கீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு,
அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியாமற்
போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே நூலியற்றியவர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ சொல்லப்பட்டிருக்கலாம்;
அல்லது கிருஷ்ணன் என்ற பெயருடைய ஒரு மனிதர் பிற்காலத்தில் அதை எழுதியிருக்க, நாளடைவில்
பகவானே போதித்தான் என நம்பப்பட்டிருக்கலாம். எல்லா நூல்களும் மக்களின் படைப்பே. ‘கொங்குதேர்
வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலைத் தமிழ்ப் புலவர் இறையனார் புனைந்திருக்க, இறைவன் தருமிக்குப்
பாடித் தந்ததாய்க் கதை கட்டப்பட்டதல்லவா?
ஆத்மா பற்றிய கருத்துகள் கடவுளால் புதியனவாய்க்
கூறப்பட்ட தத்துவங்கள் என்பது தவறு; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய் நம்பப்பட்டவையே.
கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப்
புகழ்பெற்ற வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பினார்கள். இறந்தோரின்
ஆத்மாக்கள் நிலத்தடியில் நிரந்தரமாய் வாழ்வதாக ரோமானியர் நம்பியதோடு அவற்றை வழிபடவுஞ்
செய்தனர். இறந்த பின்பும் வாழ்வுண்டு என்னும் நம்பிக்கையால்தான் எகிப்தியர் பிணங்களைப்
பத்திரப்படுத்தினர்.
ஆத்மா அழிவற்றது என்ற கருத்துத் தொல் மாந்தரிடம்
ஏன் தோன்றிற்று? அன்புக்குரியவர் மறைந்தமையால் வாட்டம் சோகத்தை, பிரிவுத் துன்பத்தை,
“அவர் உடலால் அழிந்தாலும் ஆத்மாவால் வாழ்கிறார்” என்று மனத்தைச் சமாதானப்படுத்திக்
கொண்டனர். கனவுகளில் அவ்வப்போது அவர்கள் தோன்றியமை அந்த நம்பிக்கைக்கு அடிப்படை ஆயிற்று.
நம் காலத்தில் கூட, “நேற்றுக் கனவில் அப்பா வந்தாங்க, வீட்டை விக்க வாணாம்னு சொன்னாங்க”
என்று தந்தையைச் சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் பரவ, மகன் கூறுவதைக் கேட்கிறோம்.
ஆத்மா பற்றிய கருத்துகளை எதிர்த்த அறிஞர்களும்
வாழ்ந்தார்கள். ஆத்மா அழியக் கூடியதே என்றவர்களுள் குறிப்பிடற்குரியவர்கள் ஜூலியஸ்
சீசர், ரோமானிய எழுத்தாளர் லுக்ரியஸ், கிரேக்க அறிஞர் எப்பிக்யூரஸ்.
சாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும்
என்று கருதியோரும் இருந்தனர். ரோமானிய எழுத்தாளர் செநேக்கரா இக்கொள்கையர்.
உயிர் ஓர் உடலினின்று வேறு உடலில் புகும் என்று
எகிப்தியர் நம்பினர். இதை ஆதரித்துக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணக்கு மேதை
பித்தகோரஸ். இக்கொள்கை ஆங்கிலத்தில் metempsychosis என்று கூறப்படுகிறது. (கிரேக்க
மொழியில் meta – மாற்றம்; empsuke - உயிரில்.) ஆன்மாவை லத்தீன் அனிமா (anima) என்கிறது.
*********
(படம் உதவி - இணையம்)
My heartful thanks .
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதொடர்ந்து ஊக்கமூட்டுவதற்கு என் உள்ளமார்ந்த நன்றி .
ReplyDelete