Thursday, 5 January 2012

பெயரும் பொருளும்

1. வையாபுரி

சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள்?

பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டதுஇதைச் சங்க காலத்தில் ஆண்ட சிற்றரசன் பேகன்; வையாவிக் கோ என அவன் அழைக்கப்பட்டான்.

பின்பு வையாபுரி ( புரி = ஊர். தர்மபுரி என்பது போல் ) என்றாகி இறுதியில் வையாபுரி ஆயிற்று.

2. தாமோதரன்

சங்கப் புலவருள் இருவர் தாமோதரன் என்னும் பெயருடையவர் : ஒருவர், உறையூர் மருத்துவர் தாமோதரனார், மற்றவர்வடம வண்ணக்கர் தாமோதரனார்

கண்ணனைக் குறிப்பது தாமோதரன் என்னும் பெயர்.

தயிர் கடைகிற மத்தைச் சுழலச் செய்கிற கயிற்றை வட மொழியில் தாமம் என்றும் வயிற்றை உதரம் என்றும் சொல்வார்கள்.

உதரன் - வயிற்றை உடையவன். தாம + உதரன் = தாமோதரன் .

யசோதை தாமத்தால் கண்ணனின் வயிற்றில் கட்டி அவனைச் சிறைப்படுத்தியதால் அந்தப் பெயர் வந்தது.

அது போன்ற வேறு சொற்கள் :

வயிற்றை வீங்கச் செய்கிற நோய் மகோதரம் ( மகா + உதரம் = மகோதரம் - பெரு வயிறு ).

ஒரு வயிற்றில் பிறந்தவன் சகோதரன் ( சக + உதரன் )

3. செங்கல்பட்டு

செங்கல்பட்டு என்றோர் ஊரும் செங்கல்வராயன் என மக்கட் பெயரும் உள்ளன. இவற்றுக்கும் செங்கல்லுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்?

தொடர்பு எதுவும் இல்லை. செங்கழுநீர்ப்பற்று என்பதன் மரு செங்கல்பட்டு. செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்த ஊர் அப் பெயர் பெற்றது. மலர்ப் பெயரால் அமைந்த வேறு ஊர்களுள் சில : குவளைக்கால்,  மகிழஞ்சேரிதிருவல்லிக்கேணி,  திருமுல்லைவாயில். பற்று என்றால் குடியிருக்கும் இடம். வேறு ஊர்கள் : காலாப்பட்டு,  மாம்பழப்பட்டுபேரணாம்பட்டு ( திரிபு ).

செங்கல்வம் என்று திருத்தணிக்கு இன்னொரு பெயர். ராயன், ராஜனின் தமிழ் வடிவம். எனவே, செங்கல்வ ராயன் = திருத்தணி அரசன்அதாவது முருகன்.

4. ஊமத்தம்பூ


ஊமை என்ற சொல்லிலிருந்து ஊமத்தம் பூ எனப் பெயர் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும்;  அப்படியல்ல.

வடமொழியில் உன்மத்தம் = மூளைக் கோளாறு.

இந்தப் பூவை அரைத்து ஒருவரைக் குடிக்கச் செய்தால் அவரைப் பித்துக்கொள்ளி ஆக்கிவிடலாம் என்பது நம்பிக்கை;

ஆதலால் உன்மத்தம் பூ என்றனர். அது காலப் போக்கில் ஊமத்தம் பூ ஆயிற்று.

5. கட்டெறும்பு

ஒரு வகை எறும்புக்குக் கட்டெறும்பு என்று பெயர். கட்டை எறும்பு என்ற சொல் திரிந்து அப்படி ஆயிற்று.

கட்டை = தடிமனான.

தடித்துள்ள விரல் கட்டை விரல். பருத்தும் குள்ளமாயும் உள்ள ஒருவரைக் கட்டை குட்டை ஆனவர் என்கிறோம் .

( கட்டை - பருமன்குட்டை - குள்ளம் )

6. கருனைக் கிழங்கு

கருனை என்றால் பொரியல். பொரியல் செய்யப் பயன்படும் கிழங்கு கருனைக் கிழங்கு. இதை மூன்று சுழி ண போட்டு எழுதுவது பிழை.

இது நீண்டநெடுங்காலமாகத் தமிழரின் உணவாகப் பயன்பட்டுவருகிறது .

சான்று

நாலடியார் பாடல் 200 " கருனைச் சோறு "

புறம் செய்யுள் 395 - " கருனைச் சூட்டொடு "

7. கைக் குழந்தை

பெரும்பாலும் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை இடுப்புக் குழந்தை என்பது தானே பொருத்தம்?  கைக் குழந்தை என்பதேன்?

