சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழக ஊர்கள்
சிலவற்றுள் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. (பேச்சுமொழியில் “காமுட்டி”).
ஒரே ஊரில் இரண்டு மூன்று தெருக்களில் விழா எடுப்பதுண்டு.
மாசிப் பிறையன்று நடுத்தெருவில் ஆளுயர மூங்கிற்
காலொன்றை நட்டுக் கொடியேற்றி நான்கு மூலைகளிலும் காலூன்றிச் சிறு பந்தலமைத்துத் தென்னங்குருத்துத்
தோரணங்களைத் தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். இரு வார விழாவில் சில நாள்கள் லாவணி என்னுங்
கலை நிகழ்ச்சி நடைபெறும். (அது மராட்டிச் சொல்லாம்; பொருள் தெரியவில்லை.)
மன்மதனை சிவன் எரித்தான் எனப் புராணங் கூறுகிறதல்லவா?
அதை நம்புகிறவரும் “மன்மதன் எரியவில்லை, சிவனைக் காட்டிலும் அவன் பெரிய கடவுள்” என்று
கருதுகிறவரும் பாட்டின் மூலம் விவாதம் புரிவதே லாவணி. புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு
விவாதிப்பார்கள். (பாமர மொழியில் “எரிஞ்ச கட்சி எரியாத கட்சி போட்டி”).
மாலை நேரம். பந்தலுக்கு வெளியில் இரு பெஞ்சுகள்.
ஒன்றில் எரிந்த கட்சிப் பாடகர் ஒருவரும் மற்றதில் எதிராளியும் அமர்ந்து கையில் வைத்துள்ள
டேப் என்னும் இசைக் கருவியை அடித்தபடி மாறிமாறிப் பாடுவர். சுமார் மூன்று மணி நேரம்
நீடிக்கும். நடுவர் இல்லை, தீர்ப்பும் இல்லை.
எரிந்த கட்சிக்காரர்தான் தொடங்குவார். பிள்ளையார்
முதலிய கடவுள்களுக்கு வணக்கஞ் சொல்லிப் பாடுவார். அவர் முடித்ததும் இவர் ஆரம்பிப்பார்.
என் நினைவிலிருந்து சில அடிகள்:
-
மங்கலமே
மிகுந்த மாசிப் பிறையதனில்
மகரக்
கொடியதனை நாட்டி நாட்டி
சங்கையில்லாமல்
டேப்பு துந்தனா தாளத்தோடு
சரமண்டலி
மோர்சிங் கூட்டிக் கூட்டி
-
காமன்
கதை பாடவந்த ஆரம்பத்தில்
நாமகள்
என்றொரு பெண்ணைத் துதித்தென்ன?
நாவிலவள்
குடியிருப்பாள் என்பதென்ன?
நாலு
பேர் அறிய அதைக் கூறு மாதோ.
கல்விக்
கரசிதமிழ்ச் செல்வியென் றொரு பெண்ணைக்
கைதொழு
தீரேயந்த மங்கை மங்கை
மறையவன்
நாவிலவள் உறைவது நிஜமானால்
மலஜலங்
கழிப்பது எங்கே யெங்கே?
மாதவிடாய்
வரும் பொழுது உதிர வெள்ளம்
வாய்வழி
யொழுகாதா அங்கே யங்கே?
-
மாரனைக்
கடவுள் என்றித்
தாரணியிலே
துதிப்பது ஆருங்காண்?
எழுந்து வாருங்காண்
எனக்குப் பதில் கூறுங்காண்.
பாரெனைத்
திரும்பியிந்தப்
பாவலா வரிசை யெல்லாம் போடாதே
பாடப் பயந்து ஓடாதே
பாவலர்க் கிது கூடாதே யிந்தப்
பனங்காட்டு
நரி சலசலப்புக் கஞ்சி நடுங்கி வாடாதே.
அக்காலத் தமிழ்த் திரையுலக முடிசூடா மன்னர் எம்.கே.தியாகராஜ
பாகவதர் நடித்த திருநீலகண்டர் படத்தில் லாவணிக் காட்சியொன்று நகைச்சுவை நல்கும் விதமாய்
இடம்பெற்றது.
சில அடிகள் இன்னம் மறக்கவில்லை.
முதல்வர் – சிவனுக்குக்
கழுத்துக் கருத்த விதம் ஓது ஓது.
மற்றவர் - ஆலகால விஷத்தை அள்ளிக் குடிக்கும்போது
அமுக்கிப் பிடித்ததினால் அண்ணே அண்ணே
அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்
அறியச் சொல்லு என்றன் முன்னே முன்னே.
