Thursday, 5 March 2015

என்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை


   

ஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள்  ஒருவர்   என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில்  சிலவற்றைத்  தமிழில் பெயர்த்திருக்கிறார்  கீதா மதிவாணன் .  என்றாவது  ஒரு நாள்  என்னும் தலைப்புடன்  வெளிவந்துள்ள  அந்தச்  சிறுகதைத் தொகுப்பு நூலை விரிவாய்த் திறனாய்ந்த  இரு  கட்டுரைகள்  இணையத்தில் இடம்  பெற்றிருக்கின்றன.  என் பங்குக்கு,  நூல் பற்றிய என் கருத்துகளைப்  பதிகிறேன்.

   ஒரு நூற்றாண்டுக்குமுன்பு, ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட ஆங்கிலேயக்  கைதிகள்தங்களுக்குச் சிறிதும்  பழக்கமில்லாத, புத்தம்புதிய, அடிப்படைக்  கட்டமைப்பு  அறவே இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளாகி  அனுபவித்த இன்னல்களை  ஆசிரியர் திறம்படச்  சித்திரித்துள்ளார்.

  கதைமாந்தர்  கீழ்மட்ட மக்கள், ஏழைகள்; ஆயினும் கடின உழைப்பு, கடமையுணர்ச்சி, பாசம்,  அறைகூவல்களை  எதிர்கொள்ளும்  துணிச்சல் முதலான  நற்பண்பு உடையவர்கள்; சிறுவர்களும் குடும்பப் பாரத்தை மனமுவந்து சுமக்கிறார்கள்!  ஆயினும்,  பொறுப்பற்ற போக்கு,  தன்னலம், பகையுணர்வு சிலரிடம் காணப்படுகின்றன. தம் வாழ்வில் ஆசிரியர் அனுபவித்த துன்பங்கள் தந்த  பட்டறிவுகதை மாந்தரையும் சூழ்நிலையையும் துல்லியமாய்ச்  சித்திரிக்கப்  பெருமளவில் உதவியிருக்கும்.

   அக்கம்பக்கம் மனித  சஞ்சாரமற்ற  தனிமைச்  சூழ்நிலைவிரக்திக்கு எளிதில்  இட்டுச் செல்லக்கூடியதுஆயினும்   இவர்களில் யாரும்,    "என்ன வாழ்க்கை இது? இப்படி  உழல்வதைவிட, இறந்து போவது  மேல்என்று  எதிர்மறையாய்ச் சிந்தியாமை  போற்றற்குரியது.

     லாசனின் சுவை நிரம்பிய எழுத்துக்கு ஒரு காட்டு:  புதர்க்  காடுறை பூனைகள்;  அவருடைய  எழுத்தாற்றலைப்  பக்கம் 65 பறை  சாற்றுகிறது: வாசகரின் உள்ளம்  நெகிழுமாறு வறியவரின் அவல நிலையை அது விவரிக்கிறது.

  மொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்காலஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து மொழிபெயர்ப்பது என்பது  அறைகூவல் நிறைந்த  பணி. மூல ஆசிரியரின் கருத்து, நடை, உத்தி ஆகிய மூன்றையும்  அப்படியே வாசகர்க்கு வழங்குவதே சிறந்த  பெயர்ப்பு எனப்படுகிறது. அதில்  பாராட்டுக்குரிய விதத்தில்  வெற்றி பெற்றிருக்கிறார்  பெயர்ப்பாளர்;  சனியன், புண்ணியமாய்ப் போகட்டும், பாழாய்ப்போன   முதலிய   சில சொற்றொடர்கள் மட்டும்   தமிழ்ச் சாயலைத்  தோற்றுவிக்கின்றன; மூலத்தில் இப்படி  இருக்காது எனக் கருதுகிறேன்.


   கீதா மதிவாணனின்  எழுத்துப் பணி மேன்மேலும்  சிறக்கட்டும்!


Thursday, 19 February 2015

கடல் ஊர்தி


    


சில லட்சம்  ஆண்டுக்கு  முன்பே மனிதர் தோன்றிவிட்டாலும்  கடந்த ஐயாயிரம் வருடங்களுக்கு மட்டுந்தான்  அவர்களின் வரலாறு தெரிகிறதுஅதற்கு முன்னர் அவர்கள்  எங்கெங்கு எப்படியெப்படி வாழ்ந்து என்னென்ன சாதனை நிகழ்த்தினார்கள் என்பதை அறிய வழியில்லை.

     கடலைக் கடப்பதற்கு  ஊர்தி  உருவாக்கியது  ஓர் அரும் பெருஞ் சாதனை;    எந்த நாட்டுக்காரர்  அப்பெருமைக்கு  உரியவரோ?

      வரலாற்றின்படி, கப்பல்களைக் கட்டும் தொழில் நுட்பம் தெரிந்து  அவற்றை உருவாக்கி  முதன் முதலில் கடலைக் கடந்தவர்கள் சுமேரியர்கள்இப்போதைய  ஈராக்கில் வசித்த அவர்களே முதல் கடல் வணிகர்கள்.

       அவர்களின்  வாரிசாய்  விளங்கியவர்கள் எகிப்தியர்  என்றாலும், பெருமளவு  கடல்  வாணிகம் புரிந்த உலக  முதல்வர்கள் கிரீட்டியர்கள்;  அவர்களின் நாடு  எகிப்துக்கு  வடக்கில்  உள்ள கிரீட்  தீவுநடுநிலக்  கடல் முழுதிலும்  குறுக்கும் நெடுக்குமாய்க்  கலம் ஓட்டிப்   பற்பல நாடுகளுடன் வர்த்தகம் புரிந்து  செல்வம் குவித்துச் செழிப்பாய், சொகுசாய், வாழ்ந்த அவர்களுக்குப் பின்னர், சீதோனியர் என விவிலியம் குறிப்பிடும்  பினீசியர்   (இன்றைய  லெபனானின்  பழங்கால  மக்கள்)  கடலாதிக்கத்தைக் கைப்பற்றி  நீண்டநெடுந் தொலைவுப்  பயணம் மேற்கொண்டதுடன் நில்லாமல்,  போர்க் கப்பல்களும் கட்டிப்  பிற  நாடுகளின்மீது  படையெடுத்துச் சென்று  வென்று காலனிகள் தோற்றுவித்துப் பிற்காலத்து  ஆங்கிலேயர்  முதலியோர்க்கு முன்னோடிகளாய்த்  திகழ்ந்தார்கள்.

   அதன் பின்பு, யவனர்கள்  (கிரேக்கர், ரோமானியர்) கடல் வியாபாரிகளாய்ச் சிறந்து விளங்கினர்;   அவர்கள் தமிழகத்துக்கும்  வந்திருக்கிறார்கள்:

  1 - அக நானூறு - 149 :

  யவனர் தந்த வினைமாண் நன்கலம்
  பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

  (பொன்னைத் தந்து மிளகு வாங்கினர்);

  2 - புற நானூறு - 56 :

   யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

  (தேறல் - மது;  சாராயம்  கொண்டு வந்து விற்றனர்);

  3 - மதுரைக் காஞ்சி - 321 - 323 :

    விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
    நனந்தலைத் தேஎத்து  நன்கலன் உய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த  புரவியொடு

 (நாவாய் - கப்பல்;  ஓச்சுநர் - மாலுமிகள்;   கலன் உய்ம்மார்நகை வாங்கிப் போவதற்கு;   புரவி - குதிரைகள்.)
 குதிரைக்கு  மாற்று, பொன் நகை.

 தொழில் நுட்பம் மேம்பட மேம்பட,  காற்றை நம்பிச்  செலுத்திய பாய்மரக் கப்பல்களைக் கைவிட்டு நீராவியால் இயங்கும் பென்னம்பெரிய கலங்களை உருவாக்கி, உலகத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் துணிச்சலுடன் பயணித்த ஐரோப்பியர்களுள்  குறிப்பிடத்தக்கவர்கள் ஸ்பெயின், போர்த்துகல்ஆலந்து, இங்கிலாந்து, பிரான்சு  நாட்டவர்கள்பிற நாடுகளை இவர்கள் கைப்பற்றித்  தங்கள்  ஆட்சியை  அங்கே திணித்துச்  செல்வந் திரட்டிக்   கொழித்தார்கள்.

   புதுப்புதுப் பிரதேசங்களைக் கண்டுபிடிக்க  நான்கு தடவை பயணித்த கொலம்பஸ்  ஓர்  இத்தாலியர், உலகை  முதன்முதல்  வலம்வந்த மெகல்லன்  போர்த்துகீசியர் , ஆஸ்திரேலியாவைக் கண்ட  தாமஸ்  குக் ஆங்கிலேயர்,   எனத் தனிக் கடலோடிகளும்  சாதனை புரிந்து புகழ் எய்தி உலக வரலாற்றில்  இடம் பிடித்தனர்.

  வாணிகம்,   நாடு கைப்பற்றல்  அல்லாமல்,    பிற  தேசங்களுக்குக்  கடல்  பயணம் மேற்கொள்ள  நவீன  மற்றும் பெரிய  கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. காட்டாக, சென்னைக்கும்  சிங்கப்பூருக்கும்  இடையே ரோனாரஜூலா  என்ற   கப்பல்கள்   கால அட்டவணைப்படி பயணித்தன.

   பழந் தமிழ் மன்னர்கள்  கடலில் கலம்  செலுத்தினார்கள்  என்பது  கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,  கடலுள்  மாய்ந்த  இளம்பெரு வழுதி  என்ற பெயர்களாலும்,

    நளியிரு முந்நீர்  நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட  உரவோன் ... ( முந்நீர் - கடல் )

 என்னும் புற நானூற்றுப்  பாடல்  அடிகளாலும் தெரிகிறது; ஆனால் விவரமான தகவல்கள் இல்லை. கப்பல் கட்டும் தொழில் நுட்பம் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதற்குச்  சிறு ஆதாரமும்  இல்லை.

  பிற்காலச் சோழர்களுள் முதலாம்  ராஜேந்திரன்  மலேசியாவரைத் தன் கடற்படையைச்  செலுத்திச்  சில பகுதிகளைக் கைப்பற்றினான்   என்று வரலாறு  தெரிவிக்கிறது.
            -----------------------------------------------------



Sunday, 8 February 2015

தமிழ் வளர்ச்சிக்குத் தடை



 திசம்பர் 2004 இல் ஜோ. டி. குரூஸ் இயற்றிய புதினம் "ஆழிசூழ்  உலகு" வெளிவந்து எட்டாண்டில் நான்காம் பதிப்பைக் கண்டது.

   கன்னியாகுமரி மாவட்ட மீனவச் சமுதாயத்தில் பிறந்த ஆசிரியர், அந்த நூலில், தம் குலத்தினரின் ஆபத்து நிறைந்த தொழில், பழக்க வழக்கங்கள், உட்பகை முதலானவற்றைச் சித்திரித்ததோடு சில பாதிரிமார்களின் குறுகிய நோக்கம், ஒழுக்கக் கேடு ஆகியவற்றையும் வெட்ட வெளிச்சம் ஆக்கியதால் இவர்கள் கிளப்பிவிட்ட எதிர்ப்பு  காரணமாய், சென்னையில் பணியாற்றும் அவர் தம் ஊருக்குள் நுழைய இயலவில்லை.

 (அவரது அடுத்த புதினம், "கொற்கை", சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றது).

   புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்து மா.மு.கண்ணனின் இரண்டாம் புதினம், "கானா ஈனாவின் கணினி" பிரசுரமான சில நாள்களில் ஊர்க்காரர்கள் வெகுண்டெழுந்து வன்செயல்களில் ஈடுபட்டு அவரது குடிசையைக் கொளுத்திவிட்டார்கள்;  அதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஏராள நூல்கள் தீக்கிரையாயின. அறிவுப் புதையல்களாயும் சிந்தனைக் கருவூலங்களாயும் திகழ்கிற நூல்களை எரிப்பது எவ்வளவு மடமை! காட்டுமிராண்டிகள் மேற்கொள்கின்ற இழிசெயல்!

  ஆசிரியர் இரண்டாண்டுக் காலமாய் ஊர் கடந்து வாழ்கிறார். சமூகச் சீரழிவு, பரவலான ஒழுக்கக் கேடு முதலியவற்றைத் தம் சொந்த அனுபவங்களை அடிப்படையாய்க் கொண்டு அம்பலப்படுத்தியதே அவரது  குற்றம்!

  அதே மாவட்டத்தின் குலந்திரன்பட்டு என்னும் சிற்றூர்க்காரர், தலித் எழுத்தாளர் துரை. குணா 40 பக்கக் கதை ஒன்று எழுதினார்; தலைப்பு: ஊரார் வரைந்த ஓவியம். சாதிக்கொடுமைகளைப் படம் பிடிக்கிற அதை மேல்சாதிக்காரர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தையே ஒதுக்கிவிட்டார்கள்; ஆசிரியர் ஊரினின்றும் வெளியேற நேரிட்டது.

   பேராசிரியர் பெருமாள் முருகனின் புதினம், "மாதொரு பாகன்", 2010இல்  வெளிவந்தது. திருச்செங்கோட்டுக்காரரான அவர்,  அப்பகுதி மக்களின் ஒரு  பழைய வழக்கத்தை மையக்கருவாய் வைத்து எழுதிய கதை; குழந்தைப்பேறு அற்ற பெண்கள், கோவில் தேரோட்ட நாளன்று இரவில், பிற ஆடவருடன் சேர்ந்து, அதிர்ஷ்டம் இருப்பின், சூலிகள் ஆவது அந்த வழக்கம். கதை பழங்காலத்தில் நிகழ்கிறது.

   நான்காண்டு சும்மா இருந்துவிட்டு, இப்போது, பெண்களை இழிவு படுத்தியுள்ளதாய்க் குற்றஞ்சுமத்தி, ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி, கடையடைப்பு ஆகியவற்றை ஆர்,எஸ்,எஸ். முதலிய மத வெறியர்களும் கவுண்டர்களில் சாதி வெறி தலைக்கேறியோரும் நடத்தியமையால், காவல் துறையின் ஆலோசனைப்படி, ஆசிரியர் வேற்றூருக்குச் சென்றார்.

    அந்த நூலைப் பென்குவின் கம்பனி, ஒன் பார்ட் வுமன் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் பெயர்த்து 2014 இல் வெளியிட்டதற்குப் பின்பே எதிர்ப்பு. அரசு சமரசக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்து வெளியீட்டுச் சுதந்தரத்தை அது வலியுறுத்திப் பெருமாள் முருகனை ஆதரிப்பதற்குப் பதிலாய், கிளர்ச்சியாளருடன் சேர்ந்து,  காவல் துறையின் துணையுடன், ஆசிரியரை வற்புறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு, சர்ச்சைக்குரியவற்றை இனி எழுதுவதில்லை, விற்காத பிரதிகளைத் திரும்பப் பெறுவது ஆகிய முடிவுகளை அவர்மீது  திணித்து எழுதி வாங்கிக்கொண்டது. 

   நொந்துபோன பெருமாள் முருகன் இனி எதுவும் எழுதுவதில்லை என  அறிவித்திருக்கிறார்.

  மேற்கண்ட செய்திகள் எதைக் காட்டுகின்றன? இலக்கிய ரசனை குறைந்தவர்களாகத் தமிழ்ப் பொதுமக்கள் இருக்கிறார்கள், உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல் அடைகிறார்கள்.

  புதுப்புதுக் கருக்களைக் கொண்ட நூல்கள்தான் மொழிக்குச் செழுமை சேர்க்கும். ஆட்சேபணைக்குரிய கருத்துகள் எனில் சட்டப்படி நடவடிக்கை  எடுப்பதை விடுத்துப் படைப்பாளியை ஒடுக்குவது எவ்வளவு மோசமான  செயல்? இனி எழுத்தாளர்கள், "நமக்கேன் வம்பு?" என்றெண்ணி அரைத்த  மாவையே அரைக்க வேண்டுமோ?  தமிழ்த் திரைப்படங்களைப் போல?


    +++++++++++++++++++++++++++++++++++++

Monday, 26 January 2015

கருத்துச் சுதந்தரம்


   எல்லாரும்  ஒரு விஷயம்  பற்றி  ஒரே  கருத்தைக் கொண்டிருக்கமுடியாது. அவரவர்  தத்தம் அறிவு, கொள்கை , கல்வி, மதம் முதலானவற்றின் அடிப்படையில்தான்  கருத்து தெரிவிப்பார்கள்;  அவை ஒன்று போல் இருக்க இயலாது  அல்லவா ? நம் கருத்தைச் சொல்ல  நமக்கு  உரிமை  உள்ளதுபோல்  பிறர்க்கும் தமது கருத்தை வெளீயிட உரிமை உண்டு.

  கருத்துச் சுதந்தரம்  மிக முக்கியமானது; ஆனால்  ஆட்சியாளர்களும் மதவெறியர்களும் தமக்கு  எதிரான  கருத்து வெளியிடுவோரை ஒடுக்குவதும் தாக்குவதும் சகஜம்.

  தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி  அப்படித்தான் செய்தது: "பொன்மொழிகள்" நூலுக்காகப் பெரியார், "ஆரிய மாயை" க்காக அண்ணாதுரை, "காந்தியார்  சாந்தி யடைய" வுக்காக ஆசைத்தம்பி  ஆகிய   திராவிட இயக்கத்தாரைச்  சிறைப்படுத்தினர்; புலவர்  குழந்தை  இயற்றிய  "இராவண  காவியம்" தடை  செய்யப்பட்டது.

  "சாத்தானிக்  வெர்சஸ்"  (Satanic verses)  எழுதிய சல்மான் ருஷ்டியும்  "லஜ்ஜா"  வின் ஆசிரியை தஸ்லிமா நசுரீனும்  முஸ்லீம்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக   அயல்  நாடுகளில்   தஞ்சம்  புக நேரிட்டது.

     இவை எல்லாம் நம்  கால  நிகழ்வுகள்.

