மகாவீரர் சமாதியடைந்தபோது சமணர் வரிசையாய் விளக்கேற்றி
வைத்ததாகவும் அதைக் காலப்போக்கில் இந்துக்கள் தீபாவளி என்னும் பெயரில் தமது விழாவாக்கிக்
கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்துக்களின் சொந்தப் பண்டிகையல்ல என்பதால்தான் நாடு முழுதும்
தீபாவளி ஒரே மாதிரியாக அனுசரிக்கப்படவில்லை.
தமிழர்க்கு நரகாசுரன் இறந்த நாள்; தலைமுழுகிப் புத்துடை
அணிந்து மகிழ்கின்றனர்; வட நாட்டாரோ இராமன் போரில் வென்று அயோத்திக்குத் திரும்பிய
நாள் எனக் கூறி இராம லீலா கொண்டாடுகின்றனர்; கர்நாடகத்தில் தசராதான் முக்கிய விழா; வங்காளத்தில் துர்கா பூஜை; கேரளத்தில் ஓணம்; இங்குத்
தீபாவளிக்கு இடமேயில்லை.
இட்லர், இடி அமீன், போல்போட் முதலியவர்கள் மக்களைக்
கொன்று குவித்த கொடியவர்கள்; அவர்கள் அழிந்த நாளில் யாரும் விழா எடுப்பதில்லை. ஒருவன்
எவ்வளவுதான் பாதகனாய் இருப்பினும் அவன் ஒழிந்தமைக்கு மகிழ்ந்து விழாக் கொண்டாடுதல்
பண்பாடற்ற செயல்.
தீபாவளி எப்போது தமிழகத்தில் நுழைந்தது என்பதை அறியோம்;
அது பற்றி சங்க இலக்கியங்களில் செய்தி இல்லை; ஆனால் கார்த்திகை விழா குறித்துத் தகவலுண்டு.
அகநானூறு பா 141. அடி 7-11
“…… மதி நிறைந்து
அறுமீன் சேரும்
அகலிரு நடுநாள்
மறுகுவிளக் குறுத்து
மாலை தூக்கிப்
பழுவிறல் மூதூர்ப்
பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருக.”
உரை: சந்திரன்
நிறைவடைந்து (பௌர்ணமி) கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிற அன்று, இரவில், தெருக்களில்
விளக்குகளை வரிசையாய் ஏற்றி வைத்துப் பூமாலைகளைத் தொங்கிவிட்டு ஊரில் பலருடன் கூடி
விழாக் கொண்டாடுவதற்கு வருக.
விளக்கம்:
அறுமீன் = ஆறு மீன்; கார்த்திகை நட்சத்திரம்.
உண்மையில் இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டம்; ஆறுதான் பிரகாசமாய்த் தெரியும். ஆங்கிலத்தில்
Pleiades.
மறுகு = தெரு;
மூதூர் = முதுமை + ஊர். பழைய ஊர்.
பிற்கால நூலாகிய
களவழி நாற்பதும் கார்த்திகை விழாப் பற்றிப் பேசுகிறது.
பா 17. அடி 3:
“கார்த்திகைச்
சாற்றில் கழிவிளக்கு”
பொருள்:
சாற்றில்
= விழாவில்;
கழி = மிகுதியான
தமிழர் தொன்றுதொட்டுக்
கொண்டாடிவருகிற கார்த்திகைத் தீப விழாதான் உண்மையில் நமக்குத் தீபாவளி. (தீப + ஆவளி
= தீப வரிசை)
அது கோவில் விழாவாக எக்காலத்திலோ மாறிவிட்டது.
&&&&&
படம் உதவி - இணையம்
\\கார்த்திகைத் தீப விழாதான் உண்மையில் நமக்குத் தீபாவளி\\ சங்க இலக்கியங்களைச் சான்றாக வைத்து தாங்கள் விளக்கியிருக்கும் கருத்து மிகவும் ஏற்புடையது. அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.
ReplyDeleteமகிழ்ச்சி
Deleteகார்த்திகை விழா தொன்று தொட்டுத் தமிழர்களால் கொண்டாடியது பற்றிய விபரமறிந்தேன். சிறுவயதிலிருந்தே கார்த்திகை விழாநாளில் விளக்குகள் ஏற்றி வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த நாளில் என் அம்மா இறந்ததிலிருந்து, அவ்விழாவைக் கொண்டாட விருப்பம் இல்லாமல் போயிற்று. அந்த நாளில் என் அம்மாவின் நினைவுகள் மேலோங்கி, மனம் பாரமாகிவிடுகின்றது. கொண்டாட்ட மனநிலை போய்விடுகின்றது.
ReplyDeleteஆம்,துயர் நினைவுகள் ஆழமாக மனத்தில் பதிந்துவிடுகின்றன.
Deleteநல்லதொரு விளக்கம் ஐயா... நன்றி...
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி.
Deleteகார்த்திகை விழா பற்றித் தெரியாத விபரம் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteநன்றி
ReplyDelete'தீபாவளி' என்றால் 'தீப ஒளி' என்றுதான் அறிந்திருந்தேன்.
ReplyDeleteதீப + ஆவளி = தீப வரிசை; நன்றாக விளக்கிவிட்டீர்கள். நன்றி !
வருக ! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Deleteஉண்மையில் எங்கள் தீபாவளி கார்த்திகை விழா என்பதை இலக்கியப் பாடல் மூலம் விளக்கியமை சிறப்பு. நன்றி
ReplyDeleteவருக ! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .
Delete