இங்கே கை என்பது சிறிய என்னும் பொருளை உடையது. ஆகவே கைக்குழந்தை = சிறு பிள்ளை.

இது போன்ற வேறு சில சொற்கள்: கைக்குட்டைகைத்துண்டு,  கைத்துப்பாக்கிகையேடுகைப்பேசி.

ஆனால் கைக்கடிகாரம்,  கைப் பைகைத்தறிகைத்தொழில் முதலிய சொற்களில் கை உறுப்பைக் குறிக்கிறது. 
8. பெட்டிக் கடை

சில கடைகளைப் பெட்டிக் கடை என்கிறோம்அவை பெட்டி போல இல்லையே என்ற அய்யம் உங்களுக்குத் தோன்றியதுண்டா?

பெட்டி என்பது ஆங்கிலச் சொல் ( petty ) சிறிய என்று பொருள். Petty Shop என்பதன் அரைகுறை மொழி பெயர்ப்பு பெட்டிக் கடை. வேறு ஆங்கிலச் சொல்: பெட்டிக் கேஷ் ( petty cash ) .
 9. வெட்டி

வேலை வெட்டி இல்லை என்ற தொடரில் வெட்டி எனும் சொல் கூலியின்றிச் செய்யும் வேலையைக் குறிக்கிறது.

பழங்காலத்தில் கோவில் எழுப்புதல் முதலிய கடினப் பொதுப் பணிகளில் ஊதியம் பெறாமல் உழைக்கும்படி தொழிலாளர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

வெள்ளத் தடுப்புக்கு வீட்டுக்கு ஓராள் அனுப்பும்படி பாண்டியன் கட்டளையிட்டதாகப் புராணத்தில் படிக்கிறோம். இது கற்பனையல்ல. அக்கால எதார்த்த நிலைமை. அப்படிப் போய் உழைப்போர்க்கு மன்னன் சம்பளம் எதுவும் தரமாட்டான்.

வெட்டி பற்றிய தகவல்கள் கோயிற் கல்வெட்டுகளில் உள்ளன.

இன்று நாம் வீண் என்ற பொருளில் அச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். காட்டு : வெட்டிப் பேச்சு.

வெளி நாடுகளிலும் தொல்காலத்தில் அவ் வழக்கம் இருந்தது. பிரஞ்சில் 'கொர்வே' என்பர்.

Wednesday, 4 January 2012

ஆஸ்திரேலியாவின் தோட்ட நகரம் ட்டூவூம்பாவின் மலர்விழா

2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றபோது ட்டூவூம்பாவின் மலர்த்தோட்டங்கள் பலவற்றைக் கண்டுகளித்தேன். அப்போது நான் எடுத்த சில புகைப்படங்களும் அம்மலர்விழா பற்றிய சில தகவல்களும் கீழே.



ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமாகிய க்வீன்ஸ்லாந்தின் தலைநகரம் பிரிஸ்பேன். இதற்கு மேற்கே 130 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்துக்கு 700மீ. உயரத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக அமைந்துள்ள நகர் ட்டூவூம்பா.



இங்கே அண்டுதோறும் மலர் விழா (கார்னிவல்) நிகழ்கிறது. தொடங்கி 60 ஆண்டு ஆகிவிட்டதால் இப்போது வைரவிழாவாகக் கொண்டாடினார்கள். செப்டம்பர் 18 முதல் 27 முடிய பத்து நாள் இந்த விழா நடந்தது.




1950 இல் நடைபெற்ற முதல் கார்னிவலில் சிறப்பிடம் பெற்ற ஃபே ரியான் என்ற பெண்மணி (தற்போது 80 வயது) விழாவைத் தொடங்கிவைத்தார். அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. பேண்டு வாத்தியக்காரர்கள் இன்னிசை வழங்கியபடி நடைபோட, மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட மக்கள் தொடர்ந்து வர, அலங்கார ஊர்திகள் வரிசையாய்ச் செல்லப் பத்தாயிரக்கணக்கான மக்கள் பார்த்துப் பரவசமுற்றார்கள். ஊர்வலத்தில் புகழ் பெற்றப் பாடகர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.





நாள்தோறும் அங்கங்கு பாட்டு, நடனம் எனக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதிநாள் முன்னிரவில் வாணங்கள் வர்ண ஜாலங்களை வாரியிறைத்து வானத்தை நிறைத்தன.




