Sunday, 1 January 2012

இந்தியத் தேர்தல் - வாக்களிக்கும் முறையின் வரலாறு


அண்மைக் கால தேர்தல்களில் வாக்குப் பதிவுக்காக மின்னணுப் பொறி பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் மிக எளிய முறையில் ஒரு பொத்தானை மட்டுமே அழுத்தி வாக்காளர் தன் வாக்கை செலுத்த முடிகிறது. இதற்கு முன் இருந்த நடைமுறைகளில் பல குறைபாடுகள் இருந்தன.

ஆங்கிலேயர் காலத்தில் எல்லோருக்கும் வாக்குரிமை இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிறப் பெட்டி ஒதுக்கி, அதில் சீட்டைப் போட்டார்கள். 'மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்' என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அந்தக் காலத்தில் முழங்கினர்.

1957 ஆம் ஆண்டுத் தேர்தலிலிருந்து நான் தொடர்ந்து தேர்தல் அதிகாரியாய்ப் பணியாற்றியிருப்பதால் வாக்களிக்கும் முறை பற்றிய விவரங்களை அறிந்துள்ளேன்.

தொடக்கத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி ஒதுக்கி, அவரது பெயர் அச்சிட்ட தாளை அதில் ஒட்டி எல்லாப் பெட்டிகளையும் அகர வரிசைப்படி ஒரு மறைவிடத்தில் வைத்தோம். கட்சிகள் அதிகம் இன்மையால் 4, 5 பெட்டிகள் போதுமானவையாய் இருந்தன.

ஏறக்குறைய 10 செ.மீ நீளமும், 5 செ.மீ அகலமும் உடைய ஒரு சீட்டு வாக்காளருக்குத் தரப்பட்டது. விரலில் மை வைத்த பின்பு அந்தச் சீட்டைப் பெற்று மறைவிடத்துள் நுழையும் வாக்காளர், தமக்கு விருப்பமான பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிடவேண்டும். உள்ளே அவர் என்ன செய்கிறார் என்பதைக் கண்காணிக்க வழியில்லை. அது முழுதும் மறைத்த தனியிடமாக இருந்தது. அவர் வந்த பின்பு அடுத்தவரை அனுப்பினர்.

இதிலிருந்த முக்கிய குறைபாடு பின்பு தெரிய வந்தது. சீட்டை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் போய்க் கட்சிக்காரர்களிடம் தந்து பணம் பெற்றுக் கொள்ள முடிந்தது. இப்படி விலைக்கு வாங்கிய சீட்டுக்களை கணிசமாக சேர்த்துக் கட்சிக்காரர் தம் பையில் மறைத்து எடுத்து வந்து தமக்குரிய சீட்டையும் பெற்றுக்கொண்டு உள்ளே போய் எல்லாவற்றையும் தம் கட்சிப் பெட்டியில் போடுவார். எல்லாக் கட்சியினரும் இது போன்ற தந்திரத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த தேர்தலில் பெட்டி வெளியில் வைக்கப்பட்டது. எல்லோருக்கும் பொதுவாக ஒரே பெட்டி. வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர்களும் அவரவர்க்குரிய சின்னங்களும் அச்சிடப்பட்டிருந்தன. வாக்காளரிடம் ஒரு சீட்டும், மூன்று இஞ்ச் நீளத்தில் பென்சில் அளவுள்ள ஒரு மரக்குச்சியும் தரப்பட்டன. இதன் ஒரு முனையில் பெருக்கல் குறி (ரப்பர் ஸ்டாம்ப் போல்) பொருத்தப்பட்டிருந்தது. அந்த முனையை ஸ்டாம்ப் பேடில் அழுத்திய பின்பு வாக்காளரிடம் குச்சியைக் கொடுப்பர். தனியிடம் போய் விரும்பிய சின்னத்தில் முத்திரை குத்திச் சீட்டை மடித்த பின்பு கொண்டு வந்து பெட்டியில் போட வேண்டும். மடிக்காவிட்டால் ரகசியம் காக்கப்படாமல் போகுமல்லவா! தனியிடத்தில் அவர் நிற்கிற போது முகமும் தோள்களும் தேர்தல் அதிகாரிகளின் பார்வையில் படுமாறு இருக்கும்.

இந்த முறையால் நிறைய வாக்குகள் செல்லாமல் போயின.

1. எந்தச் சின்னத்திலும் முத்திரை இல்லை. (குச்சியின் மறு முனையால் குத்தியிருக்கிறார்கள்!)

2. இரு சின்னங்களில் முத்திரை இருந்தன. (தாளை மடித்த போது மை பட்டிருக்கிறது!).

இந்த இரு குறைகளையும் தவிர்க்க அடுத்த தேர்தலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

1. குச்சியின் இரு முனைகளிலும் குறி பொருத்தப்பட்டது. இதன் மூலம் எந்தப் பக்கம் குத்தினாலும் முத்திரை பதியும்.

2. பெருக்கல் குறிக்குப் பதிலாய்க் கடிகாரமுள் சுற்றும் முறையில் வளைந்த அம்புக்குறிகள் இடம்பெற்றன. இரண்டு சின்னங்களில் முத்திரை பட்டாலும் ஒன்றுதான் முள் சுற்றும் பாதையில் இருக்கும். மற்றது எதிர்ப் பக்கம் சுற்றும். ஆகவே, வாக்காளர் எதில் குத்தினார் என்பது தெரியும்.

ஒரேயொரு குற்றத்தைத் தடுக்க முடியாமலே இருந்து வந்தது. அதுதான் கள்ள ஓட்டுப் போடுதல். வாக்காளரின் படம் ஒட்டிய பட்டியல் தற்காலத்தில் வந்துவிட்டதால் அதற்கும் இனி இடமில்லை என்று நம்பலாம்!

கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே.

2 comments:

  1. எத்தனைச் சோதனைகளைத் தாண்டி வந்துள்ளது இன்றைய வாக்களிக்கும் வசதி. தங்கள் தயவால் பழங்கால வாக்களிக்கும் முறைகளில் இருந்த குறைபாடுகளையும் அவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்ட வழிமுறைகளையும் அறிய முடிந்தது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. இந்திய வாக்களிப்பின் பரிணாம வளர்ச்சியை இன்றைய இளந்தலைமுறையும் அறியச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete