(19-ஆம் நூற்றாண்டுப்
பிரஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர் விஞ்ஞி - Vigny -
அவரது La mort du
loup - லா மோர் துய் லூ - என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு)
ஓடின முகில்கள்
ஒளிநிறை மதிமேல்
தீவிபத்தில்
குறுக்கே விரைகின்ற புகைபோல்.
தோப்புகள்
கருநிறத்தில் தொடுவானம் வரைக்கும்.
நடந்தோம்
பேச்சின்றி சில்லென்ற புல்மீது,
அடர்த்தியாய்
உயர்ந்த புதர்களின் ஊடே.
துரத்திப் போன
ஓநாய்க ளுடைய
பெரிய நகங்களின்
சுவடுகள் தம்மைக்
கண்டோம் ஊசியிலை
மரங்களின் கீழே.
தீட்டினோம் காதை,
நடையை நிறுத்தி,
மூச்சையும்
அடக்கி.
ஒலியெதையும் எழுப்பவில்லை
தோப்போ சமவெளியோ.
உயரத்தில்
கத்திற்று காற்றுத் திசைகாட்டி மாத்திரம்.
ஏனெனில் மிகமேலே
எழும்பிப்போய்க் காற்று
ஓங்குயர்
கோபுரங்கள் தமைமட்டும் வருடிற்று.
கீழிருந்த
மரங்களோ பாறைகள்மேல் சாய்ந்து
ஊன்றி முழங்கையை
உறங்கினபோல் தோன்றின.
ஆகவே ஓசையொன்றும்
கேட்கவில்லை வேட்டையருள்
மூத்தவர் தரைமீது
படுப்பதுபோல் குனிந்து
நோக்கினார்; இதுவரை
யொருபோதும் தவறாகக்
கணிக்காத
வல்லுநர் தெரிவித்தார் தாழ்குரலில்:
"புத்தம்புதுத்
தடயங்கள் இருபெரிய ஓநாய்கள்
மற்றுமிரு
குட்டிகளின் வலுமிக்க நகங்களது
சுவடுகள்
தான்" என்றே. யாவரும்
கத்திகளைக்
கைக்கொண்டு
பளிச்சென்று ஒளிவீசும் துப்பாக்கி
களைமறைத் தடிமேல்
அடிவைத்து நடந்தோம்
கிளைகளை விலக்கி; மூவர் நின்றுவிட,
அவர்கள்
நோக்கியதை நானறிய முயன்றேன்:
சிறுதொலைவில்
கண்டேன் விலங்குருவம் நான்கு;
தலைவன்
நின்றிருக்க அப்பால் மரமொன்றின்
அருகில் அதன்துணை
ஓய்வுகொண் டிருந்தது;
ரொமுலுஸ்க்கும்
ரெமுஸ்க்கும் தன்பாலை யீந்து
வளர்த்த தன்றோ
ஓரோநாய்?
தெய்வமென ரோமர்
வழிபட்ட அவ்விலங்கின்
சலவைக்கல்
சிலைபோல நின்றதது.
ஆணோநாய்
அமர்ந்தது பின்னங்கால் மடித்து
வளைந்த நகங்கள்
மண்ணுள் புதைய.
அறிந்து கொண்டது:
அபாயச் சூழ்நிலை,
அடைபட்ட பாதைகள்,
எதிர்பாராத் தாக்குதல்!
எழுந்து
கவ்விற்று இருந்ததிலே மிகுதியான
துணிச்சல் கொண்ட
நாய்தன்னின் குரல்வளையை;
உடம்பை ரவைகள்
ஊடுருவும் நிலையிலும்
கூரிய கத்திகள்
குறடுகள் போன்று
அகன்ற வயிற்றைத்
துளைத்த போதிலும்
காலமான நாயினுடல்
காலடியில் வீழ்ந்த
அந்தக்
கடைசி நிமிடம் வரைக்கும்
தளர்த்தவே யில்லை
சிறிதேனும்
தன்னிரும்பு
ஈறுகளின் இறுக்கத்தை.
