நூல்களிலிருந்து --- 14
புதுச்சேரிப்
பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர்
அ. பாண்டுரங்கன் இயற்றி, 2010 இல் வெளிவந்திருக்கிற 'சான்றோர் கவி' என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியைப்
பதிகிறேன்:
காப்பியக் கதையின் தொடக்கம்
காப்பியக் கதையை நாடகப் போக்கில் தொடங்குவது
மேனாட்டுக் காப்பிய மரபு; உணர்ச்சி மிக்க
இடைப்பகுதியிலிருந்து தொடங்கி முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கிளைக்கதைகள்,
உவமைகள் வாயிலாக
விளக்கும் மரபு ஹோமருடைய காப்பியங்களில் காணப்படுகிறது; இலியாது (Iliad) அகமெம்னானுக்கும் (Agamemnon) அகில்லெசுக்கும் (Achilles) அடிமைப்பெண்
ஒருத்தியைப் பற்றிய சச்சரவிலிருந்து தொடங்குகிறது. துரோயன் (Trojan) நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் இடையே
நிகழ்ந்த பெரும் போரே காப்பியத்தின்
பாடுபொருளாக இருப்பதால், அப்பகுதியே
முதன்மை பெறுகிறது.
ஹோமர் எழுதிய மற்றொரு காப்பியமான ஒதிஸ்ஸி (Odyssey)
துரோயன் போர் முடிந்து
பத்து ஆண்டுகள் கழிந்து, அதில் பங்கு
பெற்ற வீரர்கள் தங்கள் தாயகம் திரும்புவது பற்றிக் கிரேக்கக் கடவுளர் கூடி ஆலோசனை
நடத்துவதிலிருந்து தொடங்குகிறது. இவ்வாறு நாடகப் போக்கில் கதையைத் தொடங்குவதால்,
கற்போரின் கவனம் முழுதும்
முதலிலிருந்தே காப்பியத்தில் பதிந்து விடுகின்றது; மேலும் இம்முறை கிரேக்க நாடகங்களின் அமைப்பை
ஒத்திருக்கின்றது. இம்முறையாற் கிட்டும் சிறந்த பயனைக் கருதியே வர்ஜில் (Virgil)
மில்டன் (Milton) போன்ற மாபெரும் மேனாட்டுக் காப்பியப்
புலவர்களும் தங்கள் கதைகளை இடையிலிருந்து நாடகப் போக்கில் தொடங்கிப்
பாடுவாராயினர். ஹோராஸ் (Horace) என்ற இலக்கியத்
திறனாய்வாளர் இதனை in medias res என்னும்
விதியாக்கினார்.
ஆனால் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தியக் காப்பியங்களும் சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய தமிழ்க் காப்பியங்களும்
காப்பியத் தலைவனின் பிறப்பில் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து செல்கின்றன. கதையைத்
தொடங்கும்போதே நம் கவனம் முழுதும் கதையில் பதிந்துவிடுவதை இப்படிமுறை உத்தி (Chronological
order of sequences ) சிதைத்து
விடுகிறது. சிலப்பதிகாரம் ஓரளவிற்குக் கிரேக்கக் காப்பிய மரபைப் போன்று, திடுமென நாடகப் போக்கில், கண்ணகி - கோவலன் திருமணத்துடன் தொடங்குகின்றது.
அடுத்தடுத்து வருகிற நிகழ்ச்சிகளும் மேற்கூறிய படிமுறை உத்தி மரபையொட்டி நிரலே
அமைக்கப்படவில்லை. கண்ணகி- கோவலன் வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கியமான
நிகழ்ச்சிகள் நேரடியாகக் கூறப்படாமல் தனித்தனிக் கூற்றுகளாகவோ ஓரங்க நாடகக்
காட்சிகளாகவோ பாடப்பட்டுள்ளன.
===========================
படம் உதவி - இணையம்
துரோயன் (Trojan) நாட்டு மற்றும் கிரேக்க நாட்டு காப்பியங்களுடன் நம் நாட்டுக் காப்பியங்கள் சிலவற்றைப் பற்றியும் அருமையான அலசல்கள் + ஒப்பீடுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteஅருமையான தகவல்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteஅருமை எனப் பராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .
Deleteநல்ல பல நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டித் தரும் தங்கள் பணி தொடர வேண்டுமென கெட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteவருக , எல்லாரும் எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பிருக்காது ; ஆகையால் நான் படித்தவற்றுள் சில பகுதிகளைப் பதிகிறேன் ; யாருக்காவது பயன் தரும் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteகாப்பியங்களைத் தொடங்குவதிலும் ஒரு மரபு இருக்கின்றது என்பதையும் கிரேக்கபாணி, வடமொழி பாணிக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றியும் தெரிந்து கொண்டேன். சிலப்பதிகாரம் ஓரளவு கிரேக்கபாணியை ஒத்திருப்பது அறிந்து வியப்பு. பகிர்வுக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஎனக்கும் அந்த வேறுபாடு தெரியாமல்தான் இருந்தது . சிலப்பதிகாரத்துக்கு மற்றுமொரு சிறப்பு இருப்பது பெருமை தருகிறது . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
ReplyDelete