     சில நூற்றாண்டுக்கு முன்பு,  ஐரோப்பாவிலும்  புரட்சிக் கருத்துகளை வெளியிட்டோர் அவதிக்கு ஆளாயினர்.

     "மனிதன் தூயவனாகப் பிறக்கிறான்; சமுதாயம் அவனைக் கெடுக்கிறது" என்ற கருத்து கொண்ட ருசோ,  தம் "எமீல்" என்னும் நூலில்,   மதக் கட்டுப்பாடுகளையும் சடங்குகளையும்  சமயத்தின்  பேரால்  நிகழ்ந்த கொடுமைகளையும்  சாடினார்; விலக்கப்பட்ட கனியை ஆதாமும் ஏவாளும்  உண்டதால் அவர்களின் சந்ததியாகிய மானிடர் யாவரும்  பாவிகள் ஆயினர் என்ற விவிலியச் செய்தியை  அவர் ஒப்பவில்லை.




     "எல்லா நூல்களும்  மனிதர்  இயற்றியவைதான்.  கடவுள் நமக்கு  அறிவை  அளித்தது அதைப் பயன்படுத்தாமல்  இருப்பதற்காபுத்தியை அடகு  வைத்துவிட்டு, "நம்பு, நம்புஎன்று வற்புறுத்துவது இறைவனை  அவமதிப்பதாகும்"

      மேற்கண்டவை அவரது சிந்தனையின் விளைவாய். வெளிப்பட்டவை .

       அவருடைய இன்னொரு நூல்,  "சமுதாய  ஓப்பந்தம்" மன்னராட்சியை எதிர்த்தும், குடியரசைத்  தோற்றுவிப்பதன் அவசியத்தையும் நன்மைகளையும் விவரித்தும் புதுமைக் கருத்துகளைப் பரப்பியது .

       வெகுண்டெழுந்தார்கள் ஆதிக்கவாதிகளான அரசர்களும்   மத வெறியர்களும்:  எமீல்  வெளியான சில நாள்களில், பிரஞ்சு நாடாளுமன்றம் அதைப்  பறிமுதல்  செய்யவும் கொளுத்தவும் ஆணை பிறப்பித்தது; கைதி ஆவதைத் தவிர்க்க,  ருசோ, பிரான்சில் தாம் வாழ்ந்த மோன்மோரான்சி என்ற ஊரிலிருந்து  அவசர அவசரமாய்  வெளியேறினார்;  தாம் பிறந்த நகரான ஜெனீவாவுக்கு  (ஸ்விட்சர்லாந்து) செல்லமுடியவில்லை: அங்கு எமீலுக்கு மட்டுமன்றி சமுதாய ஒப்பந்தத்துக்கும்  எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது; பாதுகாப்பான  புகலிடம் கிடைக்காமல் தவித்தார்.

       கத்தோலிக்கர், ப்ரொஸ்டென்ட்  ஆகிய  இரு கிறித்துவ   சமயத்  தலைவர்களும் அவருக்கு எதிராய்ச் செயல்பட்டமையால், பொதுமக்கள் அவரைத்  தம் பகைவராய்க் கருதினார்கள்.

        ஒருவழியாய், மொத்தியே என்னும் நகரில்  அவர்  தங்கி இருந்தபோது  (1765)  அவருடைய இல்லத்தின்மீதுஇரவில்ஒரு கும்பல்  கல் வீசித்  தாக்கியது; சேன் பிஏர் என்ற சிறு தீவுக்கு ஓடிப்போனார். ஆட்சி நாடு கடத்தியது.

       தஞ்சம் அடைந்த இங்கிலாந்தில்  வசிக்க  முடியாமல், 1767 இல் மீண்டும் பிரான்சை அடைந்து  ஊரூரய்த் திரிந்து பதுங்கி அலைந்து  காலங்கழித்து  இறுதியில் பாரிசில், 1770 இல், நிலையாய்த் தங்கினார். 1778 இல், 66 வயதில்   காலமானார்.

       அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அனுபவித்த துன்பங்களும் அவருக்கு மனத்தளர்ச்சியை ஏற்படுத்தின.

      1789 இல்  நிகழ்ந்த  புரட்சி  முடியாட்சியை ஒழித்துக்  குடியரசைத் தோற்றுவித்தது.  ருசோவுக்குச்  சிலை எழுப்பிப் பெருமைப்படுத்தினர்.

      காலப்போக்கில், முஸ்லிம்  நாடுகளைத் தவிர,  உலகின் பெரும்பாலான மற்ற தேசங்கள்   எழுத்துச்  சுதந்தரத்தையும் கருத்துச் சுதந்தரத்தையும் போற்றத்  தொடங்கின.

                          -------------------------------------------