நகரவாசிகளுள் வசதி வாய்ப்பு மிக்கவர்கள் தத்தம் இல்லத் தோட்டங்களில் கண்ணைப் பறிக்கும் புதுப்புது வகைப் பூச்செடிகளைக் கலைநயத்துடன் பொருத்தமான இடங்களில் வளர்த்தும் மலர்ச்சட்டிகளை அங்கங்கு நேர்த்தியாக அமைத்தும் பொது மக்கள் இலவசமாக வந்து பார்த்துக் களிக்க ஏற்பாடு செய்கிறார்கள். இந்தத் தடவை 70 தோட்டங்கள் மக்களை வரவேற்றன. ஆண்டுதோறும் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிறது. பெரிய தோட்டங்கள் 5000 சதுர அடிக்கு மேலும் பரப்புடையவை. செடி விற்பனையும் உண்டு. பற்பல தெருக்களில் உள்ள அந்தத் தோட்டங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் போய்க் கண்டு மகிழ்வதற்கு நேரம் வேண்டும், சிரமத்தைப் பொருட்படுத்தாத மனவுறுதியும் தேவை. முடிந்தவரை அன்றன்று சிற்சில இடங்களுக்குச் சென்று வருவதே பெரும்பாலோர்க்குச் சாத்தியம்.

 

நகரின் தகவல் மையம் மேப்பும், முகவரிப் பட்டியலும் இலவசமாக வழங்குகிறது. அதை வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்துப் போய் வருவது வீண் அலைச்சலைத் தவிர்க்கிறது. அவசியம் காண வேண்டிய தோட்டங்களைப் பற்றியும் தகவல் மையம் தெரிவிக்கிறது.

விழாவுக்கு ஏற்பாடு செய்கிற நகர நிர்வாகம் தோட்டங்களைப் பெரியவை, சிறியவை, புதியவை, நர்சரி, கல்லூரித் தோட்டங்கள் எனப் பலவகையாய்ப் பிரித்து அவற்றுள் சிறந்தவற்றுக்கு வகைக்கு 3 ஆகப் பரிசு வழங்கி ஊக்குவிக்கிறது. பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடுவர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.


 ஆறு தோட்டங்கள் மட்டும் கட்டணம் வசூலித்துக் கிடைக்கும் தொகையைப் பல பொது நல அமைப்புகளுக்கு அளிக்கின்றன. கார்னிவலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தோட்டங்களை அழகுபடுத்துதல், இருக்கிற அமைப்பை மேலும் சிறந்ததாக மாற்றி அமைத்தல், புதிய புதிய செடிகளை வளர்த்தல் முதலிய வேலைகள் தொடங்கிவிடும்.





ஆஸ்திரேலியாவின் 'தோட்ட நகரம்' என ட்டூவூம்பா அழைக்கப்படுவது சாலப் பொருத்தம்தானே! 







Tuesday, 3 January 2012

வள்ளல்கள்






பழங்காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் ஏழு பேர் என்ற பொருளில் கடையெழு வள்ளல்கள் என்கிறோம். ஆனால் அப்போது புலவர்களைப் புரந்த வேறு பலரும் சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் கொண்கானங்கிழான்சிறுகுடி கிழான் பண்ணன்,  தோயன் மாறன்,  நல்லியக் கோடன்,  நன்னன் சேய் நன்னன்,  நாஞ்சில் வள்ளுவன்,  பிட்டங்கொற்றன்வல்லார் கிழான் பண்ணன் ஆகியோர்.

குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் ஏழு வள்ளல்களைப் பற்றி மட்டும் தம் பாவில் குறிப்பிட்டதால் கடையெழு வள்ளல் என்கிற தொடர் பிறந்தது. மற்ற வள்ளல்களை ஏன் அவர் சேர்க்கவில்லை?  அந்த எழுவரை மாத்திரமே அவர் அறிந்திருக்கலாம்.

Sunday, 1 January 2012

இந்தியத் தேர்தல் - வாக்களிக்கும் முறையின் வரலாறு


அண்மைக் கால தேர்தல்களில் வாக்குப் பதிவுக்காக மின்னணுப் பொறி பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் மிக எளிய முறையில் ஒரு பொத்தானை மட்டுமே அழுத்தி வாக்காளர் தன் வாக்கை செலுத்த முடிகிறது. இதற்கு முன் இருந்த நடைமுறைகளில் பல குறைபாடுகள் இருந்தன.

ஆங்கிலேயர் காலத்தில் எல்லோருக்கும் வாக்குரிமை இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிறப் பெட்டி ஒதுக்கி, அதில் சீட்டைப் போட்டார்கள். 'மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்' என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அந்தக் காலத்தில் முழங்கினர்.

1957 ஆம் ஆண்டுத் தேர்தலிலிருந்து நான் தொடர்ந்து தேர்தல் அதிகாரியாய்ப் பணியாற்றியிருப்பதால் வாக்களிக்கும் முறை பற்றிய விவரங்களை அறிந்துள்ளேன்.

