Thursday, 5 July 2018

மறைந்த தங்கப்பா

ம.இலெ.தங்கப்பா



   புதுச்சேரித் தமிழறிஞர் .இலெ. தங்கப்பா தம் 84-ஆம் அகவையில் மே 31-ஆம் நாள் காலமானார். ஜனவரியிறுதியில் இதய நோய்க்கு ஆளான அவர், தக்க சிகிச்சை மேற்கொண்டு வந்தும், பலனின்றிப் போயிற்று. கவிஞர், முற்போக்கு சிந்தனையாளர், மொழிபயெர்ப்பாளர் ஆகப் பல துறைகளில் புகழெய்திய அவர், ‘தெளிதமிழ்என்ற தனித்தமிழ் இலக்கிய மாதச் சிற்றிதழின் ஆசிரியராயும் பணியாற்றினார். புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய்த் திறம்படக் கற்பித்த அவர், ஆங்கிலத்திலும் நிறையறிவு பெற்றிருந்தார்.

   சாகித்ய அகாதெமியின் விருதை இருமுறை பெற்றமை அவரது திறமையைப் பறைசாற்றப் போதுமானது:

1.   தமிழ் அகப் பாடல்களைத் தேர்ந்து மொழிபெயர்த்து Love Stands Alone என்னுந் தலைப்பில் வெளியிட்ட நூலும்
2.   குழந்தைகளுக்கான தமிழ்ப் பாட்டுகள் என்ற படைப்பும்

   அவ்விருதுகளைப் பெற்றுத் தந்தன.

   அவரது எழுத்துப்பணி அவ்வளவோடு நின்றுவிடவில்லை.
  
-    முத்தொள்ளாயிரத்தின் மொழிபெயர்ப்பு நூல் Penguin வெளியீடாக Red Lilies and Frightened birds என்னுந் தலைப்பில் வந்தது.
-    நாலடியார், புறநானூற்றுப் பாக்கள், திருமந்திரப் பாடல்கள் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார்.
-    20-ஆம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் Andre Gide இயற்றிய Les Nourritures Terrestres என்ற படைப்பை ஆங்கில வழித் தமிழில்மண்ணின் கனிகள்என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
   
கொஞ்சம் sample தருகிறேன்:

1.   புறம் 221. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது மனம் வருந்திப் பொத்தியார் பாடியது:

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோ என்னே
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தனை யுலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

He gave to the singers
  And won much fame.
He gave to the dancers
  And gained many a heart.
Men of virtue paid him homage.
  His sceptre was never bent.
Men of wisdom paid him tributes.
  His friendship was constant.
Gentle and sweet to women,
  And tough before his men
He was a sanctuary
  To the noble.
Reckoning nothing of this
  Thoughtless Death
Has claimed this worthy soul.
   Let us come together
   In our sorrow
O poets of thoughtful words
And condemn Death.
  For, alas,
Plunging this world in sorrow
  Our great patron
  In all his glory
Has become
  A monument of stone.


2.   புறம் 248. ஒரு கைம்பெண்ணின் அவலத்தை ஒக்கூர் மாசாத்தியார் எடுத்துரைக்கிறார்.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லாயினவே.

Woe unto me!
When I was young
This lily supplied me with leaves
Now that my husband is dead
It provides me with seeds
Which I must cook and eat
At an untimely hour
Denying myself regular meals.

3.   15.8.2017 தெளிதமிழில் வந்தது:

    கொள்ளையரை ஒழிப்போம்

பன்னாட்டு வாணிகரும் உள்நாட்டுக்
  கொள்ளையரும் பழிசேர் வாழ்க்கைப்
புன்னோக்கின் ஆட்சிசெய்யும் புல்லியரும்
  உள்ளுளவாய்ப் புரிந்துகூடி
இந்நாட்டின் வளம்முழுதும் தின்கின்றார்;
  எளியவரின் நிலம் பறித்தே
அன்னார்தம் வாழ்வுரிமை அழிக்கின்றார்.
  இதன் பெயர்தான் ஆட்சியாமே!
குடியாட்சி நாடிதென்று கூறுவதோ?
  ஆள்பவராம் கொள்ளைக் காரர்
முடியாட்சி மன்னரினும் முப்பகட்டாய்
  வாழ்கின்றார்; முடியா மக்கள்
அடிவயிற்றில் அடிக்கின்றார்; ஐயகோ!
  சான்றோரே, அறஞ்சார்ந் தோரே!
இடியேறாய் முழக்கமிட்டே எழுந்திடுவோம்
  கொள்ளையரை ஒழிப்போம், வாரீர்!

