(மஞ்சரி 2016 ஜூன் இதழில் வெளிவந்தது)
15-ஆம் நூற்றாண்டில்,
ஒரு பிரஞ்சு நகைச்சுவைக் குறு நாடகம்
பதினொரு காட்சிகள் உடையதாய், செய்யுளில்
இயற்றப்பட்டது; ஆசிரியரின் பெயர்
உறுதியாய்த் தெரியவில்லை. அதன் முக்கிய காட்சிகளை உரைநடையில், நீக்குப்போக்குடன், மொழிபெயர்த்துத் தருகிறேன்.
மூலத்தின் தலைப்பு: வழக்குரைஞர் பாத்லேன்
(படம் - நன்றி இணையம்) |
காட்சி --- 1
இடம் -- வீடு.
பாத்திரங்கள் ---
வழக்குரைஞர் பிஏர் பாத்லேன், மனைவி கீய்மேத்.
பாத்லேன் -- கீய்மேத்,
பணஞ்சம்பாதிக்க நான் எவ்வளவோ முயன்றாலும்,
முடியவில்லை. புனித மேரியே, பேர் வாங்காமற்போனாலும், நான் கொஞ்ச காலம் தொழில் செய்தேனே!
கீய்மேத் -- மாதாவே,
நானும் அதைத்தான் நினைத்தேன். வழக்கில்
வெற்றி பெற, முன்பு கொஞ்சம்
பேர் உங்களைத் தேடி வந்தார்கள். இப்போது, எல்லாரும்
'வெட்டி வழக்குரைஞர்' என்கிறார்கள்.
பாத்லேன் -- என்றாலும்,
இந்தப் பிரதேசத்தில், மேயரை விட்டால், அதிகப் புத்திசாலி என்னைக் காட்டிலும் வேறு
யாருமில்லை; இதைத்
தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எந்த வழக்கிலாவது அக்கு வேறு ஆணி வேறாக நான்
பிரிக்காமல் இருந்தேனா?
கீய்மேத் -- என்ன பயன்?
வறுமையால் சாகிறோம். என்னுடைய உடைகள்
கிழிந்துவிட்டன; வேறு உடை எப்படி
வாங்குவது எனத் தெரியவில்லை. உங்கள் திறமை எதற்கு
உதவுகிறது?
பாத்லேன் -- உடைதானே?
எனக்குத் தெரியும் எப்படிப் பெறுவதென்று.
------------------
காட்சி 2.
இடம் : துணிக் கடை.
பாத்திரங்கள்
-- பாத்லேன், வியாபாரி ழெரோம்.
(பாத்லேன்
துணிக்கடைக்குப் போய்க் கடைக்காரரைப் பலவாறு புகழ்ந்து, உச்சி குளிரச் செய்த பின்பு)
பாத்லேன் -- இது கம்பளி
நூலால் ஆனதா?
வியாபாரி -- அசல் ரூஆன்
நகரத்து அருமையான கம்பளித் துணி. நல்ல நெசவு என உத்தரவாதம் தருகிறேன்.
பாத்லேன் -- நான் துணி
வாங்குகிற எண்ணத்தில் வரவில்லை. இந்தத் துணியும் நிறமும் பிடித்திருக்கின்றன.
வீட்டில் எண்பது வெள்ளிக் காசு இருக்கிறது.
வியாபாரி -- வெள்ளிக்
காசா? ஏ யப்பா!
பாத்லேன் -- எனக்குக்
கோட்டும் மனைவிக்குக் கவுனும் தேவைதான்.
வியாபாரி -- கம்பளிதான்
வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள்.
பாத்லேன் -- ஒரு ஓன்
என்ன விலை?
வியாபாரி -- இருபத்து
நான்கு காசு.
பாத்லேன் -- வேண்டாம்,
வேண்டாம்; இருபத்து நான்கு காசு! மாதாவே!
வியாபாரி -- போன
குளிர்காலத்திலே நிறைய ஆடு செத்துப்போனதால் கம்பளி இப்போது கிராக்கி.
பாத்லேன் -- சரி,
என்ன செய்வது? ஆறு ஓன் அளங்கள். எவ்வளவு ஆயிற்று?
வியாபாரி -- ஒன்பது
பிரான்.
பாத்லேன் -- மூன்று
வெள்ளி ஆகிறது; வீட்டுக்கு வந்து
வாங்கிக்கொள்ளுங்கள்.
வியாபாரி -- சரி,
வருகிறேன்.
பாத்லேன் -- என்
வீட்டில் சாராயம் குடிப்பதற்கு வேறு வாய்ப்பு கிடைக்காது.
வியாபாரி --
குடிப்பதைக் காட்டிலும் இன்பம் வேறென்ன? வருகிறேன்.
பாத்லேன் -- அப்படியே,
என் மனைவி ரோஸ்ட் பண்ணுகிற
வாத்துக்கறியும் சாப்பிடலாம்.
வியாபாரி -- ரொம்ப
மகிழ்ச்சி; போங்கள்; நான் துணியை எடுத்துக்கொண்டு அப்புறம் வருகிறேன்.
பாத்லேன் -- இது ஒரு
கனமா? நானே கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
போய்விடுவேன்.
வியாபாரி --
அப்படியானால் சரி; தாமதம் செய்யாமல்
பணம் கொடுத்துவிட வேண்டும்.
பாத்லேன் -- நிச்சயம்.
(போகிறார்)
வியாபாரி - இருபது காசு
பெறாததை இருபத்து நான்குக்கு வாங்கியிருக்கிறார்.
(ஒரு ஓன் : 1.2 மீட்டர்)
+++++++++++++++++++++++++++++
சுவைபட (நகைச்சுவையுடன்) எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteசமீபத்திய மஞ்சரி 2016 ஜூன் இதழில் வெளிவந்தது கேட்க மேலும் மகிழ்ச்சி.
மேலும் தொடரட்டும்.
உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . தொடர்ந்து வாசித்துக் கருத்து தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன் .
Deleteகணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான வாதம் ரசிக்கவைக்கிறது. வழக்குரைஞர் அல்லவா... நிச்சயம் ஏதாவது வழி செய்வார்... ஆர்வத்தைத் தூண்டும் ஆரம்பம்.
ReplyDeleteஉரையாடல் சுவையாக இருக்கின்றது. வியாபாரி பணத்தை எப்படிப் பெற்றார் என்றறிய ஆவல்!
ReplyDelete