தொடக்கத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி ஒதுக்கி, அவரது பெயர் அச்சிட்ட தாளை அதில் ஒட்டி எல்லாப் பெட்டிகளையும் அகர வரிசைப்படி ஒரு மறைவிடத்தில் வைத்தோம். கட்சிகள் அதிகம் இன்மையால் 4, 5 பெட்டிகள் போதுமானவையாய் இருந்தன.

ஏறக்குறைய 10 செ.மீ நீளமும், 5 செ.மீ அகலமும் உடைய ஒரு சீட்டு வாக்காளருக்குத் தரப்பட்டது. விரலில் மை வைத்த பின்பு அந்தச் சீட்டைப் பெற்று மறைவிடத்துள் நுழையும் வாக்காளர், தமக்கு விருப்பமான பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிடவேண்டும். உள்ளே அவர் என்ன செய்கிறார் என்பதைக் கண்காணிக்க வழியில்லை. அது முழுதும் மறைத்த தனியிடமாக இருந்தது. அவர் வந்த பின்பு அடுத்தவரை அனுப்பினர்.

இதிலிருந்த முக்கிய குறைபாடு பின்பு தெரிய வந்தது. சீட்டை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் போய்க் கட்சிக்காரர்களிடம் தந்து பணம் பெற்றுக் கொள்ள முடிந்தது. இப்படி விலைக்கு வாங்கிய சீட்டுக்களை கணிசமாக சேர்த்துக் கட்சிக்காரர் தம் பையில் மறைத்து எடுத்து வந்து தமக்குரிய சீட்டையும் பெற்றுக்கொண்டு உள்ளே போய் எல்லாவற்றையும் தம் கட்சிப் பெட்டியில் போடுவார். எல்லாக் கட்சியினரும் இது போன்ற தந்திரத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த தேர்தலில் பெட்டி வெளியில் வைக்கப்பட்டது. எல்லோருக்கும் பொதுவாக ஒரே பெட்டி. வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர்களும் அவரவர்க்குரிய சின்னங்களும் அச்சிடப்பட்டிருந்தன. வாக்காளரிடம் ஒரு சீட்டும், மூன்று இஞ்ச் நீளத்தில் பென்சில் அளவுள்ள ஒரு மரக்குச்சியும் தரப்பட்டன. இதன் ஒரு முனையில் பெருக்கல் குறி (ரப்பர் ஸ்டாம்ப் போல்) பொருத்தப்பட்டிருந்தது. அந்த முனையை ஸ்டாம்ப் பேடில் அழுத்திய பின்பு வாக்காளரிடம் குச்சியைக் கொடுப்பர். தனியிடம் போய் விரும்பிய சின்னத்தில் முத்திரை குத்திச் சீட்டை மடித்த பின்பு கொண்டு வந்து பெட்டியில் போட வேண்டும். மடிக்காவிட்டால் ரகசியம் காக்கப்படாமல் போகுமல்லவா! தனியிடத்தில் அவர் நிற்கிற போது முகமும் தோள்களும் தேர்தல் அதிகாரிகளின் பார்வையில் படுமாறு இருக்கும்.

இந்த முறையால் நிறைய வாக்குகள் செல்லாமல் போயின.

1. எந்தச் சின்னத்திலும் முத்திரை இல்லை. (குச்சியின் மறு முனையால் குத்தியிருக்கிறார்கள்!)

2. இரு சின்னங்களில் முத்திரை இருந்தன. (தாளை மடித்த போது மை பட்டிருக்கிறது!).

இந்த இரு குறைகளையும் தவிர்க்க அடுத்த தேர்தலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

1. குச்சியின் இரு முனைகளிலும் குறி பொருத்தப்பட்டது. இதன் மூலம் எந்தப் பக்கம் குத்தினாலும் முத்திரை பதியும்.

2. பெருக்கல் குறிக்குப் பதிலாய்க் கடிகாரமுள் சுற்றும் முறையில் வளைந்த அம்புக்குறிகள் இடம்பெற்றன. இரண்டு சின்னங்களில் முத்திரை பட்டாலும் ஒன்றுதான் முள் சுற்றும் பாதையில் இருக்கும். மற்றது எதிர்ப் பக்கம் சுற்றும். ஆகவே, வாக்காளர் எதில் குத்தினார் என்பது தெரியும்.

ஒரேயொரு குற்றத்தைத் தடுக்க முடியாமலே இருந்து வந்தது. அதுதான் கள்ள ஓட்டுப் போடுதல். வாக்காளரின் படம் ஒட்டிய பட்டியல் தற்காலத்தில் வந்துவிட்டதால் அதற்கும் இனி இடமில்லை என்று நம்பலாம்!

கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே.