நூல்களிலிருந்து
-- 15
(காலஞ்சென்ற தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை
ஏறக்குறைய 60 ஆண்டுக்கு
முன்பு இயற்றிய 'ஊரும் பேரும்' என்னும்
நூலிலிருந்து ஒரு சிறு பகுதி இது; தலைப்பு: ஆறு)
தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந்தொட்டுப்
பயிர்த்தொழில் பண்புற நடந்துவருகிறது. பண்டைத் தமிழர் ஆற்றுநீர் பாயும்
நிலப்பரப்பைப் பயன்படுத்தி மருத நிலமாக்கினார்கள். மருத நிலத்தை நீரூட்டி
வளர்ப்பது நதி என்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள். காவிரியைப் பொன்னியாறு என்று
புகழ்ந்தார்கள்; வையையைப் பொய்யாக்
குலக்கொடி என்று போற்றினார்கள். நதியே நாட்டின் உயிர் என்பது தமிழர் கொள்கை. 'ஆறில்லா ஊர்க்கு அழகு பாழ்' என்று
கருதப்பட்டது.
முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும்
துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. சோழ நாட்டின் பழைய தலைநகரம் உறையூர், காவிரிக் கரையில்
அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப்
பெயர் பெற்ற சோழ நாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில்
வீற்றிருந்தது; அக்காரணத்தால்
அது புகார் என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் பெயர் பெறுவதாயிற்று. அவ்வாறே
பாண்டிநாட்டு நதியாம் வைகையின் கரையில், மதுரை என்னும் திருநகரம் அமைந்தது; பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில்
கொற்கை என்னும் துறைமுகம் விளங்கிற்று.
கங்கை, கோதாவரி போன்ற பெரிய நதிகள் தமிழ்நாட்டில் இல்லை; ஆயினும் சிறிய
நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ்நாட்டார்க்கு உரியது. ஆற்றுநீரின்
அருமையறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் ஆறுகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால்
அறியப்படும்.
பாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர்; அது
தொண்டைநாட்டின் வழியாகச் செல்கின்றது. அதில் தண்ணீர் சுரக்குமே யன்றிப்
பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும் நீர்வளம் குறைந்த சேது நாட்டின்
வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி, தேனாறு என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது;
அந்நாட்டிலுள்ள ஈசனைத்
தேனாற்று நாயகர் என்று சாசனம் கூறும்;
சுவையுடைய செழுந்தேனைச்
சொட்டு சொட்டாக வடித்தெடுத்துப் பயன் பெறுதல் போன்று, இந்நதியின் நீரைத் துளித்துளியாக எடுத்து
அந்நாட்டார் பயன் அடைகின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும் தேனாறு பாண்டி நாட்டிலும்
விளங்குதல் போலவே, சேர நாட்டில்
நெய்யாறு என்னும் நதி உள்ளது; அந்நதியின் கரையில் அமைந்த ஊர் நெய்யாற்றங்கரை என்று வழங்கும். நெல்லை
நாட்டிலுள்ள ஒரு சிறு நதியின் தன்மையை வியந்து கருணையாறு என்று அதற்குப்
பெயரிட்டுள்ளார்கள். விருத்தாசலத்தின் வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்று
பெயர் பெற்றுள்ளது.
++++++++++++++++++
படம் உதவி- இணையம்
அறிய வேண்டிய வரலாறு ஐயா... நன்றி...
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் சிறுசிறு ஆறுகளுக்கு நல்லநல்ல பெயர்கள் சூட்டிப் போற்றுகிறோம் .
Deleteஎன்ன அருமையான பெயர்கள்! சுவையான மற்றும் அரிய பல
ReplyDeleteதகவல்களைப் பல நூல்களிலிருந்து எடுத்துப் பகிரும் தங்களின் பணி தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . முடிந்தவரை தொடருவேன் .
Deleteநீரின் அருமையை உணர்ந்து, ஆறுகளுக்கு எவ்வளவு அழகழகான பெயர்களை நம் முன்னோர் சூட்டியுள்ளனர் என்ற்றிந்து மகிழ்ந்தேன். சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Delete