத் தந்துள்ள புறநானூற்று ஆங்கில மொழிபெயர்ப்புப் பாடல்கள் அற்புதமாக உள்ளன. தமிழறியாதோரும் தமிழின் இனிமையை அறிந்துகொள்ள நல்லதொரு முயற்சி. தெளிதமிழ் சிற்றிலக்கிய இதழ்களை மறைமலைநகரில் இருந்தபோது வாசித்திருக்கிறேன். அதன் ஆசிரியர் இவர்தான் என்று இப்போதுதான் அறிகிறேன்.

    அன்னாரின் பெருமைகளைப் பறைசாற்றும் மிகச் சிறப்பானதொரு நினைவஞ்சலி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அவரைச் சில தடவை சந்தித்து அளவளாவும் பேறு எனக்குக் கிட்டியது ; என் பிரஞ்சு இலக்கிய வரலாறு நூலை வாசித்துப் பாராட்டி அவர் எழுதிய கடிதத்தையும் அவரது வேறு சில கடிதங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன் . .

      Delete