Wednesday, 14 December 2016

புதுப் பிரதேசங்களைத் தேடி






கடலில் நெடுந்தொலைப் பயணித்துப் புதியநிலப் பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதற்கான வசதி வாய்ப்பையும் சில  நாட்டினரே பெற்றிருந்தனர்.

  பொ.யு.மு.வுக்கு முன்பே யவனர் இந்தியாவரை கலஞ்செலுத்திவந்து, தமிழகம் இலங்கை பற்றி அறிந்து  ஆவணப்படுத்தியுள்ளனர். கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட Periplus என்னும் நூல் (பொ.யு.மு. 1 ஆம் நூ.) ரோமிலிருந்து கேரளம் வரைக்குஞ் செல்வதற்கான கடற்பாதையையும்  கடல் வாணிகத்துக்கான வாய்ப்புகளையும் தெரிவிக்கிறது;  Ptolemy என்பவரின் Geographia  (பொ.யு. 2-ஆம் நூ.) என்ற புத்தகம் ஐரோப்பாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் உள்ள நாடுகளைக் காட்டும் படங்களோடு (maps) ஏராள விவரங்களையும் கொண்டுள்ளது.

     ஆனால் பெருமளவு கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில்தான் நிகழ்ந்தன.
  13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெனீசு நகரத்து Marco Polo   தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து எழுதிய விவரமான நூல் Book  of the Marvels of the World அங்கெல்லாம் போக வேண்டும் என்ற பேராவலை மாலுமிகளிடம்  தூண்டியிருந்தது. திசைகாட்டி, சுக்கான் முதலிய நவீன கருவிகளின் புனைவும் கப்பல் கட்டும் தொழில் நுட்ப முன்னேற்றமும் 15-ஆம் நூற்றாண்டில் பற்பல கடலோடிகளுக்குத் துணிச்சலூட்டியது.

  போர்த்துகீசியர் முந்திக்கொண்டனர். மன்னர் முதலாம் ஜானும் அவரது மகன் ஹென்றியும் வினைமாண் நன்கலன்களைக் கட்டிபயிற்சியும் திறமையும் ஒருங்கே பெற்ற வலவர்களையும் ஊழியர்களையும் உருவாக்கிமெல்லமெல்ல ஆனால் துல்லியமாய், பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்தனர். அவர்களின் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் மேலைக் கரையையொட்டித் தெற்கு நோக்கி வந்தன.  சொல்லொணாத் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது: பலத்த காற்று  பாய்களைக் கிழித்துத் தொங்க விட்டமையால் ஊர்திகள் ஸ்தம்பித்தன; உணவும் குடிநீரும் குறையத் தொடங்கின; ஆயினும் மாலுமிகள் மனந்தளராமல் முயன்று முன்னேறி 1471-இல் நிலநடுக் கோட்டைக்  கடந்து, கண்டத்தின் தென் முனையை 1487-இல் எட்டினர். அவர்களின் தலைவர் Bartholomeu Diaz ,  'புயல்முனைஎன அதற்குப் பெயரிட்டார்பின்னாளில் அது ' நன்னம்பிக்கை முனை' ஆயிற்று.

  இத்தாலியர் Christhopher Columbus,  ஸ்பெயின் அரசர் Ferdinand   உதவியால்,   மூன்று கப்பல்களில் 90 ஆட்களோடுமேற்குப் பக்கமாய்ப் போய் இந்தியாவை அடைய வேண்டும் எனற குறிக்கோளுடன், 1492-இல் புறப்பட்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை உலகறிந்த செய்தி. நான்கு பயணங்கள் செய்த அவர் ஒரு புதுக் கண்டத்தை அறிந்ததாய் நினைக்கவில்லை; இந்தியாவில் இருப்பதாய்த்தான் நம்பினார். அவருக்குப் பின், இத்தாலியர் Amerigo Vespucci அமெரிக்கா நோக்கிப் பல தடவை சென்று அக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கண்டறிந்தார்.

