எண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய்
இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்;
மேகம் கடல் மட்டத்துக்கு இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட்டு
மேலே போய் மழையைத் தருகிறது.
அப்போது நான் கற்பனை செய்தேன், நடுக்கடலில் மேகக்
கூட்டங்கள் படிந்து நீரை உறிஞ்சிக்கொண்டு பறந்து போவதாய்; அது இன்னமும் நினைவிருக்கிறது.
கல்லாத என் பாட்டி, கேள்வியறிவால் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
அவரது கருத்து நீண்ட நெடுங்காலமாய்த் தமிழரின் நம்பிக்கையாய்த் தொடர்ந்து நிலவிய ஒன்று
என்பதைப் பிற்காலத்தில் நூல்களைக் கற்கையில் அறிந்தேன்.
1.
புறநானூறு
– பா. 161. (2-ஆம் நூற்றாண்டு)
நீண்டொலி
அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டுசெலல்
கொண்மூ வேண்டுவயின் குழீஇ
----------------
பெயல்கடன் இறுத்து.
உரை
– தொடர்ந்து ஒலிக்கிற கடலின் நீர் குறையும்படி, மொண்டுகொண்டு விரைந்து செல்கிற மேகங்கள்
வேண்டிய இடத்தில் திரண்டு மழையை முறையாய்ப் பெய்து.
2.
சீவக
சிந்தாமணி – பா. 32. (9-ஆம் நூற்றாண்டு)
--------- களிற்று
ஈட்டம்போல்
கலங்கு தெண்திரை
மேய்ந்து கணமழை
உரை – யானைக்கூட்டம்
போன்ற மேகத்திரள்கள் அசைகிற தெள்ளிய அலைகளை எழுப்பும் கடலின் நீரை மேய்ந்து.
3.
நன்னெறி
– பா. 4 (17-ஆம் நூற்றாண்டு)
------ கருங்கடல்
நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும்.
உரை – கடுமையான
கடலின் நீரை அணுகி மேகமானது முகந்து மழையாக உலகுக்குத் தருகிறது.
நீர்தான் ஆவியாகி
மேலே போய் மேக உருவெடுக்கிறது என்னும் உண்மை தெரிந்த பின்பு அந்த நம்பிக்கை தகர்ந்தது;
ஆனால் மழை குறித்த வேறிரு மூடக்கருத்துகள் முற்றுமாய் நீங்கிவிடவில்லை.
1.
மனித
ஒழுக்கத்துக்கும் மழைக்கும் தொடர்புண்டு.
2.
மழையை
மக்கள் வரவழைக்க முடியும்.
அ) வானம் பொய்யாது
வளம்பிழைப்பு அறியாது
பத்தினிப் பெண்டிர்
இருந்த நாடு
(சிலப். அடைக்கலக்காதை.
அடி 145)
உரை – மழை பொய்க்காமல்
பெய்யும், வளம் குறையாது கற்புடைய மங்கையர் இருக்கிற நாட்டில்.
ஆ) நல்லார் ஒருவர்
உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும்
பெய்யும் மழை. (மூதுரை – 10)
உரை – ஒரு நாட்டில்
நல்லவர் ஒருவர் இருந்தாலே போதும், மழை பெய்யும்.
சான்றோரும் கற்பரசிகளும் இல்லா நாடு உண்டா? அவர்களுக்காக
மழை தவறாமல் பெய்யும் என்றால் எங்கும் வறட்சியே இருக்காது. உண்மை நிலை அதுவல்ல.
சில சமயங்களில் பொய்த்துப் போய்ப் பஞ்சத்தை உண்டாக்குகிறது;
வேறு சில சமயங்களில் அபரிமிதமாகப் பெய்து வெள்ளப் பெருக்கால் உயிர்ச்சேதம் பொருட்சேதம்
ஏற்படுத்துகிறது.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
என்னுங் குறள்
இந்த எதார்த்தத்தைப் பறை சாற்றுகிறது.
ஆகவே மாந்தரின் நடத்தைக்கும் மழை பெய்வதற்கும் சிறு
தொடர்பும் இல்லை என்பது கண்கூடு. இப்படியிருக்க, விவேக சிந்தாமணி விவேகமற்ற முறையில்
கூறுகிறது;
வேதம்
ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு
ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு
ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப்
பெய்யுமே!
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர்மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.
கால அட்டவணை வகுத்துக்கொண்டு அதன்படியா
மழை பெய்கிறது? தம் கருத்து சரிதானா என்பதைச் சிறிதும் எண்ணிப் பாராமல் எதையாவது எழுதுவது
நம் முன்னோர் சிலருக்குப் பழக்கம்.
---------- கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
எனக் குறள் கூறுவது உண்மையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? காவிரியை எதிர்பார்க்க
வேண்டாமே!
தேவைப்படும் காலத்தில் மழையைக் கொண்டுவர
எவராலும் இயலாது. கழுதைக்குத் திருமணம், கொடும்பாவி இழுத்தல், கழுத்தளவு நீரில் நின்று
ஜபம், கூட்டுப் பிரார்த்தனை, பிடிலில் அமிர்தவர்ஷணி ராகம் வாசித்தல் முதலிய எல்லாக்
கூத்துகளும் காலக் கேடாய் முடிந்தன.
நடைமுறைக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும்
கருத்துகளையும் தலையைச் சுற்றித் தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்துச் செயல்படுவது சாலச்
சிறந்தது.
நடைமுறைக்கு ஒவ்வொத மூடநம்பிக்கைகள் புறந்தள்ளப்பட வேண்டியவைதான்
ReplyDeleteஅருமை ஐயா
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .
Deleteகவிதைக்கு பொய் அழகு
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இங்கே பொய் என்பது கற்பனையைக் குறிக்கும் . கவிதைக்குக் கற்பனை தேவை . நான் மேற்கோள் காட்டியிருப்பவை கவிதைகளல்ல ; செய்யுள்கள் . இவற்றில் உள்ளவை கற்பனையல்ல . எதார்த்தத்துக்குப் பொருந்தாத பிழையான செய்திகள் .
Delete