பின்பதை
விட்டுவிட்டுப் பார்த்தது எங்களை;
ஆழமாய் விலாவில்
செருகிய கத்திகள்
சாய்த்தன
புற்றரையில் குருதிவெள் ளத்தில்.
தொடர்ந்து
பார்த்தபின் படுத்தது வாயில்
படர்ந்த குருதியை
நக்கிய வாறே.
மூடி அகல்விழி, மெளனமாய்
இறந்தது.
துப்பாக்கி மேலே
நெற்றியை வைத்து
சிந்தனையில்
ஆழ்ந்தேன்; ஓநாய்க்குக் காத்திருந்த
துணைவி குட்டிகள்
ஆகிய மூன்றையும்
துரத்திப் போகும்
முடிவெடுக்க முடியவில்லை;
என்னெண்ணம்:
தன்துணைவன் தன்னந் தனியாய்ப்
போராட நிச்சயமாய்
விட்டிராது அதன்பெட்டை
பிள்ளைகள்
மட்டும் இல்லாமற் போயிருந்தால்.
அதன்கடமை
அவைதம்மைக் காப்பாற்றி நன்றாகப்
பசிதாங்கிக்
கொள்ளவும், காட்டினுக்கு உரியவரை
அழிப்பதற்கு
மனிதனுடன் சேர்ந்துவரும் அடிமை
விலங்குகள்
அவனோடு இரைக்காகச் செய்துள்ள
ஒப்பந்தம்
தன்னில் ஒருநாளும் சிக்காமல்
இருக்கவுங்
கற்பித்தல்.
அந்தோ!
மாந்தரெனும் மாண்புமிகு பேருடையோம்
என்றாலும்
நாணுகிறேன் எம்மை யெண்ணி.
பலவீனர் நாங்கள்!
வாழ்வினின்றும் அதன்சகல
துயர்களில்
இருந்தும் விடுபடும் வழியினை
நீங்கள்தான்
அறிகின்றீர் மேன்மைமிகு விலங்குகளே!
என்னவாய்
இருந்தோம் உலகில்?
எச்சமாய் எதைவிடுத்
தேகிறோம் முடிவில்?
எண்ணிப் பார்த்தால்
புரியும்:
"மெளன மொன்றே
வலியது, மற்ற தெல்லாம் பலவீனம்."
காடுவாழ் பயணியே!
அறிந்தேன் நன்றாக
உன்றனை; நீபார்த்த இறுதிப்
பார்வை
என்னிதயம் தைத்தது; அதுகூ றிற்று:
"வனத்தில் பிறந்தநான்
வானெட்டுந் தரமுள்ள
மனத்தின் திண்மையும்
பெருமிதமும் பெற்றேன்;
மானிடா! இயலுமேல்
உழைப்பால் சிந்தனையால்
அடையச்செய் உச்சத்தை
உன்றன் உள்ளம்;
செருமல் அழுதல்
பிரார்த்தனை செய்தல்
எல்லாமே சமமான
கோழைச் செயல்;
உனக்கான பாதையில்
உறுதியுடன் ஆற்று
கடினம்நிறை கடமைகளை; காலத்தின்
முடிவில்
உற்றநோய் நோன்று
உயிர்விடு மெளனமாய்
என்னைப் போல!"
===============================
Arumai Ayya
ReplyDeleteவருக ,பாராட்டுக்கு மிகுந்த நன்றி .
Deleteசாகுந்தறுவாயில் ஓநாய் கூறுவதாகக் கவி சொல்லும் கூற்று அருமை. மொழிபெயர்ப்பும் மிகவும் நன்று. பிரெஞ்சு கவிதையைப் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteபாராட்டியமைக்கு மிக்க நன்றி . அந்தக் கவிக் கூற்றுக்காகத்தான் மொழிபெயர்த்தேன் .
Deleteஅருமை... வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .உங்கள் சிறுகதை தினமணி கதிரில் படித்தேன் , நன்று . பாராட்டுகிறேன் .
Delete