பின்குறிப்புதம் சடலத்தைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

Sunday, 17 June 2018

தகவல் திரட்டு


           
 1. “சைவர்களுக்குச் சாணிலை” என்பது பழமொழி. சிலர் பொருள் கொள்வர், சைவ உணவு பரிமாறுவதற்குச் சாண் வாழையிலை போதும் என்று. அது பொருந்தாது. சைவ உணவு என்பது அவ்வளவு கொஞ்சமாகவா இருக்கும்?

       உண்மைப் பொருள் இதுதான்: சிவனைப் பூசிக்கையில் சைவர்கள் பன்னீர் இலையைக் கிள்ளிப் போடுவார்கள். அது சாண் நீளம் இருக்கும்.
(புலவர் கி.வா.ஜகந்நாதனின் விளக்கம்).


2. “தில்லைவாழ் அந்தணர், தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகையைப் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், அதில் அறுபது தொண்டர்களைக் குறிப்பிட்டார். ‘சடையன் இசைஞானி காதலன்’ என்று தம் பெற்றோரின் பேரைச் சொல்லி அவர்களின் அன்பு மகன் என்று தம்மைச் சுட்டினார். இந்த மூன்று பேர்களையும் யாரோ தவறுதலாய்ச் சேர்த்து 63 நாயன்மார் என்றார். இது வழக்கத்துக்கு வந்துவிட்டது.

3. வால்மீகி இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் இப்போது இருக்கின்றன. இவற்றுள் 2 முதல் 6 வரை உள்ள 5 தான் அசல். இவை இராமனை மனிதனாகச் சித்திரிக்கின்றன. மற்ற காண்டங்கள் யாரோ எழுதிச் சேர்த்தவை. இவை அவனைத் திருமாலின் அவதாரமாகக் காட்டுகின்றன. இராமனது காலத்தில் வால்மீகி வாழ்ந்ததாயும் கூறுகின்றன.

(நவாலியூர் நடராஜன் இயற்றிய ‘வடமொழி இலக்கிய வரலாறு’ பக். 27)

4. சென்ற நூற்றாண்டுவரை, குழந்தையைத் தவிட்டுக்கு வாங்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்டது. ஒரு தாயின் முதலிரு குழவிகள் அகால மரணம் அடைந்தால் மூன்றாவதாய்ப் பிறந்ததை உடனடியாய்த் தாய்மாமனின் கைகளில் தந்து, அவனிடம் கொஞ்சந் தவிட்டைத் தந்துவிட்டுத் திரும்ப வாங்கிக் கொள்வர். இப்படிச் செய்தால் அது நீண்ட ஆயுள் பெறும் என்பது நம்பிக்கை.

  ஆண் எனில் தவிடன் எனவும் பெண் எனில் தவிட்டம்மாள் எனவும் பட்டப்பெயர் சூட்டுவர். நகராட்சியில் வேறு பெயர் பதியப்படும்.

5. திரைப்படத் தொடக்கக் காலத்தில் மக்களிடம் சினிமா மோகம் ஏற்படவில்லை. பார வண்டியில் அமர்ந்துகொண்டு வாத்தியம் வாசித்துக் கொண்டு ஊரை வலம் வந்து துண்டு நோட்டீஸ் வழங்கிக் கூட்டஞ் சேர்த்தனர்.

  கொட்டகை வாசலில் பாண்டு இசை பரப்பி ஆள் இழுத்தனர்.

6. எங்கள் ஊராகிய காரைக்காலிலும் சுற்று வட்டாரங்களிலும் கிட்டத்தட்ட 1935 வரை கொசு இல்லை; 80 கி.மீ. மேற்கேயுள்ள கும்பகோணத்தில் இருந்தது.

கும்பகோணம் கொசுவுகளா
கோணமூக்குப் பவிசுகளா
கடிக்கலாகுமோ ரத்தம்
குடிக்கலாகுமோ?

எனத் தொடங்கிய இசைத்தட்டுப் பாடலொன்று அப்போது பிரசித்தம்.


 7. திருமணத்தில் அரசாணிக்கல் நடுகிறார்கள். அறிஞர் சிலர் அது பற்றி விளக்கியுள்ளனர்; அது அரசு ஆணைக் கால் என்றும் திருமணம் நிகழ்த்துவதற்கு அரசனது ஆணையைப் பெற்றதற்கு அது சான்று என்றும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

        அது சரியல்ல என்பது என் கருத்து. இருவர் மணம் புரிந்துகொள்வதற்கு பெற்றோர் உற்றோர் சம்மதம் கோருவோம். எங்கோ இருக்கிற அரசனது ஆணை எதற்கு? அது தேவைதான் என்றாலும் அதைப் பெறுவதென்பது ஊர்தி வசதி, தகவல் தொடர்பு வசதி அறவே இல்லாத காலத்தில் லேசுப்பட்ட காரியமா?

   நான் நினைக்கிறேன், மரக்கிளையை நடுவதால் அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும் என்று. ஒரு காலத்தில் அரச மரத்துக் கிளையை நட்டிருப்பார்கள்.

   ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடாதே’ என்னும் பழமொழியில் அரசனை என்பது அரச மரத்தை எனப் பொருள்படுகிறதல்லவா?

8. “சங்க கால மன்னன் கரிகால் சோழன் கல்லணை கட்டினான், 2000 ஆண்டுக்கு முன்பே தமிழர் பொறியியல் வல்லுநராய்த் திகழ்ந்தனர்!”

          இவ்வாறு சிலர் பெருமிதத்துடன் கூறுவதுண்டு; அது உண்மையாயின் பெருமைப்படலாம்தான்; ஆனால் அவனது அரண்மனையோ பிற வேந்தர்களின் மாளிகைகளோ நிலைக்காதது ஏன்? எல்லாம் மண்ணால் எழுப்பப்பட்டவையாதலால் சுவடின்றி அழிந்துபோயின. அணை கட்ட அறிந்தவர் உறுதியான வீடு நிர்மாணிக்க அறியாதவரா? பழங்காலக் கோயில்களே மண்ணால் ஆனவைதானாம். அவை ‘மண்தளி’ எனப்பட்டன. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு பல்லவர் கற்கோயில்கள் உருவாக்கினர். அவை ‘கல்தளி’ (கற்றளி) எனப் பெயர் பெற்றன.

   கரிகாலன் மீது பாடப்பட்ட பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் அவன் அணை கட்டிய மிக முக்கியமாக செய்தியைக் கூறவில்லை.

   11-ஆம் நூற்றாண்டில் கல்லணை கட்டிய வீர ராசேந்திர சோழனுக்குக் கரிகால் சோழன் என்ற பெயரும் உண்டு.
 
(படங்கள் உதவி இணையம்)

Monday, 28 May 2018

இந்துக்களின் வேதங்கள்





  “வேதங்கள் தெய்விகம் வாய்ந்தவை. இவற்றிற்கு அபௌருஷேயங்கள் என்னும் அடைமொழியை ஈந்து அவை மக்களால் ஆக்கப்படாத தெய்விக நூல்கள் என ஆஸ்திகர்கள் போற்றுவார்கள்.” (1)

   அதாவது கீதையைக் கிருஷ்ண பகவான் அருளியது போல வேதங்களை இறைவன் படைத்தான்.

  ஆனால் உண்மை வேறு:
 
   “கண்ணுவர்கள், கோதமர்கள், கிரித்சமதர்கள், விருகதுக்தன் முதலிய ரிஷிகளால் பாடப்பட்டவை வேதப் பாடல்கள்.” (2)

   “வேதங்கள் ஒரு தனிக்கவியின் ஆக்கமல்ல. இவை வெவ்வேறு காலங்களில் கவிகள் பலரால் பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்டு நெடுங்காலம் வழங்கிவரும்போது ஒருகால் ஒன்று சேர்த்துப் பிரிவு பிரிவுகளாகத் தொகுத்து அமைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பின்னரே வேத இலக்கியம் இன்று காணப்படும் உருவைப் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இவ்வேத இலக்கியத்தைக் குறிக்க வரும் பெயர்களுள் திரயீவித்யா என்பது ஒன்று. மூவகை வித்தை என்பது இதன் பொருள். இருக்கு, யசுர், சாமம் என்பவையே இவ்வித்தையின் முப்பெரும் பிரிவுகள். நான்காம் வேதமான அதர்வம் நெடுங்காலத்துக்குப் பின்னரே வேத இலக்கியத்தில் இடம்பெற்றமையால், இது இங்கு வேதங்களுள் ஒன்றாகக் கூறப்படாதிருக்கக் காண்கிறோம்.” (3)

  எனவே, வேதங்கள் மக்களின் படைப்பு, அவை வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவாகிறது.

   “இப்பாட்டுகளைப் பாடியபோது ஆரியர்களுக்குக் கடவுள் பற்றிய விழுமிய அறிவு இல்லை." பண்டை நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற் கடவுளின் உண்மையை உணர்ந்தவர் அல்லர். அதனையுணராமையின் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணரார் ஆயினர். தம்மால் கருதப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் முதலான சிறு தெய்வங்களையே வேண்டி வணங்கிவந்தனர். (4)

  “வேதங்கள் ஒன்றேயான ஈஸ்வரனைச் சொல்லவில்லை. பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறது. அவர்கள் மனிதர்களைப் போன்ற ஓர் இனந்தான். (5)

  “இருக்கு என்பதற்குப் பாட்டு என்று பொருள். இருக்கு வேதப் பாடல்கள் பெரும்பாலும் அக்காலத்தில் வழிபட்ட தெய்வங்களை விளித்து அவர்களிடமிருந்து தமக்கு வேண்டிய பொருள்களை இரந்து கேட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு அவர்களைப் போற்றிக் கூறும் முறையில் அமைந்து விளங்குகின்றன. (6)

  ‘நான் உனக்கு நெய் முதலிய ஆகுதிகளைத் தருகிறேன். நீ எனக்கு வீரர்களான மக்களையும் பசுக்களையும் மழையையும் நீண்ட ஆயுளையும் தா’ என்பதே இருக்குப் பாக்களில் தெய்வங்களை நோக்கி மீண்டும் மீண்டும் வேண்டிய வேண்டுகோள்.” (7)

   “உலகியல் விஷயங்கள், அரசர்களைப் போற்றிக் கூறும் பகுதிகள், தத்துவக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் முதலியவற்றையும் இருக்கு வேதத்தில் அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கக் காண்கிறோம்.” (8)

   இருக்கு மறையின் உள்ளடக்கம் இது; மற்ற வேதங்கள் ஆரியர்களின் பகைவர்களை இழித்தும் பழித்துங் கூறி அவர்களையழிக்கும்படி தெய்வங்களை வேண்டுகின்றன. ஆடு, பசு, எருது, குதிரை முதலியவற்றைக் கொன்று இயற்றும் வேள்விகளை விவரிக்கின்றன. மனிதனைப் பலியிட்டு வேட்ட யாகமும் உண்டு; இது புருஷமேதம் எனப்பட்டது; நரபலி என்றும் பெயர். கீழானவன் என்று கருதப்பெற்ற சூத்திரனைப் பலியிட்டிருப்பார்கள் என்று யூகிக்கலாம்.

   யசுர் என்றால் உரைப் பகுதிகள். இது கிரியைகளைப் பற்றி விளக்கங்கூற உரைநடையில் பெரும்பாலும் அமைந்த நூல். சாமம் என்றால் இசை பெருக்கி இராகம் இழைத்துப் பாடும் பாட்டு. அதர்வ வேதம் மாந்திரிக நூலாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது.

   வேதங்களை வியாசர் என்பவர் தொகுத்தார் எனவும் ஆதலால் வேத வியாசர் எனப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது. அவர் முறையாய்த் தொகுக்கவில்லை. எடுத்துக்காடு: சாம வேதத்தில் 1549 பாக்கள் இருக்கின்றன; இவற்றுள் 75 தவிர ஏனைய எல்லாம் இருக்கு வேதத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இந்த 75-இலும் சில பாட்டுகள் வேள்விமுறை கூறும் வேறு நூல்களிலிருந்து வந்தவை. (9)

  வேதத்தில் தெஇளவாக விளங்காத பகுதிகள் எத்தனையோ இருக்கின்றன. வேதங்களின் கருத்தை அறிய முயலுதல் அநாவசியம் என்பது ஆன்றோர் கருத்து. இதே கருத்துடன்தான் இன்னும் வேதங் கற்போர், ஓதும் முறையையே பன்னிரண்டு ஆண்டுகள் முழுதும் கற்கின்றனர். (10)

  அதாவது அர்த்தம் புரியாமல் குரு சொல்வதைத் திருப்பிச் சொல்லி ஓதுகின்றனர்.

    இவ்வாறு பல குறைபாடுகள் இருப்பினும் இந்திய இலக்கியங்களுள் பழமை சான்றவை என்ற பெருமை வேதங்களுக்கு உண்டு. இவற்றின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள் சிறப்பான தத்துவக் கருத்துகள் பொதிந்தவை.








குறிப்புகள்
(1)  வடமொழி இலக்கிய வரலாறு. பேரா. கா. கைலாசநாத குருக்கள் இயற்றியது. பக். 28.
(2)  வேளாளர் நாகரிகம். மறைமலையடிகள். பக். 89.
(3)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 42.
(4)  வேளாளர் நாகரிகம். பக். 44.
(5)  சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்.’
(6)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 51.
(7)  மேற்படி நூல். பக். 83.
(8)  மேற்படி நூல். பக். 52.
(9)  மேற்படி நூல். பக். 127.
(10) மேற்படி நூல். பக். 86.

(படங்கள் உதவி - இணையம்)

Wednesday, 16 May 2018

ஔவை சு. துரைசாமி


நூல்களிலிருந்து – 18

  ஔவை சு. துரைசாமி

(பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானவர்களுக்கு நிகரான பெரும்புலவர் நம்மிடையே வாழ்ந்த ஔவை சு.துரைசாமி பிள்ளை. அவரது வாழ்க்கை வரலாறு மறைமலைநகர் காலஞ்சென்ற புலவர் தி.நா.அறிவு ஒளி 1998-இல் எழுதிய “தமிழறிஞர்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைச் சுருக்கிப் பதிகிறேன்.)



  திண்டிவனத்துக்கு அருகில் ஔவையார்குப்பம் என்னுஞ் சிற்றூர் உள்ளது. அவ்வூரில் திரு. சுந்தரனார் அவர்களுக்கும் திருவாட்டி சந்திரமதி அம்மையாருக்கும் 5-9-1902-இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், அதுவே நம் ஔவை; மற்றது பெண், பெயர் பூமாதேவி.

  திரு.சுந்தரனார் ஊர்க் கணக்கராய்ப் பணியாற்றினார். தமிழில் ஆர்வமும் அறிவும் வாய்ந்தவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள் நூல்கள் பாடியுள்ளார்.

  துரைசாமி தம் பெற்றோர்க்கு ஐந்தாவது குழந்தை. உள்ளூரில் தொடக்கக் கல்வி முடித்துத் திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். அப்போதே தமிழில் ஆர்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார். வேலூர் ஊரிசு கல்லூரியில் மேற்படிப்பு முடித்த பின்பு தஞ்சைக் கரந்தையில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் கரந்தைப் பாவரசர் வேங்கடாசலம் அவர்களிடமும் கழக இலக்கியங்களையும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் கற்றார். ஆழ்ந்த புலமை பெற்றார். சிவநெறிக் கோட்பாட்டுக் கல்வியைத் திரு. கந்தசாமி தேசிகர், தவத்திரு. வாலையானந்த அடிகள் ஆகியோரிடம் கற்றுத் தெளிந்தார். 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகப் புரவலர் பட்டம் பெற்றார்.

  காவிரிப் பாக்கம், செங்கம், செய்யாறு, போளூர் ஆகிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்து நனிசிறப்பாகக் கற்பித்தார்.

  கற்றல், கற்பித்தல், நூலாராய்தல், நூலியற்றுதல் என்பன வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தன.

  கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியிற் பணியாற்றிய பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தார். அங்கே ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ நூல் ஆராய்ந்து வெளியிட்டார். ஐங்குறுநூறு நூலுக்கு மிக அருமையான விரிவான விளக்கவுரை எழுதிப் பிரசுரித்தார்.

  உரை எழுதுவது எளிய செயலன்று. ஒரு நூலை முறையாகக் கற்றுத் தெளியவேண்டும். அந்நூலின் நுட்பமெலாம் ஆராய்ந்தறிய வேண்டும். பொருள் நுட்பம், இலக்கண அமைதி, மரபு, குறிப்புப் பொருள், சொல்நயம், சூழ்பொருள், நூலாசிரியரின் ஆற்றல், நூல்சார் ஏனைய செய்திகள் ஆகிய யாவற்றையும் நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்து தெளிவாக உணர்த்த வேண்டியது உரையாசிரியரின் அரும்பணியாகும்.