முதல்வர் – அந்தக்
கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்
கொழுக்கட்டை தின்றதினால் தம்பி தம்பி.
இரு தரப்புக்கும் பயன்படக்கூடிய பாட்டு நூல்கள்
விற்றன. வாங்கிப் படித்து மனனஞ் செய்து சூழ்நிலைக்கேற்பப் பாடுவார்கள். சில சமயம் சொந்தமாய்
இட்டுக் கட்டிப் பாடுவதும் உண்டு. (ஒப்பாரியில் பெண்கள் அவ்வப்போது சுயமாய்ப் பாடியது
போல.)
ஒரு தடவை கரும்பாயிரம் என்பவர் (பார்வையிழந்தவர்)
எரிந்த கட்சி பாடினார்:
ஆனைமா முகனே கணநாதா
ஐங்கர னாகிய மிகப் போதா
என்று அவர் தொடங்கியது
நினைவில் இருக்கிறது. எதிர்ப் பாடகர் குதிரைவண்டிக்காரக் குப்புசாமி, தம் பாடலின் இடையே,
இன்னமும் தெரியலையா
ஏங்காணும் பொட்டையரே?
என்று சொந்த சரக்கை
எடுத்து விட்டவுடன் எதிர்ப்பும் ஆதரவுமாய்க் கூச்சல் குழப்பம் ஏற்பட்டன. பெரியவர்கள்
தலையிட்டுத் “தனிப்பட்ட தாக்குதல் கூடாது” என்று கூறித் தகராறு முற்றாமல் அமைதி நிலவச்
செய்து நிகழ்ச்சி சுமுகமாய்த் தொடரச் செய்தார்கள்.
இறுதி நாளில் (பௌர்ணமி) நடு மூங்கிற் காலை எரிப்பார்கள்.
(மன்மதன் எரிந்தான்!) விடியும்வரை தெருக்கூத்து நிகழும். மறுநாள் பந்தல் பிரிக்கப்படும்.
ஊர்திகள் இல்லாக் காலம். மக்கள் தெருவில் அமர்ந்து
இடையூறு எதுவுமின்றி நிம்மதியாய் சுவைத்து மகிழ்ந்தார்கள். வானொலி தொலைக்காட்சி பிறக்கும்
முன்பு பொழுதுபோக்குகளுள் ஒன்றாக லாவணி பயன்பட்டது.
(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)
லாவணி நிகழ்சசிகளை எல்லாம் இனி காண முடியுமா ......
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . காண முடியாதுதான் . எத்தனையோ கலைநிகழ்ச்சிகள் ( வில்லுப்பாட்டு , பொம்மலாட்டம் முதலியவை ) கால மாற்றத்தில் காணாமல் போய்விட்டமை வருத்தத்துக்கு உரியது .
Deleteலாவணி என்பது ஒரு வகை எசப்பாட்டா பார்த்தநினவு இல்லை
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்கள் வாழிடத்தில் லாவணி நிகழாமலிருந்திருக்கலாம் .
Deleteஇது மகாராஷ்டிராவிலிருந்து மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்ட போது தமிழகத்துக்குப் பரவியது. லாவணி என்பதற்கு மராட்டிய மொழியில் நாற்று நடுதல் என்பது பொருள். வயலில் நாற்று நடும் மகளிர் வேலையின் பளு தெரியாமலிருக்க இரு குழுக்களாகப் பிரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஏளனமும், கிண்டலும் செய்து பாடிக்கொள்வர். இதிலிருந்து இந்தக் கிராமிய இசைப்பாடல் தோன்றியது.
ReplyDeleteஎன்ற விபரத்தை நான் விக்கிப்பீடியா மூலம் தெரிந்து கொண்டேன். எண்பது ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் கேட்ட பாடல்களின் வரிகளை நினைவு வைத்திருந்து கொடுத்திருப்பது வியப்பிலாழ்த்துகிறது. லாவணி பற்றி அறிந்த செய்திகளை ஆவணப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
பின்னூட்ட்த்துக்கும் லாவணி குறித்த விளக்கத்துக்கும் மிக்க நன்றி . பழங்காலப் பழக்க வ்ழக்கங்களை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பதும் ஆவணப்படுத்துவதும் என் நோக்கம் . ஏதோ என் நினைவிலிருப்பதைப் பதிகிறேன் .
Deleteவிளக்கங்கள் வியப்பைத் தந்தன ஐயா...
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பழைய நிகழ்ச்சிகள் பல அடியோடு மறைந்து போயின.அவற்றைப் புதிதாய் அறியும்போது வியப்பு ஏற்படுவது இயல்பு .
Delete