ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய
குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது. அவை:
1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற
வேண்டியதைக் குறைவாகக் கூறுதல்.
2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல்.
3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும்
சொல்லுதல்.
4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின்
முரணாகக் கூறுதல்.
5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக
எழுதுதல்.
6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர்
அய்யுறும்படி எழுதுதல்.
7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய
நயமில்லாத, பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல்.
8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள்
பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல்.
9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த்
தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல்.
10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த
கருத்தின்றி. வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல்.
நன்னூலார் காலத்தில் இல்லாமல்
பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை, கவிதை, கட்டுரை முதலிய சிறு படைப்புகளுக்கும்
இவ்விதி பொருந்தும்.
இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும்
குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன; இது மொழியைச் சீரழிக்கும் நிலை;
ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை
எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற, "சுதந்தர", மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை.
ஒரே யோர் காட்டுத் தருகிறேன்:
14-8-11 தினமணி - பக். 8 " நான்மணிக் கடிகை - ஓர் அறிமுகம்"
என்பது தலைப்பு.
பத்தி 2 - வரி 1 : நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள்.
அடுத்த பத்தி - வரி 2 : நான்கு மணிகளால் ஆன ஆபரணம் என்று
பொருள்படும்.


