Thursday, 3 November 2016

ஏக்கம்

Du Bellay

துய் பெல்லெ (Du Bellay) ஆன்ழூ நகரை அடுத்த லிரே என்னும் சிற்றூரில் 16-ஆம் நூற்றாண்டில் பிறந்த பிரஞ்சுக் கவிஞர்;  31-ஆம் அகவையில், உறவுக்காரப் பாதிரியார் ஒருவருக்கு உதவியாளராய், ரோம் நகருக்கு சென்று, நான்கு ஆண்டுக் காலம் தங்க வேண்டியிருந்தது. தகவல் தொடர்பு வசதிகள் இல்லாக் காலமல்லவா? நாடு கடத்தப்பட்டது போல் உணர்ந்த அவர், அப்போது 191 கவிதைகள் (Sonnets) இயற்றினார். அங்கதமும் கையறுநிலையும் பாடுபொருளாய்க் கொண்ட அவற்றுள் ஒன்றை மொழிபெயர்த்துப் பகிர்கிறேன்:


                 1 --    பாக்கியவான்! யுலிசீஸ் போலவோ
          பொன்தோலை மீட்டவன் போன்றோ
          அரும்பயணம் ஒன்றனைச் செய்தபின்னர்
          அனுபவமும் பட்டறிவும் ஆர்ந்தவனாய்த் 
          திரும்பிவந்து உற்றாரின் நடுவினிலே
          எஞ்சிய தன் வாழ்நாளைக் கழிக்கிறவன்.


             2 --      எப்போது மீண்டுங் காண்பேன், அந்தோ!
           என்சிறிய கிராமத்தின் அடுப்புப்புகை எழும்புவதை?
           எக்காலம் மறுபடி பார்ப்பேன் என்எளிய
           இல்லத்தின் தோட்டத்தைஅதுஎனக்கு
           ஒருமானிலம் மட்டுமா, அதற்கும்மேலே!


            3  --      எனக்கதிகம் பிடிக்கிறது முன்னோர் எழுப்பிய வசிப்பிடம்
           மிரட்டுவதுபோல் தோன்றுகின்ற ரோமானிய மாளிகையினும்;
           முரட்டுசலவைக் கல்லைவிட மென்மைமிகு ஸ்லேட்;


             4--       லத்தீன் டைபரைப் பார்க்கிலும் பிரஞ்சு லுஆர்;
          பேலட்டைன் குன்றைவிட சின்னஞ்சிறிய லிரே;
          கடற்சூழலைக் காட்டிலும் ஆன்ழூவின் அமைதி.


விளக்கம்:
            யுலிசீஸ் -- ஹோமரின் இதிகாசமாகிய 'ஒடிசி' யின் நாயகன்; ட்ராய் போரில் வென்றபின் கப்பலில் நாடு திரும்புகையில் பல வித இன்னல்களை சமாளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

            பொன்தோல் - கிரேக்கப் புராணக் கதை: ஒரு தெய்விக செம்மறியாடு, பொன்னிறத் தோலும் பெரிய இறக்கைகளும் கொண்டிருந்தது. அது இறந்த பின்பு, ரோமம் அடர்ந்த அதன் தோலை ஒரு பூதம் காவல் காத்தது. அதை மீட்டுக் கொண்டுவர வேண்டிய பணி Jason  என்பவனுக்குக் கட்டளையாய் இடப்பட்டது; அவன் கடற்பயணம் செய்து, வினை முடித்தான்.

            சலவைக்கல் ரோமில் பயன்பட்டதுஸ்லேட் ஓடுகளால் கூரை  வேய்வது பிரான்சில் பழக்கம்.

           டைபர், லுஆர்: ஆறுகள்.

           பேலட்டைன் - ரோம் நகர் இதன்மீது நிர்மாணிக்கப்பட்டது.

---------------------
(படம் உதவி - இணையம்)
            


10 comments:

  1. சந்தேகம் ஏதும் இல்லாமல், ஐயமற மிக விரிவாக அர்த்தமும் சொல்லி, அழகானதொரு கவிதையைப் படிக்கக்கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு என் இதயங் கனிந்த நன்றி .

      Delete
  2. விளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட காலத்துக்குப் பின்பு உங்கள் கருத்துரையை வாசிக்கப் பெரு மகிழ்ச்சி அடைந்தேன் , என் மனம் நிறைந்த நன்றி .

      Delete
  3. சொந்த வூரைப் பிரிந்திருக்கும் ஏக்கம் கவிதை வரிகளில் நன்றாகவே தெரிகிறது. சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என்ற திரையிசைப்பாடல் நினைவுக்கு வருகின்றது. கவிதையை அழகுற மொழியாக்கம் செய்து தந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பழகிய இடத்தின் பிரிவுத் துயர் மாந்த இனத்துக்கு உண்டு ; ஆங்கிலத்தில் homesickness , nostalgia .பாராட்டுக்கு அகம் நிறை நன்றி .

      Delete
  4. Replies
    1. உங்கள் புகழுரைக்கு என் அகமலி நன்றி .

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete