Monday, 2 April 2012

தெள்ளாற்றுப் போர்கள்




வட இந்தியாவில் பானிப்பட் என்ற ஒரே இடத்தில் 3 போர்கள் நடந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.



தமிழகத்தில் அவ்வாறு ஓரிடத்தில் முப் போர் நிகழவில்லை ;  ஆனால் இரு போர் நிகழ்ந்துள்ளன.



அவை நடந்த இடம் தெள்ளாறு ; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியின் அருகில் இருக்கிறது.



முதற் போர் :



854 இல் , மதுரையிலிருந்து படை எடுத்துவந்த பாண்டியன் சீமாற சீவல்லபனைப் பல்லவ மன்னன் நந்திவர்மன் iii தடுத்து நிறுத்திப் போரிட்டு வென்று துரத்தினான்.



இரண்டாம் போர் :



கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனிடம் 3 ஆம் ராசேந்திர சோழன் தோற்றுச் சிறைப்பட்டான். ( 1231 )



பல்லவர் குலத்தில் பிறந்த ஏழிசை மோகன் காடவராயன் என்பவன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் ( 1133 - 1150 ) காவல் அதிகாரியாய்ப் பணி ஆற்றினான். தன் வலிமையைப் படிப் படியாய்ப் பெருக்கிக்கொண்டு நாளடைவில் சிற்றரசன் ஆகிவிட்டான்.



அவனது வமிசத்தில் தோன்றிய கோப்பெருஞ்சிங்கன் ( 1229 - 1278 ) சேந்தமங்கலத்திலிருந்து ( கடலூர் மாவட்டம் ) ஆட்சி புரிந்தான் . இவன் தன் படையுடன் வந்து போரிட்டு 3ஆம் ராசராச சோழனை வென்று சிறைசெய்தான்.



செய்தி அறிந்த ராசராசனின் நண்பனும் கன்னட ஓய்சல நாட்டு மன்னனும் ஆகிய வீரநரசிம்மன் அனுப்பிய சேனை சேந்தமங்கலத்தை முற்றுகையிட முற்பட்டபோது கோப்பெருஞ்சிங்கன் சோழனை விடுவித்துவிட்டான்.



இவை தெள்ளாற்றுப் போர்கள் எனப்படுகின்றன.

Wednesday, 28 March 2012

நெப்பெட்டீஸ்ம்



 

நெப்போஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு சகோதரன் அல்லது சகோதரி மகன் என்று பொருள். அது ஆறாம் வேற்றுமையில் நெப்போத்தீஸ் என மாறும். இதிலிருந்து பிறந்த பிரஞ்சு வார்த்தையான நெப்போத்தீஸ்ம், வேண்டியவர்க்குச் சலுகை வழங்குவதைக் குறிக்கும். இதை ஆங்கிலம் நெப்பெட்டீஸ்ம் ( Nepotism ) என்கிறது. 

இந்தச் சொல் உருவானமைக்கு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 

14 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவராய்த் தேர்வு செய்யப்பெற்ற ஒரு பிரஞ்சுப் பாதிரியார், ஐந்தாம் க்ளேமான் என்னும் பட்டத்துடன் ரோமுக்குப் போகாமல் பிரான்சிலிருந்தே அதிகாரம் செலுத்தினார். இத்தாலியை இடைவிடாப் புரட்சிகளும் உள்நாட்டுப் போர்களும் அலைக்கழித்தமையால் அவருக்குப் பின் பதவி ஏற்றோரும் பிரான்சிலேயே தங்கினார்கள். 

1305 இலிருந்து 1378 வரை நீடித்த அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மத நிர்வாகிகளைப் பணியமர்த்தக் கையூட்டுப் பெற்றும் இயன்ற வேறு வழிகளிலும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரும் செல்வம் ஈட்டி ஆடம்பரமாய் வாழ அதைச் செலவழித்தார்கள்.

தங்கள் உடன்பிறந்தாரின் புதல்வர்களுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளைத் தாராளமாய் வழங்கினார்கள். அப்போது நெப்போத்தீஸ்ம் என்னும் புதுச் சொல்லை மக்கள் படைத்துப் புழங்கினார்கள்.

Saturday, 24 March 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு



மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள் ; அவை எல்லா மொழிகளிலும் உண்டு.

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:

1 - வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei ) இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2 - எர்ராரே ஹுமானும் ஏஸ்த் ( Errare humanum est ) பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார் . அவரிடமிருந்து நாம் பெற்றோம்.

Thursday, 22 March 2012

பாண்டி பஜார்




"என்ன காரணம்?  பாண்டி பஜார் எனச் சென்னைத் தியாகராயர் நகரின் அங்காடித் தெரு அழைக்கப்படுவதேன்?  இப்போது புதுச்சேரி எனப்படும் பாண்டிச்சேரியின் சுருக்கம் அல்லவா பாண்டிஅந்த முன்னாள் பிரெஞ்சு இந்தியப் பகுதிக்கும் சென்னைக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?" என்று யாரும் குழம்பவேண்டாம். 

பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் முக்கியமானவர் தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்னும் ஊரினரான W.P.A.சவுந்தரபாண்டியன். 1929 இல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர். 

இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகிப் பின்பு பாண்டி பஜார் என மாறிற்று , தியாகராயர் நகர் தி.நகர் ஆனது போல. 

சென்னையின் அந்தப் பகுதி நீதிக் கட்சித் தலைவர் சிலரின் பெயர்களைத் தாங்கியுள்ளது : 

1 - கட்சி நிறுவுநர் சர். பிட்டி தியாகராயர் நினைவாய் ----  தியாகராயர் நகர்; 

2 . அவருக்குத் துணை நின்ற டி. மாதவன் நாயரின் பெயரால் ---- டாக்டர் நாயர் தெரு; 

3 . கட்சித் தூண் நடேசனைப் பெருமைப்படுத்துவது --- டாக்டர் நடேசன் தெரு; 

4 . கட்சி சார்பில் மாநில முதலமைச்சராய்ப் பதவி வகித்த பனகல் ராஜாவின் பெயர் கொண்டுள்ளது --- பனகல் பூங்கா.


கொசுறு -- சென்னைச் சைனா பஜாரும் இப்படித்தான்அங்கே சீனர் கடைகள் இருந்ததில்லை. 

சின்ன கடைத் தெரு என்பது Chinna bazaar என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு நாளடைவில் எழுத்துப் பிழையால் China bazaar ஆகிவிட்டது.  

சின்ன கடைத் தெரு சீனக் கடைத் தெரு ஆனமை விநோதம் தானே !