  திரு. சு.வையாபுரியார் நற்றிணை ஓலைச்சுவடியை ஔவை அவர்களிடம் அளித்து நன்கு ஆராய்ந்து உரையெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஔவை அவ்வேட்டினைப் பிற ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். மூவாயிரத்துக்குக் குறையாத பாட வேறுபாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தக்க பாடம் எதுவெனத் தெளிந்து அருமையான விளக்கவுரை இயற்றி இரு பெரும் தொகுதிகளாக வெளியிட்டார்.

  சிவனிய நூல் ஞானாமிர்தம் என்பது. இதன் பாடல்கள் இரும்புக் கடலை போன்றவை. இந்நூலையும் ஆய்ந்து ஔவை விளக்கவுரை எழுதினார்.

  புறநானூறு ஓலைச் சுவடியொன்றை ஆராய்ந்தபோது அதற்கு முன்பு வெளிவந்த புறநானூற்று நூலில் காணக் கிடைக்காத பாடத் திருத்தங்கள், பாட வேறுபாடுகளையறிந்து ஆராய்ச்சி உரையெழுதினார். 1947-இல் புறநானூறு முதற்பகுதியும் (1 முதல் 200 செய்யுள்) 1951-இல் இரண்டாம் பகுதியும் வெளிவந்தன.

  ஔவை அவர்களுக்குக் கல்வெட்டு, வரலாறு, தமிழக ஊர்ப் பெயர்கள் குறித்த ஆராய்ச்சியும் இருந்தமையால் கழகக்கால ஊர்கள், இடங்களைத் திட்டமாக அறிந்து தெளிவிக்க முடிந்தது.

  பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.

  அவரது உரைச் சிறப்பு யாதெனில் சங்க இலக்கியப் பாக்களுக்கு வரைந்துள்ள முன்னுரை எளிமையும் அருமையும் திட்பமும் நுட்பமும் வாய்ந்து பொலிவதேயாம். திணை, துறைகளை விளக்குவதும், தக்க மேற்கோள்களை ஆள்வதும், உணர்ச்சி பொங்க உரை விளக்கம் வழங்குவதும் சொல் நயம், ஆட்சியருமைகளைச் சுட்டுவதும் இவர் உரை மரபாம்.

  மதுரைத் தியாகராசர் கல்லூரியிற் பேராசிரியராய் இணைந்த பின்பு, தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப் புலவர், நந்தா விளக்கு முதலிய ஆய்வுக் கட்டுரைத் தொகுதகள், சேர நாட்டு வேந்தல் என்னும் வரலாற்று நூல், சிந்தாமணி ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, யசோதர காவிய உரை ஆகிய நூல்களை இயற்றிய ஔவை An introduction to the study of Thirukkural என்ற ஆங்கில நூலும் எழுதியிருக்கிறார்.

  1968-இல் பணி ஓய்வு பெற்ற பின்பு முழுநேரத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டார். ஒரு நாளில் 100 முதல் 100 பக்கம் வரை சோர்வின்றி எழுதியமையால் கை நரம்புகள் வலிவிழந்து எழு ஆற்றாத நிலை ஏற்பட்டது. தாம் சொல்லச் சொல்ல அவற்றை எழுதுவதற்கு உதவியாளரை நியமித்துக் கொண்டு தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

  மதுரைத் திருவள்ளுவர் கழகம் அளித்த “உரை வேந்தர்”, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை வழங்கிய “சித்தாந்த கலாநிதி”, மதுரைப் பல்கலைக் கழகம் கொடுத்த “பேரவைச் செம்மல்” ஆகிய பட்டங்கள் பெற்ற ஔவை அவர்களுக்குக் கேடயம் அளித்தும் பாராட்டினர், 1969-இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழி வழங்கப்பட்டது.

  சில நாள் உடல் நலிவுற்றிருந்த ஔவை சு.துரைசாமி 3-4-1981-இல் மதுரையில் இயற்கை எய்தினார். தமிழ்க்கென வாழ்ந்து தாளாண்மைக்கு இலக்கியமாய்த் திகழும் உரைவேந்தர் வாழ்க்கை நிறைவாழ்வின் இலக்கணம்.

  பின்குறிப்பு: இவரது புதல்வர்களுள் ஒருவராகிய ஔவை நடராசன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராய்ப் பதவி வகித்தவர்.