Thursday 14 June 2012

பத்துக் குற்றம்



ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது. அவை: 


1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற வேண்டியதைக் குறைவாகக் கூறுதல். 

2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல். 

3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும் சொல்லுதல். 

4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல். 

5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக எழுதுதல். 

6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர் அய்யுறும்படி எழுதுதல். 

7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய நயமில்லாத, பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல். 

8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல். 

9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த் தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல். 

10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த கருத்தின்றி. வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல்.

நன்னூலார் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை,  கவிதை,  கட்டுரை முதலிய சிறு படைப்புகளுக்கும் இவ்விதி பொருந்தும். 

இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும் குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன;  இது மொழியைச் சீரழிக்கும் நிலை;  

ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற, "சுதந்தர", மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை. 

ஒரே யோர் காட்டுத் தருகிறேன்: 

14-8-11 தினமணி - பக். 8  " நான்மணிக் கடிகை - ஓர் அறிமுகம்" என்பது தலைப்பு. 

பத்தி 2 - வரி 1 :  நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள். 

அடுத்த பத்தி - வரி 2 :  நான்கு மணிகளால் ஆன ஆபரணம் என்று பொருள்படும்.

5 comments:

  1. நன்னூல் என்பது எதில் போட்டுத் தைக்கும் நூல் என்று தமது மாணவர்கள் கேட்கும் காலத்தில் இருக்கிறோம்..

    இயந்திர நுட்பவியல்-இன்ஜினீயரிங்- படித்துத் தேர்ந்த பல மாணவர்களுக்கு அடிப்படையான தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் கூடத் தெரியாத நிலைதான் இருக்கிறது..

    வளரும் சிறு வயதுப் பருவத்தில் பசுமரத்தாணி போல் பதியும் பருவத்தில் பலவற்றை கற்க வைக்க வேண்டிய பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரை படிக்காமலேயே தேர்ச்சி என்று அறிவிக்கின்ற சமூகத்தில் விளைபவர்கள் எவ்விதம் இருப்பார்கள்?

    தமிழ் இனி மெல்லச் சாகும் ! :(

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவலையை நானும் பகிர்ந்துகொள்கிறேன் . தமிழரிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது . தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சான்று . பாட்டு . நடனம் முதலிய எளிய தமிழ்ச் சொற்கள்கூடப் புழங்கவில்லை . தமிழ் செத்துக்கொண்டுதான் இருக்கிறது , கையைப் பிசைந்துகோண்டு செய்வதறியாமல் தமிழ் ஆர்வலர்கள் வேதனை உறுகிறார்கள் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. மறைந்த நாகரிகங்கள் பற்றிய நூல் எழுதியிருக்கிறீர்கள்..சிந்து வெளி நாகரிகமும் ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளுக்குமான தொடர்பு பற்றிய உங்கள் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

    இந்தப் பதிவையும் பதில்களையும் பார்க்கவும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று பேர்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் உறுதிபட்த் தெரிவித்திருக்கிறார் ; ஆனால் அதன் எழுத்துகளை வாசிக்க இயலவில்லை . ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகள் . அகழ்வாய்வில் பல இடங்களில் கிடைத்த மண்பாண்ட எழுத்துகள் சிந்து நாகரிகத்துடன் தொடர்பு உடையவை என்பதே அறிஞர் கருத்து .அதை நான் ஏற்கிறேன் .

      Delete
  3. கட்டுரைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete