1. வையாபுரி
சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள்?
பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது; இதைச் சங்க காலத்தில் ஆண்ட சிற்றரசன் பேகன்; வையாவிக் கோ என அவன் அழைக்கப்பட்டான்.
பின்பு வையாபுரி ( புரி = ஊர். தர்மபுரி என்பது போல் ) என்றாகி இறுதியில் வையாபுரி ஆயிற்று.
2. தாமோதரன்
சங்கப் புலவருள் இருவர் தாமோதரன் என்னும் பெயருடையவர் : ஒருவர், உறையூர் மருத்துவர் தாமோதரனார், மற்றவர், வடம வண்ணக்கர் தாமோதரனார்
கண்ணனைக் குறிப்பது தாமோதரன் என்னும் பெயர்.
தயிர் கடைகிற மத்தைச் சுழலச் செய்கிற கயிற்றை வட மொழியில் தாமம் என்றும் வயிற்றை உதரம் என்றும் சொல்வார்கள்.
உதரன் - வயிற்றை உடையவன். தாம + உதரன் = தாமோதரன் .
யசோதை தாமத்தால் கண்ணனின் வயிற்றில் கட்டி அவனைச் சிறைப்படுத்தியதால் அந்தப் பெயர் வந்தது.
அது போன்ற வேறு சொற்கள் :
வயிற்றை வீங்கச் செய்கிற நோய் மகோதரம் ( மகா + உதரம் = மகோதரம் - பெரு வயிறு ).
ஒரு வயிற்றில் பிறந்தவன் சகோதரன் ( சக + உதரன் )
3. செங்கல்பட்டு
செங்கல்பட்டு என்றோர் ஊரும் செங்கல்வராயன் என மக்கட் பெயரும் உள்ளன. இவற்றுக்கும் செங்கல்லுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்?
தொடர்பு எதுவும் இல்லை. செங்கழுநீர்ப்பற்று என்பதன் மரு செங்கல்பட்டு. செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்த ஊர் அப் பெயர் பெற்றது. மலர்ப் பெயரால் அமைந்த வேறு ஊர்களுள் சில : குவளைக்கால், மகிழஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருமுல்லைவாயில். பற்று என்றால் குடியிருக்கும் இடம். வேறு ஊர்கள் : காலாப்பட்டு, மாம்பழப்பட்டு, பேரணாம்பட்டு ( திரிபு ).
செங்கல்வம் என்று திருத்தணிக்கு இன்னொரு பெயர். ராயன், ராஜனின் தமிழ் வடிவம். எனவே, செங்கல்வ ராயன் = திருத்தணி அரசன், அதாவது முருகன்.
4. ஊமத்தம்பூ
ஊமை என்ற சொல்லிலிருந்து ஊமத்தம் பூ எனப் பெயர் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும்; அப்படியல்ல.
வடமொழியில் உன்மத்தம் = மூளைக் கோளாறு.
இந்தப் பூவை அரைத்து ஒருவரைக் குடிக்கச் செய்தால் அவரைப் பித்துக்கொள்ளி ஆக்கிவிடலாம் என்பது நம்பிக்கை;
ஆதலால் உன்மத்தம் பூ என்றனர். அது காலப் போக்கில் ஊமத்தம் பூ ஆயிற்று.
5. கட்டெறும்பு
ஒரு வகை எறும்புக்குக் கட்டெறும்பு என்று பெயர். கட்டை எறும்பு என்ற சொல் திரிந்து அப்படி ஆயிற்று.
கட்டை = தடிமனான.
தடித்துள்ள விரல் கட்டை விரல். பருத்தும் குள்ளமாயும் உள்ள ஒருவரைக் கட்டை குட்டை ஆனவர் என்கிறோம் .
( கட்டை - பருமன்; குட்டை - குள்ளம் )
6. கருனைக் கிழங்கு
கருனை என்றால் பொரியல். பொரியல் செய்யப் பயன்படும் கிழங்கு கருனைக் கிழங்கு. இதை மூன்று சுழி ண போட்டு எழுதுவது பிழை.
இது நீண்டநெடுங்காலமாகத் தமிழரின் உணவாகப் பயன்பட்டுவருகிறது .
சான்று
நாலடியார் பாடல் 200 " கருனைச் சோறு "
புறம் செய்யுள் 395 - " கருனைச் சூட்டொடு "
7. கைக் குழந்தை
பெரும்பாலும் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை இடுப்புக் குழந்தை என்பது தானே பொருத்தம்? கைக் குழந்தை என்பதேன்?
இங்கே கை என்பது சிறிய என்னும் பொருளை உடையது. ஆகவே கைக்குழந்தை = சிறு பிள்ளை.
இது போன்ற வேறு சில சொற்கள்: கைக்குட்டை, கைத்துண்டு, கைத்துப்பாக்கி, கையேடு, கைப்பேசி.
ஆனால் கைக்கடிகாரம், கைப் பை, கைத்தறி, கைத்தொழில் முதலிய சொற்களில் கை உறுப்பைக் குறிக்கிறது.
8. பெட்டிக் கடை
சில கடைகளைப் பெட்டிக் கடை என்கிறோம்; அவை பெட்டி போல இல்லையே என்ற அய்யம் உங்களுக்குத் தோன்றியதுண்டா?
பெட்டி என்பது ஆங்கிலச் சொல் ( petty ) சிறிய என்று பொருள். Petty Shop என்பதன் அரைகுறை மொழி பெயர்ப்பு பெட்டிக் கடை. வேறு ஆங்கிலச் சொல்: பெட்டிக் கேஷ் ( petty cash ) .
9. வெட்டி
வேலை வெட்டி இல்லை என்ற தொடரில் வெட்டி எனும் சொல் கூலியின்றிச் செய்யும் வேலையைக் குறிக்கிறது.
பழங்காலத்தில் கோவில் எழுப்புதல் முதலிய கடினப் பொதுப் பணிகளில் ஊதியம் பெறாமல் உழைக்கும்படி தொழிலாளர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
வெள்ளத் தடுப்புக்கு வீட்டுக்கு ஓராள் அனுப்பும்படி பாண்டியன் கட்டளையிட்டதாகப் புராணத்தில் படிக்கிறோம். இது கற்பனையல்ல. அக்கால எதார்த்த நிலைமை. அப்படிப் போய் உழைப்போர்க்கு மன்னன் சம்பளம் எதுவும் தரமாட்டான்.
வெட்டி பற்றிய தகவல்கள் கோயிற் கல்வெட்டுகளில் உள்ளன.
இன்று நாம் வீண் என்ற பொருளில் அச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். காட்டு : வெட்டிப் பேச்சு.
வெளி நாடுகளிலும் தொல்காலத்தில் அவ் வழக்கம் இருந்தது. பிரஞ்சில் 'கொர்வே' என்பர்.
கட்டெறும்பு தவிர மற்ற பெயர்களுக்கான காரணங்கள் யாவும் இதுவரை நான் அறிந்திராதவை. செங்கல்பட்டு பெயரின் பொருளையும், தாமோதரன் என்னும் பெயரின் பொருளையும் அறிந்து வியப்பு உண்டாகிறது. பொருளறியாமலேயே இத்தனைநாள் பயன்படுத்தியிருக்கிறோம். தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபாராட்டுக்கு உள்ளமார்ந்த நன்றி . .
ReplyDeleteஅன்புள்ள பேராசிரியருக்கு
ReplyDeleteவணக்கம்
நல்லதொரு ஆய்வு. நன்றி.
பரவாயில்லை எனும் சொல்லில் பரவா என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்
புதுச்சேரி
அன்பார்ந்த ஐயா , பர்வாஹ் நஹீங் என்பதற்கு மாற்றாக இந்திக்காரர்கள் கோயீ பாத் நஹீங் என்கிறார்கள் . முந்தைய பதிலில் கோயீ நஹீங் எனத் தவறாய் எழுதிவிட்டேன் இதற்கு ஒன்றுமில்லை என்பது பொருள் . இந்தி ஆட்சி மொழி ஆனபின் உருதுச் சொற்களுக்குப் பதிலாய் சம்ற்கிருதச் சொற்களைப் புகுத்தி இருக்கிறார்கள் . வேறு காட்டுகள் : நூல் - கித்தாபுக்குப் பதில் புஸ்த்தக் ; பெண் - ஒளரத்துக்கு மாற்றாய் ஸ்த்ரீ .
Deleteஅன்பார்ந்த பேராசிரியர் அவர்களே , உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . பர்வாஹ் என்பது உருதுச் சொல்; கவலை என்று பொருள் .; பர்வாஹ் நஹீங் என்பதைத்தான் நாம் பரவாயில்லை என்கிறோம் .அது உருது என்பதால் , இந்திக்காரர்கள் அதனைப் பயன்படுத்த விரும்பாமல் கோயீ நஹீங் என்கிறார்கள்
ReplyDeleteஅன்புள்ள ஐயா அவர்களுக்கு. உமது தமிழ் ஆராய்ச்சிக்கு முதலில் என் வந்தனம் . இதுவரை "வெட்டி" என்ற சொல்லுக்கும்
ReplyDelete"பெட்டி கடை" என்ற சொல்லுக்கும் அர்த்தம் தெரியாமலேயே உபயோகித்து வந்திருக்கிறேன். உமது ஆழ்ந்த விளக்கத்திற்கு நன்றி ஐயா.
கா . பாலச்சந்தர் .