தமிழின்
முதல் புதினமெனப் போற்றப்படும் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மயிலாடுதுறை நீதிபதி (முன்சீப்) ச.வேதநாயகம் அவர்களால் 1876-ல் இயற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு பகுதியைப் பதிகிறேன்.
அதிகாரம்
1. இறுதி: பேசுபவர் கதாநாயகர் பிரதாபர்.
என்
தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனஞ் செய்து எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ்செய்தார். எங்கள் கிராம காரியங்களையும் குடும்ப காரியங்களையும் என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்துவந்தபடியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும், தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமான போது படிக்கிறதென்றும், படிக்க இஷ்டமில்லாத போது நான் விளையாடுகிறதென்றும் என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக்கூடாதென்றும் ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினேதினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம் சரியாய் நடக்கவில்லையென்று சில உபாத்தியாயர்கள் நீக்கப்பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் வா போ என்று ஏக வசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப்பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரயாசப்பட்டுச் சொல்லிக்கொடுத்தும் சம்பளம் வாங்குகிற சமயத்தில் சம்பளமில்லாமல் நீக்கப்பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்திவந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம்.
இவ்வளவு
ஆபத்துக்கும் தப்பி, ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்துகொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, “நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனிமேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடந் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்” என்றார்கள்.
உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார்.
எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபாத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாத
போது உபாத்தியாயர் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார். நான் பாடத்தைச் சரியாய்ப் படித்த
நேரமுமில்லை, கனகசபை அடிபடாத நேரமுமில்லை.
ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில்
அடித்தபோது அவன் அழுதுகொண்டு, “ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்யவில்லையே! இவ்வளவு
பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்” என்றான். அதைக்
கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி என் கண்ணில் ஜலந் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு
அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு
முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன், அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள்
கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம்
வரும்படியாக, அவனுக்கு அடிவாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து,
உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?
நல்ல பகிரவு. ஆனால், நடந்தது அநியாயம் :(
ReplyDeleteவருக ! உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அநியாயம் எல்லாக் காலங்களிலும் உண்டு . பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் ஏழைகள் .
Deleteஇப்படியும் புதினம் அதுவும் முதல் புதினாம் .நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteஅறிந்தேன்... நன்றி ஐயா...
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .
Delete