Heracles |
ஒருவன் Heracles (லத்தீனில் Hercules). தலைமைக்
கடவுள் Zeus-க்கும் மானிடப் பெண்ணொருத்திக்கும் பிறந்த அவனுடைய 12 சாகசங்கள் பரவலாகத்
தெரிந்தவை; ஆனால் அவனது முடிவு? சிலரே அறிவர்.
அவனுடைய மனைவி Deianira–வைக் கவர்வதற்கு முயன்ற
Nessus என்பவனை Heracles கொன்றான். அவன் சாகும்முன்பு, Heracles-க்குத் தெரியாமல்,
தன் ரத்தந்தோய்ந்த அங்கியை அவளிடந்தந்து, “அற்புத சக்தியுடையது; எப்போதாவது உன் கணவன்
உன்னைப் புறக்கணித்தால், இதை உடுத்திக் கொள்ளச்சொல்; மனம் மாறுவான்” என்றான். அவள்
பத்திரமாய்ப் பாதுகாத்துவந்தாள்.
சில ஆண்டு கழித்து, Heracles வேறு பெண்ணை மணக்க
முனைந்தபோது, Deianira அதைத் திருமணப் பரிசாய் அனுப்பிவைத்தாள்; அணிந்ததுதான் தாமதம்,
அதில் தடவியிருந்த கொடிய நஞ்சு வெகு விரைவாய் உடல் முழுதும் பரவித் தாங்கொணா வேதனை
தரவே, கழற்ற முயன்றபோது, சதையும் பிய்த்துக் கொண்டு வந்த்து. தன் முடிவு நெருங்கிவிட்டதையுணர்ந்த
Heracles மரக்கட்டைகளைத் தானே அடுக்கிக் கொளுத்தி மேலேறிப் படுத்தான். தீ நாக்குகள்
தீண்டும் முன்பு Zeus தோன்றி மீட்டு அழைத்துச் சென்றார்.
மற்றவன் Perseus.
Perseus |
அரசன் Aerisius-இன் மகள் Danae. இவள் பிறந்தபோது
Appollo கடவுளின் பூசாரி அருள்வாக்கு சொன்னான், “இவளது மகன் தாத்தாவைக் கொல்வான்!”
என்று.
அவளைக் கன்னியாகவே வைத்திருக்கத் திட்டமிட்ட தந்தை
ஒரு கோட்டையில் அடைத்துப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தான்.
Zeus அவளை மனைவியாக்கிக் கொண்டார். Perseus பிறந்தான்.
கெட்ட செய்தியைக் கேள்விப்பட்ட வேந்தன் ஒரு மரப்பெட்டி தயாரித்துத் தாயையும் சேயையும்
அடைத்து ஆற்றில் விட்டான்.
ஒரு தீவில் தரைதட்டிய பெட்டியைக் கண்ட Dictys இருவரையுங்
காப்பாற்றிப் பேணிவந்தான். தீவின் கொடுங்கோலன் Polydectes–இன் காமப்பார்வை Danae மீது
படிந்தது. அவளை அவன் மணக்க விரும்பியபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் Perseus–ஐ ஒழித்துக்கட்ட
எண்ணி Medusa–வின் தலையைக் கொண்டுவரும்படி அவனுக்குக் கட்டளையிட்டான்.
அவன் திரும்பிவர மாட்டான் என்பது நிச்சயம். சாமான்ய
வேலையா அது?
பின்னிப் பிணைந்து தொங்கும் பாம்புகளாகிய கூந்தலும்
நீண்ட வலிய பற்களும் உறுதிவாய்ந்த பருந்து நகங்களும் பொன் இறகுகளுங்கொண்ட பயங்கர அரக்கி
Medusa. இவையல்லாமல் அபூர்வ சக்தியொன்று அவளுடைய கண்களுக்கு இருந்தது; பார்ப்பவரைக்
கல்லாக்கிவிடும்!
கடவுள் Athena, முகம் பார்க்குங் கண்ணாடி போல் பளபளப்பாக
இழைக்கப்பட்ட கேடயத்தை அவனுக்களித்தது. அவன் Medusa–வின் கண்களை நேரிற் பார்க்காமல்,
கேடயத்திற் பிரதிபலித்த அவளது தலையைக் குறிவைத்து வெட்டியெடுத்துக் கொண்டான். அவளது
சடலத்திலிருந்து வெளிப்பட்ட பறக்கும் Pegasus குதிரை மீது தாவியேறித் திரும்பி வருகையில்
ஒரு பாறையில் பிணைக்கப்பட்டிருந்த மங்கை Andromeda–வைக் கண்டான். இளவரசியாகிய அவளை
அவளது தகப்பன், மக்களையும் மாக்களையும் கொன்று தின்று அட்டூழியம் புரிந்துகொண்டிருந்த
கடல் பூதத்துக்குப் பலியாய்க் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பூதத்தை
Perseus கொன்று அவளை மணந்துகொண்டான்.
Polydectes ஒழிந்தான், Danae பிழைத்தாள் என்பதைச்
சொல்லவேண்டுமா?
பின்னாளில், ஒரு விளையாட்டுப் போட்டியின்போது, Perseus விட்டெறிந்த
இரும்பு வட்டு முதியவரொருவர் மேல் விழுந்து வாழ்வை முடித்தது; அவர் அவனது தாத்தா!
Perseus, Andromeda, Pegasus என்று பெயர் சூட்டப்பட்ட
விண்மீன் கூட்டங்கள் சப்தரிஷி மண்டலத்தின் அருகில் கண்சிமிட்டிக் கொண்டுள்ளன. சற்றுத்
தொலைவில் Heracles.
அறிந்தேன்... நன்றி...
ReplyDeleteஉங்கள் அரிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
ReplyDeleteகிரேக்கப் புராணக்கதைகள் காட்டும் மாவீரர் வாழ்க்கைகள் வெகு சுவாரசியம். புதிய தகவல்கள் பலவற்றை அறிந்துகொள்ளமுடிகிறது. மிக்க நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .
Delete