(14-8-2016 தினமணியில் வந்தது)
மன்னர்களைப்
புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்க காலப் புலவர்கள், தேவைப்பட்டபோது,
அவர்களுக்குத் தக்க
அறிவுரை கூறி நன்னெறிப்படுத்தினர் என்பது புற நானூற்றின் மூலம் தெரிய வருகிறது.
1 - உணவு
உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை பற்றிச் சிந்தித்த குடபுலவியனார், அதற்கு அடிப்படையானவை நிலவளம், நீர்வளம் என்பதையோர்ந்து பாண்டியன்
நெடுஞ்செழியனிடம் பின்வருமாறு கூறினார்:
" நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்; நீரையும்
நிலத்தையும் ஒன்றாய்க் கூட்டியவர் குடிமக்களின்
உடலையும் உயிரையும் காத்தவராவார். மழையை எதிர்பார்க்கும் புன்செய், எவ்வளவு அகன்றதாய் இருந்தாலும், முயற்சிக்குத் தக்க பலன் தராது; ஆதலால்
மழைநீரையும் ஆற்றுநீரையும் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுவதையும்
வளப்படுத்துவாயாக. இவ்வாறு செய்த மன்னர் உலக இன்பமும் நிலைத்த புகழும் அடைவர்; செய்யாதார்
அவற்றைப் பெறார்". (பாடல் 18)
2 - பாண்டியன் அறிவுடைநம்பி, வரி பெறுவதற்கு, உரிய வழியைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட
பிசிராந்தையார், அவனிடம், "ஒரு வேந்தன் அறிவுள்ளவனாய், தக்க முறையில்
வரி வாங்கினால், பெரிய அளவில்
பொருள் கிடைக்கும்; மக்களும் மேம்படுவார்கள்"
என்று கூறியதோடு, அதை விளக்க அருமையானதோர் எடுத்துக்காட்டும் தந்தார்: "காய்ந்த
நெல்லை அறுவடை செய்து கவளங்கவளமாய் யானைக்கு ஊட்டினால், ஒரு மாவுக்குங் குறைந்த வயலின் விளைச்சலாயினும், பல நாளுக்கு வரும்; மாறாக, நூறு வேலி நிலமானாலும் தானே போய் மேயும்படி யானையை
விட்டால், அதன் வாயில் நுழையும்
உணவைவிடக் காலில் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்".
அப்பாடல்:
காய்நெல் அறுத்துக் கவளம்
கொளினே
மாநிறைவு இல்லதும்
பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தனித்துப்புக்கு
உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து
கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும். (பா . 184)
3 - மலையமானைப் போரில் வென்ற சோழன் கிள்ளிவளவன்,
அவனது சிறு பிள்ளைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து,
மண்ணில் கழுத்தளவு புதைத்து,
யானையின் காலால் தலையை
இடறச்செய்ய முற்பட்டபோது, கோவூர்கிழார் குறுக்கிட்டுத்
தடுத்தார். "இந்தச் சிறுவர்கள் யானையைக்
கண்டால் அஞ்சி அழ வேண்டியதை மறந்து, புதிய சூழலை நோக்கி, மருண்டு, இதுவரை அறிந்திராத துன்பத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்;
இப்படிப்பட்ட சின்னஞ்சிறுவரைக்
கொல்வது தகாது" என நல்லுரை நவின்றார்:
களிறுகண்டு அழூம்
அழால் மறந்த
புன்தலைச் சிறார் மன்றுமருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர் (பா 46)
புலவர்களைத் தம்மினும் மேலோராய்க் கருதி
மதித்து, அவர்களால் பாடப்பெறுதலைப் பெரும்பேறாய் எண்ணிய மன்னர்கள்,
அவர்களுடைய அறிவுரைகளை ஏற்றுச்
செயல்பட்டிருப்பார்கள் என நம்பலாம்.
சங்க காலப் புலவர்கள் நல்லமைச்சர் போல இயங்கி,
வேந்தர்களை அறவழியில் செலுத்தியமைக்குக்
காரணம், அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையேயாகும். நாட்டின்
முன்னேற்றம், மக்களின் மேம்பாடு
ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால்தான் அவர்களைச் 'சங்கச் சான்றோர்' என்று அழைக்கிறோம்.
------------------------------
சங்கச் சான்றோர் எழுதியதாக இங்கு வெளியிட்டுள்ள மூன்று பாடல்களும், அதற்கான அழகிய விளக்கங்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளன.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி .
Deleteஅருமை.
ReplyDeleteநல்லதொரு பதிவு.
தொடர்க.
வருக , வருக, வணக்கம் ; உங்கள் பாராட்டுக்கும் தொடரச் சொல்லி ஊக்கமூட்டியதற்கும் மிக்க நன்றி .
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteபொருள் வாங்குவதற்காக மன்னர்களைப் புகழ்ந்து மட்டுமே பாடிச்செல்லாமல் சமூகச் சிந்தனையுடன் மன்னர்களை அறவழியில் செலுத்திய புலவர்களின் சான்றாண்மை பாராட்டத்தக்கது. தினமணியிலும் வாசித்தேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவறுமை காரணமாய்ப் புரவலர்களைப் பல விதமாய் , சில சமயம், வானுக்கு உயர்த்திப் பாடியதோடு அமைந்த புலவர்களும் இருந்தார்கள் .கருத்துரைக்கு மிக்க நன்றி .
Delete