  போர்த்துகீசியர் Vasco de Gama  தம் நான்கு கலன்களோடு பயணித்துநன்னம்பிக்கை முனையைத் தாண்டி,   இந்தியப் பெருங்கடலில் நுழைந்தார்;     பருவக் காற்று ஒத்துழைத்தமையால் கள்ளிக்கோட்டைக்கு நல்லபடி வந்து  சேர்ந்தார்கள். அதே நாட்டினராகிய Magellan பசிபிக் பெருங்கடலைக் கடந்து, பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைந்தார்; ( பசிபிக் என்று பெயர் சூட்டியவர் அவர்தான். அமைதியானது என்று  பொருள்). அவ்விட மக்களால் அவர் கொல்லப்பட்டார்ஆயினும் அவரது உதவியாளர் Sebastian del Cano பயணத்தைத் தொடர்ந்துஇந்தியப் பெருங்கடல் வழியாய் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டுபுறப்பட்ட இடத்துக்கே (ஸ்பெயின்) வந்தடைந்தார். ஐந்து கப்பல்களுள் ஒன்று மாத்திரம் எஞ்சிற்று; 285 பேரில் 18 பேர் மட்டும் பிழைத்தார்கள்; ஆனால்,  'உலகம் உருண்டை' என்பதைத் தங்கள் அரிய முயற்சியால் நிரூபித்தனர்.

அர்ஜெண்டினாவுக்குத் தெற்கில் இரு பெருங்கடல்களையும் இணைக்கும் நீர்ப்பாதை அந்தத் தியாகியின் நினைவாய் Strait of Magellan என்று பெயர் பெற்றுள்ளது.

  15-ஆம் நூற்றாண்டில், ஸ்பானியர் Sebastian Cabot  தென்னமெரிக்கா சென்றுஅங்கே மக்கள் அணிந்திருந்த வெள்ளி நகைகளைக் கண்டு வியந்துவெள்ளிச் சுரங்கங்கள்  நிறைந்ததொரு பிரதேசத்தைக் கண்டு பிடித்ததாய்  நம்பி, ஒரு கழிமுகத்துக்கு Rio  de la Plata எனப் பெயர் வைத்தார். (அவரது மொழியில் plata =வெள்ளி)நாடு Argentina எனப்பட்டது. (லத்தீன் argentum  = வெள்ளி). தப்புக் கணக்கு என்பது தெரிந்த பின்பும் பெயர்கள் மாறவில்லை.

   கடைசி கடைசியாய் வெளிச்சத்துக்கு வந்தது ஆஸ்த்ரேலியாஅது டச்சுக்காரர் சாதனை. Tasman என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் ஒரு தீவை முதன்முதலாய் அடைந்தார்அக்கண்டத்திற்குத் தெற்கிலுள்ள அது Tasmania என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது. 1770-இல் ஆங்கிலேயர் James Cook  கிழக்குப் பகுதியைக் கண்டு, அதற்கு New South Wales என்ற பெயரை சூட்டினார்.

  இவ்வாறு, பற்பல துணிச்சல்காரர்கள், உயிரைப் பணயம் வைத்துமுன்பின் தெரியாத பாதைகளில் பயணம் மேற்கொண்டு,   புதிய புதிய   நிலப் பகுதிகளைக் கண்டுபிடித்தமையால் முழு உலகத்தையும் அறிந்துகொண்டோம்.

                              \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\                                                                                                


6 comments:

  1. அருமையான தகவல்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. அருமையான அறியாத தகவல்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருக வருக ! நீண்ட காலத்துக்குப் பின்பு உங்கள் பாராட்டு பெற்றேன் . மிக்க நன்றி .

      Delete
  3. புதிய இடங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும் கடற்பயணங்களில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிவும் இருந்தாலொழிய இத்தகு பயணங்களை மேற்கொள்வது கடினம். உயிரைப் பணயம் வைத்துப் பயணித்தவர்கள் எழுதிய பயணக்குறிப்புகளே நமக்கு பலவித தகவல்களையும் அறியத் தருகின்றன. இன்று நினைத்த மாத்திரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் பறந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகு நிலைமைக்கு அடித்தளமாய் அந்நாளைய கடற்பயணங்கள் அமைந்துள்ளன என்பதை ஆதாரங்களோடு அறியும்போது அவர்களுடைய தன்னம்பிக்கை மிக்க பயணங்கள் குறித்து வியப்பேற்படுகிறது. அருமையான தகவல்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விவரமான பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . அவர்களை தியாகிகள் என்று புகழ்வது நியாயம் .

      Delete